குரு என்றால் ஆன்மிகத்தில் இருட்டை நீக்குபவர். தெளிவை உண்டாக்குபவர் என்று பொருள். ஜோதிடத்தில் இந்த குணத்துக்கு உரியவராக குரு திகழ்கிறார். சூரியனிடமிருந்து ஒளி பெற்றாலும், சூரியனின் பார்வையை விட குருவின் பார்வைக்கு சிறப்பு அதிகம்.
செல்வத்துக்குக் காரகனான குரு இருக்கிறார். எங்கெல்லாம் அபரி மிதமான செல்வம் இருக்கிறதோ, அங்கெல்லாம் குருவின் ஆதிக்கம் இருக்கும்.
கால புருஷனுக்கு 9ம் அதிபதியான அவரே, மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி ஆகிறார். பாக்கியங்களை அனுபவிக்கச் செய்யும் அவரே மோட்சத்தைத் தரும் ஞானத்தையும் வழங்குகின்றார். 9:12 இணைப்புகள் இதைத்தான் காட்டுகின்றன. பெரும் செல்வத்திற்கு அதிபதியானவர்கள் ஒரு கட்டத்தில், தூக்கிப் போட்டுவிட்டு இறைவழிக்குச் சென்று விடுவார்கள். அதற்கு குருவோடு சனியும் கேதுவும் துணைபுரிய வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் பெரும்பாலான கிரகப் பார்வையால் தோஷங்களைத்தான் செய்யும்.
குருவைத் தவிர, எந்தக் கிரகங்களுக்கும் தோஷ நிவர்த்தி செய்யும் ஆற்றல் இல்லை. எனவேதான் ஜாதக தோஷத்தைச் சொல்லும் பொழுது, குருவின் பார்வை இருந்தால், தோஷ நிவர்த்தியைக் காட்டுவதாகவும், குறைந்தபட்சம் பரிகாரத்திற்குக் கட்டுப்பட்ட தோஷமாகவும் சொல்லுவார்கள். இந்தச் சக்தி வேறு கிரகங்களுக்கு கிடையாது.
தோஷ அளவைக் குறைப்பதும், பரிகாரம் பலிக்குமா என்று பார்ப்பதும் குருவின் பார்வை அளவையும் விசேஷத்தையும் பொருத்தது.
வளர்பிறை சந்திரன், பாவிகள் சம்பந்தமில்லாத புதன், சுக்கிரன் போன்றோர் பார்வையோடு கலந்த குருவின் பார்வைக்கு வீரியம் அதிகம். சனியின் பார்வை, ராகு கேதுக்களின் ஆதிக்கம், அஸ்தங்க தோஷம், பகை, நீசம் போன்ற பலவீனங்கள் இருக்கும் பொழுது, பார்வையின் சுபத்தன்மை குறையும்.
ஆனால் ஒன்று, குருவின் பார்வை பலனளிக்காமல் போகுமே தவிர, தீமையைச் செய்து விடாது. மற்ற கிரகங்களுக்கும் குருவின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் இது. எனவேதான், ஜோதிட சாஸ்திரத்தில் அவரை பூரண சுபராகச் சொல்கிறார்கள். அவர் பார்வை என்பது வீடோ (VETO) பவர் போல.
பல நேரங்களில் எத்தனைப் பெரிய தோஷங்களைக் கூட, மரண தண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளிக்கு ஜனாதிபதி கையெழுத்துப் போட்டு விடுதலை தருவதுபோல அவருடைய பார்வை அகற்றிவிடும். இது வேறு கிரகங்களுக்கு கிடையாது.
செவ்வாய், சனி, சூரியன் இணைந்து ஒரு விபத்தைத் தர முயலலாம். ஆனால், அந்தச் சம்பவம் நடக்கும் புள்ளியை டிகிரி அளவில் குரு கூர்மையாகப் பார்த்துவிட்டால் அந்தச் சம்பவம் நடைபெறாது. குரு பார்வையைக் கணக்கிடுவதில்தான் பலருக்கும் குழப்பம் இருக்கும். குரு வக்ரமாகி, ஸ்தானபலம் கெட்டு, ராகு கேதுக்கள் அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது குருவால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும்.
குருவின் பார்வைபலத்தை அறியாமல், குரு பார்வை இருந்தும் பலன் அளிக்கவில்லையே என்று சொல்லிவிடக் கூடாது. ஏன் பலன் அளிக்கவில்லை என்று சிந்தித்துப் பார்த்தால் விடை தெரியும்.
இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரண ஜாதகத்தையும் நடந்த நிகழ்ச்சியையும் சொல்லுகின்றேன். மீன லக்ன ஜாதகம். மீனத்தில் குரு ஆட்சி. நான்கில் செவ்வாய். ஐந்தில் சூரியன் புதன், ஆறில் கேது சுக்கிரன், ஏழில் சனி, பத்தில் சந்திரன், பன்னிரண்டில் ராகு.
கடந்த 2021 கொரோனாவில் இரண்டாவது தாக்கம் நடைபெற்ற மே மாதம் பதினொன்றாம் தேதி. இந்த ஜாதகரை கொரோனா தாக்கியது. மிகத் தீவிரமாகத் தாக்கியது. ஆஸ்பத்திரி வசதியோ ஆம்புலன்ஸ் வசதியோ போதுமான அளவுக்கு இல்லாமல் மிகவும் மக்கள் துன்பப்பட்ட நேரம் அது.
அதிர்ஷ்டமோ, ஆள் பலமோ இருந்தால் மட்டுமே அட்மிஷன் கிடைக்கும். பலர் வெளியிலேயே ஆம்புலன்சில் காத்திருந்தனர். கடுமையான. ஊரடங்கு நேரம். வாகன வசதிகளும் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் தான் ஜாதகரை கொரோனா தாக்கியது. அட்மிஷன் போடுகிறேன் என்று சொன்ன மருத்துவமனை, “நிரம்பி விட்டது, வேறு மருத்துவமனை பாருங்கள்” என்று கைவிட்டு விட்டார்கள்.
ஆக்சிஜன் லெவல் குறைந்து கொண்டே வந்தது. அடுத்த ஓரிரு மணி நேரத்திற்குள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் சேர்த்தே ஆகவேண்டும்.
அப்பொழுது ஜாதகருக்கு குரு தசை செவ்வாய் புத்தி கேது அந்தரம் நடந்து கொண்டிருந்தது. ஜென்ம ஜாதகத்தில் மீனத்தில், லக்ன கேந்திரத்தில் குரு ஆட்சி பெற்று ரேவதி சாரம் அதாவது புதனுடைய சாரத்தைப் பெற்று அந்த புதன் லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருந்தார்.
பொதுவாக ஆட்சி பலம் பெற்ற குரு ஜாதகத்தின் மிக முக்கிய உயிர் நிலைகளான திரிகோணங்களைப் பார்வையிடுவார். மூன்று திரிகோணங்களும் பலம் பெற்று விட்டால், ஆயுளுக்கு கண்டங்கள் ஏற்பட்டாலும், பிழைத்து விடும் வாய்ப்பு அதிகம்.
அந்த அமைப்பு இந்த ஜாதகத்தில் இருந்ததால், எப்படியோ போராடி அந்த இரவில் ஒரு மருத்துவமனையில் இடம் கிடைத்தது. மூன்று நாட்கள் கடுமையான போராட்டத்திற்குப் பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். 10 நாளில் குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆறாம் பாவம் நோய். எட்டாம் பாவம் நோயின் தீவிரம். பன்னிரண்டாம் பாவம் மருத்துவமனையில் சேர்தல்.
ஏழாம் பாவம் பலம் பெற்றுவிட்டால், அது எட்டாம் பாவத்திற்கு 12 ஆம் பாவமாக அமைவதால், நோயின் தீவிரம் சிகிச்சையால் குறையும். இங்கே ஏழாம் பாவத்தில் ஆயுள் காரகன் சனி இருக்கிறார். அவரை குரு பார்க்கிறார். ஏழாம் பாவம் குரு பார்வையால் வலிமை பெறுவதால், எட்டாம் பாவத்தின் ஆதிக்கம் குறைந்து நோயின் தீவிரத் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்ல ஏழாம் இடத்து அதிபதி புதன், லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருப்பதையும், புதனுக்கு குருவின் ஐந்தாம் பார்வை கிடைப்பதையும் கணக்கில் கொண்டால் குருவின் பார்வை எத்தகைய இக்கட்டில் இருந்து ஒரு ஜாதகரைக் காப்பாற்றியது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
குரு தசை செவ்வாய் புத்தி நடந்தது. தசாபுத்தி நாதர்கள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருக்கிறார்கள். செவ்வாய் புனர்பூச நட்சத்திரத்தில் குருவின் சாரத்தில் இருக்கிறார். எனவே தசா புக்தியும் சாதகமாக இருக்கிறது.
மூன்றாவதாக கோச்சார குரு, அன்றைய தினம் கும்பத்தில் இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்கு நகர்கிறார். இடையில் அவருக்கு தடை இல்லை. அவர் ஜென்ம குருவை அடையப்போகிறார்.
கோச்சார குரு அப்பொழுது லக்கினத்திற்கு 12-ஆம் இடத்திலிருந்து (கும்பம்)ஆறாம் இடத்தைப் பார்ப்பதால், நோய் ஸ்தானமான ஆறாம் இடமும் கட்டுப்படுத்தப்படுகிறது. பன்னிரண்டாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்தையும் பார்ப்பதால் 8ன் கெடு பலன்களும் குறைகிறது. அவர் லக்னாதிபதி அல்லவா. ஆகையினால் சுபப் பார்வை அதிகம்.
இத்தனையும் நடந்து, ஒரு ஆபத்தான கட்டம், கொஞ்சம் சிரமம் தந்துவிட்டு அமைதியாகிவிட்டது. ஜாதகர் பிழைத்தார். ஜாதகருக்கு 75 வயதாகிறது.
இன்றைக்கும் ஆரோக்கியமாக இருக்கிறார். குருவின் பார்வை விசேஷத்தை இந்த அமைப்பினால் தெரிந்து கொள்ளலாம்.