மகர ராசி என்பது காலபுருஷனுக்கு ஒன்பதாம் (10ம்) பாவகத்தை குறிக்கிறது. நிலம் ராசியாக உள்ளது. இதன் திரிகோண ராசிகளாக ரிஷபம், கன்னியாக வருவது மகர ராசியின் தனிச்சிறப்பாகும். கருமமே கண்ணாக இருக்கக்கூடிய ராசியாகும். காலபுருஷனுக்கு தொழில் ஸ்தானமாக இருப்பதால் சிறப்பான அமைப்பாகும். மற்ற ராசிகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு மகரம் மற்றும் கும்பத்திற்குரிய சனிபகவானின் வீடுகள் அருகே இருப்பதுதான். ஆகவே, சனி பகவான் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை இந்த ராசியில் பயணிக்கிறார்.அவ்வாறு பயணிக்கும் காலத்தில் உலகத்தின் தொழில் மற்றும் தொழிலாளர் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.
புதிய தொழில்களை உருவாக்குவார். அதன் மூலம் தொழிலில் பெரியளவில் ஏற்ற இறக்கங்களை செய்வார். இதே முப்பது வருடங்களுக்கு முன்தான் ஐ.டி துறையே வந்தது. ஏராளமானவர்கள் அந்த துறையில் சேர்ந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோலவே, வேறு தொழிலையும் உருவாக்குவார் சனி பகவான்.
மகர ராசியின் சிறப்பு...
கிரேக்க புராணங்களில் கடல் ஆடு என்றுதான் மகரத்தை குறிப்பிடுகின்றனர். நாம் கிரேக்கர்களின் புராணங்களை ஆய்வு செய்யும் பொழுது அவர்கள் ராசிகளை பற்றி ஏராளமான சூட்சும குறீயிடுகள் வைத்துள்ளனர் என்பது புரிகிறது.
இந்த மகரம் என்பது நிலவீடாக இருக்கும் இந்த ராசியில்தான் செவ்வாய் உச்ச பலம் பெறுகிறது. இங்கு உச்சம் பெற்ற செவ்வாய் தனது சொந்த வீடான மேஷத்தை பார்வை செய்கிறது.
யாருக்கேனும் செவ்வாய் மகரத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு இந்த பூமியில் ஒரு மனை உண்டு என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனுடன் சந்திரன் இணையும் பொழுது ஏராளமான பணவரவைக் கொடுத்தே தீரும்.
மகரம் என்பது சர ராசியாக இருப்பதால் நிலையற்றத்தன்மை கொண்டிருக்கும்.
செவ்வாயானது மகர வீட்டிற்குள் நுழையும் பொழுதுதான் சூரியனின் பெரும் பகுதியான ஒளி ஆற்றலை பெறும் தன்மை உடையதாக உள்ளது. ஆகவேதான் செவ்வாய் உச்சம் அமைப்பாக உள்ளது.
காலபுருஷனுக்கு பத்தாம் (10ம்) பாவகமாக இருக்கிறது. ஆகவே, இந்த பாவகத்தில் ஒருவருக்கு செவ்வாய் மற்றும் சந்திரன் அல்லது செவ்வாய் இருந்து கடகத்தில் இருந்து சந்திரன் பார்வையில் இருந்தால் அவர்கள் செய்கின்ற எந்த தொழிலாக இருந்தாலும் இவர்களை போல் ஒருவர் உலகிலேயே இல்லை என்பதற்கு இணங்க சாதிக்ககூடிய நபராகவும் சாதனை நாயகராகவும் விளங்குவார் என்பதை ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது.
மகர ராசியின் சிறப்பு என்னவெனில், சந்திரன் இந்த தன் சொந்த வீட்டை பார்வை செய்கிறது. ஆதலால், சந்திரன் வலிமையாக உள்ளது. ஆகவே, மகர ராசிக்காரர்கள் பொருள் ஈட்டும் வித்தையை அறிந்தவர்கள் என்றால்
மிகையில்லை.
மகர ராசி என்பது காலபுருஷனுடைய (12ம்) பன்னிரண்டாம் பாவகத்திற்கு 11ம் ராசியாக வருகிறது. பன்னிரண்டாம் பாவகம் என்பது பிறப்பின் இறுதியையும் முக்தியையும் குறிப்பிடுகின்றது. இதில் சந்திரன் இருப்பது. ஜீவன் முக்தி பெறுவதற்கான முயற்சியை தரக்கூடிய அமைப்பாக உள்ளது. வாழ்வில் ஒரு முறையேனும் இந்த ராசிக்காரர்கள் முக்தியை பற்றி சிந்திப்பவர்களாக இருப்பர்.
மகரம் என்பது குறுகிய ராசியாகும். இந்த ராசியானது கும்பத்துடன் இணைந்து உள்ளது என்பதாகும். மேலும், இறந்தவர்களுக்கான தனிஷ்டா பஞ்சமி என்ற தோஷமானது மகரத்தில் இருந்து தொடங்குகிறது. ஆதலால், இறப்பவர்களுக்கு தோஷம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பிறப்பவர்களுக்கு மட்டுமின்றி இறப்பவர்களுக்கும் தோஷத்தை கொடுக்கும் அமைப்பை மகர ராசிதான் சுட்டிக்காட்டுகிறது. பூமி (நில ராசியில்) வாழ்ந்த ஓர் உயிர் தனது உடலை விடுவதற்கு தயக்கம் கொள்கிறது. எப்படியாவது அந்த உடலுக்குள் சென்றுவிட வேண்டும் என்ற ஏக்கத்தை இந்த ராசிதான் ஏற்படுத்துகிறது.
காரணம், காலபுருஷனின் 12ம் பாவகத்திற்கு 11ம் பாவகமாக மகரம் வருகிறது. அங்கு சந்திரன் இருக்கும் பொழுது உடலை (சந்திரனை) விட்டுச் செல்ல மறுக்கிறது அந்த ஆத்மா.
மகர ராசியின் புராணங்கள்...
கிரேக்க புராணத்தில் ஒலிம்பியன் தேவக்கடவுள்கள் டைபான் என்ற மிக கொடூர உருவம் கொண்ட அரக்கனை கண்டதால், தங்கள் உருவத்தை மாற்றி கொள்ள முயற்சித்தனர். அதன்மூலம் நீர்நிலைகளுக்குள் தாங்கள் மறைந்து கொள்ள முயற்சி செய்தனர். அதன் விளைவாக தங்களை மீனா மாற்றி கொள்ள முயற்சி செய்தனர்.
ஆனால், பயத்தில் அவர்கள் மனத்திற்குள் குழப்பம் உண்டாகவே. இடுப்பின் கீழ் பகுதி மட்டும் மீனாகவும் இடுப்பின் மேல்பகுதி ஆடு போன்றும் உருவெடுத்தது. இதனால் அந்த அரக்கன் குழம்பி போனான். ஆகவே, கிரேக்க கடவுளான சியுஸ் இவர்களை மகர ராசியின் அடையாளமாக மாற்றினார் என்ற புராணக் கதை உண்டு. இதனை கடல் ஆடு (Sea Goat) என்று அழைப்பார்கள். நில ராசியில் இது போன்று ஓர் உருவம் வருவது அதிசயமே.
இந்தியப் புராணத்தின்படி, மகரத்தில் உள்ள விலங்கை முதலைப் போல வர்ணிக்கின்றனர். இதனை கங்கா தேவியின் வாகனமாக வழிபடுகின்றனர். நீதியை காக்கும் தெய்வமாகவும். நமது கர்மாக்களை கரைக்கும் தெய்வமாகவும் கங்கா தேவி அருள் செய்கிறாள் என்று புரிந்து கொள்ளலாம்.
மகர ராசியுடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும்
தாஸ் என்று முடியும் பெயர்கள் மகர ராசியுடன் தொடர்பு கொள்கிறது. மணி, கருணா, அன்பு, காந்தன்,ஹரி, சிந்தாமணி, மணிமொழி, வெங்கடேஷ், பாலமுருகன், சார்லஸ், நடேஷ், ஐயப்பன் போன்ற பெயர்களும்...
இந்த ராசியுடைய தொடர்பு கொள்ளும் இடங்கள் யாவும் தொழிற்சாலை, மலைப்பகுதிகள், மலையும் வனமும் இணைந்த பகுதிகள், ரசாயன தொழிற்கூடங்கள், போராடும் இடங்கள், இடிந்த நிலையில் கட்டடங்கள் உள்ள இடங்கள், பழைய பள்ளிக்கூடங்கள், உணவுக்கூடங்கள், உணவு பொருட்களை விற்பனை செய்யும் இடங்கள், பழைய சினிமா தியேட்டர்கள், பெரிய நீர் தொட்டிகள், மதுபானங்கள் விற்பனை செய்யும் இடங்கள், ஜெராக்ஸ் எடுக்கப் படும் இடங்கள், பழைய பொருட்களை வாங்கும் காயிலான் கடைகள் ஆகியவை அடங்கும்...
மகர ராசிக்கான பரிகாரங்கள்...
மகர ராசிக்கான சிறந்த பரிகாரம் என்பது ஊனமுற்றவர்கள், ஏழ்மையானவர்கள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பாகும்.
காசி ஷேத்திரம் சென்று காலபைரவரை வழிபாடு செய்தல், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு உதவி செய்தல்.
ஏதேனும் ஒரு சனிக்கிழமை அன்று நீங்களும் தானம் வாங்கி சாப்பிடுதல். உங்களின் ஈகோவை எடுத்து விடும். இதுவே சனி பகவானின் சிறந்த பரிகாரம்.