கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி
நாம் இந்த நாமங்களின் மூலமாக பண்டாசுர யுத்தத்தை பார்த்துக் கொண்டே வருகிறோம். இந்த பண்டாசுர யுத்தத்திற்கும் பின்னால் ஒரு சரித்திரத்தையும் பார்த்துக் கொண்டே வருகிறோம். விநாயகர் விக்ன யந்த்ரத்தை உடைத்தது. மாதங்கி விஷயம், வாராஹி விஷயம் என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். அதேபோல இந்த நாமத்திற்கும் பிரமாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானத்தின்படி ஒரு சரித்திரம் இருக்கிறது.
இதற்கு முன்னால் நாம் பார்த்தபடி பண்டாசுரனுடைய அஸ்திரங்களெல்லாம் அஞ்ஞான விருத்திகளாகவும், அம்பிகையினுடைய அஸ்திரங்களெல்லாம் எப்படி ஞான விருத்திகளாக இருந்தது என்று பார்த்தோம். இவை இரண்டும் மோதும்போது எப்படி ஞான விருத்தியினால் எப்படி அஞ்ஞான விருத்தி அழிந்தது என்றும் பார்த்தோம்.
இப்போது சட்டென்று பண்டன் பெரிய அஸ்திரத்தை பிரயோகம் செய்கிறான். அப்படியென்ன அவன் பெரிய அஸ்திரத்தை வைத்திருக்கிறான் என்று பார்த்தால், அதன் பெயர் சர்வாசுர அஸ்திரம் என்பதாகும். பிரித்துப் பொருள் கொண்டால், சர்வ அசுர அஸ்திரம் என்பதாகும். ஏன் இந்த அஸ்திரத்திற்கு இந்தப் பெயரெனில், அந்த ஒரு அஸ்திரத்தை பிரயோகம் செய்தால் என்ன நடக்கிறதெனில், சோமுகாசுரன், ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபு, ராவணன், கும்பகர்ணன், கம்சன், தந்தவக்த்ரன். இந்த அசுரர்களில் யார் முக்கியம் என்று சொல்கிறோமோ அந்த அசுரர்களெல்லாம் மீண்டு வந்து விடுவார்கள். அதாவது, இந்த சர்வாஸ்திரத்தை பிரயோகம் செய்தால் இவர்கள் மீண்டும் வந்து விடுவார்கள்.
இந்த முக்கியமான அசுரர்களெல்லாம் யாரென்று பார்த்தால், இந்த அசுரர்களை வதம் செய்வதற்காகத்தான் பகவான் மகாவிஷ்ணு ஒவ்வொரு அவதாரமும் எடுத்திருக்கிறார்.
சோமுகாசுரனை வதம் செய்ய வேண்டி மத்ஸய அவதாரம். ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக வேண்டி, வராஹம் நரசிம்மம். ராவண, கும்பகர்ணர்களை வதம் செய்ய வேண்டி ராமாவதாரம். கம்சன், தந்தவக்த்ரனை வதம் செய்ய வேண்டி கிருஷ்ணாவதாரம்.
இப்படி எண்ணற்ற அவதாரங்களை எடுத்திருக்கிறார் அல்லவா… இப்போது இந்த அசுரர்களையெல்லாம் பண்டன் மீண்டும் உற்பத்தி செய்து விட்டிருக்கிறான். இவர்கள் உற்பத்தியாகி மீண்டும் போருக்கு வருகிறார்கள். அப்படி அசுரர்களெல்லாம் போருக்கு வரும்போது, அம்பாள் என்ன செய்கிறாளெனில், மீண்டும் இந்த அவதாரங்களையும் உற்பத்தி செய்கிறாள். அப்போது அந்தந்த அவதாரங்களாக வந்து அந்த அசுரர்களை அழிக்கிறாள்.
மச்சாவதார பெருமாளே வந்து சோமுகாசுரனை அழிக்க வேண்டும். வராஹப் பெருமாளே ஹிரண்யாட்சனை அழிக்க வேண்டும். நரசிம்மரே வந்து ஹிரண்யகசிபுவை அழிக்க வேண்டும். ராமரே வந்து ராவணனை அழிக்க வேண்டும். கிருஷ்ணனே வந்து கம்சனை அழிக்க வேண்டும். அந்தந்த அவதாரங்கள் மீண்டும் உற்பத்தியாகும். அம்பாள் எப்படி இந்த அவதாரத்தை உற்பத்தி செய்கிறாளென்று பார்ப்போமா?
அம்பிகைக்கு கைகள் இருக்கின்றது. அந்தக் கைகளில் பத்து விரல்கள் இருக்கின்றன. இந்த பத்து விரல்களில் இருக்கின்ற நகங்கள் இருக்கின்றன அல்லவா? இந்த நகங்களிலிருந்து அம்பிகை பத்து அவதாரங்களை உற்பத்தி செய்கிறாள். அம்பாளின் கைவிரல் பத்து நகங்களிலிருந்து விஷ்ணுவினுடைய பத்து அவதாரங்களை உற்பத்தி செய்கிறாள்.
பகவான் எடுத்திருக்கக் கூடிய அவதாரங்கள் எண்ணற்றவை. ஆனால், அதில் பொதுவாக சொல்லக் கூடியது எதுவெனில், தசாவதாரம். அப்படி கை விரல்களிலிருந்து உற்பத்தி செய்வதால், கராங்குலி ந்த தசாவதாரத்தை எங்கிருந்து அம்பிகை உற்பத்தி செய்வதால்… கராங்குலி நகோத்பன்ன … கர - கை, அங்குலி - விரல், நக -நகம், உத்பன்ன - உண்டான, இந்தக் கை விரல்களிலிருந்து உண்டாக்கப்பட்ட நாராயண தசாக்ருதி. நாராயணனுடைய பத்து அவதாரங்கள்.
பண்டாசுர யுத்தம் நடக்கும்போது, அந்தப் பழைய அசுரர்களெல்லாம் மீண்டும் வரும்போது, அந்தந்த அசுரர்களை அழிப்பதற்கு நாராயணனுடைய அந்தந்த அவதாரங்களை உண்டாக்குகிறாள். எப்படி உண்டாக்குகிறாள் எனில், தன்னுடைய சங்கல்பத்தினால் தன் கைவிரல்களிலிருந்து உண்டாக்குகிறாள். பகவானுடைய அந்தந்த ரூபங்களிலேயே போய் அந்தந்த அசுரர்களை அழிக்கின்றது. அதுதான் இந்த நாமத்தினுடைய சரித்திரம். இந்த நாமத்திற்கான அர்த்தம்.
இப்போது இந்த நாமத்தின் உள்ளர்த்தம் எதைக் காண்பிக்கின்றது என்று பார்ப்போமா?
இந்த பண்டாசுரனுடைய யுத்தமானது ஒரு சாதகனுக்குள் என்னென்ன செய்கின்றது என்றுதான் பார்த்துக் கொண்டே வருகிறோம்.
பகவானுடையது தசாவதாரம் என்று சொல்கிறோம். புராணம் முதல் ஆழ்வார்களின் அருளிச் செயல் வரை தசாவதாரத்தைத்தான் மிகவும் பிரதானமாகச் சொல்கிறோம்.
ஏன் இந்த தசாவதாரத்தை பிரதானமாகச் சொல்கிறோம்? எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார். எடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆனாலும், ஏன் தசாவதாரத்தை பிரதானமாகச் சொல்கிறோமெனில், இதில் இருக்கக் கூடிய ஒரு ஒழுங்கு அமைவு. இதற்காகவே நம்முடைய ஆச்சார்யார்கள் இந்த தசாவதாரத்தை பிரதானமாக எடுத்துக் காண்பித்திருக்கிறார்கள்.
கொஞ்சம் விரிவாகவும் ஆழமாகவும் போவோமா?
இந்த ஜீவாத்மாவானது ஜென்மா எடுக்கின்றது. இப்போது நாம் மனிதப் பிறவி என்று சொல்கிறோம். இந்த மனிதப் பிறவிக்கு முன்னால் விலங்குகள் இருக்கின்றன. விலங்குகளுக்கு முன்னால் பறவைகளினுடைய நிலைகள் இருக்கின்றன. அந்த பறவைகளுக்கு முன்னால், அதைவிட சின்ன உயிரினங்கள் இருக்கின்ற நிலைகள் இருக்கின்றன. பாம்பு, தவளை, மீன் என்றெல்லாம் இருக்கின்றன. அதற்கும் முன்னால் பார்த்தால் தாவரங்களினுடைய நிலைகள் இருக்கின்றன.
இப்படி ஜீவாத்மாக்களுக்கு வெவ்வேறு சரீரங்களை பகவான் சிருஷ்டி செய்து கொடுக்கிறார். பிரம்மா வெவ்வேறு விதமான தாவரங்கள், பறவைகள் என்று சிருஷ்டி செய்து கொடுக்கிறார். அந்தந்த சரீரங்கள் மூலமாக ஜீவாத்மா வேலை செய்கின்றது.
இப்போது பகவான் எல்லா சரீரங்களாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். மீனாகவும் பிறந்திருக்கிறார். நீர்வாழ் உயிரினமாக பிறந்திருக்கிறார். ஆமையாக பிறந்திருக்கிறார். நீரிலும் நிலத்திலும் இருப்பதாக பிறந்திருக்கிறார்.
நிலத்தில் வாழக் கூடிய வராஹமாக பிறந்திருக்கிறார். பிறகு விலங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட நரசிங்கமாக பிறந்திருக்கிறார். அப்புறம் மனிதனிலேயே பல நிலைகளில் பிறந்திருக்கிறார். வாமன மூர்த்தியாக, திருக்குறளப்பனாக சின்ன உருவத்தில் இருந்திருக்கிறார். கோபத்தை பிரதானமாக கொண்டவராக பரசுராமராக இருந்திருக்கிறார். தர்மத்தை பிரதானமாகக் கொண்ட ராமனாக இருக்கிறார். பிறகு, மனிதனே இன்னும் மேல்நிலையை அடைந்து புருஷன் புருஷோத்தமனாகலாம் என்பதை கிருஷ்ணாவதாரம் மூலமாக காண்பிக்கிறார். மனிதன் தெய்வ நிலையை அடையலாம் என்பதை கிருஷ்ணாவதாரம் மூலம் காண்பிக்கிறார்.
இப்படி சிறிய உயிரினத்தில் தொடங்கி, ஒரு ஜீவாத்மா அடையக்கூடிய மிக உயர்ந்த நிலைகளையும். வெவ்வேறு நிலைகளை இந்த தசாவதாரம் மூலம் காண்பித்து விட்டார், பகவான். இதை மேற்கத்தியர்கள் சார்லஸ் டார்வின் evolution theory, பரிணாமக் கொள்கையோடு ஒப்பிடுவார்கள். ஆனால், இப்படி தசாவதாரத்தோடு ஒப்பிட முடியுமா என்பதெல்லாம் கேள்விதான்.
இதன் மூலம் என்ன காண்பிக்கிறார் எனில், பரமாத்மாவானவர் அவதாரம் செய்ய வேண்டுமென்று நினைத்தால், எந்த சரீரத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார். இன்னொன்று என்னவெனில், எல்லா சரீரத்திலும் இருக்கின்ற ஆத்ம வஸ்து ஒன்றுதான் என்றும் காண்பிக்கிறார்கள். அது விலங்கோ, தாவரமோ, பறவையோ, மனுஷ்ய சரீரமாகவோ இருக்கலாம். ஆனால், அங்கு இருக்கக் கூடிய ஆத்ம வஸ்து ஒன்றுதான். இப்போது இந்த பத்து அவதாரங்களைத்தான் அம்பிகையானவள் தன்னுடைய நகத்திலிருந்து உண்டாக்குகிறாள்.
இந்த விஷயம் ஒரு சாதகனுக்குள் என்ன காண்பித்துக் கொடுக்கின்றது என்று பார்ப்போம்?
இப்போது நாம் ஒரு ஜென்மம் எடுத்திருக்கிறோம். ஒரு சாதகன் அத்யாத்மமாக முன்னேறுவதற்காக ஒரு சாதனை செய்கிறான். குரு அனுக்கிரகத்தை எதிர்பார்க்கிறான். தெய்வானுக்கிரகத்தை எதிர்பார்க்கிறான். இனி பிறவி இல்லாத நிலையை அடைய வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். ஞானத்தை அடைய வேண்டுமென்றும், பக்தி செய்ய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறான். கர்ம யோகம், ராஜயோகம், ஞான யோகம் என்று எல்லாவிதமான சாதனைகளையும் செய்கிறான். ஏன் செய்கிறான் எனில், இதற்கு முந்தைய ஜென்மாவில் இந்தச் சாதனையின் பூர்வ வாசனை இருந்தால்தான், சாதனை பற்றிய பதிவுகள் இருந்தாதான் அவனால் இந்தச் சாதனையையே செய்ய முடியும்.
இங்கு ஜீவாத்மா, சாதகன் என்று சொல்வதெல்லாம் யாரையோ அல்ல. நம்மைப்பற்றித்தான் பேசுகிறோம். நாம் இந்தப் பிறவியை எடுத்திருக்கிறோம் எனில், இதற்கு முன்னால் கோடி பிறவிகள் எடுத்து விட்டுத்தான் இந்தப் பிறவிக்கே வந்திருக்கிறோம். ஒரு பிறவி இரண்டு பிறவியெல்லாம் இல்லை. கோடி... கோடி... பிறவியை எடுத்து விட்டுத்தான் இந்தப் பிறவிக்கே வந்திருக்கிறோம்.
அப்போது கோடி கோடி பிறவிகளை எடுத்துவிட்டு இந்தப் பிறவிக்கு வந்திருக்கிறோம் அல்லவா? இந்தப் பிறவியில் நாம் சாதனையெல்லாம் செய்கிறோம். சரிதான், ஆனால், நமக்குள் உண்டாகியிருக்கும் இந்த அஞ்ஞான விருத்தியானது ஏதோ இந்த ஜென்மத்தில், இந்த சரீரத்தில், இந்த மனதில் மட்டும்தான் அஞ்ஞான விருத்தி உண்டாகியிருப்பதாக நினைச்சுக்கறோம். அதுதான் இல்லை. இதுவரை எடுத்த அத்தனை பதிவுகள் மூலமாக அநாதி கர்ம வாசனைகளின் மூலமாகத்தான் அஞ்ஞான விருத்திகள் உண்டாகின்றன.
ஜந்துனாம் நரஜன்மம் துர்லபம் என்பதுபோல எத்தனையோ விதம்விதமான பிறவிகளை எடுத்துவிட்டு வந்திருக்கிறோம்.
இப்போது இதற்கு முன்னால் பிறந்த அத்தனை ஜென்மங்களின் கர்மாக்களின் பதிவுகள் இருக்குமல்லவா? அதனால்தானே இந்த அஞ்ஞான விருத்தியே உண்டாகின்றது. அந்த அஞ்ஞான பதிவுகளை அனைத்தையும் முடிக்க வேண்டும். உதாரணமாக நாம் ஏதோ ஒரு பிறவியில் மீனாக பிறந்திருப்போம். அதிலிருந்து நமக்குத் தெரியாமல் ஒரு அஞ்ஞான விருத்தி உண்டாகும். ஒரு பாம்பாக பிறந்திருந்தால் அதிலிருந்து ஒரு அஞ்ஞான விருத்தி உண்டாகியிருக்கும். செடி கொடியாக இருந்திருந்தால் கூட உருவாகியிருக்கும். விலங்காக இருந்திருக்கும்போது, பறவையாக இருந்திருக்கும்போது கூட உண்டாகியிருக்கும். எதிலிருந்து எது வந்தது என்று சொல்ல முடியாது. அப்போது, எந்த அஞ்ஞான விருத்தியின் தொடர்ச்சி என்று சொல்லவே முடியாது.
(சுழலும்)