Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகந்தையை பொசுக்கி ஞானத்தை அருளும் நாமம்

``பிரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா
ஹரநேத்ராக்நி ஸந்தக்த காம ஸஞ்ஜீவ நௌஷதி’’
இதற்கு முன்பு, அதாவது சென்ற நாமாவில் பண்டாசுர யுத்த முடிவைப் பார்த்தோம். பாசுபதாஸ்திரம், காமேஸ்வர அஸ்திரத்தை பயன்படுத்தி அழித்ததற்கு பிறகு, பிரம்மா, உபேந்திரன் என்கிற இந்திரன், விஷ்ணு, தேவர்களால் அம்பிகை ஸ்துதி செய்யப்படுகிறார்கள். அதாவது இவர்களெல்லாரும் துதி செய்கிறார்கள். இதைத்தான் ``பிரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா’’ என்கிற நாமம் சொல்கிறது. இந்த நாமத்தினுடைய தொடர்ச்சியான அர்த்தத்தைச் சொல்லும்படியாக ஹரநேத்ராக்நி ஸந்தக்த காம ஸஞ்ஜீவ நௌஷதி… என்கிற இந்த நாமம் வருகின்றது. இப்போது இரண்டாவதாக சொன்ன இந்த நாமத்தை நாம் முதலில் எங்கு பண்டாசுர யுத்தம் தொடங்கியதோ அங்கு சென்று தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும், அப்போதுதான் புரியும்.
முதலில் பண்டாசுர யுத்தம் எப்படி தொடங்கியது. மன்மதன் என்கிற காமனை சுவாமி எரித்துவிட்டார். அப்போது மன்மதன் சாம்பலாகி விட்டான். அந்த சாம்பலிலிருந்து ஒரு உருவம் உற்பத்தியானது. அந்த உருவத்தின் பெயர்தான் பண்டாசுரன். அவன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு சேனையை உண்டாக்கி, அந்த சேனையானது தேவர்களுக்கு இடையூறு செய்யப்போய், பிறகு தேவர்களை காப்பாற்றுவதற்காக அம்பிகையை ஸ்துதி செய்து, அம்பாள் சிதக்னி குண்டத்திலிருந்து வெளிவந்து, சக்தி சேனையின் மூலமாக அந்தச் சேனையை அழித்து பண்டாசுரனை வதம் செய்கிறாள்.
இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி எதுவெனில், மன்மதனை சுவாமி எரித்ததே ஆகும். இப்போது அந்த விஷயத்தோடு ஹரநேத்ராக்நி ஸந்தக்த காம ஸஞ்ஜீவ நௌஷதி… என்கிற இந்த நாமத்தை தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். ஹரநேத்ராக்நி - ஈசனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து உண்டான அக்னியினால் எரிக்கப்பட்ட மன்மதன்.
அப்படிப்பட்ட மன்மதனுக்கு இந்த பண்டாசுர யுத்தம் முடிந்ததற்குப் பிறகு, அம்பாளே ஒரு சஞ்ஜீவன ஔஷதியாக அதாவது சஞ்ஜீவனம் என்றால் மீண்டும் உயிர்பிக்கக் கூடியது… மீண்டும் உயிர்தரக் கூடிய ஔஷதி - மருந்தாக அம்பாள் செயல்பட்டு இந்தக் காமனை மன்மதனை மீண்டும் உயிர்பித்துக் கொடுக்கிறாள். இதுதான் இந்த இரண்டாவது நாமத்தின் பொருளாகும். மன்மதன் எரிந்ததற்குப் பிறகு, சுவாமியிடம் அழுததாகவும், ரதிதேவியின் கண்ணுக்கு தெரியும்படி மட்டும் மன்மதனை எழுப்பிக் கொடுத்ததாகவும் பொதுவாக சொல்வது வழக்கம். ஆனால், லலிதோபாக்கியானம் அதை விசேஷமாகச் சொல்கிறது. பொதுவாக, எல்லோர் கண்களுக்கும் தெரியும்படி இருந்தான். அதற்குப் பிறகு ரதிதேவியினுடைய கண்களுக்கு மட்டுமே தெரியும்படி ஆனதுனால், அவனுக்கு அணங்கன் என்று பெயர்.
அனங்கன் என்றால் வெளிப்படையாக அங்கங்கள் தெரியாமல் மறைந்திருப்பவன் என்று பொருள். அப்படி சுவாமி அவனை உயிர்பித்துக் கொடுப்பதற்கு யார் காரணமெனில், அம்பாள் என்கிற இந்த மருந்துதான் காரணம். இரண்டு நாமத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, பண்டாசுர யுத்தம் முடிந்ததற்கு பிறகு, பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள் அனைவரும் புகழ்கிறார்கள். ஸ்துதி செய்கிறார்கள். அதற்கடுத்து இந்த யுத்தத்தினுடைய ஒரு விரிவாக அந்த மன்மதனை அம்பிகை எழுப்பிக் கொடுத்துவிட்டாள்.  இப்போது ஏன் மீண்டும் அம்பிகையானவள், மன்மதனை எழுப்ப வேண்டும்? என்று பார்க்க வேண்டும்.
மன்மதன், சுவாமியின் மீது அம்பை எய்தான். சுவாமி மன்மதனை எரித்து விட்டார். அந்த எரித்ததிலிருந்து பண்டாசுரன் வந்தான். பண்டாசுரனை அம்பிகை வதம் செய்துவிட்டாள். மன்மதன் எதுவுமே செய்யவில்லையே மன்மதன் என்பவன் தேவர்களில் ஒருவன்தானே. இப்போது பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்கள் ஸ்துதி செய்யும்போது அவர்களுக்குள் மன்மதனும் ஒருத்தனாக இருப்பதினால், அவனை அம்பாள் மீண்டும் எழுப்பிக் கொடுக்கிறாள்.
அதுமட்டுமல்லாது, மன்மதன் அம்பாளின் உபாசகனாக இருப்பதால் எழுப்பிக் கொடுக்கிறாள். ஏனெனில், தேவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு அஞ்ஞானத்தினால் அம்பை போட்டு விட்டானே தவிர, அவனுக்கு அம்பிகையின் மீது பெரிய பக்தி உண்டு.
அதனால் அவனை மீண்டும் எழுப்பிக் கொடுக்கிறாள். ஆனால், நாம் இங்கு internal process என்ன நடக்கின்றது என்று பார்க்க வேண்டும். பண்டாசுர யுத்தம் என்பதே ஒரு சாதகனுக்குள் ஒரு ஜீவாத்மாவிற்கு நடப்பதுதான் என்று பார்த்தோம். நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் நடப்பதுதான் பண்டாசுர யுத்தம் என்று பார்த்தோம். என்ன internal process எனில், பண்டாசுரன் என்பவன் மூல அஞ்ஞானம். மூல அவித்யா. அம்பாள் என்பது சித் சொரூபிணி. வித்யா சொரூபிணி. பரம ஞான சொரூபிணி. ஞானம் எப்படி வெளிப்படுகிறதெனில், அம்பாள் உருவத்தில் வெளிப்படுகின்றது. ஞானம் காருண்யத்தின் வழியாக வெளிப்படுகிறது. அந்த ஞானம் காருண்யம் வழியாக வெளிப்பட்டு, நம்முடைய மூல அஞ்ஞானத்தை அழிக்கின்றது.
ஞானம் என்கிற காமேஸ்வரர் காருண்யம் என்கிற காமேஸ்வரி வழியாக வெளிப்பட்டு, லலிதா திரிபுரசுந்தரியாக சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாக வந்து, மூல அஞ்ஞானமாக இருக்கக்கூடிய பண்டாசுரனை வதம் செய்வது என்பது ஒவ்வொருவருக்குள் நடக்கக்கூடிய விஷயமாகும். இப்போது இந்த process உள்ளே நடந்து முடிக்கும்போது, நாம் முந்தைய நாமாவில் ஒரு வார்த்தையைப் பார்த்தோம்.
இந்த பண்டாசுரன் அழிந்தான் என்று சொல்லும்போது, அது ஜீவன் முக்த லட்சணம் என்று பார்த்தோம். அந்த மூல அஞ்ஞானம் போய்விட்டதெனில் அது ஜீவன் முக்த நிலை என்று பார்த்தோம். இப்போது ஒரு சாதகனுக்கு மூல அஞ்ஞானத்தை அம்பாள் அழித்துவிட்டாளெனில், என்ன நடக்குமெனில் அவர்கள் தேகத்தை விட்டுவிடுவார்கள் என்றுதான் நாம் நினைப்போம். இங்கு அது விஷயம் கிடையாது. தேகத்தை விடவேண்டுமென்பது விஷயம் கிடையாது. இங்கு தேகத்தில் இருந்து கொண்டே, தேகம் நான் இல்லை என்கிற நிலை அவர்களுக்கு வந்துவிடும். அப்போது என்ன ஆகிறதெனில், தேகாத்ம புத்தியை கடந்து விடுகிறார்கள். இதுதான் ஜீவன் முக்த லட்சணம். அங்கு இந்த தேகமோ மனசோ நான் இல்லை என்கிற நிலை வந்தவுடன், அங்கு ஆத்ம சொரூபமாக இருக்கக் கூடிய லலிதா, சித்சொரூபமாக இருக்கக்கூடிய ஆத்மாதான் நான் என்கிற நிலை சித்திக்கும்.
வேதாந்த பரிபாஷையில் சொல்ல வேண்டுமெனில், ஒவ்வொன்றாக அம்பிகை அழித்தாள் அல்லவா? பண்டபுத்திரர்கள், விஷங்கன், விசுக்ரன், சேனைகளை அழித்தாள் அல்லவா… அவனுடைய நகரத்தை அழித்தாள். பிறகு பண்டாசுரனையே அழித்தாள்.
இவை எல்லாவற்றையும் வேதாந்தத்தில் சொல்ல வேண்டுமெனில், நேதி… நேதி… நேதி… இது இல்லை… இது இல்லை… இது இல்லை… என்று ஒவ்வொன்றாக விலக்கி விடுவதேயாகும். இதை எல்லாவற்றையும் செய்து கடைசியாக அவன் ஆத்ம சொரூபமாக ஆகிவிட்டதற்குப் பிறகு, அந்த சாதகனுக்குள் என்ன மாற்றம் நடக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
இப்படியேதான் ஆத்ம சொரூபம் என்று அறிந்து கொண்டபிறகு, மீண்டும் இந்த உலத்தையும் தன்னுடைய தேகத்தையும் மனதையும் பார்க்கும்போது, எல்லாமே அந்த ஆத்ம சொரூபத்தினுடைய ஒரு விலாசமாகத்தான் அவனுக்குத் தெரியும். எல்லாமே ஆத்ம சொரூபம் என்கிற பெரியதொரு மாற்றம் அங்கு நடக்கும். இப்படி எல்லாமே அவனுக்கு ஆத்ம சொரூபமாக தெரியும்போது என்ன ஆகுமெனில், எதை நாம் சாதாரணமான தேகமாக நினைக்கிறோமோ…. அந்த தேகம் என்ன ஆகுமெனில், அந்த தேகத்தை சிருஷ்டி செய்து கொடுத்த பிரம்மாவாகவே தெரியும். மனசு என்பது மனசை கட்டுப்படுத்தக் கூடிய விஷ்ணுவாகவே தெரியும். நம்மிடமுள்ள ஞானேந்திரிர்ய கர்மேந்திரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவர்களாகிவிடும். இதைத்தான் நாம் முதன்முதலாகப் பார்த்தோம். சிதக்னி குண்ட சம்பூதாவிற்கு முன்னாலேயே பார்த்தோம். தேவ கார்ய சமுத்யதா என்று பார்த்தோம்.
நம்முடைய இந்திரியங்களெல்லாம் உள்நோக்கித் திரும்பும்போது, அவர்கள் தேவர்களாகி விடுகிறார்கள். இப்போது இவனுக்கு ஒரு உண்மை தெரியவரும். இது உடல், இந்திரியங்கள் என்று ஒரு சுழற்சிக்குள் இழுத்துக் கொண்டே இருக்கிறது என்று பார்த்தோமே… ஆனால் இதெல்லாம்கூட ஆத்ம சொரூபத்தின் வெளிப்பாடுதான் போல என்கிற பெரிய வெளிப்பாடு அவனுக்கு அங்கு தெரியும்.
தேகம் என்பது அவனுக்கு பிரம்மாவாகவும், மனசு விஷ்ணுவாகவும், இந்திரியங்களெல்லாம் இந்திராதி தேவர்களாகவும் தெரியும்போது… இந்த தேகத்தாலும், மனசாலேயும் இந்திரியங்களாலேயும் என்ன அங்கு நடக்குமெனில், எல்லாமும் ஆத்மாவிற்கு வசப்பட்டு விடும்.
எல்லாமுமே ஆத்மாவை மட்டுமே நோக்கியிருக்கும். இப்போது இந்த நாமத்தைப் பாருங்கள். பிரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா… அங்கு பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்கள் என்ன செய்கிறார்களெனில், ஒன்றுகூடி அம்பாளை ஸ்துதி செய்கிறார்கள். அம்பாவினுடைய வைபவத்தை பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்கிறார்கள் என்று சொல்லும்போது, இந்த சாதகனுக்குள் தேகம், மனசு, இந்திரியங்கள் எல்லாமுமே அம்பிகையை நோக்கித் திரும்பி, அந்த ஆத்ம சொரூபமாகவே எல்லாமும் நிலைத்து நிற்கின்றது.
அதனால்தான் பெரிய பெரிய மகான்களுக்கெல்லாம் அதிஷ்டானம் என்று வைத்து, ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் திருவரசு என்று சொல்கிறோம். அல்லது பிருந்தாவனம் என்று சொல்கிறோம்.
இங்கு நமக்கு ஒரு கேள்வி வரலாம்? எந்த மகான்கள் இந்த தேகம் பொய். எல்லாமே விட்டுவிடு. இதெல்லாம் நேதி…நேதி… என்று விட்டுவிடு என்று சொன்ன மகான்களின் தேகத்தைத்தான் நாம் ஜீவசமாதி என்று கும்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போது சரியாக இருக்குமா என்று சந்தேகம் வரும்.
தேகாத்ம புத்தியை விடச் சொன்னதன் உள்ளார்த்தம் என்னவெனில், இந்த தேகம் முதற்கொண்டு எல்லாமே ஆத்ம சொரூபம் என்று காண்பித்தார்களே தவிர, அந்த தேகமும் பிரம்மம்தான். ரமண பகவான்கூட தேகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாரா… நான் யார்… நான் யார்… என்றுதான் கேட்கச் சொன்னார். ஆனால், ரமணாஸ்ரமத்தில் அவருடைய தேகம்தான் இன்றைக்கு சமாதியிலிருக்கிறது. லட்சக் கணக்கானவர்கள் சென்று நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறோமே. ஏனெனில், அந்த தேகம் பிரம்மம் என்பதைத்தான் அவர்கள் காண்பிக்க வந்தார்கள். இந்த நேதி… நேதி… இது  இல்லை… இது இல்லை… என்று சொல்கிற இடத்தில் அது துவைத பாவமாக இருக்கும். அங்கு வேறுபடுத்தித்தான் பார்க்கிறோம்.
ஆனால், அப்படி நேதி நேதி என்று செய்து கடைசியாக வரும் முடிவானது அத்வைதமாகும். அந்த முடிவை காட்டுவதுதான் மகான்களுடைய வேலை. மகான்களினுடைய சரீரம்கூட புனிதமானது என்பதால்தான் இன்னைக்கும் நாம் அதிஷ்டானமாக வைத்து கோயில் கட்டி கும்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அது வந்து சாதாரணம் கிடையாது.
இந்த நேதி… நேதி… என்கிற செயலானது முதலில் துவைத பாவத்தில் தொடங்கி, கடைசியில் அத்வைத பாவனையில் சென்று முடிகின்றது. இங்கு சாதகனுக்கு என்ன ஆகிறதெனில், அவனுடைய சரீரம், மனசு, இந்திரியங்கள் எல்லாமும் பிரம்ம, விஷ்ணு, இந்திரனாக மாறி அவனுடைய ஆத்ம சொரூபமான அம்பிகையை ஸ்துதி செய்கிறது.  இதற்கெல்லாம் காரணமான மன்மதன் இருக்கிறானல்லவா… மன்மதன் என்பதற்கு மனதை கலங்கடிக்கச் செய்கிறவன். அவன் வெறுமனே ஆசை என்பது மட்டுமல்ல. மனதை எதெல்லாம் கலங்கடிக்கின்றதோ அதெல்லாம் மன்மதனுடைய வேலை என்று எடுத்துக் கொள்ளலாம். காம, குரோத, மத மாச்சர்ய… எல்லாமே அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
இப்போது இதெல்லாம் செய்ததுனால எல்லாவற்றிற்கும் வசப்பட்டு, தன்னுடைய மூல அஞ்ஞானத்தினால தன்னுடைய கர்ம வாசனையினால இந்த ஜீவனானது இந்த தேகாத்ம புத்திக்குள் இருந்தது.
அம்பிகை ஒரு பெரிய யுத்தம் நடத்தினாள். அந்த யுத்தத்தை நடத்தி நேதி… நேதி… என்று செய்து கர்மாவை அழித்து விட்டாள். காம, குரோத, மத மாச்சர்யங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டாள். அந்த கர்மாவிற்கு காரணமாக இருக்கக் கூடிய வாசனா மலத்தை அழித்துவிட்டாள். அந்த வாசனைக்கும் காரணமாக இருக்கக் கூடிய மூல அஞ்ஞானத்தை அழித்துவிட்டாள். அந்த மூல அஞ்ஞானமே பண்டாசுரன். இப்போது இது எல்லாமே போய்விட்டதெனில், அந்த மன்மதனே சுத்தமாகி விட்டானல்லவா?
இந்த impuritiyக்கு எல்லாம் எந்த மன்மதன் காரணமென்று நினைத்தோமோ, அந்த மன்மதனே pure ஆகிவிட்டான். இப்போது நாம் சொல்கிற மன்மதன் கர்ம மன்மதன் கிடையாது. ஞான மன்மதன். அந்த ஞான மன்மதனாக இருப்பதால்தான் ஸ்ரீ வித்யா உபாசனையில் அவன் பரம ஆச்சார்யனாக இருக்கிறான்.
ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தில் மன்மதனுக்கு உயர்ந்த ஸ்தானம் இருக்கிறது. அவன் பரமாச்சார்யன். காதி வித்யை என்று சொல்லக் கூடிய பஞ்சதசாக்ஷரி மந்திரத்திற்கு அவன்தான் பெரிய உபாசகன். அவந்தான் ரிஷி. அவன் மூலமாகத்தான் ஸ்ரீ வித்யாவில் ஒரு மந்திரமே வந்திருக்கிறது. மன்மதன் உபாசனை செய்த அந்த பஞ்சதசாக்ஷரியைத்தான் இன்று எல்லோரும் உபாசனை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி கர்ம மன்மதனை ஞான மன்மதனாக மாற்றி, அவனை தன்னுடைய காருண்யத்தால் மீண்டும் எழுப்பிக் கொடுத்து அவன் உபாசகனாக மாற்றினாள்.
அப்படி அவனை எழுப்பிக் கொடுக்கும்போது அம்பிகை எப்படி இருக்கிறாளெனில், சஞ்சீவன ஔஷதி… மீண்டும் எழுப்பிக் கொடுக்கக் கூடிய… உயிர் கொடுக்கக் கூடிய மருந்தாக அம்பாள் இருந்தாள். இப்போது அம்பிகை எழுப்பிய மன்மதன் ஞான மன்மதன். இன்னும் கொஞ்சம் எளிமையாகவும் நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.
இந்த ஜீவாத்மாவிற்குள் இருக்கக் கூடிய அஞ்ஞானத்தை முதலில் அழிக்க வேண்டும். அந்த மூல அஞ்ஞானத்தை நேரடியாக தொட முடியாது. அதனால், வெளிப்படையாக இருக்கக் கூடிய விருத்திகள்… அந்த விருத்திகளுக்கு யார் காரணமெனில் கர்ம மன்மதன்தான் காரணம். அப்போது விருத்திகளுக்கு காரணமாக இருக்கக் கூடிய கர்ம மன்மதனை ஞானத்தினால் பொசுக்கி விடுகிறார். ஞானத்தினால் இந்த விருத்திகள் பொசுங்கி விட்டாலேயே, எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கின்றோம். அப்படி கிடையாது.  அங்கிருந்துதான் செயல்முறையே தொடங்குகிறது. அதனால்தான், பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதல் சூத்திரமே யோக சித்த விருத்தி நிரோதஹா… யோகம் என்பது சித்த விருத்தியை நிரோதம் பண்ணுவது.
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அந்த எண்ணங்களை அடக்குவதும் ஒடுக்குவதுமே யோகம் என்பதாகும். இப்போது முதல் சூத்திரத்திலேயே விஷயம் முடிந்து போய்விட்டதல்லவா… ஆனால் இங்கிருந்துதான் யோக சூத்திரமே ஆரம்பிக்கின்றது. அதற்குப் பிறகு ஏறத்தாழ 200 சூத்திரங்கள் உள்ளன.(சுழலும்...)