Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமரர்கள் ஏத்தும் ஆவணி மாதம்!!

நவக்கிரக நாயகர் என்றும், பித்ருக்காரகர் என்றும் பூஜிக்கப்படும் சூரிய பகவான், சந்திரனின் ஆட்சிவீடான கடக ராசியை விட்டு, தனது ஆட்சி ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் கால கட்டத்தையே “ஆவணி மாதம்” எனவும், “சிராவண மாதம்” எனவும் பூஜித்துவருகிறோம். நிச்சயதார்த்தம், உபநயனம், விவாகம், சீமந்தம் போன்ற சுப-நிகழ்்்ச்சிகளைக் கொண்டாடுவதற்கு ஏற்ற மாதமும் இந்த ஆவணி மாதமே!

சிம்ம ராசியில் சஞ்சரிக்கும்போது, சூரியனின் வீரியம் பல மடங்கு அதிகரிப்பதாக மிகப் புராதன ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன. மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது, தனது உச்ச கதியை அடையும் கதிரவன், துலாம் ராசியில் வலம் வரும்போது, பலம் குறைந்துவிடுகிறார்!

மாதப் பிறப்பு, அமாவாசை, சூரிய - சந்திர கிரகணக் காலங்கள், மஹாளயபட்சம், ஆண்டு திதி ஆகிய புண்ணியக் காலங்களில், பரம பக்தியுடன் நாம் செய்யும் சிரார்த்தம் (திதி), தர்ப்பணம் போன்ற பித்ரு பூஜைகளின் பலன்களை மறைந்த நம் முன்னோர்களிடமும், மறு பிறவி எடுத்துள்ள பித்ருக்களிடமும் கொண்டு சேர்ப்பது சூரிய பகவானே!! அதேபோன்று, கயா தலத்தின், அட்சயவடம் எனும் ெதய்வீக விருட்சம் மற்றும் குருசேத்திரத்தில் திகழும் சூரிய குண்டம், பிரம்ம சரஸ் இமயத்திலுள்ள பத்ரிகாசிரமத்தின் பிரும்ம கபாலம் மற்றும் பிரயாகை, கங்கோத்ரி, யமுனோத்ரி, மானஸ ஸரோவரம் ஆகிய மகத்தான புண்ணிய திருத்தலங்களில், நாம் பக்தியுடன் சமர்ப்பிக்கும் பிண்டங்களை (சாத உருண்டைகள்), ஆண்டுதோறும் நாம் செய்யும் சிரார்த்தம் எனும் திதி - பூஜைகள் ஆகியவற்றை, நம் முன்னோர்கள் எந்த உலகிலிருந்தாலும், எத்தகைய மறுபிறவியை எடுத்திருந்தாலும், அவர்களிடம் எடுத்துச் சென்று, சேர்விப்பதும் சூரிய பகவானே!!

யாக்கியவல்கியர் என்ற மகரிஷி சுக்கில யஜூர்வேதம் எனும் விசேஷ, சக்திவாய்ந்த வேதத்தைக் கற்றதும் சூரிய பகவானிடத்திலிருந்துதான்!

காஸ்யப மகரிஷியின் புதல்வரான சூரிய பகவான், “ஆத்மகாரகர்”, “பித்ரு காரகர்” என்று பூஜிக்கப்படுகிறார். சரீரம், இருதயம், ரத்தம், சருமம், நரம்புகள் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துபவர், சூரிய பகவானே! இவருக்கு, கதிரவன், பார்கவன், பரிதி, ஆதித்தியன், பித்ரு காரகர் என்ற பல பெயர்களுண்டு.

ஆண்டுதோறும் நம் முன்னோர்கள் இவ்வுலக வாழ்வை நீத்த திதியிலிருந்து நாம் இயற்றும் “சிரார்த்தம்”, “அமாவாசை”, மாதப் பிறப்பு, சூரிய - சந்திர கிரகணக் காலப் பூஜைகள் ஆகியவற்றின் பலனை நம்முன்ேனார்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் சூரியன்தான்! ஆதலால்தான், சூரிய பகவானுக்கு, பித்ரு காரகர் எனும் பெருமை உள்ளது.

பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீராமபிரானாக அவதரித்தபோது நிகழ்ந்த ராம - ராவண யுத்தத்தில், “ஆதித்திய ஹிருதயம்” எனும் சூரிய பகவான் துதியைச் சொல்லி, அவரைத் தியானித்ததால், ராவணனை சம்ஹாரம் செய்ய முடிந்தது என ஸ்ரீமத் ராமாயணம் சூரிய பகவானைப் புகழ்கிறது.

ஒவ்வொருவரின் ஜனன கால ஜாதகத்தில், சூரியன் பலம் பெற்றிருக்க வேண்டும். ஆரோக்கியமான சரீரம், நோயற்ற வாழ்வு, ஆத்ம பலம் ஆகியவற்றை அளிப்பவர் ஆதவனே! ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சூரிய பகவானின் நிலையை அனுசரித்து, அவரவரது ஆரோக்கியத்தை மிகச்சரியாக நிர்ணயிக்க முடியும்.

குரு, சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனுக்கு நட்பு கிரகங்களாவர். ஜனன கால ஜாதகத்தில், சூரியனின் உச்சிவீடு மேஷமாகும். ஆட்சி வீடு சிம்மமாகும். நீச்ச வீடு துலாம்! கிருத்திகை, உத்திரை, உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் சூரியனே நாயகனாவார்.

தினமும் கீழ்க்கண்ட ஸ்தோத்திரத்தைச் சொல்லி சூரிய பகவானை நமஸ்கரித்துவந்தால், நல்ல உடல்ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் பெறலாம்.

“ஜாபகுஸும லங்காஸம் காஸ்யபேயம் மஹாத்யதி

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்”

இத்தகைய தெய்வீக சக்தியும், பெருமையும் பெற்றுத் திகழும் ஆவணி மாதம், எமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு எத்தகைய நன்மைகளை அளிக்கவுள்ளது என்பதை இப்போது ஆராய்ந்து பார்ப்போம்.

ஆவணி 1 - (17-8-2025) : ஆவணி மாதப் பிறப்பு. இன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம், பூஜை செய்வது குடும்பத்திற்கு நன்மை செய்யும். சூரியன், தனது ஆட்சி வீடான சிம்ம ராசிக்கு மாறும் தினம். மேலும், இன்றைய தினமானது, பித்ருகாரகராகிய சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவரும், சூரியதேவனின் மகனாகிய யமதர்மராஜனின் சகோதரரும், காசி விஸ்வேரருக்கு பக்தி - சிரத்தையுடன் பூஜை செய்ததன் பலனாக, மனங்குளிர்ந்த காசியெம்பெருமான், கிரகவரிசையில் ஸ்தானத்தை (இடத்தைத்) தந்தருளியதால், பேருவுவகை கொண்டவரும், அதன் காரணமாகவே, சிவனடியார்களுக்கும், சிவபக்தர்களுக்கும், அவர்கள் கேளாமலேயே அவர்களுக்கு அனைத்துவித நலன்களையும் அளித்தருள்பவரும், காந்தல் மலரையொத்த திருமேனியை உடையோனும், இயல்பாகவே (காலதேவனின் திவ்்ய ஹஸ்த தண்டத்தால் அடிபட்டு, கால் முடமான காரணத்தால்) மந்தமாகச் செல்வோனும், தனி மனிதனின் நீண்டகால நல்வாழ்விற்கும், மரணத்திற்குக் காரகத்துவம் வாய்ந்தவரும், ஒருவரின் ஜாதகத்தில் பலமிழந்திருப்பதனால், அந்த ஜாதகத்திற்கு உரியவருக்கு, வறுமை, அவமரியாதை, நோய், இருவரிடையே கலகம் விளைவிக்கச் செய்பவரும், அதேசமயத்தில், ஒருவரின் ஜாதகத்தில் சுப-பலம் பெற்றிருப்பின் சகலவித சுகபோகங்களையும் அனுபவிக்கச் செய்பவரும், சுயநலமற்ற சமூக சேவகர்களை தேசத்திற்காக சர்வபரி தியாகத்தைச் செய்பவரை உருவாக்கித் தருபவரும், பூமிக்கடியில் புதைந்து கிடைக்கும் விலைமதிப்பற்ற தாதுக்களை நுண் அரிய உலோகங்களை வெளிக்கொணரும் நுண்ணறிவை அளித்தருள்பவரும், ஒருவரின் ஜாதகத்தில் பலம் பெற்றவராக வீற்றிருந்தால், பல-மொழிகளைப் பயின்று, பேசும் திறத்தை பாண்டியத்துவத்தை அருள்பவரும், அன்னாருக்கு நாட்டின் மிக, மிக உன்னதத் தலைமை தாங்கும்் நற்பண்பைக் கொடுத்து, உயர்பதவியைப் பெற்று மென்மேலும் புகழ் பெற்று, (அரசியல் ரீதியாக) உயரத்திற்குக் கொண்டு செல்பவரும், கருமை நிறத்திற்குச் சொந்தக்காரரும், இரும்பு உலோகத்திற்குக் காரகத்துவம் வாய்ந்தவரும், “கல் நெஞ்சுடையோன்”, “கொடிய மனத்திற்குச் சொந்தக்காரன்” என பாமர உலகத்தோரால் அஞ்சி, அழைக்கப்படுபவரும், அதே சமயத்தில், ஜாதகத்தில் உச்சபலம் பெற்று சஞ்சரிப்பாரேயாகில், அந்த ஜாதகக் காரரை இமாலய வெற்றிபெறச் செய்து, கண்ணுக்கெட்டிய தூரமாட்டிலும், எதிரிகளற்ற பயமற்ற நிலையை உருவாக்கித் தந்திடுபவரும், மகரம், கும்பம் ராசிகளை சொந்த வீடாகவும், துலாம் ராசி உச்சவீடாகவும், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும், புதன், சுக்கிரன் இருவரையும் நண்பராகக் கொண்டவரும், சூரியன், சந்திரன், செவ்வாய் இவற்றைப் பகை வீடாகக் கொண்டவருமாகிய, சனி பகவானின் ஜெயந்தி. இன்றைய தினத்தில், நவக்கிரகக் கோயில்களுக்குச் சென்று, சனி பகவானுக்கு, கருப்பு வஸ்திரம் அணிவித்து, ஒன்பது மண் அகல் விளக்குகளில், செக்கிலாட்டிய நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபட்டால், சகலவித நற்பலன்களையும் நீங்கள் அடையப்போவது திண்ணம். கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், மண் அகல் விளக்கு தீபங்களை உங்கள் வீட்டுப் பூஜையறையிலேயே மேற்கூறிய மண் அகல் விளக்குகளை ஏற்றியும் பகவானை மனத்தளவில் பக்தி - சிரத்தையுடன் நினைத்து, வழிபடலாம். அதே நற்பலன்களைப் பெறுவது உறுதி. கீழே தந்துள்ள ஸ்லோகத்தை 9 அல்லது 18 முறைகள் ெசால்லி, வணங்க வேண்டும். இது, அனைத்துவித சனி தோஷங்களையும் போக்கவல்லது.

“நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸ்ம்பூதம் தம் நமாமி ஸநைஸசரம்”.

ஆவணி 3 - (19-8-2025) : இன்று சர்வ ஏகாதசி. இன்று உபவாசமிருப்பது, அனைத்து பாபங்களையும் போக்கிவிடும்.

ஆவணி 4 - (20-8-2025) : பிரதோஷம். மாலையில் ஸ்ரீசிவபெருமானை தரிசிப்பதால், அனைத்து பாபங்களும் நீங்கும்.

ஆவணி 5 - (21-8-2025): மாத சிவராத்திரி. இன்று உபவாசம் இருந்து, ஸ்ரீபார்வதி, பரமேசுவரி திவ்ய தம்பதியரை பூஜிப்பது மகத்தான புண்ணிய பலனையளிக்கும்.

ஆவணி 6 - (22-8-2025): சர்வ அமாவாசை. இன்று நமது பித்ருக்களை (மறைந்த முன்னோர்களை) தர்ப்பணம் மூலம் பூஜிப்பது, குடும்பம் விருத்தியடையும். பாபங்கள் விலகிடும்.

ஆவணி 8 - (24-8-2025): ஆவணி முழக்கம் இன்றைய தினத்தில், ஆண்டாளின் “கூடியிருந்து குளிர்ந்தேலோய்” என்ற சொற்றொடர்களுக்கிணங்க, நெருங்கிய உறவினர் அனைவரும் ஒருசேர குல தெய்வ வழிபாடு செய்து, மறைந்த முன்னோர்களுக்கு பித்ருபூஜை செய்தால் பித்ரு தோஷமும், குல தெய்வ தோஷமும் நம்மையணுகாவண்ணம் காத்தருளும்.

ஆவணி 9 - (25-8-2025) : மின்னலைப் பழிக்கும் வண்ணமாக பூமாதேவியின் திருவயிற்றிலிருந்து உதித்தவர்! சக்தி, குமரன் போன்ற ஆயுதங்களைத் தரித்திருப்பவர்!! மங்களன் என மங்களகரமாக அழைக்கப்படுபவர். உள்ள உறுதிக்கும், உடலுறுதிக்கும் ஆதிபத்தியம் கொண்டவரும், மாவீரர்களையும், படைவீரர்களின் தளபதிகளையும், உயர் நீதிபதிகளையும், காவல் துறை உயரதிகாரிகளையும், நாட்டின் அரசியல் ரீதியிலான தலைவர்களையும், பொறியியல் வல்லுநர்களையும் உருவாக்கித் தந்தருளுபவருமாகிய செவ்வாய் ஜெயந்தி! நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய் பகவானுக்கு, சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செந்தாமரை அல்லது செவ்வரளி மலர் கொண்டு மாலையணிவித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொன்னால், ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமாகவோ பலம் குறைந்தோ காணப்பட்டால் அக்குறை உள்பட அனைத்து செவ்வாய் தோஷங்களும் நீங்கும்.

தரணீ கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்பரம்

குமாரம் சக்தி ஹஸ்தாம்ச, மங்களம் ப்ரணாமாம்யஹம்

மேலும், இன்று கல்கி அவதார தினம்.

ஆவணி 10 - (26-8-2025) : சாம உபாகர்மா - சாம வேதத்தினர் பூஜை செய்ய வேண்டிய புண்ணிய தினம். மேலும், இன்று ஹரிதாளிகா கௌரி விரதம். பெண்கள் நித்திய சுமங்கலிகளாகவும், நோய் - நொடிகளற்ற சுகமான வாழ்வும், அம்பாளே உங்கள் உயிருக்கு உத்தரவாதமும் தரக்கூடிய விரதம்.

ஆவணி 11 - (27-8-2025) : ஸ்ரீவிநாயக சதுர்த்தி. ஸ்ரீவிநாயகப் பெருமானைப் பூஜிப்பதால், வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.

ஆவணி 12 - (28-8-2025) : 1. ரிஷி பஞ்சமி. நமது வேதகால மகரிஷிகளைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.

2. மகாலட்சுமி விரதம். ஸ்ரீமகாலட்சுமியைப் பூஜிப்பதால், குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை நீங்கிடும்.

ஆவணி 13 - (29-8-2025) : சஷ்டி விரதம். இன்று உபவாசமிருந்து, ஸ்ரீமுருகப் பெருமானைப் பூஜிப்பது, அனைத்து பாபங்களையும் போக்கியருளும். மேலும், இன்று ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம். இன்றைய தினத்தில் வெல்லம், சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி கலந்த பானகம் நைவேத்தியம் செய்து, அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று பக்தர்களுக்கு பானகம் விநியோகம் செய்வது மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது.

ஆவணி 16 - (1-9-2025): துக்கம் நிறைந்த வாழ்க்கையில், தோஷத்தையே சந்தோஷமாக மாற்றும் சக்தி படைத்த “அதுக்க நவமி விரதம்” - எதிரிகளால் ஏவப்பட்ட அனைத்துவித அஸ்திரங்களும், அவர்களையே திருப்பித் தாக்கும் வண்ணமாகச் செய்திடும் வல்லமை பொறுந்தியது, இவ்விரதம்.

ஆவணி 17 - (2-9-2025): ஆவணி மூலம். மேலும் இன்று கஜலட்சுமி விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் மேலும் அரசாங்கம் பலவகையிலும் உங்களுக்கு உதவ முன்வருவர் - நீங்கள் எவ்வித கோரிக்கை மனுக்களையும் அளிக்காமலேயே!

ஆவணி 18 - (3-9-2025): ஏகாதசி. இன்று உபவாசமிருப்பது, உடலாலும், உள்ளத்தினாலும், செய்துள்ள அனைத்து பாபங்களையும் போக்கிவிடும்.

ஆவணி19 - (4-9-2025) : கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அது போல், குருவின் கடைக்கண் பார்வை கோடி புண்ணியம்! பொன்மயமான உலகில் சஞ்சரிப்பதால், பொன்னன் என்ற காரணப் பெயராகப் பெற்றவரும், ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் உtச்சம் பெற்றிருப்பாரேயாகில், கல்வி - கேள்விகளில் மிகச் சிறந்து விளங்குவர். இளமைக் காலத்தில் குருபலம் பெற்றிருப்பாரேயாகில், திருமணம் நல்ல படி அமையப்பெற்று (made for each other!) மனமொத்த தம்பதியினராக, மலரும் மணம் போல, ஈறுடல் ஓருயிராக, நகமும் சதையுமாகப் பரிமளிப்பர். நடுத்தர வயதில் இவரது பார்வை அமையப் பெறுவாரேயாகில் தொழில் துறையில் வல்லுநராகத் திகழ்வர்! முதுமைக் காலத்திலோ, தனது சந்ததியினர், ஆலமரம்போல் தழைத்தோங்குவதைக் கண்ணுற்று, உடலளவிலும், மனத்தளவிலும் ஆத்ம திருப்தியுடனும், மனமகிழ்வுடனும் ஆனந்தத்தில் திளைப்்பர். பலவாராக நன்மைகளை அருளும் இன்றயை தினம் குரு பகவானின் ஜெயந்தி! இந்தப் புண்ணிய தினத்தில், குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரங்களை சாற்றி, நாட்டுப் பசு நெய் கொண்டு, 9 மண் அகல் விளக்குகள் ஏற்றி, மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால், ஜனன ஜாதகத்தில் உண்டாகிய குரு தோஷம் அடியோடு விலகிவிடும், குருபலம் உண்டாகும்.

“தேவானாம்ஸ, ரிஷீணாம்ஸகுரும் காஞ்சன ஸன்னிபம்

புத்திபூதம் த்ரிலோகேஸம் தம் நமாமிப்ருஹஸ்பதிம்”

மேலும் இன்று, பராசக்தியின் தசா அவதாரங்களில் ஒன்றான, திருமாலின் தசாவதாரங்களுள் மிக, மிக முக்கியமான ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கு இணையான ஸ்ரீபுவனேஸ்வரி ஜெயந்தி! ஜோதிடத்தில் மாத்ருகாரகராகப் போற்றப்படும் சந்திரனின் தோஷங் களனைத்தையும் ஒருங்கே போக்கவல்லது. இன்று வாமன அவதாரம்!

ஆவணி 20 - (5-9-2025) : ஓணம் பண்டிகை. சிரவண விரதம் - பிரதோஷம்.

ஆவணி 21 - (6-9-2025) : ஸ்ரீநடராஜர் அபிஷேகம். இன்றைய தினத்தில், கோயிலுக்குச் சென்று, அபிஷேத்திற்குரிய தேன், பால், கரும்புப் பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிருதத்திற்கான பழவகைகளை - தங்களால் இயன்றதைக் கொடுத்தால், உங்கள் வாழ்க்கையும் சந்தனத்தைப் போல் மணக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? மேலும், இன்று அநந்தவிரதம். பள்ளி கொண்ட பெருமானை துளசி தளம் கொண்டு அர்ச்சித்தலும், கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும் மிகச் சிறந்த புண்ணிய பலன்களைக் கொடுக்கவல்லது. மேலும், இன்றைய தினம் வளர்பிறை சதுர்த்தி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அவதரித்த திதி. இன்றைய தினத்தில்,ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஸ்வாமி திருவுருவப் படத்தை எழுந்தருளி செய்து, பானகம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீநரசிம்ம ஸ்துதியைச் சொன்னால் போதும். சகல ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையும்.

ஆவணி 22 - (7-9-2025) : சந்திர கிரகணம். மேலும் இன்று இரட்டிப்பு புண்ணிய பலனைத் தரவல்ல உமா மகேஸ்வர விரதம் மணமாலைக்காகக் காத்துள்ள கன்னியருக்கு, மனத்திற்கேற்ற மணாளன் அமைவார்! மணமான பெண்மணிகள், தங்கள் கணவருடன் அந்நியோன்யத்துடனும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், மனமொத்த தம்பதியினராய், ராமனும், சீதையைப் போன்றும், கிருஷ்ணனும் ராதையைப் போன்றும் வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, அனைத்து தம்பதியினருக்கும் ஓர் முன்னுதாரனமாக வாழ்ந்துகாட்டுவர்.

ஆவணி 23 - (8-9-2025) : மஹாளய பட்சம் ஆரம்பம்.

ஆவணி 25 - (10-9-2025) : சங்கடஹர சதுர்த்தி. இன்று விநாயகப் பெருமானைப் பூஜிப்பதன் மூலம் தடங்கல்கள் விலகும். சித்த மகா புருஷர் சுந்தரானந்தரின் அவதாரப் புண்ணிய தினம். இன்றைய தினத்தில், மனத்தளவில் அம்மகானை நினைத்து, உங்கள் வீட்டுப் பூஜையறையில் ஒரு நெய் தீபமேற்றி பக்தி-சிரத்தையுடன் வணங்கினால் போதும், உங்களையும், உங்கள் சந்ததியினரையும் ஒரு கவசம் போல் நின்று, காத்தருள்புரிவார்.

ஆவணி 27 - (12-9-2025) : மஹாபரணி.

ஆவணி 29 - (14-9-2025) : சட்டநாத முனி சித்த மகா புருஷரின் அவதாரப் புண்ணிய தினம். அம்மகா சித்த புருஷரை மனத்தளவில் தியானித்து, ஏழைகளுக்கு தயிரன்னம் வழங்கினால், உங்கள் இடர்களைக் களைவார். உங்கள் அபிலாஷைகள் அனைத்தையும் ஈடேற்றித் தருவார்.

ஆவணி 30 - (15-9-2025) : மகாவியதீபாதம்.

இன்று, மறைந்த நம் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் திதி பூஜை ஆகியவற்ைற அளித்து, வணங்குவது, குடும்பத்தில் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும், குறைவற்ற ெசல்வத்ைதயும் அளிக்கும். குலம், குடும்பம் விருத்தியடையும்.

ஆவணி 31 - (16-9-2025) : பனி மலைச் சிகரத்தைப் போன்றும், வெண்பட்டு, மல்லிகை, முல்லை, வெண் இருவாட்சியொத்த நிறத்தையுடையோனும், அனைத்துவகையான இன்பத்திற்கும் ஆதிபத்தியம் கொண்டவரும், மிகச் சிறந்த நடிகை - நடிகர்களை திரையுலக நாயகர்களையும், மெல்லிசை மன்னனர்களையும் உருவாக்கித் தருபவரும், ஒரு கன்னிப் பெண்ணின் ஜனன ஜாதகத்தில், இளமைக் காலத்தில் இவருடைய தசை வரும்பட்சத்தில், அக்கன்னி, ரம்பையாக, ஊர்வசியாக, திலோத்தமையாக வலம்வருவாள். அதே தசையானது, ஒரு வாலிபனின் இளமைக்காலத்தில் சஞ்சரிக்கும்போது, உலகிலுள்ள அத்துனை சுக-போகங்களையும் சிற்றின்பங்களையும் அனுபவிப்பனாகவும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானமாகிய மனைவி சரியாக அமைந்துவிட்டால், மற்ற செல்வங்களனைத்தும் அவனை வந்தடையும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், சுக்கிர பகவானின் சுபத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வாழ்க்கைத் துணை அமைவதைக் கணக்கிடப்படுகிறது ஜோதிடத்தில்! ரிஷபம், துலாம் ராசிகளைச் சொந்த வீடாகக் கொண்டவரும், மீன ராசிக்கு உச்ச வீடாகவும், கன்னியை, நீச்ச வீடாகக் கொண்டவரும், பரணி, பூரம், பூராட நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும், சனி பகவானும், புதன் ஐயும் நண்பர்களாகக் கொண்டவரும், குருபகவானையும், சுக்கிரனையும் சமமாகப் பாவித்தும், ஏனைய மற்ற கிரகங்கள் பகைக் கிரகங்களாகவும் கொண்ட சுக்ரஜெயந்தி! இன்றைய தினத்தில் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று, சுக்கிர பகவானுக்கு, மல்லிகை, முல்ைல, வெண் இருவாட்சி, வெண்தாமரை இவற்றில் எவை கிடைக்கிறதோ அவற்றைக் கொண்டு அர்ச்சித்து, மூன்று அல்லது ஆறு, ஒன்பது மண் அகல் விளக்குகளில் நாட்டு மாட்டு பசு நெய் கொண்டு நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஒன்பது முறை சொல்லி, வணங்கக் கடுமையான சுக்கிர தோஷம் தீயினிற் தூசாகும்; நோய் நொடியற்ற நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், சுகம், சத் புத்திரர்கள் அடைவது, உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகிட, குழந்தைகளின் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கிட இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் சொல்லி வர வேண்டும்.

ஹிமகுந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம்குரும்

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.

விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22-ந் தேதிக்கு சரியான ஆங்கிலத் தேதி 7-9-2025, ஞாயிற்றுக்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), பௌர்ணமி திதி, சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில், மேஷ லக்னத்தில், ராகு கிரஸ்த பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.

கிரகணம் ஆரம்பம் : இரவு மணி 9.51

கிரகணம் மத்தியமம் : இரவு மணி 11.42

கிரகணம் முடிவு : இரவு மணி 2.25

அன்று மதியம் 01.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள், சிறுகுழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.

பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்்களில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். கிரகண காலத்தில், தாய் - தந்தை இழந்தவர்களுக்கு, பித்ருக்களுக்கு தில (எள்) தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால், மறைந்த முன்னோர்கள் திருப்தியும், மகிழ்்சியும் அடைந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் வெளியே வரக்கூடாது. கிரகணச் சாயை கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். கிரகண காலத்தின்போது, இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் தியானம் செய்துகொண்டிருக்க வேண்டும். முடிந்த வரை "ஸ்ரீராம"நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க அல்லது லிகித ஜெபமாகக் கொண்டாடப்படும் ேநாட்டுப் புத்தகங்களில் எழுதிக்கொண்டு இருக்க வேண்டும். கண்டிப்பாக காயத்ரி மகா மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின்பு நீராடி அவரவர் குல வழக்கப்படி திருநீறணிந்து இறைவனைப் பூஜிக்க வேண்டும்.

மஹாளய பட்சம் எனும்

15 மகத்தான புண்ணிய தினங்கள்!

ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் 15 நாட்கள், பக்்தியுடன் மறைந்த நம்முன்னோர்களை (பித்ருக்கள்) "மஹாளய பட்சம்" என்றும், "பித்ரு பட்சம்" எனவும் பூஜித்து வருகிறோம். இந்தப் பதினைந்து நாட்களும், எமதர்ம ராஜரின் அனுமதி பெற்று, சூரிய பகவானின் கிரணங்களின் மூலம், நம் பித்ருக்கள் ஸ்வர்ணமயமான (தங்கம்) விமானங்களில் நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி (வந்திருந்து), நம்முடன் தங்கி, நமது பூஜைகள் அனைத்தையும் ஏற்று, மஹாளய அமாவாசை தினத்தன்று, பித்ரு உலகங்களுக்குத் திரும்பிச் செல்வதாக புராணங்களும் இதிகாசங்களும், சூட்சும கிரந்தங்களும் விவரித்துள்ளன. ஆதலால், இந்தப் பதினைந்து நாட்களும் அவரவர்களது வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலுள்ள அனைவரும் கட்டுப்பாட்டுடனும், பக்தியுடனும், தூய்மையுடனும் இருக்க வேண்டும் என்பதையும் புராதன நூல்கள் கூறுகின்றன. குடும்பத்தில், ஒருவருக்கொருவர், வாக்குவாதம் - சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவது, தகாத சொற்களைப் பேசுவது, தவறான செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, புலால் உணவை அறவே விலக்க வேண்டும்.

அனைத்து பாபங்களையும் போக்கி, நல்வாழ்வினை நமக்கு அளிக்கும் மகத்தான சக்தி கொண்டது இந்த மஹாளய அமாவாசையின்போது நாம் செய்யும் பித்ரு பூஜை!

சக்தியும், வசதியும் இருப்பின், திருத்தலங்கள், புண்ணிய நதி தீரங்கள், தடாகங்கள் ஆகியவற்றில் செய்வது பல மடங்கு அதிக புண்ணிய பலனைப் பெற்றுத் தரவல்லவை.