ஆடி மாதம் அம்பிகையின் மாதம்! என்று கூறுவர், பெரியோர்!! ஆம், அது உண்மையே. அம்பிகை, பராசக்தியே திருக்கயிலாய எம்பிரானின் அருள் வேண்டி, விரதமிருக்கும் தெய்வீக மாதம், இந்த ஆடி!!!
சூரிய பகவான், கல்வி கிரகமான, புதனின் ராசியான மிதுனத்தை விட்டு, சந்திரனின் ஆட்சிவீடான கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தையே "ஆடி மாதம்" எனப் பூஜித்து வருகிறோம்! இந்த ஆடி மாதத்திற்கென்றே தனிச் சிறப்பு ஒன்று உண்டு!! தேவர்கள் உலகின் பகல் பொழுதாகிய உத்தராயண புண்ணியக் காலம் முடிந்து, இரவு நேரமாகிய தட்சிணாயனக் காலம் ஆரம்பமாகும் காலகட்டமே இந்த ஆடி மாதமாகும்.மகாபாரத யுத்தத்தின்போது, தட்சிணாயனக் காலத்தில், படுகாயமடைந்த பீஷ்ம பிதாமகர், தேவர்கள் உலகின் பகல் பொழுதாகிய உத்தராயணப் புண்ணியக் காலம் ஆரம்பமாகும் வரை, அம்புப் படுக்கையிலேயே படுத்திருந்து, உயிர்விடுத்ததை, மகா பாரதம் விவரிக்கிறது. அதாவது, தட்சிணாயனப் புண்ணியக் காலம், தேவர்கள் உலகின் இரவு நேரம் என்பதையும், உத்தராயணம் பகல் பொழுது ஆரம்பமாகும் நேரம் என்பதையும் அந்நூல் கூறுகிறது.
ஆடி மாதத்திற்கென்று பல விசேஷ தெய்வீகப் பெருமைகள் உள்ளன.அண்டசராசரங்கள் அனைத்தையும் ஈன்றெடுத்து, காத்தருள் புரியும் அம்பிகை பராசக்தியே, சிவ பெருமானை குறித்து உபவாசமிருந்து, மிகக் கடுமையான விரதத்தை அனுஷ்டிப்பது இந்த ஆடி மாதத்தில்தான்! உதாரணமாக, பிரசித்திப் பெற்ற சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் அம்பிகை, ஒரு துளி நீரைக் கூடப் பருகாமல், மிகக் கடினமான விரதத்தை கடைபிடிக்கும்போது, பக்தர்கள் அன்னையின் ஆயாசம் தீர, கூடை கூடையாக மலர்களைக் கொண்டு, "பூச் சொரிதல்" நடத்தி, பூஜிப்பது பிரசித்தம். அதேபோன்று, சங்கரன் கோயில்ஸ்ரீ கோமதி அம்மனின், "ஆடித் தபசு" உலகப் புகழ்பெற்றது. அன்று, அம்பிகையை தரிசிக்கும் அனுபவம், பேரானந்த அனுபவமாகும். வைணவத் திருக்கோயில்களிலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் தாயாரைத் தரிசிப்பது பேரானந்த அனுபவமாகும்.
ஜோதிடரீதியில், அறிவிற்கு ஆதாரக் கிரகமாகிய சந்திரனின் ராசியான கடகத்தில், ஆத்மகாரகரான சூரிய பகவான் சஞ்சரிக்கும் ஆடி மாதம், மனத்தைஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ அம்பிகை பராசக்தி, கல்விக்கு அதிபதியான, சரஸ்வதி தேவி ஆகியோரைப் பூஜிப்பது, செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், உயர் கல்வியையும் அளித்து, நம் வாழ்க்கையை வளம்பெறச் செய்யும் என விவரிக்கின்றன, "பூர்வ பராசர்யம்", "பிருஹத் ஸம்ஹிதை", "அர்த்த சாஸ்திரம்" ஆகிய மிகப் பழைமையான ஜோதிட நூல்கள் விளக்கிக் கூறுகின்றன. ைவணவ மகானாகியஸ்ரீ ஆளவந்தார், அரங்கனை, தனது பக்தியினால் திருக்கரம் பற்றிய ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், திருமால் உகந்த வாகனமாகிய கருடன் ஆகியோர் அவதரித்ததும் இந்த ஆடி மாதத்தில்தான்!இப்படி, ஆடி மாதத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.இனி, இந்த ஆடி மாதத்தில் நிகழவிருக்கும் புண்ணிய தினங்களைப் பார்ப்போம்!!
ஆடி 1 - முதல், 4 (17-7-2025 முதல் 20-7-2025 வரை) :
பாரதப் புண்ணிய பூமியின் அனைத்து நதி தேவியருக்கும் "ரஜஸ்வலை" காலமாகும். இந்நாட்களில், நதிதீரங்களில் நீராடக்கூடாது.
ஆடி 2 - (18-7-2025):
இன்று நீலகண்டாஷ்டமி!! இவ்வழிபாட்டினால் சகல நன்மைகளும் கிட்டும். தீர்க்க முடியாக் கடன்கள் அடைபடுவது திண்ணம். மனக்கிலேசங்களும் சஞ்சலங்களும் நீங்கி, அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடனும், மன அமைதியுடனும் செயல்படும் செயல்திறன் ஓங்கும், செல்வ வளம் மிகும். அதனாலேயே நெடுநாட்களாகக் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப-நிகழ்ச்சிகள் நல்லபடி நடந்தேறி, மகிழ்ச்சியுடன்கூடிய மன நிறைவையும் பெறுவீர்கள். திருக்கோயிலுக்குச் சென்று, அபிஷேகத்திற்கு உகந்த, பால் பழம், தேன், கரும்புச்சாறு, இளநீர் போன்ற பொருட்களைக் கொடுத்து, காலையில் சிவபெருமானை உளம் உருக பிரார்த்தனை செய்து தரிசித்துவிட்டு, மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தின்போது ஸ்ரீ காலபைரவரையும் வணங்கி, தரிசிப்போர்க்கு கல்வி கேள்விகளில் தர்க்கப் போரில் வெற்றிபெறும் அளவிற்கு மேன்மை பெற்று அனைவராலும் பாராட்டுதல்களைப் பெற்று, கௌரவிக்கப்படுவீர்கள். அனைத்து துைறகளிலும் மேன்மையுடன்கூடிய நல்வாழ்வும், வெற்றியும் பெறுவீர்கள்.
ஆடி 5- (21-7-2025):
ஏகாதசி. இன்று உபவாசமிருத்தல், அனைத்துவிதப் பாபங்களும் போகும். சித்தத்தை அடக்கிய, அட்டமா சித்துக்களைக் கைவரப் பெற்ற சித்த மகா புருஷர் மத்ஸ்ய முனிவரின் அவதாரப் புண்ணிய தினம்.
"ஆகமா யந்த அருள்சிவ சக்தியை
பாகமாய் நீயும் பணிந்து வணங்்கியே
ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை
தாகமாய்ச் சொல்லி சாத்து விபூதியே!"
-இம்மகா மந்திரச் சொற்றொடர்களை தினமும் காலை - மாலை இருவேளைகளிலும், முக்கியமாக பிரதோஷ நேரத்தில், பக்தி - சிரத்தையுடன் 9 முறைகள் சொல்லிவந்தால், மனமானது திருக்கயிலாயம் போல் ஞானஒளியுடன் கூடியதாக, பிரகாசிக்கும். இந்தக் கபால தீட்சையைச் சொல்லி, சிவ-சக்தியை மனத்தால் வணங்கி, திருநீறுபூசிக் கொள்ள வேண்டும். இதை குறைந்தபட்சம் ஒரு மண்டலம் ஜெபிக்க வேண்டும். இக்காலகட்டத்தில், மாமிசம், பூண்டு, வெங்காயம், முருங்கை, கத்திரிக்காய் போன்றவற்றை உணவில் அறவே தவிர்த்தல் வேண்டும்.
ஆடி 6 - (22-7-2025) : பிரதோஷம். இன்று மாலை திருக்கோயில் தரிசனம், அனைத்து பாபங்களையும் போக்கும்.
ஆடி 7 - (23-7-2025) : மாத சிவராத்திரி.
ஆடி 8 - (24-7-2025) :
ஆடி அமாவாசை. இன்று பித்ருக்களைப் பூஜிப்பதால், குடும்பத்தில் உள்ள அனைத்து தோஷங்களும், துன்பங்களும் விலகும்.
ஆடி 10 - (26-7-2025) :
தேய்பிறை முடிந்து, வளர்பிறை ஆரம்பிக்கும் முதல் நாளில் சந்திரன் தரிசனமளிப்பதால், இந்நன்னாளில், சூரிய அஸ்தமனத்தின்போது, சந்திரன் உதயத்தை மேற்குக் கீழ்வானில் தரிசிப்போர்க்கு, அந்நாள் தொடக்கம் முதற்கொண்டு, அம்மாதம் நிறைவடையும் காலம் வரை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தையும், மகிழ்வுடன்கூடிய இல்வாழ்வும், ஆயிரம் பிறைகளைக் காணும் (மருந்துக்குக்கூட மருத்துவரை அணுகா வண்ணம்) மகத்தான பேறையும் பெற்று மகிழ்வார்கள் என்று நவகிரக புராணம் முதற்கொண்டு, பல நூல்களிலும் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.
ஆடி 11 - (27-7-2025):
ஸ்வர்ண கௌரி விரதம். மணமான பெண்கள் நித்ய - தீர்க்க சுமங்கலிகளாக, தொட்டதெல்லாம் துலங்க வரும் பெண் மகளிர்களாய் பரிமளிப்பர். சுக்கிர பகவானின் அதி தேவதையாகிய லட்சுமி தேவியின் கடாட்சமாகிய ஸ்வர்ணம் (தங்கம் - ஆபரண நகைகள்) உங்கள் இல்லத்தில் தஞ்சம் புகும் - நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்!
ஆடி 12 - (28-7-2025) :
திரு ஆடிப்பூரம். நாக சதுர்த்தி. திருவாடிப் பூரத்தில் ஜெகத் துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, ஒருநூற்று நாற்பத்து முன்றுரைத்த ஸ்ரீ ஆண்டாள் திருவவதாரத் திருநன்னாள். இந்நன்னாளில்,
"வாரணம் ஆயிரம் சூழ வலம் ெசய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழிநான்" எனும் பாசுரத்தை திருமணம் தள்ளிப்போன, கன்னியர்கள், பக்தி சிரத்தையுடன் 18 முறைகள் பாடித் துதித்தால், ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளுக்கு ரெங்கமன்னார் அமைந்ததுபோல், நல்ல கணவன் அமையப்பெற்று இல்வாழ்க்கை இனிதாய் அமைந்திடும் ஆண்டாள்-ரெங்கமன்னாரின் திருவருளாலே!
ஆடி 13 - (29-7-2025):
கருட பஞ்சமி, நாக பஞ்சமி. கௌரி விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போருக்கு, தங்கள் இல்லத்தில் நெடுநாட்களாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் நீங்கி, நோயிலிருந்து விடுபடுவர். சொந்தத் தொழிலில் சுணக்கத்தைக் காண்போருக்கு, அவ்விடர்கள் நீங்கி, தொழிலில் அபிவிருத்தியும், நல்ல லாபமும் உண்டாகும்.
ஆடி 14 - (30-7-2025) : சஷ்டி விரதம்.
ஆடி 16 - (1-8-2025) :
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி திருநட்சத்திரம். அரிசி மாக் கோலமிட்டு, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் - ன் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, மந்திர சக்தியால் செரிவூட்டப்பட்ட, மூலமந்திரமாகிய,
ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம், ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
சக்திவாய்ந்த இம்மகா மந்திரத்தைக் குறைந்தபட்சம் 108 முறைகள் ்சொல்லி, துளசி தளத்தினால் அர்ச்சித்து, பானகம் நைவேத்தியம் செய்து, வீட்டிலுள்ள அனைவரும் பிரசாதமாகப் பருகிட, கண் திருஷ்டி விலகும். ஏவல், பில்லி சூனியம் உங்களையணுகாவண்ணம் காத்தருள் புரிந்திடுவார், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி.
ஆடி 16 - (1-8-2025) :
சிவபெருமானால் அருளப்பட்ட பன்னீராயிரம் பொற்காசுகளை, ஊருக்கு வெளியே ஆற்றிலே போட்டுவிட்டு, திருவாரூர் குளத்தில் பலர் முன்னிலையில் மீட்டெடுத்து பிரமிக்கவைத்தது, செங்கற்களுக்கு மாற்றாக, பொற்காசுகளைப் பெற்றது, கங்கையில் புனிதமாகிய காவிரி நதியை இருகூறாகப் பிரிந்து வழிஏற்படுத்தித் தந்தது, முதலையின் பிடியிலிருந்த குழந்ைதயை மீட்ெடடுத்தது, பலர் பார்த்திருந்தபோது, வெண்களிற்றில் ஏறி திருக்கையிலைக்கு எழுந்தருளியது, இவ்வாறு பற்பல அதிசயங்களை நிகழ்த்திய, ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் திருவவதார தினம். இன்றைய தினத்தில், உங்கள் வீட்டுப் பூஜையறையில் நெய் தீபமேற்றி, கீழ் தந்துள்ள பாடல்களைப் பக்தி சிரத்தையுடன் பாடினால், சிவபெருமானின் திருவருளுக்குப் பாத்திரராவீர்கள். மேலும் உங்கள் வீட்டிலுள்ள குழந்தைச் செல்வங்களுக்கு யாதொரு தீங்கும் நிகழாவண்ணம் காத்தருள்வான், அந்த கேதாரநாதன்!
"பித்தா! பிறைசூடி!! பெருமானே!!! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா!! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாம்!"
ஆடி 17 (2.8.2025) :
ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்த குதம்பைச் சித்தரின் அவதாரப் புண்ணிய தினம். குழந்தை பிறந்தது முதல் மிக, மிக அழகாகவும், காண்போரைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தமையால், இவரது பெற்றோர், பெண்குழந்தைகள் அணியும் காதணியாகிய குதம்பை-ஐ அணிவித்திருந்தார்கள். அந்த அணிகலன்களின் பேரைச் சொல்லி அனைவரும் அழைத்தமையால், இவருடைய பெயரும் "குதம்பை" சித்தர் என்ற காரணப் பெயராயிற்று. இன்று காலை ஸ்நானம் செய்த பிறகு, உங்கள் வீட்டுப் பூஜையறையில், மனைப்பலகையில் அரிசி மாக் கோலமிட்டு, குதம்பைச் சித்தரின் படத்தை அல்லது கிழக்கு முகம் பார்த்த மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, மல்லிகை, முல்லைப் பூக்களைக் கொண்டு, 108 முறைகள் "ஓம்ஸ்ரீ குதம்பைச் சித்தரே நமக" எனப் பூஜித்தால், நமக்கு அல்லது நமது சந்ததியருக்கு அஷ்டமா சித்துகளை அடையும் மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்பார். இயலாதவர்கள், ஏழை ஒருவருக்கு தயிர் சாதம் அளித்து மனத்தளவில் குதம்பைச் சித்தரை வணங்கினால் போதும்.அஷ்டமா சித்துக்களை அனைத்தையும் ஒருங்கே பெற்று, இன்றும் தன்னை நாடிவரும் உண்மையான, பக்தியுடன்கூடிய நம்பிக்கையுடையோருக்கு - பக்தர்களுக்கு, இன்னருள் மழை பொழிந்து, காத்தருள் புரிகிறார், மாயவரத்தில்!
ஆடி 18 - (3-8-2025):
ஆடி பதினெட்டாம்பெருக்கு - காவிரி நதி பூஜை செய்தால், துன்பங்கள் அகலும்.
ஆடி 21 - (6-8-2025) :
பிரதோஷம். மாலையில் சிவ தரிசனம் பாபங்களைப் போக்கும். பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் உண்டாயிற்று, அதனைக் கண்ட தேவர்கள் அதன் வெப்பம் தாங்காது ஓடி ஒளிந்தனர். சிவபெருமான் அவ்விஷத்தை உண்டு, அகில உலகமனைத்தையும் காத்தருளிய நேரத்தையே பிரதோஷகாலம் என்றழைக்கின்றோம். ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச பிரதோஷ விரதம் அனுஷ்டித்து, பிரதோஷகாலத்தில்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியை ரிஷபாரூடராக தரிசனம் செய்தல் வேண்டும் என அனைத்து புராணங்களிலும் இதுபற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன. ஆகவே, அைனவரும் இவ்விரதத்தை முடிந்தவரை கடைப்பிடிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.
ஆடி 23 - (8-8-2025) :
ஸ்ரீ வரலட்சுமி விரதம். இன்றைய தினத்தில் வீட்டில் பசுஞ்சாணத்தினால் நன்றாக மொழுகி - துடைத்து, அரிசி மாக் கோலமிட்டு, மலர் மாலைகளால் சிறிய மண்டபம் அமைத்து, அதன் மையப் பகுதியில் நெல் மணிகளைப் பரப்பி, அதன் மீது வெள்ளி அல்லது தாமிரக் குடத்தில் தண்ணீர் அல்லது அரிசியால் நிரப்பி, மாவிலை மற்றும் மஞ்சள் குங்குமம் இட்ட தேங்காயை கலசம்போல் அமைத்து, அதன்மீது ஸ்ரீ மகாலட்சுமி பிம்பத்தை அமைத்து, நெய் தீபம் ஏற்றி வைத்து, லலிதா சஹஸ்ரநாமம் அல்லது துர்க்கா ஸப்தஸதீ அல்லது சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி இவற்றில் எது முடிகிறதோ அவற்றைப் பாராயணம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, போஜனம் அளித்து, பிறகு தானும் உணவருந்த வேண்டும், வசதியுள்ளோர், சுமங்கலிப் பெண்களுக்கு, புடவை, ரவிக்கைத் துண்டு, வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுத்து வணங்கினால், நீண்ட ஆயுளுடன்கூடிய நித்திய சுமங்கலிகளாகவும், வையத்துள் வாழ்வாங்கு வாழும் மகத்தான புண்ணிய பேறினைப் பெறுவர். அனைத்து செல்வங்களையும் அளித்தருளும், ஸ்ரீ மகாலட்சுமி பூஜை ஐஸ்வர்யத்தையும் மங்கலத்தையும் அளிக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த வளர்பிறை சதுர்த்தசி திதி. இந்தப் புண்ணிய தினத்தில், மாலை பிரதோஷகாலத்தில், மாக்கோலமிட்டு,ஸ்ரீ லட்சுமி நரசிமர் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளத்தினால் அர்ச்சித்து, வெல்லம், சுக்குப் பொடி, ஏலக்காய் சேர்த்த பானகம் நைவேத்தியம் செய்வித்து, திருக்கோயிலுக்குச் சென்று, பக்தகோடிகளுக்கு பானகத்தை விநியோகம் செய்திடல் வேண்டும். மேலும், இன்று பௌர்ணமி. மனித மனத்திற்கு ஆதிபத்தியம் கொண்டவர் சந்திரன்! பெளர்ணமி நாட்களில், மனிதனின் மனம் பல்வேறு சஞ்சலங்களுக்கு உட்படுவது இயற்கை. இக்காலகட்டங்களில் மனவுறுதியற்றவர்கள் மன பலஹீனமானவர்கள் விவேகமில்லாமல், விநோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர். மனோகாரகரான சந்திரனின் அதி தேவதை தண்ணீர். அதனால்தான் இக்காலகட்டங்களில் கடலில் அலைகள் முன்பு எப்போதுமில்லாத நிலையில் அலைகள் சற்றே அதிகப்படியாக உயரே எழும். இக்காலகட்டங்களில் முழு உபவாசமிருந்து, மாலையில் சந்திரனை தரிசனம் செய்தபிறகு, ஸ்ரீ சத்திய நாராயண
பூஜை செய்ய வேண்டும். இ்ப்பூஜையை யாரெல்லாம் பக்தி சிரத்தையுடன் செய்கின்றார்களோ அவர்களுடைய மனோரதம் ஈடேறுவது திண்ணம் என சத்தியப் பிரமாணத்தை இறைவனே செய்திருப்பதால்தான், இவ்விரதத்திற்கு சத்தியநாராயண விரதம் எனப் பெயர்க் காரணமாயிற்று.
ஆடி 24 - (9-8-2025) : ருக் யஜூர் உபாகர்மா. இன்று மானிடராகிய அனைவரும், புதுப் பூணுல் அணிந்து, "காமோகாரிஷி, மந்யந்யுகாரிஷி" என 108 முறை அல்லது 1008 முறை அவரவர் இஷ்டப்படி ஜபம் செய்து, ரிஷி தர்ப்பணம் செய்து, வேதம் பாராயணம் செய்ய வேண்டும். மறு தினம் காயத்ரி ஜபம் செய்ய வேண்டும், ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி. ரக்க்ஷாபந்தன்.
ஆடி 25 - (10-8-2025) :
ஸ்ரீ காயத்ரி ஜெபம். இன்றைய தினத்தில் காயத்ரி ஜெபம் குறைந்தபட்சம் 108 தடவைகள் ஜெபிப்பது உத்தமம். மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது.
ஆடி 27 - (12-8-2025) : சங்கடஹர சதுர்த்தி.
ஆடி 30 - (15-8-2025):
சீதளா விரதம் - இவ்விரதத்தை சிரத்தையுடனும், பயபக்தியுடனும் அனுஷ்டிப்பவர்களுக்கு, திடகாத்திர - நோய்-ெநாடிகளற்ற தேகத்தைப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் - மஞ்சள் - குங்குமத்துடன் வையத்துள் வாழ்வாங்கு சுபீட்சத்துடன் வாழ்வர். அனாவசியமான மனப்பிராந்தி விலகும்.
ஆடி 31 - (16-8-2025) :
ஆடிக்கிருத்திகை.கிருஷ்ண ஜெயந்தி.இனி, இம்மாதத்தின் கிரக ராசி பலன்களை, துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளோம். இவற்றைப் படித்து பயனடையுமாறு தினகரன் வாசக அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறோம். செய்வதற்கு எளிய பரிகாரங்களையும் கூறியுள்ளோம். இவையனைத்தும், மிகப் புராதனமான ஜோதிட நூல்களில், நமது நன்மைகளைக் கருதி, பெரியோர்களால் அருளப்பட்டவைகளாகும்.
ஆடி மாத முக்கிய கிரக மாறுதல்கள்:
ஆடி 10 (26-7-2025) சுக்கிரன், மிதுன ராசிக்கு மாறுதல்.
ஆடி 13 (29-7-2025) - (பின்னிரவு) செவ்வாய், கன்னி ராசிக்கு மாறுதல்.
ஆடி 18 (3-8-2025) புதன், கடக ராசிக்கு மாறுதல்.
A.M.ராஜகோபாலன்