Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

யோகியருக்கெல்லாம் யோகியாக இருக்கும் அம்பிகை

கௌலிநீ - குல யோகிநீ

கௌலிநீ - குல யோகிநீ என்கிற இரண்டு நாமங்களை பார்க்கப் போகிறோம்.

இதற்கு முந்தைய நாமங்களில் குலம், குல மார்க்கத்தைப் பற்றி பார்த்தோம். அதற்கு ஞான மார்க்கமான, யோக மார்க்கமான, ஸ்ரீ வித்யாவில் குல மார்க்கம் என்றெல்லாம் பல்வேறு விளக்கங்களை பார்த்தோம்.

இந்த குலம் என்பதை இன்னும் ஆழமாகப் பார்ப்போமா! மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரையிலுமுள்ள பாதையைத்தான் குலம் என்று பார்த்தோம். அந்த ஆதாரங்களை தாங்கிக் கொண்டிருக்கக் கூடிய சரீரத்திற்கும் குலம் என்று பார்த்தோம். நமக்கு வெளிப்படையாக, வெளியே தெரியக்கூடிய விஷயத்தை ஸ்ரீவித்யா சம்பிரதாயம் குலம் என்று சொல்லும். அடுத்து உபாசனா மார்க்கமாக எதுவொன்று வெளிப்படையாக இருக்கிறதோ அதற்கு குல மார்க்கம் என்று பெயர்.

இப்போது அம்பிகையை பூஜை செய்கிறோம். ஸ்ரீ சக்ரமாகவோ மகா மேருவாகவோ அல்லது விக்ரக ரூபமாகவோ பூஜை செய்கிறோம். இது எல்லாமுமே வெளிப்படையாக பூஜை செய்வதற்கு குல மார்க்கம். குல பூஜை. குலாச்சாரம் என்று பெயர்.

இந்த ஆதாரங்களை ஏன் குலம் என்று சொல்கிறோம். இந்த ஆதார சக்கரங்களை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், இந்த ஆதார சக்கரம் இருக்கக்கூடிய சரீரத்தை நாம் பார்க்கிறோம். மேலும், இந்த ஆதார சக்கரங்கள் எங்கெங்கு இருக்கின்றது என்பதையும் சுட்டிக் காண்பிக்க முடிகின்றது. மூலாதாரம் என்பது முதுகுத் தண்டின் அடியில் உள்ளது. அதற்கு மேலே இருப்பது சுவாதிஷ்டானம். நாபியில் மணிப்பூரகம். ஹிருதய ஸ்தானத்தில் அநாகதம். தொண்டைப் பகுதியில் விசுக்தி. நெற்றியில் ஆக்ஞா சக்கரம். அதற்கும் மேல், சஹஸ்ராரம். இப்படி வெளிப்படையாக தெரியவதால் இந்த மார்க்கத்திற்கு குல மார்க்கம் என்று பெயர். இந்த யோகத்திற்கு குல யோகம் என்று பெயர்.

இப்படி வெளிப்படையாக குறிப்பிடுவதற்கு குலாசாரம் என்று பெயர்.

நமக்குள் இந்த சக்கரங்கள் எப்படி இருக்கிறதோ, அதேபோல் வெளியில் ஒரு ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு பூஜை செய்தால் அதற்கு குலாசாரம் என்று பெயர். நமக்கு இருப்பதுபோலவே அம்பிகைக்கும் சரீரம் இருக்கிறது என்று கருதி, அந்த விக்ரகத்திற்கும் பூஜை செய்கிறோம். அப்படி எதையெல்லாம் வெளிப்படையாக உபாசனை செய்கிறோமோ, அது குலமார்க்கம். அது குலாசாரம் என்று பெயர். இப்படி பூஜை செய்வதால் அறிந்து கொள்ள வேண்டிய பொருளை அறிந்து கொள்ள முடியுமா என்று நிச்சயம் அறிந்து கொள்ளலாம்.

ஏன் ஸ்ரீ வித்யா சம்பிரதாயம் நமக்கு இந்த மார்க்கத்தை அளிக்கின்றது?

ஏனெனில், நம்முடைய மனமே இயல்பாக பஹிர்முகமாக அதாவது வெளிப்புறமாகவேதான் ஓடுகின்றது. ஜென்ம ஜென்மாந்திர வாசனைகளால் இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறோம். அதை அந்தர்முகமாக திருப்ப வேண்டும். நான் யார் என்கிற விசாரம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சரியே. ஆனால், சாதாரணமாக தினப்படி வாழ்க்கையில் நம் மனம் சர்வ சாதாரணமாக வெளிப்புறமாகத்தானே ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி வெளிப்புறமாக ஓடிக் கொண்டிருக்கும் மனதை, உடனே அந்தர்முகமாக ஆகிவிடு என்றால் அதனால் முடியாது. அதனால் எடுத்துக் கொள்ள முடியாது. அதனால், வெளிப்புறமாகவே போகிற மார்க்கத்தை அதற்கு காண்பித்துக் கொடுத்து, அப்படியே வெளியில் அழைத்துக் கொண்டுபோய் பிறகு உள்ளே திருப்ப வேண்டும். இந்த மார்க்கமே குலமார்க்கம்.

இந்த குல மார்க்கத்திற்கு உரியவள். குல மார்க்கமாகவே இருப்பவள். குல மார்க்கத்தினால் அறிந்து கொள்ளப்படுபவள் யாரெனில், அவளே கௌலிநீ.

இந்த கௌலிநீ என்கிற நாமத்திற்கு இன்னொரு விசேஷம் இருக்கிறது. இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை வசின்யாதி வாக்தேவதைகள் எட்டு பேர்கள் இயற்றினார்கள். வசினி, காமேஷி, மோதினி, விமலா, அருணா, ஜைனி, சர்வேஸ்வரி, கௌலிநீ என்கிற எட்டு பேர் இயற்றினார்கள். இந்த எட்டு வாக் தேவதைகளில் கௌலிநீ என்கிற வாக் தேவதை இருக்கிறாள். ஒவ்வொருவருமே அம்பாளின் அம்சம்தான்.

இந்த கௌலிநீ என்கிற நாமமே அம்பிகையினுடையதுதான். அம்பிகையினுடைய நாமமேதான் அம்பாளினுடைய அம்சமாக இருக்கக் கூடிய கௌலிநீ என்கிற வாக்தேவதைக்கும் வந்திருக்கிறது.

நாம் இந்த உலகத்தில் எதையெல்லாம் பார்த்து வெளிப்புறமாக சுட்டிக் காண்பிக்கிறோமோ அந்த சுட்டிக் காண்பிக்கக்கூடிய ஒவ்வொரு நாமமும் அம்பாளின் நாமம்தான். நாம் பார்க்கக் கூடிய ஒவ்வொரு ரூபமும் அம்பிகையின் ரூபம்தான். அப்போது நாம் பார்க்கக் கூடிய நாமரூப பிரபஞ்சம் இருக்கிறதல்லவா? இந்த நாம ரூப பிரபஞ்சத்தை விலக்கிவிட்டு பார்க்க வேண்டுமென்பது வேதாந்தம்.

ஆனால், அந்த நாம ரூப பிரபஞ்சம் எப்போது விலகும்.

நாம் பெரிய உண்மையை தெரிந்து கொள்ளும்போது விலகும். எல்லா நாமாவாகவும், எல்லா ரூபமாகவும் அவளே இருக்கிறாள். மொத்த நாம ரூப பிரபஞ்சமும் அவளே என்று தெரிந்து கொள்ளும்போது இந்த நாம ரூப பிரபஞ்சம் விலகி விடும். ஏனெனில், இந்தத் திரையை போட்டிருக்கிறாளே அந்தத் திரையே அவள்தான். திரஸ்கரணி என்கிற திரையே அவள்தான். ஆஹா… நீதானே அந்த திரையாக இருக்கிறாய் என்று சொல்லும்போது அந்தத் திரை விலகி விடும். அப்போது திரையை விலக்கி உண்மையை காண்பிக்கிறாள். இந்த நாமம் நமக்கு ஒரு விஷயத்தை காண்பித்துக் கொடுக்கிறது.

இந்த குலம் என்கிற விஷயம் ஆரம்பித்ததிலிருந்து த்ரிபுடி… த்ரிபுடி… என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். அறிபவன், அறிவது, அறியப்படும் பொருள். மூன்றாக தெரிகிறது. ஆனால், இருப்பது ஒன்றுதான்.

இங்கு கௌலிநீ என்ன காண்பித்துக் கொடுக்கிறாள்?

குல மார்க்கத்திற்கு உரியவள். குல மார்க்கத்தால் அறியப்படுபவள். அறியக்கூடிய அந்த வழியே இங்கு குல மார்க்கம். இறுதியாக அறிந்து கொள்ளும்போதுதான் தெரிகிறது. அந்த குல மார்க்கமாகவே அவள் இருக்கிறாள். அதனால்தான் அவளுக்கு கௌலிநீ என்று பெயர். அறிவும், அறியப்படும் பொருளும் வேறில்லை என்று காண்பிப்பதே இந்த கௌலிநீ என்கிற நாமம். The path is not different from destination. அத்யாத்மமாகப் பார்த்தால் The path itself is destination.

அடுத்ததாக குலயோகிநீ என்கிற நாமம்.

இந்த குலாச்சாரத்தை, இந்த குல யோகத்தை, அந்த உபாசனையோடு இருக்கக் கூடியவனுக்கு குல யோகினி என்று பெயர். அந்த குலமார்க்கத்தை அனுசரிப்பதால் குல யோகினி என்று பெயர்.

யோகம் என்றால் சேர்த்தல் என்று அர்த்தம். இந்த உபாசகனுக்கு குல மார்க்கத்தை கொண்டு வந்து சேர்க்கிறான். அவள் இந்த உபாசனையையும், உபாசகனையும் சேர்த்து வைக்கிறாள்.

இப்படி உபாசனை செய்பவனுக்கு குல யோகி என்று பெயர். இன்னும் ஒருமுறை நினைவில் கொள்ள வேண்டிய விஷயமே, ஸ்ரீ வித்யா மார்க்கத்தில், ஞான, யோக, குல மார்க்கத்தில் செல்லும் சாதகன். அவனுக்கே குல யோகி என்று பெயர். இந்த அத்யாத்மமான சாதனையில் முன்னேறி முன்னேறி வரும்போது ஒரு கட்டத்தில் அவனுக்கு ஒரு விஷயம் புலப்படும். தன்னிடம் அம்பாள் இந்த விஷயத்தைக் கொடுத்து இந்த உபாசனையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால், இந்த உபாசகனுக்கு அறியப்படும் பொருளாக இருப்பவளே அறிவாகவும் இருக்கிறாள் என்பது தெரிந்து விடும்.

ஆனால், சாதக நிலையில் தான் இருப்பதாகவும், தனக்கு அம்பாள் ஒரு அறிவை கொடுத்திருக்கிறாள். அந்த அறிவு மூலமாக தன்னை காண்பித்துக் கொடுக்கிறாள். அப்படி காண்பித்துக் கொடுக்கக் கூடிய அறிவாகவும் அவள்தான் இருக்கிறாள் என்பது புரிகின்றது.

இறுதியாக அத்யாத்ம சாதனையில் ஒரு விஷயம் புரிகின்றது. எப்போது இந்த அறிவும், அறியப்படும் பொருளும் வேறில்லையோ அதுபோல அந்த அறிவை அறிபவனும் அதிலிருந்து வேறில்லை. இப்போதுதான் பூரணமான த்ரிபுடி ரஹிதமான (மூன்றாக தெரியும் பிரபஞ்சம் இல்லாமல் போவது) நிலையை அடைகின்றான். பயணப்படும் சாதகன், அடைய வேண்டிய இலக்கு, பயணம் செய்யும் பாதை மூன்றும் ஒன்றே. Destination, path, traveller… என்கிற மூன்றும் ஒன்றே. Traveller is also not different from the destination. மேலும், அறிபவனும் அறியப்படும் பொருளில் இருந்து வேறு இல்லை.

தன்னை தனி சாதகனாக ஒரு குல யோகி என்று நினைத்துக் கொண்டிருப்பான். அம்பாளே தானாக இருப்பதால் இந்த யோகத்தைச் செய்யும் யோகியாக அதாவது குலயோகிநீயாக அம்பாளே இருக்கிறாள். அந்தச் சாதகனாக அவளே இருக்கிறாள். இப்படிக் கிடைக்கும் அந்த தரிசனத்திற்கே குலயோகிநீ என்று பெயர்.

பொதுவாக சாதகர்களில் ஆண், பெண் இருக்கலாம். ஆனால், உள்ளே பார்த்தால் அவளே அந்த யோகத்தை செய்பவளாகவும் இருக்கிறாள். அவளே குல யோகிநீ. அவளே அங்கு இருந்து கொண்டு செய்கிறாள் என்பதை இவன் அறிகின்றான். இவனும் அவளாகவே இருக்கிறான் என்பதை அறியும் இடமே குல யோகிநீ ஆகும்.

இப்போது மீண்டும் பாருங்கள்.

ஒரு சாதகன் முதலில் சாத்தியம்தான் அம்பாள் என்று நினைத்தான். ஆனால், சாத்தியமும் சாதனையும் ஒன்று தெரிந்தது. சாத்தியமாக இருக்கக்கூடிய அம்பாள்தான் சாதனையாகவும் இருக்கிறாள் என்பது தெரிந்தது. இப்போது சாத்தியமாக இருக்கக் கூடிய அம்பாள் எப்படி சாதனையாக இருக்கிறாளோ… அதே அம்பாள்தான் சாதகனாகவும் இருக்கிறாள். அதனாலேயே அவளுக்கு குல யோகிநீ என்று பெயர்.

எத்தனை யோகிகள், எத்தனை ஞானிகள், எத்தனை சாதகர்கள், எத்தனை உபாசகர்கள் என்று பார்த்தாலும் அந்த ரூபங்களிலெல்லாம் நிறைந்திருப்பது அவள்தான். அவளே யோகிநீ. யோகிகளுக்கெல்லாம் அந்தர்யாமியாக இருப்பதால் குலயோகிநீ.

இதற்கு முந்தைய நாமா அறியப்படும் பொருள் அம்பாள் என்று தெரிகிறது. அறிவே அவளாகவும் இருக்கிறாள். இந்த உண்மை தெரியும்போது அவளுக்கு கௌலிநீ என்று பெயர்.

அறியப்படும் பொருளாக இருக்கும் அம்பாளே அறிவாகவும் இருக்கிறாள். அறிபவனாகவும் இருக்கிறாள். குல யோகிநீ என்கிற நாமம் குறிப்பிடும் நிலை இதுதான். அங்கு மூன்றே இல்லை. மூன்று இரண்டாக மாறி, அந்த இரண்டும் இப்போது ஒன்றாகியது. அந்த ஒன்றே குல யோகிநீ.

(சுழலும்...)