Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சபரிமலை பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்

நமது ஒவ்வொரு இருமுடி தரிசனத்தின்போது அய்யன் நம்மை கேட்பது “யாரை காண வந்தாய்” என்னையா! உன்னையா! இல்லை உன்னுள் இருக்கும் என்னையா!என்னிடம் உன்னை முழுமையாக ஒப்படைக்க நான் உன்னுள் நான் இருந்து காப்பேன் என்கிறார் சூட்சுமமாக. நம்முள் உறங்கி கிடக்கும் மணிகண்டனை துயில் எழுப்பி ஆனந்தம் காண்போமே.பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்துவிடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்து விடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சந்நதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ்சொற்கள் பேசக் கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழவேண்டும். கால்களால் ஆண்டவன் சந்நதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.