குலாங்கநா - குலாந்தஸ்தா
இதற்கு முந்தைய நாமங்களான குலாம் ருதைக ரஸிகா, குலஸங்கேத பாலிநீ என்பதன் மூலமாக குலம் என்றால் என்ன என்பதை குறித்துப் பார்த்தோம். ஒரு நாமத்தை கேட்கும் முன்போ அல்லது கேட்பதற்கு பின்போ ஒருமுறை சென்ற நாமங்களின் விளக்கங்களை கேட்பது இன்னும் அதிகமான புரிதலை தரும்.
குலாங்கநா என்கிற நாமத்தை பிரித்துப் பார்த்தால் குலா - அங்கநா என்று பிரியும். அங்கநா என்றால் பெண். குலம் என்றால் நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த எல்லா விஷயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஞான மார்க்கமாக பார்த்தால் குலம் என்றால் திரிபுடி இல்லாத ஒன்றான வஸ்துவிற்கு குலம் என்று பார்த்தோம். அதாவது பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற மூன்றும் மூன்றல்ல ஒன்றே என்பதுதான் இங்கு விஷயம். யோக மார்க்கத்தில் பார்த்தால் மூலாதாரத்தில் தொடங்கி, சஹஸ்ராரம் வரைக்கும் போகக் கூடிய இந்த சுஷும்னா நாடி போகக் கூடிய அந்தப் பாதைக்கு குலம் என்று பார்த்தோம். அதற்கும் அடுத்து இந்த ஆதாரங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த சரீரம் இருப்பதால்தான் இந்த சக்கரங்களெல்லாம் இருப்பது தெரிகிறது. அப்படி இந்த சக்கரங்களுக்கெல்லாம் ஆதாரமாக இந்த சரீரம் இருப்பதால், இந்த சரீரத்திற்கு குலம் என்று பெயர்.
இப்போது இந்த நாமத்தை எடுத்துக் கொள்வோம். குல - அங்கநா என்று வருகிறது.
இந்தக் குலம் என்பதற்கு இன்னொரு பொருளையும் பார்ப்போம். மக்கள் எங்கு சேர்ந்து வசிக்கிறார்களோ, அதற்கு குழு அல்லது குலம் என்று பொருள். இன்னும் கேட்டால் ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால்கூட அது ஒரு குலம் ஆகும்.
அங்கநா என்றால் பெண் என்று பொருள். குலாங்கநா என்றால் குடும்பப் பெண் அல்லது குல ஸ்த்ரீ என்றும் பொருள். The mother of the house. ஒரு வீட்டினுடைய அல்லது ஒரு குடும்பத்தினுடைய மையமாக இருக்கக் கூடிய தாய்க்கு , அம்மாவிற்கு குலாங்கநா என்று பெயர்.
இப்போது அம்பிகைக்கு ஏன் அந்த நாமா வருகின்றது என்று பார்க்க வேண்டும்?
யோக மார்க்கத்தில் இந்த சரீரத்திற்கு குலம் என்று பெயர். மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரைக்கும் இருக்கக் கூடிய சக்கரங்களுக்கு குலம் என்று பெயர். இந்த குலத்திற்கு உள்ளே ரகசியமாக குண்டலிணியாக இருக்கக் கூடிய அம்பாள் இருக்கிறாள். அதனால் அவளுக்கு குலாங்கணா என்று பெயர். இதற்கு அடுத்து ஞான மார்க்கமாகப் பார்த்தால், திரிபுடி. ஞானம் - ஞேயம் - ஞாத்ரு. ஞானம் என்றால் அறிவு. ஞாத்ரு என்றால் அறியக் கூடியவன். இந்த இரண்டுக்கும் நடுவில் ஞேயம் என்று இருக்கிறதல்லவா? அறியப்படும் பொருள். இந்த அறியப்படும் பொருளாக அம்பிகை இருக்கிறாள். அறிவுக்கும் அறிபவனுக்கும் மிகமிக ரகசியமாக இருப்பதால், அவளை குலாங்கநா என்கிறோம். இந்த குலத்திற்குள் தன்னை மறைத்துக் கொண்டிருப்பதால் குலாங்கநா என்று சொல்கிறோம்.
ஒரு வீட்டைப் பொறுத்தளவில் அங்கிருக்கும் தாயார் மூலமாகத்தான் எல்லா விஷயங்களும் நடந்திருக்கும். ஆனால், இது வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு இது தெரியாது. எப்படி இந்த வீட்டில் எல்லா விஷயங்களும் அழகாக நடக்கிறது என்று தோன்றும். அப்படி நடப்பதற்கு காரணம் அந்த வீட்டினுடைய தாயாரே ஆகும்.
தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாலும், அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவள் இருக்கிறாளோ அதுமாதிரி, எல்லாவற்றிற்கும் சக்தி சொரூபமாக குண்டலிணீயாக ஆதாரமான சக்தியாக அவள்தான் இருக்கிறாள். அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அவள் குலாங்கநா.
ஞான மார்க்கமாக… யோக மார்க்கமாக… தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் உலகியல் ரீதியாக பார்த்தாலும் கூட, தாயானவள் எப்படி குலாங்கநாவாக இருக்கிறாளோ… அதுபோல ஜகன்மாதாவும் குலாங்கநாவாக இருக்கிறாள்.
அடுத்த நாமத்தை இப்போது பார்ப்போம். குலாந்தஸ்தா என்று வருகிறது.
குலாங்கநா என்றால் அந்த குலத்திற்கு வீட்டிற்கு தாயாக இருக்கிறாள் என்று பார்த்தோம். யோக, ஞான பூர்வமாகவும் பார்த்து விட்டோம். ஆனாலும், வாக் தேவதைகள் குலாந்தஸ்தா என்கிற இன்னொரு நாமத்தை சேர்க்கிறார்கள்.
இப்படி மேலே சொன்ன எல்லாவற்றையும் நாம் சொன்னாலும், இந்த வார்த்தைக்கு எத்தனை விதமாக அர்த்தங்களை பார்த்தாலும் உனக்கு அர்த்தம் புரிந்துவிட்டது என்று நினைத்து விடாதே. அவள் இதைவிட இன்னும் ரகசியமானவளாக இருக்கிறாள். இதையெல்லாம் விளக்கிச் சொல்லி விட்டோம் என்பதால் விளக்கி விட்டோம் என்று அர்த்தம் கிடையாது. இதையெல்லாம் நாம் சொல்லிவிட்டதனால், அந்த சூட்சும ரூபத்தை விளக்கி விட்டோம் என்பது அர்த்தம் கிடையாது. நாம் என்ன விவரிக்கின்றோமே அதையும் தாண்டி அவள் ரகசியமாக இருப்பாள். அதனால்தான், த்ரிசதீயின் பூர்வ பாகத்தில் குஹ்யானாம் அதிகுஹ்யம் என்று வரும். ரகசியத்திற்கெல்லாம் அது ரகசியம். நாம் இதுதான் ரகசியம் என்று சொல்லி விட்டு நின்றால், அவள் அந்த ரகசியத்திற்கும் ரகசியமாக இருப்பாள்.
இப்படி இருப்பதால் அவள் அந்தஸ்தா… குலா அந்தஸ்தா. குலாந்தஸ்தா.
ஒரு வீடு, ஒரு குடும்பம் என்று இருந்தால் அந்த வீட்டிற்குள் சில உள்ளார்ந்த ரகசிய விஷயங்கள் இருக்கும். அது அந்த குடும்பத்திற்குள் மட்டும்தான் தெரியும். அதற்குப் பிறகு இன்னும் கொஞ்சம் நெருக்கமான வட்டத்தில் தெரியும். அதற்கு மீறி தெரியாது. இப்படி அலுவலகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலுமே பார்க்கலாம். ஒரு அரசாங்கத்தில் கூட உள்துறை அமைச்சகம் என்று வைத்திருக்கிறோம். அரசாங்கத்திற்கு சில ரகசியங்கள் இருக்கிறது. சில ரகசியங்களை மக்களிடம் கூட வெளிப்படுத்த முடியாது.
இப்படியெல்லாம் இருப்பது போல, இந்த குலத்திற்கு ரகசியமாக இருக்கிறாள்.
அது சரி, அப்படி என்ன ரகசியமாக இருக்கிறாள்?
இந்த குல மார்க்கத்திற்குள் அதாவது ஸ்ரீவித்யா. அதைத்தான் நாம் இங்கு குலம்… குலம்… என்று சொல்கிறோம். இங்கு குலம் என்றாலே ஸ்ரீவித்யாதான். அந்த ஸ்ரீவித்யாவில் இருக்கக் கூடிய மந்திரங்கள். மந்திர தேவதைகள். அந்த குலத்தை நமக்கு யார் காண்பித்துக் கொடுக்கிறாரெனில், குருநாதர்தான் காண்பித்துக் கொடுக்கிறார். குருநாதரால் காண்பித்துக் கொடுக்கப்பட்டு இந்த சிஷ்யன் அந்த குலத்தை தெரிந்து கொள்கிறான். அந்த குல மார்க்கத்தை தெரிந்து கொள்கிறான்.
எப்படி மதிப்பு வாய்ந்த பொருளை பெட்டிக்குள் பெட்டியாக ரகசியமாக வைத்திருப்போமோ அதுபோல…. ஸ்ரீவித்யா என்கிற குலமார்க்கத்திற்குள் ரகசியத்திற்குள் ரகசியத்திற்குள் ரகசியமாக பஞ்சதசாக்ஷரி மந்திரமாக அம்பாள் இருக்கிறாள். குருநாதர் எதை மந்திரமாக கொடுக்கிறாரோ அதுவாக இருக்கிறாள். அதை குருநாதர் மந்திரம் மூலமாக வெளிப்படுத்திக் கொடுக்கிறார். அது ஏகாக்ஷரி மந்திரமாக இருக்கலாம்., பாலா அல்லது பஞ்சதசாக்ஷரி, சோடசாக்ஷரி, மகா சோடசாக்ஷரி, திரயோத சாக்ஷரி, ராம மந்திரமாக அல்லது குருவினுடைய நாமமாகக் கூட இருக்கலாம்.
இது எதுவாக இருந்தாலும் இதனுடைய மூலம்தான் அதன் ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அதனால்தான் தந்த்ர சாஸ்திரத்தில் ஸ்ரீ வித்யாவிற்கு குலமார்க்கம் என்று பெயர். இப்படி ரகசியத்திற்குள் ரகசியமாக இருப்பதால் குலாந்தஸ்தா என்று வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள். அந்தஸ்தா என்றால் ரகசியமாக இருப்பவள் என்று அர்த்தம். குலத்திற்குள் ரகசியமாக உள்ளே இருப்பவள்.
இப்போது மேலும் இந்த நாமங்களை குறித்த விஷயங்களை பார்ப்போம்.
இதற்கு முன்பு குலாங்கநா என்று பார்த்தோம். ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தேவதை இருக்கிறது. அந்த தேவதையை அவர்கள் பாரம்பரியமாக, பரம்பரையாக பூஜை செய்வார்கள். அந்த தேவதையானது அவர்களின் குலத்திற்கு தெய்வமாக இருக்கும். அந்த தேவதைக்கு நாம் என்ன பெயர் சொல்வோமெனில், குல தெய்வம் என்று சொல்வோம் அல்லவா?
குல தெய்வம் என்கிற விஷயத்தை அம்பாள் நமக்கு இந்த நாமா மூலமாக காண்பித்துக் கொடுக்கிறாள். குல தெய்வம் எவ்வளவு விசேஷம். குல தெய்வம் எவ்வளவு முக்கியம் எவ்வளவு விசேஷம் என்பதையே இந்த நாமம் நமக்கு உணர்த்துகிறது. இந்த குல தெய்வமே சக்தி சொரூபமாக, ரகசியமாக, குண்டலிணீயாக இருந்து அது அங்கு செயல்படும். அந்த குலதெய்வமாக செயல்படுவது யாரெனில் அம்பாள்தான். குல தெய்வம் எந்த சிவ, விஷ்ணு, விநாயக, முருக ரூபங்களில் இருக்கலாம். ஆனால், அந்த குல தெய்வமாக இருந்து செயல்படக் கூடிய சக்தி அவளே குலாங்கநா… குலாந்தஸ்தா. வெளிப்படையாக குலத்திற்கு ஒரு தேவதையாக இருக்கிறாள். நமக்குள் இந்த சரீரம் என்கிற குலத்திற்குள் குண்டலிணீயாக இருக்கிறாள். அவளே மொத்த பிரபஞ்சத்திற்கும் ரகசியமாக இருக்கிறாள்.
இன்னொரு முறை பார்ப்போம் வாருங்கள்.
1. வெளிப்படையாக ஒரு குலத்திற்கு தேவதையாக இருக்கிறாள்.
2. நமக்குள் சரீரம் என்கிற குலத்திற்குள் குண்டலிணீயாக இருக்கிறாள்.
3. சரீரம் என்கிற குலத்தில் குண்டலீணியாக யார் இருக்கிறாளோ அவள்தான் குலத்திற்கு தேவதையாக இருக்கிறாள்.
4. அவள்தான் மொத்த பிரபஞ்ச ரகசியத்திற்கும் ரகசியமாக இருக்கிறாள். அதனால், குலாங்கநாவாக… குலாந்தஸ்தாவாக இருக்கிறாள்.
5. ஞானமார்க்கத்தில் ஞேயம் என்று சொல்லக் கூடிய ரகசியமாக இருக்கிறாள்.
6. யோக மார்க்கத்தில் குண்டலிணீ என்று சொல்லக் கூடிய ரகசியமாக இருக்கிறாள்.
7. நம்முடைய சரீரத்திற்குள் இந்த ஆதார சக்கரங்களில் சுஷும்னா மார்க்கமாக ரகசியமாக இருக்கிறாள்.
8. மேலே சொன்ன எல்லாமுமே லலிதாம்பிகை என்கிற அம்பாள்தான்.
9. குலாங்கநா… குலாந்தஸ்தா… என்ற நாமத்திற்கு இதுவே பொருள்.
அது சரி. இப்போது நாம் இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளவே முடியாதா? இந்த ரகசியத்தை எப்போதுதான் தெரிந்து கொள்வது. மிக எளிமையான விஷயம் என்னவெனில், நாம் எப்போது அவளின் பிள்ளை… அவளுடைய குழந்தை என்பதை உணர்ந்து விட்டோமோ அப்போது அந்த ரகசியம் முழுவதும் நமக்குத் தெரிந்து விடும். Its not becoming her child. We have to realise that, we are nothing but her child. இங்கு குழந்தை ஆவதற்கு விஷயமே கிடையாது. ஜே.கே. சொல்லும் there is no becoming.
இந்த விஷயத்தை நாம் புரிந்து கொண்டோமானால், நாம் எப்போதுமே அவருடைய குழந்தை என்பதை புரிந்து கொண்டுவிட்டோமானால், அவள் என்ன செய்வாள் தெரியுமா? இப்போது பரம ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்லப் போகிறாள்.
நீ என் குழந்தைதான். அதற்கு அடுத்து என்ன தெரியுமா? நீயே நான் என்று சொல்லி விடுவாள்.
நாம் அவளின் குழந்தை என்று தெரிந்து கொள்வது பரம ரகசியம். அம்மா… நான் உன் குழந்தை என்பது வரையிலும் செல்ல முடியும். அதற்கு அடுத்து அவள் ஒரு படி மேலே செல்கிறாள். இதை அம்பாள்தான் செய்ய முடியும். ஒரு தாயிடம் குழந்தை வருகிறதெனில், அந்த தாயானவள் அதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டாள். உடனடியாக எப்படி வாரி தூக்கிக் கொள்வாளோ… அதுபோல…. அவள் நம்மை வாரி அணைத்துக் கொண்டு நீதான் நான் என்கிற பராபர ரகசியத்தை காண்பித்துக் கொடுத்து விடுவாள்.
(சுழலும்...)
