இந்த முறை இரண்டு நாமங்களான - மூலமந்த்ராத்மிகா - மூலகூடத்ரயகலேபரா என்பதை பார்க்க இருக்கின்றோம்.
சென்ற முறை மூன்று நாமங்களான…
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா
கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணீ
ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ
- என்று பார்த்தோம்.
இந்த மூன்று நாமங்களும் சேர்த்து பஞ்சதசாக்ஷரி என்கிற ஸ்ரீவித்யா மூல மந்திரனுடைய சொரூபமாக அம்பாள் எப்படி இருக்கிறாள். ஸ்தூலத்திற்கும் சூட்சுமத்திற்கும் அந்த மந்திரம் எப்படி இணைப்புப் பாலமாக செயல்படுகின்றது என்றெல்லாம் இந்த மூன்று நாமங்களில் பார்த்தோம்.
இப்போது நாம் பார்க்கப்போகின்ற இந்த இரண்டு நாமங்கள், இதிலிருந்து தொடங்கி அடுத்து வரக்கூடிய சில நாமாக்களுக்கு அம்பாளினுடைய சூட்சும ரூபங்களைத்தான் பார்க்கப் போகிறோம். இதற்கு முன்பு ஸ்தூலமாக பண்டாசுர யுத்தம், தேவர்களை காப்பாற்றியது என்று வெளியில் அண்டத்தில் நடந்த விஷயங்களை பார்த்தோம். புராணங்கள் மூலமாக நமக்குத் தெரிந்த விஷயங்கள். இனி வரக்கூடியதெல்லாம் கொஞ்சம் சூட்சுமமாக, நுண்மையாக, நம்முடைய பிண்டத்தில், நம்முடைய சரீரத்திலுள்ள விஷயங்களை பார்க்கப் போகிறோம்.
திருமந்திரம் நூலில் சொல்லப்பட்டுள்ள அண்டம் பிண்டம் போன்ற வார்த்தைகளெல்லாம் வந்து கொண்டே இருக்கும். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்தில் உள்ளது. இந்தப் பிரபஞ்சம் என்பது விராட் சொரூப சரீரம். நம்முடையது என்பது தனிப்பட்ட சரீரம். இந்த தனிப்பட்ட சரீரமும் அந்த விராட் சொரூப சரீரமும் எப்போதும் ஒரு இணைப்பில்தான் இருக்கும். அதுமட்டுமல்ல ஒரு யோகிக்கு கிடைக்கக் கூடிய பெரிய அனுபவம் என்னவெனில், இந்த சரீரமும் விராட் புருஷனுடைய சரீரமும் வேறில்லை என்கிற பெரியதொரு அனுக்கிரகம் யோகிக்குக் கிடைக்கும்.
ஒரு யோகிக்கு தேகாத்ம புத்தி போகும்போது, இந்த சரீரம் போய்விடும். நான் தான் இந்த சரீரம் என்கிற விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக போய்விடும். அதற்குப் பிறகு என்ன ஆகுமெனில், நான் விராட் புருஷ சரீரமாக இருக்கிறேன் என்கிற, மகத் அகங்காரம் வரும்… ஆனால், இது சொரூபத்திற்கு அழைத்துப் போகும். இது சாதாரணமான நிலையில் உள்ள அகங்காரம் அல்ல. சிறிய அகங்காரத்திற்குள் சென்றால்… மீண்டும் மீண்டும் இந்த கர்மாவிற்குள் கொண்டு செல்லும். பெரிய அகங்காரத்திற்குள் சென்றால் அது சொரூபத்திற்குள் கொண்டு போகும்.
இந்த பெரிய அஹத்தை தான் ரமண பகவான் நான் என்கிறார். ஆங்கிலத்தில் CAPITAL - I - என்கிறார். இதுவே சொரூபம். இதுவே அஹம்… அஹம்… என்று ஸ்பூரித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது யோகியானவன் விராட் சொரூப பாவத்தையும் கடந்து, அவன் எல்லாவற்றினுள்ளும் இருக்கும் அந்தர்யாமி வஸ்துவாக தன்னை உணர்கிறான்.
இந்த சஹஸ்ரநாமம் சூட்சுமம் என்று நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கிறதெனில், பஞ்சதசாக்ஷரி என்கிற மூலமந்திரத்தையே காண்பித்துக் கொடுக்கிறது. ஏனெனில், இது ஸ்ரீவித்யா பரமாக இருப்பதாலேயே இந்த மூல மந்திரத்தையே முதன்மையாக எடுத்துக் கொள்கிறோம். சாதகன் ஜபம் செய்யக்கூடிய மூல மந்திரமே அம்பாள்தான். அம்பாளுடைய சொரூபம்தான் என்பதை நமக்கு காண்பிக்கிறது.
பொதுவாக ஸ்ரீவித்யா உபாசனா மார்க்கத்தில் விசேஷமாக ஒரு விஷயம் சொல்வது வழக்கம்.
ஒரு ஆசார்யார் அல்லது குரு மூல மந்திரத்தை உபதேசம் செய்கிறார். நாம் அந்த மூல மந்திரத்தை ஜபம் செய்து அந்த தேவதையை உபாசனை செய்கிறோம். இது மூன்றும் வருகின்றது. ஆனால், நமக்கு இந்த உபாசனா மார்க்கம் என்ன சொல்கிறதெனில், குருவிடமிருந்து நீ மந்திரத்தை வாங்கி, அந்த மந்திரத்தின் மூலமாக உபாசனை செய்கிறோம் என்பது வெளிமுகமாக விஷயம்தான். வெளிப்புறத்தில் அப்படி அது தெரிகிறது. ஆனால், குருவானவர் மந்திரத்தை கொடுக்கக் கூடிய குரு இருக்கிறார் அல்லவா… அவருக்கும் மந்திரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் கொடுத்த மந்திரத்திற்கும் அந்த மந்திரம் மூலமாக உபாசிக்கின்ற தேவதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அந்த தேவதைக்கும் குருவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
குரு - மந்திரம் - தேவதை மூன்றுக்குள்ளும் எந்த வேறுபாடும் இல்லை. எந்த வித்தியாசமும் இல்லை. மூன்றும் ஒன்றுதான்.
முதலில் வேதாந்தத்தில் திரிபுடி போக வேண்டும் என்று சொல்வார்கள். தியானம் செய்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் என்கிற இந்த மூன்றுக்கும் உள்ள திரிபுடி போக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், தொடக்கத்திலேயே ஒரு திரிபுடி போக வேண்டும். அது என்னவெனில், குரு - மந்திரம் - தேவதை என்பதே அது.
ஒரு சாதகன் மிகமிக என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்பதை நாம் இப்போது பார்க்க வேண்டும். இதை நாம் நன்கு உள்வாங்கி புரிந்து கொண்டால் குரு ஏன் மந்திரத்தை கொடுக்கிறார் என்பது புரிந்து விடும். வாருங்கள் பார்ப்போம்.
நாம் பிரத்யட்சமாக பார்க்கக் கூடிய குரு என்பவர் ஸ்தூலம். அவரிடமிருந்து வரும் மந்திரம் என்பது சூட்சுமம். அதாவது குரு என்பவர் ஸ்தூலம். அந்த ஸ்தூலமான குருவிடமிருந்து வரக்கூடிய மந்திரமென்பது சூட்சுமம். அந்த சூட்சுமமான மந்திரம் காண்பிக்கக் கூடிய தேவதை இருக்கிறதல்லவா… அது காரணம். அப்போது ஸ்தூலமாக இருக்கக் கூடிய குரு, சூட்சுமமாக இருக்கக்கூடிய மந்திரம், காரணமாக இருக்கக் கூடிய தேவதை இந்த மூன்றும் ஒன்றுதான். இங்கு தேவதை என்பது அம்பாளே ஆகும். இந்த மூன்றும் ஒன்றுதான் என்கிற திரிபுடி மிகமிக தொடக்கத்திலேயே போக வேண்டும். ஒரு சாதனையினுடைய தொடக்கத்திலேயே போய்விட வேண்டும்.
இப்படியே தொடர்ந்து சென்றால்… சாதனை, சாதகன், சாத்தியம் என்கிற மூன்றும் திரிபுடியும் போய்விடும். இந்த மூன்றும் வெவ்வேறல்ல என்பது போய்விடும். இந்த சாதனையின் முன்னேற்றத்தில் இறுதியில் சாதனை செய்பவன், சாதனை, சாதிக்கப்படும் பொருள் மூன்றும் ஒன்று என்கிற நிலையில், திரிபுடி ரஹிதமான ஞானம் சித்திக்கும். அத்வைத ஞானம் சித்திக்கும்.
நாம் அடிக்கடி ஒரு விஷயத்தைப் பார்த்துக் கொண்டே வருகிறோம். நாம் முதலில் பன்மையை ( plurality) கடக்கிறோம். அதற்கு அடுத்து trinity க்கு வருவோம். அதற்கும் அடுத்து duality க்கு வருவோம். இதையும் கடந்து unityக்கு வருவோம். முதலில் பன்மைத் தன்மையை கடந்து, மும்மைத் தன்மை வந்து, மும்மை கடந்து இருமைக்கு வந்து, அந்த இருமையையும் கடந்து ஒருமையை பார்ப்பது.
இப்போது அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த நாமம் அமைந்துள்ளது. அம்பாள் எப்படி இருக்கிறாள் எனில், மூலமந்த்ராத்மிகா என்கிற மூல மந்திரமே தன்னுடைய சொரூபமாக இருக்கிறாள். அம்பிகையினுடைய சொரூபம் என்னவெனில், மூல மந்திரம். பஞ்சதசாக்ஷரியினுடைய மந்திரத்தை வைத்து நாம் இதற்கு முந்தைய நாமங்களில் விரிவாகப் பார்த்து விட்டோம்.
இப்போது சாதகனுக்குள் இந்த மூலமந்திரமே அம்பாளினுடைய ரூபமாக இருக்கிறது. இப்போது இந்த மந்திரத்தை சகுனமான ரூபத்தோடு மட்டும் இணைத்துக் கொள்வான். அப்படி இணைத்துக் கொள்வது சரிதான். ஆனால், அதற்கடுத்து மூலமந்திரமே அவளுடைய ஆத்மாவாக இருக்கிறது. எனவேதான், மூல மந்திரத்திற்கும் அம்பாளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அம்பாள் - மூல மந்திரம் - குரு இவையெல்லாமுமே ஒன்றுதான்.
இதற்கு அடுத்த நாமமான மூல கூட த்ரய கலேபரா என்று வருகிறது.
இந்த மூலமந்திரமான பஞ்சதசாக்ஷரியை மூன்று கூடங்களாக பார்த்தோம். அப்படிப் பிரித்தால் மூல கூட த்ரய கலேபரா. கலேபரம் என்றால் உடல். சரீரம். அவளுக்கு எது சரீரமெனில், இந்த மூலமந்திரத்தில் இருக்கக் கூடிய மூன்று கூடங்கள்தான் அவளுக்கு சரீரம். இந்த மூன்று கூடங்களை அவள் சரீரமாக கொண்டிருக்கிறாள். இதற்கு முன்னால் நாம் பார்த்த மூன்று நாமங்களோடு நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.
மூல கூடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மூன்று கூடங்களும் அம்பாளுக்கு சரீரமாக இருக்கிறது. இதுதான் மேலே சொன்ன இரண்டு நாமங்களுக்கும் அர்த்தமாகும்.
இந்த அர்த்தமானது நமக்கு இன்னும் உள்ளார்ந்து என்ன காண்பித்துக் கொடுக்கிறதென்பதையும் பார்ப்போமா!
ஒரு சாதகன் தொடக்கத்திலேயே ஒரு திரிபுடியை கடக்க வேண்டும் என்று பார்த்தோம். அதேசமயம் முன்னேற்றம் அடையும்போது திரிபுடி தன்னால் கடந்து போகின்றது. முதலில் கடக்க வேண்டிய திரிபுடி என்பது குரு வேறு, மந்திரம் வேறு, தேவதை வேறு என்று நினைக்காமல் மூன்றும் ஒன்றே என்பதை கடந்து விட்டோம். அதற்கு அடுத்து சாதகன், சாதனை, சாத்தியம் என்பதையும் கடந்து விடுகின்றான்.
இப்போது மூல மந்திரமாக ஒன்றாக இருப்பவளும் அவள்தான். அந்த மூல மந்திரத்தின் மூன்று கூடங்களாக இருப்பதும் அவள்தான். மூன்று கூடங்களும் அவளுக்கு சரீரமாக இருக்கிறது. மூல மந்திரம் அவளுக்கு சொரூபமாக இருக்கிறது.
இது எப்படியெனில், நமக்கு ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று மூன்று இருக்கிறது. ஆனால், இந்த மூன்றையும் தாண்டி நாம் ஆத்மாவாக இருக்கிறோம். அந்த ஆத்மாதான் இந்த சரீரத்தில் வியாபித்திருக்கிறது. அந்த ஆத்மாதான் இந்த சரீரத்தை இயக்குகிறது. அந்த ஆத்மா இருப்பதால்தான் சரீரம், மனசு, பிராணன் இந்த மூன்றுமே, இயங்குகின்றது. ஒருவகையில் சொல்லப்போனால் நமது ஸ்தூல சரீரம் உடலாகும். சூட்சும சரீரம் பிராணன். காரண சரீரம் என்பது மனசு. இந்த மூன்றும் இயங்க வேண்டுமெனில் ஆத்மாவால் தான் முடியும். இந்த மூன்றிலேயும் ஆத்மாதான் வியாபித்திருக்கிறது. அதேமாதிரி மூல மந்திரத்தை மூன்றாக பிரித்தால் மூன்று கூடங்களாக இருக்கிறது, இந்த மூன்று கூடங்களும் அம்பாளுக்கு சரீரமாக இருக்கிறது. அந்த மூல மந்திரம் அம்பாளுக்கு சொரூபமாக இருக்கிறது.(சுழலும்...)