Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருக்கினில் அமர்ந்த அம்மன்

காஞ்சிபுரத்தில், தெற்கு பட்டடை கிராமத்தில் கிராம தேவதையாக அமர்ந்துள்ள அன்னையின் திருப்பெயர் ‘அருள்மிகு காஞ்சி கருக்கினில் அமர்ந்த அம்மன்’. மகேசனிடம் சாகா வரம் பெற்ற மகிஷாசுரன், (முனிவர்களையும் பக்தர்களையும் பயமுறுத்தி அழிக்க நினைத்ததால், அவனை சம்ஹாரம் செய்ய அனைத்து சக்தி தெய்வங்களும் சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்ததாக வரலாறு.பனை மரத்தை ‘கருக்கு மரம்’ என்றும் அழைப்பர். அதேபோல், நள்ளிரவு நேரத்துக்கு ‘கருக்கு நேரம்’ என்று பெயர். பனைமரத்தின் கீழே நடு இரவில் தாமரைப் பீடத்தின் மீதமர்ந்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால் அம்பாளுக்குக் ‘கருக்கினில் அமர்ந்தவள்’ என்று பெயர். இந்தக் கோயிலின் தல விருட்சம் பனைமரம். தாமரைப் பீடத்தில் அமர்ந்தவண்ணம் சூரனை வதம் செய்வது போலவே மூல சந்நதியில் அம்மன் காட்சியளிக்கிறாள். இந்த மூலவர் கருவறை, 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது, கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் வாயிலாகப் புலனாகிறது.

திருக்கோயிலில் அமைந்துள்ள நவகிரகங்களில் ஒருவரான சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு!ஆடி மாதத்தில் ஆடிப் பூரம் விழா இங்கே விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு, அம்மன் வீதி உலா வருகிறாள். ஆடியில் ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவதுடன், ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து பம்பை, உடுக்கை, சிலம்பம் இசைத்து, பூஜைகள் நடத்தப்பெறும். இந்தக் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஜேஷ்டா தேவி அம்மனுக்கு கறுப்பு ஆடை சாற்றி, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும். இங்குள்ள புற்று நாகம்மனுக்குப் பால் வைத்து வழிபட, நாக தோஷம் நிவர்த்தியாகும். மேலும் திருமணத்தடை உள்ளோர், குழந்தை வரம் வேண்டுவோர், நாகதோஷம் உள்ளவர்கள் மற்றும் மனச் சஞ்சலம் கொண்டோர், இந்த அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்த எலுமிச்சைப் பழத்தை எடுத்துச் சென்று தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட, நினைத்தவை கைகூடும் என்பது ஐதீகம்.

ஜெயசெல்வி