உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். இது இயற்கை, தவிர்க்க முடியாதது. யாருக்கும் விதி விலக்கு கிடையாது. அப்படி இறந்தவர்கள் ‘பித்ரு லோகத்தில்’ வசிப்பதாக ஐதீகம். அமாவாசை நாட்களில் தர்ப்பணமும் அவர்கள் இறந்த மாதத்தில் வரும் திதி நாளில் சிரார்த்தம் செய்து எள்ளும் ஜலமுமாக மந்திரங்களைச் சொல்லி செய்தால் பித்ருக்கள் அதை ஏற்றுக் கொண்டு மனதார ஆசீர்வதிப்பார்களாம்.
பொதுவாக தர்ப்பணங்கள் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும், போதாயன அமாவாசை, சர்வ அமாவாசையின் போதும் சூரிய, சந்திர கிரகண காலங்களிலும் சில முக்கியமான ரிஷிகளின் திதிகள் வரும் போதும் செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் பலர் இவ்வாறெல்லாம் செய்வதில்லை என்றாலும். குறைந்த பட்சம் முக்கியமான தினங்களிலாவது செய்ய வேண்டாமா?
மஹாளய பட்ச தினங்களில் பித்ருக்கள் தம் மக்களைத் தேடி வருகிறார்களாம். அவர்கள் செய்யிம் தர்ப்பணங்களால் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்களாம். மஹாளய பட்சத்தில் வரும் எல்லா தினங்களிலும் தர்ப்பணங்கள் செய்பவர்களும் உண்டு. எல்லோருமே இந்த திதிகளுக்கும் அடங்கியவர்கள் தானே எல்லோருக்குமே தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
முன்னோர்கள் இறந்த குறிப்பிட்ட திதிகளில் செய்பவர்களும் உண்டுய பல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் செய்ய முடியாதவர்கள் மகா பரணி, மத்யாஷ்டமி போன்ற தினங்களில் செய்யலாம்! என்பார்கள்.
வைதீகர்களை வைத்து செய்பவர்களும் உண்டு. தர்ப்பண புத்தகங்களின் உதவியால் செய்பவர்களும் உண்டு. எதுவுமே செய்யாதவர்களும் உண்டு.
சரியாக கடைப்பிடிக்காதவர்களுக்கு, பித்ரு தோஷம், ‘பித்ரு சோபம்’ ஏற்படும்! என்றும் சொல்வார்கள் ஜோதிடர்கள் சிலரது ஜாதகங்களைக் கணித்து விட்டு மேற்கண்டபடி சொல்வதை பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.
மஹாளயபட்ச காலங்களில் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது, உறவினர்கள், தெரிந்தவர்கள், கால்நடை பிராணிகள் போன்றவைகளுக்கும் தர்ப்பணம் செய்யலாம்.
கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரை போன்ற நீர் நிலைகளில் செய்வதும் சில முக்கியமான. ஷேத்திரங்களில் தர்ப்பணங்கள் செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும்.