Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோயில் எனும் அகத் திறவுகோல்!

பழம் பெரும் கோயில்களை தேடி ஓடுகின்றோம். இறைவனை தரிசித்து மகிழ்கின்றோம். அர்ச்சனைகள் செய்து திருப்தியுறுகின்றோம். கோயிலின் வரலாற்றுத் தொன்மையினை அறிந்து வியப்புறுகின்றோம். அங்கு அருளும் இறைவனின் புராணப் பெருமையினை ஒருவாறு அறிந்து புரிந்து கொள்கிறோம். அத்தலத்தினைக் குறித்து அடியார்களால் இயற்றப்பட்ட பாடல்களை படித்துப் பார்த்து அந்த ஆழம் தோய்ந்த சொற்களால் கண்களில் நீர்வழிய நிற்கின்றோம். மெல்லியதாக ஒரு நிம்மதி சூழ கோயிலை விட்டு அகலுகின்றோம். இப்படியே மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோயில்கள். பிரார்த்தனைகள் என்று தொடர்ந்து கொண்டே யிருக்கின்றன. ஆனால், கோயில்கள் இதற்கு மட்டுமா உள்ளன. இல்லை.வேறென்ன செய்யும்?ஒவ்வொரு தலமும் தனக்கேயான உள்ளுறைச் சக்தியை கொண்டிருக்கின்றன. இதை சமஸ்கிருதத்தில் அந்தரிக்ஷம் என்பார்கள். அந்த மறைபொருளான சக்தியை குறித்து அத்தல புராணத்தில் எங்கேனும் ஒரு குறியீட்டு மொழியில் சொல்லியிருப்பார்கள்.

இது அந்த புராணத்தை ஆழ்ந்து அகன்று சென்றால் தரிசிக்கலாம். புராணங்களே கூட தன்னை எவர் ஆராய நினைக்கின்றோரோ அவர்களுக்கு தன்னுடைய தத்துவ தரிசனத்தை காட்டுகின்றது. எனவே, இந்த ரகசியமான உள்ளுறைச் சக்தியானது இத்தலத்திற்கு வந்து தரிசிப்போருக்குள்ளும் மெல்லச் சென்று செயல்படத் தொடங்கும். அதனாலேயே கோயிலுக்குள் நுழையும்போது இயன்றவரையில் நம்மை ஒரு வெற்றுக் கிண்ணமாக மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். பேய்போல் ஒரே நாளில் பத்து கோயிலுக்குச் சென்றுவிட்டு, ‘‘இன்னும் அஞ்சு கோயிலுக்கு போயிட்டேண்ணா. பதினஞ்சு கோயிலையும் ஒரே நாள்ள பார்த்த மாதிரி இருக்கும்’’ என்பவர் களால் எதையும் உணர முடியாது. கோயில் தரிசனம் என்பது எண்ணிக்கையாலானது அல்ல. ஒரு கோயிலை எவ்வளவு நீங்கள் உள்வாங்குகிறீர்கள் என்பதில் உள்ளது. அந்தக் கோயில் உங்களிடத்தில் செயல்படுத்துவதற்கு நீங்கள் உங்களை திறந்து வைத்திருக்கிறீர்களா என்பதே முக்கியம். அப்போது என்னதான்செய்ய வேண்டும்? கோயிலை நன்கு தரிசித்து முடித்துவிட்டு எங்கேனும் தூணோரமாக அமர்ந்து கண்களை மூடி உள்ளுக்குள் ஆழப் பாருங்கள்.

மெல்லியதாக சுவாசத்தை கவனித்தலில் தொடங்கி, மானசீகமாக இறைவனின் ஜபத்தை உச்சரித்தல் என்று நகர்ந்து மெல்ல மனதின் ஓய்ச்சல் அடங்கும் மட்டும் அங்கேயே இருங்கள். எண்ணங்கள் வருவதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால், எம்மாதிரி எண்ணங்களால் நீங்கள் அலைகழிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். இந்த அறிதலே நீங்கள் மனதிற்கு மேலே கவனிக்கப்படுபவராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகின்றது. இவை யாவும் அந்த தலத்தின் சாந்நித்திய பலத்தால் இன்னும் எளிதாகும். கோயில் உங்களின் இந்த தனித்த அமர்தலுக்கும் அமிழ்தலுக்கும் உதவி செய்யும். அந்தக் கணத்தில் அந்தக் கோயிலின் மையம் செயல்படத் தொடங்கும். மெல்ல தியானம் கைகூடி மீண்டும் கண்திறந்து வெளியுலகை நோக்கி போகும்போது உள்ளுக்குள் அசையாது அந்த அமைதி உங்களுடனேயே வருவது புரியும். இதைத்தான் பெரியோர்கள் பிரசாதம் என்று சொல்லி வைத்தனர்.

கிருஷ்ணா