Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

திருமண வரமருளும் நித்ய கல்யாண பெருமாள்

கடலலைகூட சற்று அலுப்போடு ஓய்ந்து போனாலும் போகலாம். ஆனால், அதே கடலின் அருகிலிருக்கும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு முடிவேயில்லை. பெற்ற தந்தை, தாயைவிட ஒரு படி கூடவே இந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆக வேண்டுமே, மகனுக்கு சீக்கிரம் நல்ல பெண் அமைய வேண்டுமே என்று கருணையும், கவலையும் கொண்டு அருள்பாலித்து வருகிறார். திருவிடந்தை வராஹப் பெருமாள். புராண காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஞானப்பிரான், சரித்திர காலத்திலும் லீலைகளை நிகழ்த்தியிருக்கிறான். காலங்களில் இடைவெளி இருந்தாலும் எப்போதும் மணக்கோலக் காட்சிதனில் மாறாது அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.

சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷியை அண்டி அவருக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். ஆனால், அவளின் ஆசை நிறைவேறாது முனிவர் வீடுபேறு அடைந்தார். எப்படியேனும் ஏதேனும் ஒரு ரிஷிக்கு பணிவிடை செய்து, அவரின் தர்ம பத்தினியாகி தானும் இறைவனின் பதம் அடையலாம் என்று நினைத்தாள். என்ன செய்வது என்று தெரியாது பல காடுகள் சுற்றினாள். அவளது உண்மையான ஆசையை அறிந்த காலவ முனிவர் அவளை ஏற்க முன் வந்தார். அவளை மணம்புரிந்தார். பெரிய பிராட்டியார் மகாலட்சுமியின் அனுக்ரகத்தால் முன்னூற்று அறுபது கன்னிகைகள் தோன்றினர். அதில் முதல் கன்னிகையின் பெயர் கோமளவல்லி என்பதாகும். குழந்தைகளை ஈன்றவள் காலத்தின் கோலத்தால் மறைந்தாள். ஆனால், இறையருளால் உயர்ந்த நிலையை பெற்றாள். காலவ முனிவர் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் காப்பாற்ற வேண்டுமே என்று கவலையானார். ஆனால், வேதமூர்த்தியாகவும், ஞானப் பிரனாகவும் விளங்கும் ஆதி வராஹரை வேண்டினார். பக்தர்களுக்கு ஒரு குறையெனில் ஓடிவரும் தெய்வமான வராஹ மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.

‘‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே, நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று அருளினார்.

காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் உள்ள சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோர் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான பெருமாளான ஆதிவராஹரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராஹர் யக்ஞ மூர்த்தி. வேதம் சொல்லும் தர்மத்தையும், யாகங்களையும், எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில் திருமணம் என்கிற கன்னிகாதானம் மிகமிக முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராஹர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறு பதாம் நாள் அனைத்து கன்னிகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராஹப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராஹரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.

திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாண பெருமாளாகவே அருள்புரிவேன் என்று உறுதி கூறினார். அதனாலேயே இத்தலத்திற்கு ‘நித்ய கல்யாண புரி’ என்றும் பெயர் உண்டு.

பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மகாத்மியத்தை அறிந்து தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன் என்று அறிவித்தான். அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான். ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும் மணமகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. அவனின் வேண்டுதல் வீணாகவில்லை அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான். மணம் செய்துகொண்டான். மன்னா என்னோடு வா அழைத்துக்கொண்டு வராஹராக காட்சி தந்து மறைந்தான். மன்னன் மூலவரே வராஹராக மூர்த்தியாக அமையும்படியாக ஆலயம் எழுப்பினான். உதிரிப் பூக்களாக வந்த வரன்கள் எல்லோரும் தொடுத்த மாலையாக சென்றனர். வெகுவிரையில் மணமுடித்து வந்து பகவானின் திருப்பாதம் பணிந்தனர்.

எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப்பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை என பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மருவியது. பெரியது மல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மையில் கீர்த்தியிலும் ஈடுஇணையற்ற தலம். கருவறையில் வராஹர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது காலை மடித்து அதில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம் காண கண்கோடி வேண்டும். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகு&கேது தோஷநிவர்த்தியும் ஏற்பட்டுவிடும்.

உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டிபொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. தனிக்கோயில் தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம். திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராஹரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராஹரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும்முன்பே திருமணம் நிச்சயமாகி விடுவது சகஜமானது.

திருவிடந்தை எனும் இத்தலம் சென்னை - மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.