Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிரகங்களே தெய்வங்களாக- திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்

ஒவ்வொரு ராசி மண்டலத்திற்குள்ளும் பிரவேசிக்கும் கிரகங்கள் அதற்குரிய தன்மையை ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதை அடிப்படையாகக் கொண்ட கோயில்களும் அதற்குரிய ஆற்றல்களை கொண்டுள்ளன. அந்த ஆற்றல்களை பெற்றுக் கொள்வதற்கான தலங்களாக திருக்கோயில்கள் உள்ளன. அந்த ஆற்றல்களை நாம் பெறும் பொழுது நம் வாழ்வில் பயணடைகிறோம்.நாம் அறிந்து கொள்கின்ற அற்புதங்கள் உள்ள திருத்தலம் மருந்தீஸ்வரர் கோயில் ஆகும். அகஸ்திய முனிவருக்கு பல மூலிகைகள் மற்றும் தாவரங்களை குணப்படுத்தும் அற்புதங்களை தந்ததால் மருந்தீஸ்வர் என அழைக்கப்படுகிறார். ராமாயணத்தை எழுதிய வால்மீகி இங்கு வந்து அமரத்துவம் வேண்டி தவம்புரிந்தார்.பின்பு, இவரைச் சுற்றி புற்று எழுந்ததாகவும் பின்பு, பிரம்மனின் கட்டளைக்கு இணங்க வெளிவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இங்கு சிவபெருமான் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனாலே இவ்விடம் திருவாளர் வான்மீகி எனும் பெயரைத் கொண்டதாக இருந்தது. இந்த பெயரானது திரு வான்மீகி என மருவி பின்னர் திருவான்மியூர் என்று மாறியுள்ளது. இந்த திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சிறப்புப் பெற்ற தலமாக உள்ளது. இந்த கோயில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இக்கோயிலில் பல முனிவர்களும், தவயோகிகளும், சித்த புருஷர்களும், நாயன்மார்களும், சைவத்துறவிகளும் வந்து வழிபட்டுள்ளனர். மேலும், இது தேவாரம் பாடல் பெற்ற தலமாக உள்ளது. கி.பி 11ம் நூற்றாண்டில் சோழமன்னர்களால் இத் திருத்தலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் முலவர் திரிபுர சுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் நாமம் செய்த கிரகங்கள் சூரியன், செவ்வாய், வியாழன் ஆகும்.பொதுவாகவே, விருச்சிகத்தில் குரு இருந்தால், அவர்கள் சுவாசக்கோளாறு, சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு அவர்கள் இத்தலத்தில் திங்கள் கிழமை அன்று சுவாமியை தரிசனம் செய்து 45 நிமிடம் இங்கே அமர்ந்து சுவாமியை தியானம் செய்தால் இவர்களுக்கு ஏற்பட்ட உபாதைகள் சரியாகும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து செவ்வாய், சூரியன் பார்வை ஏற்பட்டால் புற்றுநோய்க்கு இணையான பிரச்னைகள்வர வாய்ப்புண்டு அவர்கள் இக்கோயிலில் சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபாடு செய்து வழிபட்டால் சிறந்த மருத்துவம் கிடைக்கவும் நோய் குணமாகும் வாய்ப்புகள் உண்டாகும்.

சிறுநீரகக் கல் போன்ற நோய் பிரச்னை உள்ளவர்கள் இத்தலத்தில் இறைவனை ஏகாதசி வரும் வெள்ளிக்கிழமை அன்று மொச்சைப் பயறு நெய்வேத்தியமாக கொடுத்து வழிபட்டு அந்த நெய்வேத்தியத்தை தானமாக கொடுத்து. பின்பு, இங்குள்ள கறுப்பு நிற பசுவிற்கு உணவு தானம் செய்தால் நோய் குணமாகும் வாய்ப்புகள் உண்டாகும்.ஆயுர்வேத மருத்துவர்களாக படிக்கின்ற மாணவ - மாணவிகள் பௌர்ணமி அன்று வெள்ளை கொண்டைக்கடலையும் தேனும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தால் படிப்பில் தடையின்றி படித்து ஆராய்ச்சிப் படிப்பை நோக்கி முன்னேற்றம் பெறுவார்கள்.

ஆயுர்வேத மருத்துவர்கள் இங்குள்ள முலவரை பௌர்ணமி அன்று தரிசித்து இங்குள்ள வெள்ளைப் பசுவிற்கு உணவு தானம் செய்தால் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள்.

படுத்த படுக்கையாக நீண்டநாள் இருப்பவர்கள் இத்திருத்தலத்தில கறுப்பு போர்வை வைத்து வழிபாடு செய்து அந்த போர்வையை அவர்கள் போர்த்திக் கொள்ளுமாறு செய்து பின்பு அதனை கடலில் வீச தீராத பிணியும் தீரும். செவ்வாய், சூரியன் மற்றும் சனிக் கிரகங்கள் இணைவு பெற்றவர்கள் முடி கொட்டும் பிரச்னைகளும் கண் பார்வை பிரச்னைகளும் உண்டாக வாய்ப்புண்டு. இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து சென்றால் அந்த பிரச்னைகளுக்கான தீர்வுகள் உண்டாகும்.

நோய் தீர்க்கும் திருத்தலம் மற்றும் சாப விமோசனம் பெற்ற திருத்தலமாகும்.

ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு