காஞ்சிபுரத்தில் அருகாமையிலேயே பல திருத்தலங்களை நாம் சேவிக்கலாம். திருமங்கை ஆழ்வார் அத்தனைத் திருத்தலங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.திருமங்கையாழ்வாரின் சரம பிரபந்தம் அதாவது ஆறாவது பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். அதிலே ஒரு அருமையான பாசுரம். அதிலே காஞ்சியில் இருக்கக்கூடிய அத்தனைத் தலங்களையும் ஒரே பாசுரத்தில் பட்டியலிட்டு மங்களாசாசனம் செய்கின்றார்.
``நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே’’
அவ்வளவு திவ்யதேசத்து எம்பெருமான்களும் ஆழ்வாரின் திருஉள்ளத்திலே எழுந்தருளியிருக்கிறார்கள். ‘‘என் நெஞ்சின் உள்ளாய்’’ என்ற சொற்றொடரைக் கவனியுங்கள்.ஆண்டவனே வந்து உட்கார்ந்து விட்டான். இனி ஆழ்வாரே நினைத்தாலும் அவன் நெஞ்சை விட்டு அகல்வானா? மாட்டான். இதை ஆழ்வார் இன்னொரு இடத்தில் பாடுகின்றார். வந்தாய் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் என்று.பகவத் கீதையில் பகவான் சொல்லுகிறான்.‘‘ஒரு நல்ல பக்தன் கிடைக்க மாட்டானா என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். சர்வம் இதி மகாத்மா ஸ ஸுதுர் லப:’’ என்கிறான். அப்படி ஒருவன் திருமங்கை ஆழ்வாரைப் போல கிடைத்துவிட்டால், அவன் விட்டு விடுவானா? மாட்டான்.சரி, விஷயத்துக்கு வருவோம். இந்தத் திருத்தாண்டகத்தில் முதலிலே திருநீரகம் என்று திவ்ய தேசத்தின் பெயரைச்சொல்லி மங்களாசாசனம் ஆகிறது.‘‘பேரைச் சொல்லவா, ஊரைச் சொல்லவா’’ என்றால், பேரைச் சொல்வதற்கு முன்னர் ஊரைச் சொல்ல வேண்டும் என்கின்ற மரபு உண்டு. ஊரைச் சொல்லித்தான் பேரைச் சொல்வார்கள். இது அன்றாட வாழ்வியலிலும் காணலாம்.மகாராஜபுரம் சந்தானம், குன்னக்குடி வைத்தியநாதன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், நாமக்கல் கவிஞர் என்று ஊரின் பெயரைச் சொல்லித்தான் பெயரைச் சொல்வார்கள்.ஆழ்வாரும் இந்த விதியை பல பாசுரங்களில் கையாளுகிறார். ‘‘வேங்கடம் அடை நெஞ்சமே’’ ‘‘திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே’’ முதலில் ஊருக்குப் போகவேண்டும். பின்னால் அவன் கோயிலுக்குப் போக வேண்டும். திருநீரகம் என்ற திவ்ய தேசத்திற்குத் திருமங்கை ஆழ்வார் காலத்தில் தனி ஆலயம் இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது தனி ஆலயம் இல்லை. பெரிய காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோயில் வடபுறத்தில் மிகச் சிறிய சந்நதியில் பெருமாள் இருக்கின்றார். உற்சவர் திருநாமம் ஜகதீஸ்வரர். நின்ற திருக்கோலம். சங்கு சக்கர கதாபாணியாக வரம் தரும் திருக்கரத்தோடு காட்சி தருகிறான். விமானம் ஜகதீஸ்வர விமானம். அக்ரூரருக்கு பிரளய காட்சியை காட்டிய பெருமாள். அபவாதம் நீக்கும் பெருமாள். வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும். தாயாருக்கு பெயர் நிலமங்கை வல்லி. 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம் ஆகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.அவதாரத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பரமபதம்- மேன்மை; நீர்மை-அவதாரங்கள். சரி; அந்த நீர்மைக்குச் சான்றாக இன்றைக்கு நாம் எதைச் சொல்வது. அர்ச்சாவதாரம் தான் நீர்மையின் எல்லை நிலம்.எனவே முதல் தொடரே நீர்மையின் பெருமையைச் சுட்டிக்காட்டும் நீரகத்தாய் நெடுவரை உச்சி மேலாய் என்று தொடங்குகின்றது. கலியுகத்தில் நமக்கெல்லாம் பரம எளிமையாக விளங்குவது அர்ச்சாவதாரங்கள். அங்கே போய் சரணாகதி பண்ணிவிட்டால், பின் மரணமானால் வைகுந்தம் தானே கிடைக்கும்.பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 108 திருப்பதி அந்தாதி என்று ஒரு நூலை இயற்றி இருக்கிறார். ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் அவர் உருகி உருகிப்பாடுவது நம்முடைய உணர்வினை உருக்கிவிடும். திருநீரகம் குறித்து அவர் பாடும் வெண்பா.பிரளய காலம். எங்கு நோக்கினும் தண்ணீர். ஆலின் தளிர் இலை மேலே ஒரு பிள்ளை. அவன் வயிற்றுக்குள்ளே சகல உலகங்களும் உயிரினங்களும் அடக்கம்.இந்த அரும்பெரும் செயலை நாம் காணமுடியுமா? உலகம் முழுக்க வியாபித்திருக்கிறார். எனவே அவனை விஷ்ணு என்று அழைக்கிறோம். அந்த வியாபகத்தில் நாமும் ஏதோ ஒரு மூலையில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆம்; பிரம்மாண்டமான பேரண்டத்தில் நம்முடைய நிலை என்ன யோசித்துப் பாருங்கள்.நாம் அவனுள் இருப்பதால் அவனைப் பார்க்க முடியவில்லை. வெளியே வந்தால் அவனைக் காண முடியும். உலகத்தின் ஒரு சிறிய பகுதியில் இருந்து கொண்டு உலகத்தைக் காண முடியாது. உலகமே அவன் தான் என்ற உணர்வோடு மெய்யறிவு பிறக்கின்ற போது அவனை முழுமையாகப் பார்க்க முடியும்.ஆலிலை மேல் ஏழுலகும் அடக்கிய அந்த பாலகனின் காட்சியைப் பார்க்க வெளியே வரவேண்டும். இது நம்மால் ஆகக் கூடிய காரியமா? எந்த அரும் செயலையும் நீங்கள் எளிதாக செய்யும் அவனல்லவா உதவ வேண்டும். ஒரு காலத்தில் மார்க்கண்டேய மகரிஷிக்கு இந்த அருமையான காட்சியை பகவான் காட்டினாராம். பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் பாடுகிறார்.‘‘பகவானே! ஜெகதீஸ்வரப் பெருமாளே! இப்போது திருநீரகம் என்ற திருத்தலத்தில் மட்டுமா நீ இருக்கிறாய். வேதங்களுக்கு வேராக விளங்கும் நீ அன்றொருநாள் உன் அழகிய ஆலிலைத் துயிலும் தோற்றத்தை எப்படித்தான் மார்க்கண்டேய மகரிஷி காட்டினாயே. அது எப்படி?’’ என்று கேட்பது போல் அமைந்த பாடல்.
ஆலத்து இலை சேர்ந்து ஆழி உலகை
உட்புகுந்த காலத்தில் எவ்வகை நீ காட்டினாய்? -ஞாலத்துள்
நீரகத்தாய் நின் அடியேன் நெஞ்சகத்தாய்.! நீண்
மறையின் வேரத்தாய்! வேதியர்க்கு மீண்டு.
அந்தாதிக் கவிஞர் ஆர்.வி. ஸ்வாமி அவர்கள், திவ்யதேச மணி மாலையில், இத்தலத்து எம்பெருமானை 13 பாடல்களால் பாடி இருக்கின்றார். ஒரு குறிப்பிட்ட திவ்ய தேசத்தைப் பாடுகின்ற போது, பெருமான் மற்ற திவ்ய தேசத்தையும் தன்னுள்ளே காட்டுவான். அப்படி திருமங்கையாழ்வாருக்கும் காட்டியிருக்கிறான். அதைப்போல இந்தக் கவிஞருக்கும் திருநீரகத்து ஜெகதீஸ்வரன் பெருமாளைப் பார்க்கின்ற பொழுது பல்வேறு திருத்தல எம்பெருமான்கள் நினைவுக்கு வர பாடுகின்றார்.
நிலமங்கை நாதா! நிதியே! எங்கள் நீர கத்துள் எந்தாய்!
உலகுண்ட மாயா! உம்பர் கோனே! உரக மெல் லணையோய்!
குல விலக்காயா! கோகுல பாலா! குடமாடு கூத்தா!
நலம் அந்தம் இல்லா நாடுடை நாதா! நாரணனே அமுதா!