Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யோக மார்க்கத்தை அருளும் நாமம்

குலாம்ருதைக ரஸிகா

குலஸங்கேத பாலிநீ

நாம் இனி இரண்டிரண்டு நாமங்களாகவோ அல்லது மும்மூன்று நாமங்களாகவோ சேர்த்து சேர்த்துத்தான் பார்க்கப் போகிறோம்.

இந்த நாமங்களை பார்க்கும்போது முன்னுரையாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அம்பிகையினுடைய ஸ்தூல ரூபம் பார்த்தோம். பிறகு ஸ்தூல ரூபத்திலிருந்து பண்டாசுர யுத்தம் பார்த்தோம். பண்டாசுரனை அம்பிகை ஜெயித்தபோது சூட்சும ரூபத்தை பார்த்தோம். இவற்றிற்கு நடுவே ஸ்தூலத்தையும் சூட்சுமத்தையும் இணைத்து வைப்பதற்கு நடுவே பஞ்சதசாக்ஷரியாக இருக்கக் கூடிய மந்திரத்தினுடைய பெருமையைப் பார்த்தோம்.

இந்த நாமத்திற்கு முன்பாக அம்பிகையினுடைய ஸ்தூல மற்றும் சூட்சும ரூபத்தைப் பார்த்தோம். அம்பிகையினுடைய சூட்சும ரூபம். அதிலும் விசேஷமாக மந்திர சொரூபம். இப்போது இந்த நாமத்திலிருந்து நம்முடைய ஒவ்வொரு சரீரத்திலும் இருக்கக் கூடிய சூட்சுமமான சக்தியான குண்டலினியை குறித்துப் பார்க்கப் போகிறோம்.

இந்த நாமத்திலிருந்து தொடங்கி அம்பிகையினுடைய யோகப் பூர்வமான சூட்சும ரூபத்தைப் பார்க்கப் போகிறோம். யோகப் பூர்வமான சூட்சும ரூபம் என்னவெனில், நமக்குள் அம்பிகை இருக்கிறாள். அந்தர்யாமியாக இருக்கிறாள். ஆத்மாவாக பிரகாசிக்கிறாள் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அஹம் என்று இருதயத்தில் ஜொலிப்ப வளும் அவள்தான். நம்முடைய சித் ஆக இருக்கக் கூடியவளும் அவள்தான். நம்முடைய அன்பாக இருக்கக் கூடியவளும் அவள்தான். ஆனால், இதைத் தாண்டி ஒரு energy அதாவது ஒரு சக்தி நமக்குள் இருக்கிறது.

எல்லா உயிருள்ள, உயிரற்ற அதாவது living and non living beings க்குள் ஒரு சக்தி இருக்கிறது. உயிரற்ற பொருளில் என்ன சக்தி இருக்க முடியும். ஒரு மர நாற்காலியை எடுத்துக்கொண்டால் , அது மரத்தினால் ஆனதாக இருக்கும். அந்த மரம் எதனால் ஆனது என்றால் அணுக்களால் ஆனதாக இருக்கும். அதனால்தான் ஒரு உருவத்தில் இருக்கிறது. இப்படி ஒரு உருவத்திற்குள்ளும் அருவத்திற்குள்ளுமாகவே அம்பாள்தான் இருக்கிறாள். இப்படி உயிருள்ள மரமாகவும், அந்த மரமே நாற்காலியாகவும் இருக்கும்போதும் சரிதான், இந்த இரு நிலைகளுக்குமே அம்பிகைதான் செயல்படுகிறாள். மரம், செடி, கொடி என்று அனைத்திலும் இருப்பவள் அவளே. ஒவ்வொரு உயிரினத்திலும் தாயாக இருப்பதும் அந்த சக்தியே.

யாதேவி சர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ… என்று தேவி மகாத்மியம் சொல்கிறது. மேலும், தேவி மகாத்மியம் ஸ்திதி ரூபேண சம்ஸ்திதா… த்ருஷ்ணா ரூபேண சம்ஸ்திதா… ஷக்தி ரூபேண சம்ஸ்திதா… நமக்குள்ளாக பசியாக இருப்பது. உணவாக இருப்பது. தாகமாக இருப்பது. நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகும்போது இருக்கும் சக்தியாக இருப்பது என்று எல்லாமே அம்பிகைதான்.

ஆனால், நம்முடைய கர்ம வாசனை களினாலும், அநாதி ஜென்மாந்திர கர்ம வாசனைகளினால் அந்த சக்தி அடங்கியிருக்கிறது. குருவின் அனுக்கிரகம் கிடைக்கும்போது அத்யாத்மமான வாழ்க்கையை நோக்கிப் போகும்போது, ஒரு மந்திரம் சித்திக்கும்போது அல்லது ஒரு தரிசனம் ஆகும்போது, சத்சங்கத்தில் இருக்கும்போது, உயர்ந்த விஷயங்களை நோக்கி நம் மனதை திருப்பும்போது அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக விழிப்படைகின்றது. அந்தச் சக்திக்கு நாம் குண்டலினி என்று பெயர் கொடுத்திருக்கிறோம். குண்டலம் என்றால் வளைந்தது என்று பொருள். அந்தச் சக்தியானது நம்முடைய மூலாதார ஸ்தானத்தில் மூன்று வளைவுள்ள சர்ப்பம் படுத்திருப்பது போன்று நம்முடைய மூலாதார ஸ்தானத்தில் இருக்கிறது. இந்த குண்டலினி சொரூபிணியாக இருப்பது யாரெனில் சாட்சாத் அம்பிகை.

லலிதா சஹஸ்ரநாமத்தில் எந்த லலிதா திரிபுரசுந்தரியைப்பற்றி பேசுகிறோமோ. அந்த லலிதா மஹாதிரிபுரசுந்தரிதான் நமக்குள்ளே இந்த சரீரத்தில், மூலாதார ஸ்தானத்தில் மூலாதார மத்தியில் இருக்கின்ற திரிகோணத்தில்… மூன்றரை வட்ட வடிவமாக சுற்றிக்கொண்டு சர்ப்ப வடிவத்தில் அந்த லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறாள். அம்பிகையின் சூட்சும ரூபம்தான் நமக்குள் இருக்கிற குண்டலினி ரூபம். இந்த குண்டலினியைப்பற்றித்தான் அடுத்தடுத்து வரக்கூடிய நாமங்களில் பார்க்கப் போகிறோம்.

ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தில் குண்டலினியைப்பற்றி முக்கியமான ஒரு வார்த்தை உண்டு. ஆங்கிலத்தில் இதை technical term. சமஸ்கிருதத்தில் பாரிபாஷிக பதம் என்று சொல்வார்கள். குண்டலினியை குலம் என்று சொல்வார்கள்.

ஞான மார்க்கத்தில் குலம் எதுவென்று பார்க்க வேண்டும்.

நாம் இதற்கு முன்புள்ள நாமங்களில் திரிபுடி என்று பார்த்தோம். அதாவது மூன்றாக தெரிந்தாலும் முடிவில் ஒன்றுதான் என்று பார்த்தோம். ஞாத்ரு, ஞேயம், ஞானம் அல்லது த்யாத்ரு, தேயம், தியானம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அறிந்து கொள்ளக் கூடிய பொருள். அறிபவனாக இருக்கக் கூடிய நாம். நாம் அறியக் கூடிய அறிவு என்கிற ஞானம். இறுதியில் இந்த திரிபுடி இல்லாமல் ஆகும்போது மூன்று இல்லை. ஒன்றுதான் இருக்கிறது. இறுதியில் இந்த மூன்றும் மூன்று கிடையாது. ஒன்றுதான் என்பது புரிகிறது. இப்படி திரிபுடி ரஹிதமான இந்த நிலைக்குத்தான் குலம் என்றுபெயர்.

இது ஞான மார்க்கத்தில் குலம் என்ற பதத்தில் பொருளாகும்.

யோக மார்க்கத்தில் குலம் என்றால், மூலாதாரத்தில் தொடங்கி சஹஸ்ராரம் வரையில் நம்முடைய சரீரத்தில் சக்கரங்கள் இருக்கின்றன. பொதுவாக மூலாதாரம் முதல் ஆக்ஞா வரையில் ஆறு சக்ரங்கள். ஏழாவதாக இருப்பது சஹஸ்ராரம் என்று சொல்வோம். இதுவொரு முறை.

இன்னும் சூட்சுமமாகப் பார்த்தால், மூலாதாரத்திலிருந்து தொடங்கி சஹஸ்ராரம் வரையிலான பகுதியில் முப்பத்திரண்டு சக்கரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த முப்பத்திரண்டில் இந்த ஏழு முக்கியமானது. இன்னும் யோக மார்க்கத்தில் ஆழமாகச் சென்றால், நம்முடலில் முழுக்க நூற்றியெட்டு சக்கரங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அப்படியெல்லாம் பார்க்கும்போது இந்த சரீரத்திற்குள் சக்கரங்கள் என்பது energy centers ஆகும். நமக்குள் இருக்கின்ற பிராண வாயுவை சக்தியை உருவாக்கும் மையங்களே இந்த சக்கரங்கள் ஆகும்.

(சுழலும்...)