Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராசிகளின் ராஜ்யங்கள் கன்னி

கன்னி என்பது காலபுருஷ லக்னத்திற்கு ஆறாம் (6ம்) பாவகமாக உள்ளது. கன்னி என்பது நில ராசியாக உள்ளது. இது பெண் ராசியாகவும் பெண்களுக்கு உகந்த ராசியாகவும் உள்ளது. இந்த ராசியில் புதன் வலிமையும் வல்லமையும் பெறும் ராசியாக உள்ளது. இந்த ராசியில் சுக்ரன் பலவீனம் பெற்ற கிரகமாக உள்ளது. உபய ராசியாக கன்னி உள்ளது. ஆகவே, இரட்டைத் தன்மையை பெறுகிறது. இந்த ராசிக்குள் வரும் சந்திரன் இரட்டைத் தன்மையை பெறுகிறது என்பது நிச்சயம். எந்தவொரு முடிவையும் இரட்டை மனதோடு முடிவெடுக்கும் தன்மை உள்ளது. கன்னி ராசிக்காரர்கள் பொதுவாகவே தந்தையின் தனத்தை அனுபவிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படுவதுண்டு...

கன்னியின் சிறப்பு...

லத்தீன்மொழியில் விர்கோ என்பதற்கு ‘கன்னி’ அல்லது ‘இளம்பெண்’ என்ற பொருளுண்டு. கன்னி ராசிக்காரர்களுக்கு தன ஸ்தானத்தின் அதிபதி நீசம் ஆவதால் இவர் பிறந்த பின் சில காலம் தந்தைக்கு பொருளாதார சிக்கல்கள் வந்து செல்லும் வாய்ப்புகள் உண்டு. கன்னியில் புதன் உச்சம் பெறுவதால் இவர்கள் மிகவும் புத்திசாலித்தனம், சாதுர்யமாக செயல்படும்தன்மை இவர்களிடம் மிகுந்திருக்கும். மேலும், வங்கி, மக்கள் கூடும் இடங்களில் இவர்களின் பயணமோ உத்தியோகமோ இருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தரகு தொடர்பான பணிகளை இவர்கள் எளிதாக மேற்கொள்வார்கள். சுக்ரன் வலிமையான நிலையில் இருந்து விட்டால் பேச்சால் அனைத்தையும் சாதிக்க வல்லமை இவர்களுக்கு உண்டு. சூரியன் கன்னிக்குள் பிரவேசம் செய்யும் காலத்தில்தான் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் வருகின்ற அமாவாசையும் சிறப்பைப் பெறுகின்றது.உபய லக்னங்கள் அனைத்தும் இரட்டைத் தன்மையில் இருப்பதால், இதில் உச்சம் பெற்ற புதன் இரட்டை பெருமாள் உள்ள திருத்தலமானது இந்த ராசிக்குள் வரும் என்பது ஜோதிட சூட்சுமமாகும்.

இவர்களுக்கு இரண்டாம் பாவகத்தில் சுக்ரன் அதிபதியாக உள்ளதாலும் அந்த சுக்ரன் ஒன்பதாம் பாவகத்தில் தொடர்பு கொள்வதாலும் இவர்களின் பேச்சு சாதுர்யத்தால் மற்றவர்களை கவர்ந்திலுக்கும் திறமையை பெற்றிருப்பார்கள். காலபுருஷனுக்கு ஆறாம் (6ம்) பாவகமாக வருவதால் கடன் தொடர்பான அலுவலகப் பணிகளில் ஈடுபடுதல் உண்டான அமைப்பை உருவாக்கும். இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவத் தொடர்பான மார்கெட்டிங் பணிகளும் சிறப்பாக இவர்களுக்கு அமையும். சுக்ரன் இந்த ராசிக்குள் வந்து நீச பங்கம் ஆவதால், அம்மனின் ஆசிகள் இவருக்கு உண்டு. இந்த ராசிதான் காலபுருஷனின் நோய், கடன், எதிரியின் அம்சத்தை குறிப்பிடும் ராசியாக உள்ளது. கன்னி ராசிக்குள் புகுந்திடும் எந்த கிரகமும் புதனின் குணத்தை சிறிதளவு பெற்றுக் கொள்கிறது என்றே சொல்ல வேண்டும். இது புதனின் உச்சமாகும் ராசி என்பதால் அதனுடைய ஒருசில குணங்கள் இந்த ராசிக்குள் பிரவேசிக்கும் கிரகங்களுக்கும் உண்டு.

சூரியன் உள்ளே பிரவேசம் செய்கையில் வங்கி நிர்வாகமாகவும், சந்திரன் உள்ளே பிரவேசம் செய்கையில் மக்கள் தொடர்பிலும், செவ்வாய் உள்ளே பிரவேசிக்கையில் நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்துவதாகவும் வியாழன் உள்ளே பிரவேசிக்கையில் பொருளாதாரத்தை கட்டுப் படுத்துவதாகவும் உள்ளது. சுக்ரன் உள்ளே பிரவேசிக்கையில் புதிய சிந்தனைகள் மற்றும் புதிய பொருட்களை உற்பத்தி செய்வதாகவும் சனி உள்ளே பிரவேசிக்கையில் அறிவு சார்ந்த சட்ட நுணுக்கங்களை தருவதாகவும் உள்ளது.

கன்னியின் புராணம்...

கிரேக்கத்தில் டெமெட்டர் என்பவர் விவசாயம், தானியங்கள் மற்றும் அறுவடைக்கு அதிபதியான கிரேக்க தெய்வம். டெமெட்டரின் மகளை பெர்சிஃபோனை ஹேடிஸ் (பாதாளத்தின் அதிபதி) கடத்தி சென்று விடுகிறார். இதனால் துயரமடைந்த டெமெட்டர், உலகிலுள்ள தாவரங்கள் அனைத்தையும் வளரவிடாமல் செய்கிறார். பூமி வறண்டுபோகிறது. இதனால், பெர்சிஃபோன் ஆண்டுக்கு சில மாதங்கள் பாதாளத்திலும், சில மாதம் பூமியிலும் இருக்க முடிவெடுக்கவே, பெர்சிஃபோன் பூமியில் உள்ள காலம் வசந்த காலமாகவும் பாதாளத்தில் உள்ள காலம் குளிர்காலமாகவும் டெமெட்டர் மாற்றினார். கன்னி ராசியானது அறுவடைக் காலத்துடன் தொடர்புடையதாக உள்ளது. டெமெட்டர் அல்லது பெர்சிஃபோன் கன்னிராசியின் உருவகமாக இருக்கப்படுகிறது.

கன்னியுடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும்

கன்னிராசியானது பசுமையான இடங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. நீர்நிலையுடன் உள்ள பசுமையான இடங்கள் ஆகியவை அனைத்தும். இந்த இடங்களில் மலைகளும் மலை தொடர்பான பசுமைப் புல்வெளிகளும் இதனுடன் இணைந்த சிவஸ்தலங்கள், பெருமாள் ஸ்தலங்கள் ஆகியவை தொடர்பு பெறுகின்றன. தபால் அலுவலகங்கள், சிவனும் விஷ்ணுவும் இணைந்த கோயில்கள், இரட்டைப் பெருமாள் ஸ்தலங்கள், இரட்டை சிவஸ்தலங்கள், வங்கிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் ஆகியவை அனைத்தும்...

மெர்க்குரி, ஜேக்கப், சிவராம், கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், கண்ணன், ரவி, காந்தன், வித்யா, சோமன், கார்த்திகேயன், ஷ்யாம் போன்ற நாமங்கள் இந்த ராசியில் வருகின்றன.

எச்சரிக்கை...

கன்னிராசி மற்றும் கன்னி லக்னக் காரர்கள் கன்னி ராசியை அசுப கிரகங்கள் பார்வை செய்யும் பொழுதும், அசுப கிரகங்கள் கன்னி ராசியை கடந்து செல்லும்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்குரிய கிரகப் பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.

கன்னிராசிக்கான பரிகாரம்

கன்னிராசி என்பது மலையின் அடிவாரங்களில் உள்ள தெய்வங்களை வழிபட வேண்டும். அந்த தெய்வங்கள் இரட்டைத் தெய்வங்களாக இருக்க வேண்டும். குறிப்பாக தென்மாவட்டத்தில் உள்ள இரட்டைத் திருப்பதியை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். எந்த தேவதையை வழிபட்டாலும் இரண்டுமுறை வழிபட வேண்டும்.

கலாவதி