சென்ற இதழின் தொடர்ச்சி….
‘‘பிரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா
ஹரநேத்ராக்நி ஸந்தக்த காம ஸஞ்ஜீவ நௌஷதி’’
இந்த சித்த விருத்தி நிரோதம் எங்கு நடந்தது. மன்மதனை எரித்தார்கள் அல்லவா? அந்த இடம்தான் இந்த சித்த விருத்தி நிரோதம். மன்மதனை எரித்து விட்டார். விஷயம் முடிந்து விட்டது என்று எல்லோரும் நினைக்கிறோம். இல்லை. இந்த விருத்திகளையெல்லாம் எரித்த பிறகுதான்… அதாவது மன்மதனை எரித்த பிறகுதான் அவனுக்கு ஒரு காரணம் புரிகிறது. இந்த விருத்திகளுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது என்று புரிகிறது.
இந்த விருத்திகளுக்கெல்லாம் கர்மா காரணமாக இருக்கிறது என்று பார்க்கிறான். கர்மாவினால்தான் விருத்தி வந்ததா அப்போது கர்மாவை கழிக்க வேண்டும். அப்போது அம்பாள் என்ன செய்கிறாள் சிதக்னி குண்டத்தில் ஆவிர்பவிக்கிறாள். ஆவிர்பவித்து போருக்கு வருகிறாள்.
கர்மாவிற்கு வாசனை காரணம். இன்னும் போர் முடியவில்லை. தொடர்கின்றது. வாசனை என்கிற சக்தி சேனை மூலமாக பண்ட சேனையை அழிக்கின்றாள். வாசனை அழிந்து விட்டதா… அவ்ளோதானா இல்லை. இந்த வாசனைக்குக் காரணம் மூல அவித்யா. இந்த மூல அவித்யாவால்தான் தேகாத்ம புத்தி. இந்த தேகாத்ம புத்தி என்கிற சூன்யத நகரம் இருக்கிறது. அந்த சூன்யத நகரத்தை அழிக்கிறாள். கடைசியில் எல்லாவற்றிற்கும் காரணம் மூல அஞ்ஞானம். அந்த மூல அஞ்ஞானத்தை கடைசியில் அழிக்க வேண்டும். அந்த மூல அஞ்ஞானம் யாரெனில் அவனே பண்டாசுரன். கடைசியில் பண்டாசுரன் என்கிற மூல அஞ்ஞானத்தை சம்ஹாரம் செய்கிறான்.
சுவாமி முதலில் சித்த விருத்தி நிரோதம் என்று சித்தத்தை நிரோதம் செய்தார். மன்மதனை எரித்தார். அம்பிகை இறுதியில் பண்டாசுரனை முடித்து வைக்கிறாள். முல அஞ்ஞானம் போகணும். இதுதான் பண்டாசுர வதம். இது எல்லாமும் முடிந்ததற்குப் பிறகு பார்த்தால், கடைசியில் இதெல்லாம் ஒன்று என்கிற இடத்திற்குச் சென்று நிற்கும். அங்குதான் அத்வைத பாவம் சித்திக்கும். அந்த அத்வைத பாவம்தான். ஔஷதம். அந்த அத்வைத பாவம் தான் மருந்து. சாதாரண ஔஷதம் கிடையாது. மீண்டும் உயிர் அளிக்கக் கூடிய ஔஷதம். இனி ஒருமுறை நம்மை பிறக்காமல் இருக்க வைக்கக் கூடிய மருந்து. இவ்வளவு நாட்கள் நாம் பிறந்து பிறந்து வந்ததுனால…. உயிரென்றால் என்னவென்றே தெரியவில்லை. இந்த மருந்து நமக்கு கிடைக்கும்போதுதான் நமக்கு உயிரென்றால் என்னவென்றே தெரியும். அப்போதுதான் நமக்கு உண்மை சொரூபமே நமக்குத் தெரியும். அதனால்தான் அது சாதாரண ஔஷதம் கிடையாது. சஞ்ஜீவன ஔஷதம்.
அங்கு உயிர் அளிக்கக் கூடிய மருந்தாக, எல்லா விருத்தியையும் ஞான விருத்தியாக ஆத்ம விருத்தியாக மீண்டும் உயிர்பித்துக் கொடுக்கிறார்.
சிறு உதாரணத்தோடு இதைப் பார்க்கலாம். ஒருவர் ஒரு பூவைப் பார்க்கிறார். இந்தப் பூ இவ்வளவு அழகாக இருக்கிறதே. இவ்வளவு நறுமணம் உடையதாக இருக்கிறதே… இந்த பூவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அகங்காரம் வேலை செய்து அந்தப் பூவை எடுத்துக் கொள்கிறார் அல்லவா? அது கர்ம விருத்தி.
அதே பூவை ஒருவர் பார்க்கிறார். ஆஹா… இந்தப் பூ இவ்வளவு நறுமணம் உடையதாக இருக்கிறதே. இவ்வளவு அழகாக இருக்கிறதே. அந்தப் பூவை பறித்து பகவானின் பாதத்தில் வைக்க வேண்டுமென்கிற ஒரு எண்ணம் வந்து விட்டால், அது ஞான விருத்தி. அவ்வளவுதான். அந்த எண்ணம் மாறவில்லை. ஆனால், அந்த எண்ணத்தினுடைய மூல காரணம் மாறி விட்டது.
முதலில் கர்ம வசத்தினால்… அகங்காரத்தினால் வந்த எண்ணத்தின் செயல்பாடு. இப்போது ஞானத்தை நோக்கிய ஞானத்தை மையமாக்கிய செயல்பாடு. இது சிறிய விஷயமாகத் தோன்றலாம். சின்னச் சின்ன விஷயங்களில் மாற்றம் வரும்போது பிறகு, எல்லாமே மாறும்.
அம்பிகையானவள் ஒருவருக்குள் எப்படி பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுகிறாள் என்பதை காட்டும் நாங்கள் இவை.
இந்த நாமத்திற்கான கோயிலாக திருத்துறைப்பூண்டி ஆலயத்தைச் சொல்லலாம். இங்குள்ள தலத்தின் ஈசனின் திருநாமம் பவ ஔஷதீஸ்வரர். தமிழில் பிறவி மருந்தீஸ்வரர் ஆகும். அம்பாளின் பெயர் பெரிய நாயகி அல்லது பிரஹன் நாயகி. ஏனெனில், இந்த நாமாவானது ஔஷத விஷயமாக வருவதால், நாம் இந்த ஆலயத்தைச் சொல்லலாம்.
இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டும். அம்பாள் இந்த உலகத்திற்கு மருந்தாக இருக்கிறாள். அதே அம்பாள் சிவபெருமானுக்கு மருந்தாக இருக்கிறாள். சிவா விஷ்வஸ்ய பேஷதி சிவா ருத்ரஸ்ய பேஷதி … என்று இரண்டு வார்த்தைகள் வரும்.
சுவாமிக்கும் அவள்தான் மருந்தாக இருக்கிறாள். உலகத்திற்கும் அவள்தான் மருந்தாக இருக்கிறாள் என்று வரும். இந்த உலகம் என்பது அவளுடைய குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு அவள் மருந்தாக இருக்கிறாள். சுவாமிக்கு எப்படி மருந்தாக இருக்கிறாளெனில், சுவாமி விஷம் சாப்பிட்டபோது அம்பிகையானவள் தொண்டையில் கைவைத்து அப்படியே விஷத்தை நிறுத்தினாள். அதனால் அவர் நீலகண்டம் ஆனார். விஷம் அவரை ஒன்றுமே செய்யவில்லை.
ஏனெனில், அம்பிகையின் கரம் பட்டதுனால்தான். எனவே, அம்பிகை எல்லாவற்றிற்கும் சஞ்ஜீவன ஔஷதியாக இருக்கிறாள். எனவே, இந்த ஆலயத்தையே இந்த நாமத்திற்கு சொல்லலாம்.
(சுழலும்...)