“ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” என்று பெருமாளின் பாதுகையை கொண்டாட ஆயிரத்தெட்டு ஸ்லோகங்களை அருளிய ஸ்வாமி தேசிகன், அந்த ஸ்லோகங்களை 32 பத்ததிகளாக பிரித்திருக்கிறார். பத்ததி என்பதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு. முதல் அர்த்தம், எடுத்து வைக்கும் அடி வைப்பு. பெருமாள் தன்னுடைய திருவடியை ஒரு அடி எடுத்து வைத்தால் அதை ஒரு பத்ததி என்றே கூறுவார்கள். அந்த பாதுகை எடுத்து வைக்கக்கூடிய 32 அடிகளை கொண்டாடும் விதமாக, 32 பத்ததிகளை அமைத்திருக்கிறார் ஸ்வாமி தேசிகன். இரண்டாவது அர்த்தம், வழிமுறை, என்று சொல்லலாம். ஒரு இடத்தில் சுந்தர காண்டம் பாராயணம் நடக்கிறது என்றால், அதை எந்த வழிமுறையில் செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்வோம் இல்லையா? அதைதான் அதன் பத்ததி (வழி) என்ன என்று கேட்பார்கள்.
முதல் பத்ததியான, “ப்ரஸ்தாவ பத்ததியில்”, பாதுகையை பற்றி அறிமுகம் செய்து வைக்கும் ஸ்வாமி தேசிகன் அடுத்த “ஸமாக்யா பத்ததியில்” ஏன் பாதுகைக்கு சடாரி என்ற பெயர் வந்தது என்பதை 10 ஸ்லோகங்கள் கொண்டு நமக்கு காண்பித்து அடுத்த மூன்றாவது பத்ததியான “ப்ரபாவ பத்ததியில்” 70 ஸ்லோகங்களில் அந்த பாதுகையின் பெருமைகளை கொண்டாடுகிறார்.
இந்த முதல் இரண்டு பத்ததியில் சொல்லப்பட்டிருக்கும் பாதுகையின் பெருமைகளை ஸ்வாமி தேசிகனோடு சேர்ந்து நாமும் இந்த பகுதியில் அனுபவிப்போம். பெருமாளின் பாதுகையாக நம்மாழ்வாரை கொண்டாடுகிறோம். தம்முடைய முதல்
ஸ்லோகத்திலேயே,
“ஸந்த: ஸ்ரீ ரங்க ப்ருத்வீச
சரணத்ராண சேகரா:
ஜயந்தி புவநத்ராண
பத பங்கஜரேணவ:”
என்று பாதுகையை வணங்கக் கூடிய பெரியோர்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா? ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகையான நம்மாழ்வாரை தங்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடக் கூடிய பெரியவர்களின் திருவடி தாமரையிலிருந்து வரக்கூடிய மண் துகள்கள், இந்த உலகத்தையே காக்கக் கூடியது. அப்படிப்பட்ட பெரியோர்களுக்கு, அனைத்திலும் வெற்றியே என்பது தேசிகனின் வாக்கு. பாதுகையை ``ஸ்ரீ சடாரி’’ என்றே வைணவ கோயில்களில் அழைப்பார்கள்.
கோயில்களுக்கு சென்றாலோ அல்லது ஒரு ஆச்சார்யனை தரிசனம் செய்ய நாம் சென்றாலோ, ``தீர்த்தம், ஸ்ரீ சடாரி கிடைத்ததா?’’ என்று கேட்பது வழக்கம். ஸ்ரீ சடாரி என்பது நம்மாழ்வாரின் திருநாமமே. பாதுகாவை பற்றி அறிமுகம் செய்யும் விதமாக அமைந்திருக்கும் இந்த பத்ததியில் மூன்றாவது ஸ்லோகத்தில், இந்த பாதுகா சஹஸ்ரம் நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்று நம்மாழ்வாரை வணங்கிவிட்டு, நான்காவது ஸ்லோகத்தில் திவ்ய ஸ்தானம் என்று போற்றப்படும் பிரம்மனின் சத்ய லோகத்திலிலிருந்து பூலோகத்திற்கு வந்த பாதுகையே, உன்னை போலவேதான் சரஸ்வதி தேவியும் சத்ய லோகத்தை விட்டு பூமிக்கு வந்து அவளுடைய முதல் அடியை வால்மீகியின் வாக்கில் வைத்தாள்.
அதனாலன்றோ அவர் ஆதி கவி (முதல் கவி) ஆனார்? ஆதிகாவியமான ராமாயணத்தை அற்புதமாக பாடி அதில் பாதுகையின் பெருமையையும் அதி அற்புதமாக பாடினாரே வால்மீகி. அந்த வால்மீகி பகவானே அடியேனது நாவில் அமர்ந்து கொண்டு பாதுகையே உன் பெருமையை பாட நல்வார்த்தைகளை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். (வாசம் திவ்யாம் திசது) இந்த ஸ்லோகத்தில், பாதுகையையும் சரஸ்வதியையும் பாரதி என்கிறார் தேசிகன். பாரத கண்டத்தில் தோன்றியதால், பாரதியானாள் சரஸ்வதி. முதன்முதலில் பரதனால் ஆராதிக்கப்பட்டதால், பாதுகையும் பாரதி என்றே அழைக்கப்பெற்றாள்.
19வது ஸ்லோகத்தில், அந்த பாதுகையை தியானித்து, பாதுகையே நீயே வந்து வாக்கில் அமர்ந்து வார்த்தைகளை அருள வேண்டும். மேலும், நீ மட்டும் இந்த ஸ்லோகங்களை கேட்டால் போதாது என்றார். அதற்கு பாதுகா தேவியோ அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, பாதுகையே நீ நடக்கும் போது உன்னிடமிருந்து வரக்கூடிய அந்த ஒலியில் ரங்க நாதனே மயங்கி விடுகிறான் இல்லையா? அந்த ஒலியை இதோ இந்த ஸ்லோகங்களில் இருக்கும் சொற்களுக்கு நீ தர வேண்டும்.
அந்த இனிய ஒலியை கேட்டு பாம்பணையின் மீது உறங்க செல்லும் ரங்கநாதன், தன் உறக்கம் கலைந்து இந்த சப்தம் தன் பாதுகையின் சப்தம் போல இருக்கிறதே என நினைத்து ரங்கநாயகி தாயாரோடு வந்தமர்ந்து ஸ்லோகங்களை கேட்டு ரசிப்பான். உன் ஒலி இதில் இருந்தால் தானே அந்த ஒளிமயமானவன் இந்த ஸ்லோகங்களை கேட்டு சந்தோஷமடைவான் என்று தேசிகன் விண்ணப்பிக்க, பாதுகா தேவியின் அருளாலேயே சுவாமி தேசிகனின் வாக்கில் வார்த்தைகள் வந்து, அற்புதமான களி நடனம் புரிந்து அது ஸ்ரீ பாதுகா சஹஸ்ரமாக அரங்கேறியது.
இரண்டாவது பத்ததியான “ஸமாக்யா பத்ததி”யில், பாதுகையின் திருநாம வைபவத்தை அதி அற்புதமாக தானும் கொண்டாடி நம்மையும் கொண்டாட வைக்கிறார் ஸ்வாமி தேசிகன். பாதுகைக்கும் நம்மாழ்வாருக்கும் சடகோபன், சடஜித், சடாரி என்கிற திருப்பெயர்கள் எல்லாம் சரியாக பொருந்தி போயிருக்கிறது. சடம் என்கிற வாயுவை ஜெயித்து சடகோபன், சடஜித் என்ற திரு நாமங்களை பெற்றார் ஸ்வாமி நம்மாழ்வார்.
நம்முடைய மனம் என்பது சடம் பிடித்தது. எது நல்லதோ அதை நாடி போகாமல் எது தீயதோ அதை நாடி போக கூடியதாக இருக்கக் கூடியது நம் மனம். நம் தலையின் மீது அமர்ந்த உடனேயே நமக்குள் இருக்கும் அந்த சடத்தை ஜெயித்து நம்மை நல்வழி படுத்துவதாலேயே, பாதுகைக்கும் சடஜித் என்கிற திருநாமம் மிகவும் பொருந்தி போகிறது என்று ஸ்ரீ சடாரியை கொண்டாடுகிறார் ஸ்வாமி தேசிகன்.
“விஷ்ணுபதா ஸக்தம்” என்று விஷ்ணுவின் திருவடியில் ஈடுப்பட்டவராக இருந்தவர் ஸ்வாமி நம்மாழ்வார் என்றால் அந்த விஷ்ணுவின் திருவடியிலேயே பொருந்தி இருக்கிறாள் பாதுகா தேவி. நம்மாழ்வாரும் பாதுகையும் செய்தது ஒரே மாதிரியான செயல்களைதான் என்று நான்காவது ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார் தேசிகன். நம்மாழ்வார் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான்கு வேதங்களையும் தமிழ் படுத்தி அடியவர்கள் அதை ஓதும்படி செய்தார்.
பாதுகையோ அந்த வேதத்தின் பொருளான திருமாலை அடியவர்கள் வணங்கும் படி தம் மீது தாங்கி கொண்டு வந்து அப்பெருமாளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறதல்லவா? நம்மாழ்வார் வேதத்தை பொது உடைமை ஆக்கினார், பாதுகா தேவியோ, வேதத்தின் பொருளான பெருமாளின் திருவடியை பொது உடைமை ஆக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இந்த ஸமாக்யா பத்ததியில் வரக்கூடிய கடைசி ஸ்லோகத்தில், “நம்மாழ்வார் எப்படி திருவரங்கன் மீது ஆயிரம் பாசுரங்களை அருளி செய்தாரோ, பாதுகையே நீர் இப்போது அடியேன் மூலமாக அதே போல் அல்லவா அந்த ரங்கநாதனின் பாதுகையை பற்றி ஆயிரம் ஸ்லோகங்களை அருளி கொண்டிருக்கிறீர்?’’ என்று பாதுகையை பார்த்து சொல்லும் ஸ்வாமி தேசிகன், ‘‘இந்த பாதுகா சஹஸ்ரத்தை நான் இயற்றவில்லை, பாதுகையே இயற்றியது. எனவே பாதுகையை நம்மாழ்வாரின் பெயரான சடகோபன் என்றே நாம் அழைப்பது சரியே” என்கிறார்.
(பாதுகையின் பெருமை தொடரும்…)
நளினி சம்பத்குமார்