Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜ யோகம் அருளும் மகான்

மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்-9

மத்வ மஹான், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரிடம் இருந்து சந்நியாசம் பெற்றவர்தான், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் (காலம் - 1402-1440). மத்வரிடத்தில் இருந்து கணக்கெடுத்தோமேயானால், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், ஏழாவது மத்வ பீடாதிபதியாவார். மேலும், இவரிடத்தில் இருந்தே ``வியாசராஜ மடம்’’ என்கின்ற புதிய மடம் தனியாக உருவானது. சென்ற தொகுப்பில், ஸ்ரீ வித்யாதிராஜா தீர்த்தரை பற்றியும், அவர் முதலில் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தருக்கு பட்டம் கொடுத்ததையும், பின்னர் ஸ்ரீ கவிந்திர தீர்த்தருக்கு பட்டம் கொடுத்ததை பற்றியெல்லாம் பார்த்தோம்.

சம காலத்து சந்நியாசிகள்

ஆக, ஸ்ரீ வித்யாதிராஜா தீர்த்தருக்கு இரண்டு சிஷ்யர்கள். ஒருவர் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் மற்றொருவர் ஸ்ரீ கவிந்திர தீர்த்தர். இவ்விருவரும் சமகாலத்தவர்கள். நாம் சென்ற தொகுப்பில் கூறியதை போல, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர் ஆரம்பத்தில் ஸ்ரீ ராஜேந்திரருக்கு பட்டத்தை வழங்கி, ஆசிரமத்தைக் கொடுத்தார். மத்வர் வழிபட்ட மூல கோபாலகிருஷ்ண விக்ரஹங்கள் மற்றும் இதர சில சாளக்கிராமத்தையும் கொடுத்து, துவைத தத்துவத்தைப் பரப்புவதற்காக வட இந்தியாவுக்கு அனுப்பினார். ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர் நோய்வாய்ப்பட்டு இருக்கவே, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரால் மடத்தை கவனிக்க முடியாமல் போனது.

மேலும், வட இந்தியாவுக்கு சென்ற ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தராலும் மடத்தை கவனிக்க முடியாத சூழல். ஆகையால், உடனடியாக தனது இன்னொரு சீடரான ஸ்ரீ கவீந்திர தீர்த்தருக்கு பட்டத்தை வழங்கி, ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை கொடுத்தார். அதோடு, மூலராமர், மூலசீதாதேவி, திக்விஜய ராமர் போன்ற அனைத்து சமஸ்தான பிரதிமைகளையும் ஒப்படைத்தார்.

ஜெய தீர்த்தருடன் நேரடி தொடர்பு

ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரின் பூர்வாஷ்ரமத்தைப் (சந்நியாசத்திற்கு முன்) பற்றிய அவரது தனிப்பட்ட விவரங்கள் அதிகம் தெரியவில்லை. மேலும், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், மஹான் ஸ்ரீ ஜெய தீர்த்தருடன் நேரடி தொடர்புடையவர் என்றும் நம்பப்படுகிறது. இந்தியா முழுவதும், மத்வரின் ஆன்மிக சுற்றுப் பயணங்களுக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒரிசாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள பகுதியில் துவைத சித்தாந்தத்தை பரப்பியவர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர் என்பது கூடுதல் தகவல்.

பன்னஞ்சே விமர்சித்த நூல்

அதன் பின், வட இந்தியா (காசி முதலியன) உட்பட தனது அழியாத முத்திரையை பதித்த அடுத்த குறிப்பிடத்தக்க மஹான் யார் என்று சொன்னால், அவர்தான் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர். அதே போல், இந்த இடங்களுக்கெல்லாம் ராஜேந்திர தீர்த்தரின் அடுத்த பீடாதிபதியான ஸ்ரீ ஜெயத்வாஜ தீர்த்தரும், தன் குருவைப் போலவே திக்விஜயம் மேற்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், வங்காளத்தில் நீண்ட காலமாக வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரத்தை, ஸ்ரீ விஷ்ணுதாஸாச்சார்யா என்பவர் தனது ``வட ரத்னாவளி’’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். (பல ஆண்டுகளுக்கு முன்பே அச்சிடப்பட்டது, பிரபல துவைத அறிஞர், பன்னஞ்சே கோவிந்தாச்சார்யாவால் விமர்சிக்கப்பட்டது. இன்றும் இந்த நூல் கிடைக்கின்றன) ஸ்ரீ விஷ்ணுதாஸாச்சாரியாரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. இருப்பினும், கிடைக்கக்கூடிய ஆய்வின்படி, ``விவரண விதம்பனம்’’ மற்றும் ``கந்தன - கந்தனா’’ ஆகிய இரண்டு படைப்புகளை எழுதியதாகக் கூறப்படுகிறது.

புதிய இரண்டு மடங்கள் உதயம்

``அகண்டவேதமார்க்க ப்ரவர்தக’’, ``நிகிலதர்கிக சூடாமணி’’ மற்றும் ``சர்வதந்த்ர ஸ்வதந்திரம்’’ ஆகிய பட்டங்களை பெற்றிருக்கிறார், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர். மேலும், மிக முக்கிய தகவல்களாக, நாம் முன்மே கூறியதை போல், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தனது சீடர்களான ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ கவிந்த்ர தீர்த்தர் ஆகியோருக்கு பட்டங்களை வழங்கி பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.

ஒரு மடத்திற்கு ஏன் இரு பீடாதிபதிகள் என்று கருதிய ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர், ``வியாசராஜ மடம்’’ என்னும் புதியதோர் ஒரு மடத்தை நிர்ணயம் செய்து, ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஸ்ரீ கவிந்த்ர தீர்த்தருக்கு, `` ராகவேந்திர மடம்’’ என்னும் மடத்தை உருவாக்கி, அதனை கவனிக்க சொன்னார். இப்படித்தான் வியாசராஜ மடமும், ராகவேந்திர மடமும் உதயமானது.

ஒன்பது சீடர்களுக்கு சுதா மங்களம்

ஸ்ரீ கவிந்த்ர தீர்த்தரின் பரம்பரையில் வந்த ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரின் முக்கியமான சீடர் ஆவார். இதனை கீழே உள்ள ஸ்லோகம் உருதிப்படுத்துகிறது;

``விபுதேஎம்த்ரமுகன் சிஷ்யாதின் நவக்ருத்வாஹசுதம் சுதிஹ்யோ-பதாயத் ச ராஜேமத்ராதீர்தோ பூயதாபிஷ்ததா’’தனது பிரதான சீடரான ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர் உட்பட சுமார் 9 சீடர்களுக்கு, ``ஸ்ரீ சுதாவை’’ கற்பித்த பெருமை, ஸ்ரீ ராஜேந்திரதீர்த்தருக்கு மட்டுமே சேரும்.

(ஸ்ரீ சுதா என்பது துவைத தத்துவத்தின் மிக உயரிய சாஸ்திரகல்வியாகும்) இதன் மூலம், மகான் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரின் புலமையை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அத்தகைய பெரும் புலமைமிக்கவர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர். ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தருக்கு பின் ஆசிரம சீடர், ஸ்ரீ ஜெயத்வாஜ தீர்த்தர் ஆவார். ராஜேந்திர தீர்த்தரின் ஆராதனை, வைஷாக சுத்த பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.

இவரின் மூலபிருந்தாவனம், கர்நாடக - தெலுங்கானா எல்லைப் பகுதியான கலபுர்கி மாவட்டத்தில் இருந்து சுமார் 63 கி.மீ., தூரம் பயணித்தால், யெர்கோல் என்னும் பகுதியை அடைந்துவிடலாம். இங்குதான் மஹான் ஸ்ரீராஜேந்திர தீர்த்தரின் பிருந்தாவனம் உள்ளது.

ரா.ரெங்கராஜன்