Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அம்மை நோய் நீக்கும் அம்மன்

வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணுகாதேவி அம்மன் வரலாறு. ஜவ்வாது மலைச்சாரலில் கமண்டல நதி ஓரம் தனது தவ வாழ்க்கையை ஜமதக்னி முனிவர் மேற்கொண்டிருந்தார். இவரது மனைவிதான் ஆதிசக்தியின் அம்சமான ரேணுகாதேவி. இவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் திருமாலின் அவதாரமான பரசுராமரும் ஒருவர்.

ரேணுகாதேவி தினமும் நதியில் நீராடி தனது கற்புத்திறத்தால் ஆற்று மணலில் குடம் செய்து கணவனின் பூஜைக்கு தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். வழக்கம்போல குடத்தை செய்து தண்ணீர் நிரப்பும் போது, வான்வழியே சென்ற கந்தர்வனின் அழகை பார்த்து வியந்தாள். இதனால் மனம் தடுமாறியது. குடமும் உடைந்தது. கணவனிடம், காட்டுவிலங்கு துரத்தியதால் குடம் சிதறியதாக பொய் கூறுகிறாள்.

முற்றும் உணர்ந்தவரான ஜமதக்னி உண்மையை அறிந்து ஆவேசமடைகிறார். தனது மகன்களிடம் தாயின் சிரத்தை கொய்து வர ஆணையிடுகிறார். அவர்களில் பரசுராமர் மட்டுமே, தந்தையின் உத்தரவை உடனே நிறைவேற்ற முனைகிறார். கையில் கோடரியுடன் அன்னை ரேணுகாதேவியை துரத்திச் செல்கிறார் பரசுராமர். மகனிடமிருந்து தப்பித்து ஓடும் ரேணுகாதேவி, ஓரிடத்தில் அருந்ததி இனப் பெண்ணொருத்தியைக் கட்டியணைத்து தன்னை காக்குமாறு வேண்டுகிறாள்.

அந்தப் பெண்ணும் பரசுராமனை தடுக்கிறாள். ஆவேசமடைந்த பரசுராமர் கோடரியை வீச, ரேணுகாதேவி மற்றும் அந்தப் பெண் இருவரின் சிரங்களும் தரையில் விழுகின்றன. தந்தையின் ஆணையை நிறைவேற்றியதாகக் கூறிய பரசுராமர், அவரிடம் ‘‘தன்னால் கொல்லப்பட்ட தாயும், அருந்ததி பெண்ணும் மீண்டும் உயிர்பெற வேண்டும்’’ என்று கேட்கிறார்.

தந்தையாரும் அவ்வாறே வரமருள்கிறார். ஆனால், பரசுராமர், தாயை உயிர்ப்பிக்கும் பாச அவசரத்தில் தலைகளை உடல் மாற்றிப் பொருத்திவிடுகிறார். அதனால் அவர் அன்னை, ரேணுகோதேவி, மாரியம்மனாக புது உருக்கொண்டு மக்களின் காவல் தெய்வமாக அருள்புரிகிறாள்.

ரேணுகாதேவி வெட்டுப்பட்ட இடமே, இப்போது வெட்டுவாணம் எனப்படுகிறது. ஜமதக்னி தவம்புரிந்த இடமாகப்படவேடு விளங்குகிறது. அங்கு ரேணுகாதேவியாகவும், வெட்டுவாணத்தில் எல்லையம்மனாகவும் அம்மன் அருள்புரிகிறாள். இத்தலம், பரசுராமர் உருவாக்கிய 108 துர்க்கை தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. அம்மைநோய் கண்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்வதை நாள்தோறும் இங்கு காணலாம். மேலும், குழந்தை வரம், திருமண வரம், வீடு கட்டுதல் போன்ற பல்வேறு வேண்டுதல்களுக்கு ஏற்ப இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தும் பக்தர்களும்அதிகம். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது வெட்டுவாணம்.

தொகுப்பு: ஜெயசெல்வி