திருமாங்கல்ய தாரணத்திற்கு முன் உடுத்துகின்ற புடவைக்கு கூறைப் புடவை என்று பெயர். (சிலர் கூரை புடவை என்று எழுதி ஒரு வீட்டுக்கு பாதுகாப்பாக கூரை இருப்பது போல பெண்ணிற்கு இப்புடவை இருப்பதால் கூரை புடவை என்று கூறுவது சரியல்ல.) கூறை என்பதற்கு புத்தாடை என்று ஒரு பொருள். திருமணத்திற்கான ஆடை என்று ஒரு பொருள். பெரியாழ்வார் இந்த கூறைப் புடவை பற்றி ஒரு பாசுரத்தில் மிக அழகாகப்பாடுகின்றார். பெரியாழ்வார் திருமகள் ஆண்டாள், எதையும் கொஞ்சம் முன்னாலேயே செய்து பார்த்துவிடும் சுபாவம் உள்ளவள். எம்பெருமானுக்கு மாலை சாற்றுவதற்கு முன், தான் மாலை சார்த்தி அழகு பார்த்துக் கொண்டாள். அதைத்தான் பகவானும் விரும்பினான். இதனாலேயே அவளுக்குச் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் ஏற்பட்டது.
கண்ணனெம்பெருமானையே கட்டிக்கொள்ள வேண்டும் என்று தேர்ந்தெடுத்த அவள், அந்தத் திருநாளுக்கு முன், அந்த எம்பெருமானாகிய காதலனை நினைத்து படுகின்ற அவஸ்தையை ஒரு அழகான பாசுரத்தில் பதிவு செய்கிறார். விரும்பிய கணவனை அடைய நினைக்கும் பெண்கள், திருமண நாளுக்கு முன், என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதை இப்பாசுரம் தெரிவிக்கிறது.
``காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணிவண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே!’’
- பெரியாழ்வார் திருமொழி.
வாங்கி வைத்திருக்கும் ஆபரணங்களை எல்லாம் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கிறாள். இது தனக்கு அழகாக இருக்கிறதா இல்லையா என்று கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள். கைகளில் நிறைய வளையல்களை அணிந்து கொண்டு குலுக்கி குலுக்கி பார்த்து அந்த சத்தத்தை கேட்டு சிரிக்கிறாள். திருமணத்திற்கு என்று வாங்கி வைத்திருக்கக்கூடிய புத்தாடைகளை எடுத்து அணிந்துகொண்டு அழகு பார்க்கிறாள். (கூறை உடுக்கும்) தன்னுடைய சிவந்த வாயை நிறம் இட்டு திருத்திக் கொள்கிறாள்.
பிறகு மெல்ல அவனை நினைத்து அவன் பெயரைச் சொல்லி பிதற்றுகிறாள். இந்த பிதற்றலுக்கு காரணமாக இருக்கும் பொருட்களில் ஒன்று கூறை புடவை. கூறைப் புடவை பெரும்பாலும் பட்டுப்புடவையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். உண்மையில் பட்டுப்புடவை அவசியமில்லை.
சாதாரண நூல் புடவைகூட போதும். இந்தக் கூறைப் புடவை கொடுப்பதற்கு முன்னால் மணப்பெண்ணுக்கு தலையில் தர்ப்ப வளையத்தை வைத்து, நுகத்தடி துளையில் ஒரு தங்க காசு வைத்து மந்திரங்களால் அபிஷேகம் செய்கின்ற முறை உண்டு. ஆனால் இதை எல்லோரும் பின்பற்றுவதில்லை.
இந்த நுகத்தடி ஸ்னானம் முடிந்தவுடன் தான் கூறைப் புடவை உடுத்துதல் என்கிற நிகழ்ச்சி ஆரம்பமாகும். அந்த கூறைப் புடவையை வேத மந்திரங்களைச் சொல்லி ஆசீர்வாதம் செய்வார்கள். அந்தப் புடவையையும் திருமாங்கல்யத்தையும் பெரியவர்களும் சுமங்கலிகளும் கையால் தொட்டு ஆசீர்வாதம் செய்யும்படி எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
ஆண்டாள் நாச்சியார் ஒரு பாசுரத்தில் இதை அழகாகச் சொல்கிறாள்.
``இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்’’
இதில் இரண்டு செய்திகள் உண்டு.
1. இந்த கூறைப் புடவைக்கு மந்திரக் கோடி என்று பெயர்.
2. இதனை மணமகனின் உடன்பிறந்தவள், மணமகளுக்குத் தந்து கட்டச் செய்து அழைத்து வர வேண்டும்.
அந்தரி என்பவள் கிருஷ்ணனுடைய தங்கை என்று சொல்வார்கள். அவள் வந்து ஆண்டாளுக்கு கட்டி விட்டாளாம்.
இந்த கூறைப்புடவையைக் கொடுக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்று உண்டு.
அது இந்திர தேவனை நோக்கி சொல்லப்படுகிறது. அதைத்தான் ஆண்டாளும் இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் என்று தன்னுடைய பாசுரத்தில் சொன்னாள்.
“பரித்வாகிர்” என்று ஆரம்பிக்கும் அந்த மந்திரத்தின் பொருள் இதுதான்.
“இந்திர தேவனே! இந்த மணப்பெண் உடுத்தியிருக்கும் புதியதான இந்த புடவை, எப்படி அவளை சுற்றி பாதுகாப்பாக இருக்கிறதோ, அப்படியே உன்னை சுற்றி இப்போது எனது இந்த வேண்டுகோள்களும் நிற்க வேண்டும். நீ பெரியவர்களை கௌரவிப்பவன். அப்படிப்பட்ட உனக்கு ஏற்றவையாக எனது இந்த மந்திரம் இருக்கட்டும்.
இதற்குப் பிறகு மௌஞ்சி தாரணம் என்று சொல்லப்படுகின்ற தர்ப்பையினால் முறுக்கப்பட்ட கயிற்றை, மணப் பெண்ணின் இடுப்பில் சுற்றி கட்டி விடும் வழக்கம் உண்டு. இந்த மௌஞ்சி தாரணம் ஆன பிறகுதான் மணப்பெண்ணை அக்னியின் அருகே அழைத்துச் செல்ல வேண்டும்.
அப்பொழுது ஒரு அருமையான மந்திரம் ஒன்று உண்டு.
பூஷா த் வேதோ நயது ஹஸ்தக் என்று தொடங்குகின்ற அந்த மந்திரத்தை மணமகன் மணப்பெண்ணை நோக்கி சொல்கின்றான்.
அதில் ஒரு அருமையான தகவல் இருக்கிறது. அந்த மந்திரத்தின் பொருள் இதுதான்.
“ஏ! மணப்பெண்ணே, இப்போது அக்னி அருகே சென்று நாம் திருமணம் செய்து கொண்டபின், என்னுடைய இல்லத்திற்கு பூஷா என்கிற தேவதை அழைத்து வருவார். அஸ்வினி தேவதைகள் தங்கள் ரதத்தின் மூலமாக உன்னை அழைத்து வருவார்கள். அங்கு எனது இல்லத்திற்கு நீ அரசியாக தன்னிச்சையாக செயல்படுபவளாக எப்படி இருப்பாயோ, அப்படி இருக்க வேண்டும். அங்கு நாம் செய்யவேண்டிய இல்லற தர்மத்தைப் பற்றியும், அந்த தர்மத்தை காப்பாற்றுகின்ற முறையைப் பற்றியும் ஆலோசனைகள் நடத்துவோம்.”
திருமண மந்திரங்களை அந்த மந்திரங்கள் சொல்லும் நுட்பமான அர்த்தங்களை புரியாமல் பலரும் பேசுகிறார்கள். பெண்ணை அடிமைப்படுத்தும் மந்திரங்கள் தான் திருமண மந்திரங்கள் என்று அந்த மந்திரங்களை முழுமையாக அறியாமல் சொல்பவர்கள் உண்டு.
ஆனால் இந்த மந்திரத்தின் பொருளை அறிந்து கொண்டால் ஒரு பெண்ணானவள் இல்லத்தின் அரசியாக தன்னிச்சையாக செயல்படும் தன்மை உள்ளவளாக இருப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று மந்திரம் கூறுகிறது. விவாக மந்திரங்களை தமிழில் அழகாகக் கூறிய பெரியாழ்வார், பெண் பிள்ளையான கோதைக்கு ஆண்டாள் என்கிற திருநாமம் உண்டு. ஆண்டாள் என்று சொன்னால் கண்ணனை ஆண்டாள். கண்ணனுடைய இல்லத்தை ஆண்டாள் என்று பொருள். இந்த மந்திரத்தை நோக்கும் போது இந்த உரிமையை ஆண்டாள் எடுத்துக் கொண்டாள் என்று தானே ஆகிறது. மனைவிக்கு இல்லாள் என்று அழைப்பார்கள். கணவனை அப்படி அழைத்தால் பொருள் விபரீதமாகும். (இல்லான் -இல்லாதவன்)
முளைப்பாலிகை
முளைப்பாலிகையில் பால் சொரியும்போது அது சந்திர கிரணங்களால் செழித்து வளரவேண்டும். சந்திர கிரணங்களை அமிர்த கிரணங்கள் என்று சொல்வார்கள்.
முளைப்பாலிகைகளுக்கு 5 நாட்களுக்கு முன்னே வீட்டில் 5 சுமங்கலிப் பெண்களால் நவதானியங்களைச் சொரிந்து, தினசரி பூஜை செய்து அதனை மணமேடைக்கு எடுத்து வருவதுண்டு.
இப்போது அதற்கெல்லாம் அவகாசமில்லாமல் போய்விட்டது. திருமண சடங்குகளுக்குள் ஒரு சடங்காக மாறிவிட்டது.
அதுவும் மணமக்கள் ஒரு ஊரில் இருக்கிறார்கள். திருமணம் வேறு ஊரில் ஒரு கல்யாண மண்டபம் பிடித்து நடக்கிறது. இதில் எங்கே பாலிகைகளை கொண்டு வருவது! அடுத்து மண் பாலிகைகள் கிடைக்காமல் பிளாஸ்டிக் கப்புகளில் வைத்து ஏதோ ஒரு சடங்காகச் செய்கிறார்கள்.