துலாம் என்பது காலபுருஷ லக்னத்திற்கு ஏழாம் (7ம்) பாவகத்தை குறிக்கிறது. துலாம் ராசி என்பது காற்று ராசியாக உள்ளது. இந்த காற்று ராசியின் அதிபதி சுக்ரன். கலைகளுக்கு அதிபதியாக உள்ளவராக உள்ளார். இந்த ராசியில் உள்ளவர்கள் ஓரளவு நீதியை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். காரணம், இந்த ராசியில்தான் சனி கிரகம் தனது உச்சமான ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டுள்ளது. துலாத்திற்கென பல சிறப்புகள் இருந்தாலும் அதில், குறிப்பாக தவறுகள் செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், தவறு செய்துவிட்டு வருத்தப்படும் ராசியில் முதல் தன்மை கொண்ட ராசி துலாம் மட்டுமே. இரக்கத்தன்மையும் அரக்கத்தன்மையும் ஒருங்கிணைந்த ராசி இந்த துலாம்...
துலாம் ராசியின் சிறப்பு...
லத்தீன் மொழியில் லிப்ரா என்றால் தராசு அல்லது எடைக்கருவி என்ற பொருளைத் தருகிறது. இந்த ராசியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களின் வடிவமாக உள்ளது.
காற்று தொடர்பான கலைகளை கற்றுக் கொடுப்பதில் துலாத்தில் உள்ள சுக்ரன் வல்லவர். பாடுவது, இசையமைப்பு, காற்று தொடர்பான கருவிகளான நாதஸ்வரம், புல்லாங்குழல், கொம்புகள் மூலம் இசைக்கும் கருவிகள், சங்கு, எக்காளம், தாரை, கிளாரினெட், சாக்ஸஃபோன், ட்ரம்பெட், ஹார்மேனியம் போன்ற காற்று இசைக் கருவிகளை வாசிப்பது ஆகியவற்றை குறிப்பிடலாம். இந்த இசைக்கருவியின் மூலம் தாயை வழிபடுவது, சந்திரனை வழிபடுவது உடனடியான பலன்களைக் கொடுக்கும்.
துலாத்தில் நுழையும் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பலனைக் கொடுக்கிறது. துலாத்தில் நுழையும் சூரியன் பலம் குறைந்து மழையைக் கொடுக்கிறது. ஆம், இதன்பின்னே சுக்ரன் இருந்து இணைந்து பலம் பெறுவதால் ஐப்பசி என்பது மழையாக உருப் பெறுகிறது. சந்திரன் - சுக்ரன் இணையப்பெற்றால் வலுவான மழை.
துலாத்திற்குள் வரும் செவ்வாய் வேகத்தை பெறுகிறது. இந்த வேகம் சிந்திக்காமல் காரியத்தை செய்ய வைக்கும்.
துலா ராசிக்குள் பிரவேசிக்கும் புதன் நரம்புகள் தொடர்பான பிரச்னை மற்றும் சிலருக்கு முகவாதம் போன்ற விஷயங்களை தருவிக்கிறது.
துலாம் ராசிக்குள் நுழையும் வியாழன் தன் சுயத்தை இழந்து கலைகளை விஸ்தரிக்கிறது.
துலாம் ராசிக்குள் நுழையும் சனி தன் அதீத சக்தியால் தர்மத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் பெரிய மாற்றத்தை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். காற்று ராசிக்குள் சனி பிரவேசிக்கும் பொழுது சளி தொடர்பான பிணிகளை உண்டாக்கும்.
இந்த ராசியானது மலைகளையும், காடுகளையும், கோயில்களையும் உள்ளடக்கிய ராசியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ராசியில் மழை என்பது அழகியலை தரக்கூடிய ராசியாக உள்ளது. மழை பெய்து ரம்மியான காட்சிகளானது இந்த ராசி மண்டலத்திற்குரிய இடங்களாக இருக்கும்.
துலாம் ராசியின் தேவதைகள்...
கிரேக்கத்தில் துலாம் ராசிக்கு தெமிஸ் (Themis) மற்றும் அஸ்ட்ரியா (Astraea) ஆகிய இருவரும் தேவதைகளாகச் சொல்லப்படுகிறார்கள்.
இவர்களில், தெமிஸ் (Themis) நீதியையும், சட்டத்தையும் அடையாளமாகக் கொண்ட கையில் தராசை ஏந்திய நிலையில் காட்சித் தரும் தேவதையாக உள்ளார். அஸ்ட்ரியா (Astraea) இவர் நேர்மையாக வாழ்ந்து அநீதியால் மண்ணுலகை விட்டு சென்றதால் தேவதையாக வணங்கப்படுகிறார்.
இந்தியப் பாரம்பரியத்தில் துலாம் ராசி சுக்ரன் என்ற அசுர குருவிற்கு அதிபதியாகச் சொல்லப்படுகிறது. காரணம், இது ஆண் ராசி. பெண் ராசியாக இருந்தால் லெட்சுமி தேவியை குறிப்பிடலாம். இந்த ராசியில் சூரியன் நீசம் பெறுவதால்தான் சுக்ராச்சாரியாருக்கு ஒற்றைக்கண் உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
இந்த ராசிக்கு பகல் பொழுது மிகவும் குறைவாக உள்ளது. இரவுப் பொழுது அதிகமாக இருக்கும். ஆகவே, இந்த ராசிக்குரிய தேவதைகளை மாலையில், இரவில் வழிபடுவது சிறப்பாகும்.
சுக்ரனும், சனியும் இந்த ராசியில் உள்ளதால் புளிப்பு சுவை கொண்ட இனிப்பை ருசிப்பவர்கள் இந்த ராசியுடன் தொடர்புடையவர்களாக இருப்பர்.
இந்த ராசியில் சுக்ரன் - சனி
இணைவுள்ளவர்களுக்கு திருமணம் தாமதம் அதிகமாகிக் கொண்டே இருக்கும். சிலருக்கு திருமணம் நடைபெற்று அதிகமாக பெண் குழந்தைகளை கொடுக்கும் அமைப்பாக இந்த ராசி உள்ளது.
துலாம் ராசியுடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும் நீதிமன்றங்கள், வழக்காடும் இடங்கள், கிராமங்களில் பஞ்சாயத்திற்கு கூடும் இடங்கள், மரங்கள் அடர்த்தியாக உள்ள குளுமையான பிரதேசங்கள், குளிர்ச்சியான பகுதியில் உள்ள கோயிலகள், காற்று அதிகமாக வீசக்கூடிய கோயில்கள் அல்லது இடங்கள், அதிக மழை பொழியும் இடங்கள், புளியங்குடி என்ற பெயர் கொண்ட இடங்கள், கருப்பண்ண சுவாமியும், மாரியம்மனும் இணைந்த கோயில்கள் அதுமட்டுமின்றி அஷ்ட லெட்சுமி கோயில், நாவலடியான் என்று சொல்லப்படுகின்ற தேவதைகளும் இந்த ராசிக்குள்தான் வருகின்றன. நாவல் என்பது சுக்ரனை குறிக்கிறது. இந்த மரத்திற்கு பிரசன்னமான கருப்பசாமியை குறிக்கும், அங்கே நாவலடியான் பிரசன்னமாவர்.
காமகோடியான், கலாதாஸன், கலையரசன், கலாவதி, சாந்தலெட்சுமி, கவியரசன், கலைசெல்வம், காருண்யலெட்சுமி, கோவிந்த தாசன், மேகலா, சாமி கண்ணு, வசந்த தாஸ் போன்ற பெயர்கள்...
கவிஞர்களுக்கு இந்த ராசி அதிகமாக வேலை செய்யும். காரணம், கற்பனையுடன் அழகியலை பொருத்துவது என்பது துலாம் ராசியின் தொடர்பை குறிக்கும்.
துலாம் ராசிக்கான பரிகாரம்
பொதுவாக துலாம் ராசியை அசுப கிரகங்கள் பார்வை செய்யும் பொழுதும் அசுப கிரகங்கள் ராசியை கடந்து செல்லும் போதும் சில கடினமான மாற்றங்கள் ராசிக்குள் நிகழும். இதற்காக சில பரிகாரங்கள் செய்து கொண்டால் பாதிப்புகள் குறையும்.
துலாம் ராசிக்கு என்ன பரிகாரம் செய்யலாம்?
துலாம் என்பது தராசுடன் தொடர்பு உடையது. எனவே, துலாபாரம் தானம் செய்வது சிறந்த பரிகாரம் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு கிரகமும் பயணிக்கும் பொழுது ஒவ்வொரு பரிகாரம் செய்யலாம்.
சூரியன் -கோதுமை; சந்திரன் - பச்சரிசி, பால், பன்னீர், பழங்கள்; செவ்வாய் - துவரை, செவ்வாழை; புதன் - பச்சை பருப்பு, பச்சை காய்கறிகள்; வியாழன் - வெள்ளை கொண்டை கடலை, தேன்; சுக்ரன் - வெள்ளை மொச்சை, பழங்கள்; சனி - நல்லெண்ணெய் ஆகியவற்றை தானம் செய்யலாம்.