Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விசித்திரபசுவும் ஹுலிகுண்டேராய அனுமனும்

பொம்மகட்டா

கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் பொம்மகட்டாவாகும். துவைத தத்துவத்தை சார்ந்த பல பீடாதிபதிகள், இந்த பொம்மகட்டா பகுதிக்கு அடிக்கடி வருகை தந்திருக்கின்றார்கள், இன்றும் வருகின்றார்கள். காரணம், இங்கு ``ஹுலிகுண்டேராய’’ என்னும் பெயரில் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்தான்.

விசித்திரபசு

பொம்மகட்டா அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதியில், ஒருவர் தனது மாடுகளை மேய்ப்பது வாடிக்கை. ஒரு நாள், மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், ​​மேய்ச்சல் நிலத்தில் ஒரு விசித்திரமான மற்றும் அழகான பசுவைக் கண்டான். ஆனால், அதனை அவன் தொந்தரவு செய்யவில்லை. தனது மேய்ச்சல் முடிந்தவுடன், மாலை வேளையில் தன் மாடுகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான். அப்போது அந்த விசித்திர பசு, மேய்த்தவனின் மாட்டு கூட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டது. மாட்டுக் கூட்டத்திற்குள் விசித்திரபசு புகுந்ததை அறியாது, தனது மாட்டுக் கொட்டகையில் அடைத்து மூடிவிட்டான். மறுநாள் காலையில் பால் கறக்க கொட்டகையை திறந்து பார்த்தபோது, அந்த விசித்திரபசுவும் இருந்தது. அதை கண்டதும், அவன் சஞ்சலமடைந்தான். இந்த விசித்திரபசுவின் பாலைக்கரந்து, அதனை குடித்து ருசித்துப்பார்த்தார். ``ஹா ஹா... என்ன அருமையாக அமிர்தம் போல் உள்ளது’’ எனகூறி, கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். அந்த விசித்திரப் பசுவை தன்னுடனே வைத்துக் கொள்ள எண்ணினான்.

அதன் பிறகு, மேய்ச்சலுக்கு அந்த விசித்திரப் பசுவையும் அழைத்துச் சென்றான். மற்ற மாடுகளைவிட இந்த விசித்திரபசு, அதிக பால் கொடுத்து வந்தது. அதனை விற்று காசாக்கி வந்தான். பாலின் ருசி தனித்துவமாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள். நன்கு சம்பாதித்த மகிழ்ச்சியில் இருந்தான்.

அனுமனை கண்டறிதல்

ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. விசித்திரப்பசு, நாளாகநாளாக விசித்திரமாக நடந்து கொண்டது. வழக்கமான மேய்ச்சல் பகுதியை விட்டு வேறெங்கோ சென்று, மீண்டும் மாட்டின் கூட்டத்திற்குள் சரியான நேரத்தில் வந்துவிடுகிறது. இதனை தினமும் கவனித்தான். மேலும், பால் சுரப்பதையும் படிப்படியாக குறைத்துக் கொண்டது. இதனால், மிகுந்த எரிச்சலடைந்தான். அந்த விசித்திரப்பசு எங்கு செல்கிறது என்பதனைக் காண, அதனைப் பின்தொடர்ந்து சென்றான். ஒரு தாவர புதரின் மீது ஏறிநின்ற விசித்திரப்பசு, அந்த இடத்தில் தானாக பால் சுரந்தது. இதைக் கண்ட அவன், கடும் கோபம் கொண்டு ஒரு பெரிய குச்சி ஒன்றை எடுத்து, அதனை ஓங்கி அடித்தான். வலிதாங்க முடியாமல், விசித்திரப்பசு ஓடிவிட்டது. பசுவை அடித்ததால் மிகவும் மனமுடைந்தான். அன்று இரவில், அவனின் கனவில் அனுமன் தோன்றி ``விசித்திரபசு பால் சுரந்த இடத்தில் நான் வசிக்கிறேன்’’ என்றுகூறி மறைந்தார்.

மறுநாள் காலையில், கிராம மக்களைகூட்டி, அந்த விசித்திரபசு பால் சுரந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரே புதர்களாக இருந்ததால் முதலில் அதனை அகற்ற முடிவு செய்து, அதனை அகற்றினர். மக்கள் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ``அனுமனின் சிலையை’’ கண்டனர். சுயம் வ்யக்த மூர்த்தியாக அனுமன் கிடைத்ததால், அனுமனுக்கு பெயர் வைக்க திட்டமிட்டனர். `ஹூலி போதே’ என்ற தாவரப் புதர்களின் நடுவில் அனுமன் காணப்பட்டதால், ``ஸ்ரீ ஹுலிகுண்டேச ஸ்வாமி’’ என்றும் ``ஸ்ரீ ஹுலிகுண்டேராய’’ என்றும் பெயரிட்டு பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

அனுமானின் விருப்பம்

மறுநாள் காலை, கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அனுமனை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அனுமனை, கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்காக ஒரு தேரை உருவாக்கினர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அனுமனை தேரில் வைத்து தேரை இழுக்கத் தொடங்கினார்கள். ஆனால், சுமார் ஐநூறு அடிக்குப் பிறகு தேர் நகர்வது நின்றுவிட்டது. ஏதேதோ செய்து பார்த்தும், தேரை அதன் பிறகு ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. செய்வது தெரியாமல், கிராம மக்கள் தேரின் அருகிலேயே அமர்ந்து வருத்தத்துடன் காணப்பட்டார்கள்.

அதே இரவில், கிராம பெரியவர்களில் ஒருவருக்கு, ``தேர் நின்ற அதே இடத்தில்தான் அனுமனை பிரதிஷ்டை செய்ய வேண்டும்’’ என்று தெய்வீக உத்தரவு வந்தது. ஆகையால், அனுமனை அங்கேயே பிரதிஷ்டை செய்தார்கள்.

வியாசராஜர் எப்படி பிரதிஷ்டை செய்தார்?

காலங்கள் உருண்டோட, இந்த பொம்மகட்டா கிராமத்திற்கு வந்த மகான் ஸ்ரீ வியாசராஜர், ஹுலிகுண்டேராய அனுமனை கேள்விப்பட்டிருக்கிறார். அப்போது, சாதுர்மாதம் தொடங்கும் காலமாகும். ஆகையால் நான்கு மாதங்கள், பொம்மகட்டா கிராமத்திலேயே தங்கியிருந்து தனது சாதுர்மாத விரதத்தை தொடங்கினார். அப்போதுதான், ஹுலிகுண்டேராய அனுமனுக்கு ஒரு கர்ப்பகிரகத்தை ஏற்படுத்தியும், கோயிலை கட்டியும், முறைப்படி பிராண பிரதிஷ்டையும் செய்திருக்கிறார், வியாசராஜர். அதன் பின்னர், ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஹுலிகுண்டேராய அனுமனுக்கு, இன்றுவரையில் மத்வ சம்ரதாயத்தின் படியே பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

புஷ்கரணி (புனித குளம்)

கோயிலின் கிழக்கே, ஹுலிகுண்டேராய அனுமனுக்கு ஒரு புஷ்கரணி அமைக்க கிராம மக்கள் முடிவெடுத்தனர். இதற்காக ஊர் பொதுமக்களிடத்தில் நிதி வசூலிக்கப்பட்டது. ஆனால், அப்பணம் போதிய அளவிற்கு இல்லை. இருக்கின்ற பணத்தை வைத்து வேலைகளை தொடங்கலாம் என்று தீர்மானித்து, குளத்திற்காக நிலத்தைத் தோண்டத் தொடங்கியதும், சிறிது நேரத்தில், பெரிய கல் ஒன்று தென்பட்டது. அந்த கல்லை நகர்த்தி பார்த்தால், அதன் உள்ளே ஒரு புதையல் காணப்பட்டது. கிராம மக்கள் மகிழ்ந்தனர். அந்த புதையலைக் கொண்டு, புஷ்கரணியைக் கட்டி முடித்தனர். ஒரு முறை, ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர், (உடுப்பி சோதே என்னும் மடத்தை நிறுவியவர்) இந்த கோயிலுக்கு யாத்திரையை மேற்கொண்டார். அப்போது, புஷ்கரணியில் ஒரு ருத்ர மூர்த்தி (சிவன்) இவருக்கு கிடைத்தது. அதை எடுத்து, குளத்தின் (புஷ்கரணி) கரையிலேயே பிரதிஷ்டை செய்தார்கள். இப்படி பல அதிசயங்கள் நிறைந்ததுதான், ஹுலிகுண்டேராய அனுமனின் புஷ்கரணி.

கோயிலுக்கு வந்த மத்வ மகான்கள்

1807 - ஆம் ஆண்டு வாக்கில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் வழியில் வந்த ஸ்ரீ சுபோதேந்திர தீர்த்தர், ராமர், லட்சுமணர், சீதா ஆகிய சிலைகளை பிரதிஷ்டை செய்தார். இந்த மூர்த்தங்கள் அனைத்தையும், நஞ்சங்கோடு ஸ்ரீராமசாஸ்திரிகளால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அதே ராகவேந்திர மடத்தின் வழிவந்த ஸ்ரீ சுஷமீந்திர தீர்த்தர், நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார்.

மைசூர் திவான் மற்றும் பிறரின் பங்களிப்பு

இக்கோயிலின் பெருமைகளை கேள்விப்பட்ட மைசூர் திவான் பூரியா, இக்கோயிலுக்கு வந்திருந்து, அனுமனை தரிசித்து, மேலும் பல கட்டிட செலவினை திவானே ஏற்றார். குறிப்பாக, தசாவதார சிலைகளுடன் கூடிய கோபுரம், திவானின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும். ஸ்ரீ வியாசராஜர், ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ சுபோதேந்திரர், ஸ்ரீ சுஷமீந்திரர், என பல மத்வ மகான்கள் தரிசித்த ஹுலிகுண்டேராய அனுமனை நாமும் தரிசித்து வழிபட்டு, அனுமனின் அருளாசிகளை பெறுவோம்.

*கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 6.00 முதல் 10.00 வரை; மாலை: 5.00 முதல் 8.00 வரை.

*எப்படி செல்வது: பெல்லாரியில் இருந்து 61 கி.மீ. பயணித்தால், இக்கோயிலை அடைந்துவிடலாம்.