குலாங்கநா, குலாந்தஸ்தா சென்ற இதழின் தொடர்ச்சி…..
நாம் அம்பிகையின் குழந்தை என்பது பரம ரகசியம். அதுவே பரம ரகசியம். அந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உள்ளே போகும்போது அவள் என்ன செய்கிறாளெனில், பராபர ரகசியத்தை காண்பித்துக் கொடுக்கிறாள். நீ வேற… நான் வேற இல்லைப்பா. நீதான் நான் நான் தான் நீ… தத்வ மஸி… அஹம் பிரம்மாஸ்மி… என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அம்மா… காண்பித்துக் கொடுத்துவிட்டாள் எனில் முடிந்துவிட்டது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சந்நதியில் ஒரு வார்த்தை எழுதியிருப்பார்கள். தாயே நீயே துணை. இந்த வார்த்தையை நாம் துவைதமாக பார்ப்போம். அம்மா நீதான் எனக்கு துணை. இரண்டாவதாக பார்க்கும்போது அவளைத் தவிர வேறு இல்லை என்று தெரிந்து விடும். அப்போது விசிஷ்டாத்வைதமாகும். அதற்கு அடுத்து அவள் என்ன செய்வாளெனில், நீ வேற.. நான் வேற இல்லை என்று ஆகும்போது அங்கு அத்வைதமாகும்.
தாயே நீயே துணை என்பதை படித்துப் பார்த்தால் அதனுடைய அர்த்தமே வேற மாதிரி தெரியும். தாய் நமக்கு துணை. இதை எல்லோரும் அறிவோம். ஆனால், இங்கு ரகசியம் என்ன இருக்கிறது தெரியுமா? தாயே என்பது தத் பதம். நீயே த்வம் பதம். துணை என்பது அஸி பதம். தாயே நீயே துணை என்றால் தத்வமஸி என்று அர்த்தம். சாட்சாத் மகா வாக்கியம். அதனால்தான் ராமகிருஷ்ணர் பரமஹம்ஸரிடம் ஒரு டாக்டர் இருந்தார்.
அவர் ம விடம் (மகேந்திரநாத் குப்தா என்பவர் தன்னை ம என்றே அழைத்துக் கொள்வார்), ‘‘ஏன் அடிக்கடி குருதேவர் அம்மா… அம்மா… என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏன் மிகவும் எமோஷனல் ஆகிறார்’’ என்று கேட்கிறார். அப்போது ‘ம’ அந்த டாக்டரிடம், ‘‘எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது. எனக்கு குருதேவர் என்ன சொல்கிறாரோ அதுதான்’’ என்பார். மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து குருதேவரை சந்திக்கச் செல்லும்போது அந்த டாக்டர் ஒரு நிலைக்குச் சென்று விடுவார்.
அப்போது, ‘ம’ அந்த டாக்டரைப் பார்த்து, ‘‘இந்த ஞானநிலையை நமக்கு கொடுக்க முடியுமெனில் அந்த எமோஷனலை நாம் ஏன் விலக்க வேண்டும். அது நமக்கு தேவைதானே. அந்த எமோஷனலை நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாமே. அந்த எமோஷனலே நமக்கு இவ்வளவு பெரிய ஞானத்தை கொடுக்கின்றதே. அம்மா… அம்மா… என்று சொல்லும்போது ஞானம் வருகின்றதே. This emotion needed for wisdom. இதை நாம் சாதாரண எமோஷனலாக நினைத்துக் கொள்ள முடியாது. இந்த எமோஷனல்தான் உணர்வு. இந்த எமோஷனல்தான் பக்தி.
இதற்கு எந்த வார்த்தையையும் சொல்லலாம். தாயே நீயே துணை என்பது பக்தி. ஆனால், அவள் நமக்கு தத்வமஸியாக நீ தான் அது… நீயே நான் என்று காண்பித்துக் கொடுப்பாள். நாம் எதை பக்தியாகச் சொல்கிறோமோ அதை நமக்கு அவள் ஞானமாக கொடுக்கிறாள். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அன்பு செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஞானமாக கொடுக்கிறாள். அவள் நம் மேல் அருள் செய்யச் செய்ய ஞானம் தன்னால் மலர்கின்றது.
நம்முடைய பக்தி என்கிற உணர்வும், நம்மீது அம்பாள் கொண்டிருக்கின்ற அருள் என்கிற உணர்வும், குழந்தை அம்பாள் மீது கொள்ளக் கூடிய மாத்ரு பாவம் என்கிற உணர்வும், அம்மா குழந்தை மேல் கொள்ளக் கூடிய வாத்சல்யம் என்கிற உணர்வும் சேரும்போது அங்கு தானாக ஞானம் சித்திக்கின்றது.
நாம் அவளுடைய குழந்தை என்பதை உணர்ந்து, அம்மாவை நெருங்கும்போது அங்கு எந்த ரகசியமும் இல்லை.
அங்கு எந்த ரகசியமும் இருக்க முடியாது. பராபர ரகசியத்தை காண்பித்துக் கொடுத்து விடுவாள். அந்த பராபர ரகசியம் எதுவெனில் அதுதான் நீ என்பதே ஆகும். அந்த மிக உயர்ந்த ரகசியத்தை அவள் நமக்கு காண்பித்துக் கொடுத்து விடுகிறாள். குப்தத்திற்குள் குப்தமாக இருக்கிறாள். அதனால் அவளுக்கு குலாங்கநா - குலாந்தஸ்தா என்கிற நாமம் வந்தது.அவள் மிகவும் நெருங்கி இருக்கிறாள். அவளை விட நம்மிடத்தில் யார் நெருக்கமாக இருக்க முடியும். ஏனெனில், அவளே நாமாக இருப்பதால், ஆத்ம சொரூபிணியாக இருப்பதால் அவளே நெருக்கமாக இருக்கிறாள்.
அதனால் ஒரு கோயிலில் சமீபவல்லி என்றே அம்பாளுக்கு பெயர். காரைக்குடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கிராமத்தில் இந்தக் கோயிலை பெரிச்சிக்கோயில் என்றே சொல்கிறார்கள். பெரிய நாச்சியார் கோயில் என்பது வரலாற்றுப் பெயர். சிவனின் திருநாமம் சுகந்தவனேஸ்வரர். சம்மந்தரால் பாடல் பெற்ற தலம்.இந்தக் கோயிலில் இன்னொரு விசேஷம் என்னவெனில், நவபாஷாண பைரவர் இருக்கிறார். அதாவது, பழனியில் முருகனை போகர் செய்வதற்கு முன்பு காசியிலிருப்பது போன்றே ஒரு நவபாஷாண பைரவரை செய்கிறார்.
ஆனால், அந்த நவபாஷாணம் சரியாக கட்டுப்படாததால் அந்த விக்ரகம் விஷமாக மாறிவிட்டது. சரியாக கட்டுப்பட்டால் மருந்து. கட்டுப்படாமலிருந்தால் அது விஷம். பழனியில் சரியாக கட்டுப்
பட்டது. ஆனால், இந்தக் கோயிலில் பைரவருக்கு அபிஷேகம் செய்யக்கூடிய எதுவும் விஷமாக மாறிவிடும். அதனால் அபிஷேகம் செய்யும் பாலோ மற்ற எதையுமே பக்தர்கள் சாப்பிடக் கூடாது. அப்படியே நிர்மால்யமாகிவிடும். அப்படிப்பட்ட நவபாஷாணத்தை போகர் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
அம்பாளின் திருநாமம் சமீபவல்லி.
நமக்குள் இருக்கும் குண்டலினியாக இருப்பவளே சமீபவல்லி. அவள் செயல்பட ஆரம்பித்துவிட்டால் எனில் நமக்குள் இருக்கும் ஜென்ம ஜென்மாந்திர கர்ம வாசனைகளை எல்லாம் மாற்றி, விஷத் தன்மையை மாற்றி அம்ருதத்தை பொழிகிறாள். பைரவர் மூலமாக இதைச் செய்கிறாள். அப்படி மாற்றும்போது இங்கு இருக்கும் சுகந்தவனேஸ்வரரிடமிருந்து சதா சுகந்தமான அம்ருதம் பெருகுகிறது. ஆத்மாவை அறிந்துகொண்டால் சதா சுகந்தம்தான். நாம் இப்போது பேசக் கூடிய நாமத்திற்கு இந்தக் கோயிலே வெளிப்படையான ஒரு அர்த்தமாக இருக்கிறது.(சுழலும்...)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா


