Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்மாழ்வார் தந்த வேதங்களின் சாரம்

“முன் உரைந்த திருவிருத்தம் நூறு பாட்டும்

முறையில் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும்

மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி

மறவாத படி எண்பத்தேழு பாட்டும்

பின் உரைத்ததோர் திருவாய்மொழி

எப்போதும் பிழை அற ஆயிரத்தொரு

நூற்றிரண்டு பாட்டும்

இந்நிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்

எழில் குருகை வரு மாறா இறங்கு நீயே”

என்று ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனால் ``பிரபந்தசாரத்தில்” கொண்டாடப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரை இவ்வையகத்திற்கு அளித்து வைகாசி விசாகம் கூடுதலான பேற்றைப் பெற்றிருக்கிறது. பிரபஞ்ச ஜன கூடஸ்தர் அதாவது பிரபஞ்ச கோஷ்டியிலேயே முதன்மையானவர் இந்த ஆழ்வாரே. “திருவிருத்தம்”, “திருவாசிரியம்”, “பெரிய திருவந்தாதி”, “திருவாய்மொழி”. இந்த நான்கு பிரபந்தங்களுமே நான்கு வேதங்களின் சாரமே.

திருவிருத்தம், ரிக் வேதத்தின் சாரம், திருவாசிரியம் யஜுர் வேதத்தின் சாரம், பெரிய திருவந்தாதி அதர்வண வேத சாரம், திருவாய்மொழி சாம வேத சாரம். சம்சார சுழலின் கொடுமையை, தம்முடைய திருவிருத்தத்தில் காட்டும் நம்மாழ்வார், திருமால் தன்னைத்தானே ஆழ்வாருக்குக்காட்டி கொடுக்க அந்த பகவத் அனுபவத்தை திருவாசிரியத்தின் ஏழு பாட்டுக்களின் வழி காட்டிக்கொடுத்தார், எம்பெருமானின் திருவடிகளை அனுபவிப்பதற்கு தனக்கு இருக்கக்கூடிய பேரவா, பெரிய ஆசையை “பெரிய திருவந்தாதி”யில் காண்பித்த ஆழ்வார், அந்த பிரபந்தத்தில் உள்ள எண்பத்தேழு பாசுரங்களில், இருபத்து மூன்று பாசுரங்களில், “நெஞ்சே”, “நெஞ்சமே”, “நல் நெஞ்சே”, என்றெல்லாம் தன் மனதை அழைத்து பாசுரங்களை அமைத்திருக்கிறார் நம்மாழ்வார்.

திருமாலின் திருவடியில் சரண் அடையுங்கள் என்று தானே தன் மனதை மட்டுமல்லாமல் அடியார்களாகிய நம் மனங்களையும் சேர்த்து அழைக்கிறார்?

வைகாசி விசாகத்திற்குஒப்பாக ஒரு திரு நாள் கிடையாது. நம்மாழ்வாருக்கு ஒப்பாக ஒரு ஆழ்வார் என்பவர் கிடையாது. இவ்வாழ்வார் பாடிய திருவாய்மொழிக்கு நிகரான இன்னொரு பிரபந்தம் என்பதும் கிடையாது. நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்கு நிகரான மற்றொரு ஊர் என்பது கிடையவே கிடையாது என்பதைத்தான் தம்முடைய “உபதேச ரத்தினமாலையில்” மணவாள மாமுனிகள்.

``உண்டோ வைகாசி விசாகத்துக்கொப்பொரு நாள்

உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் உண்டோ

திருவாய்மொழிக்கொப்பு தென் குருகைக்குண்டோ

ஒரு பார் தனில் ஒக்குமூர்’’

என்றே போற்றி மகிழ்கிறார். சடம் என்ற வாயுவை வென்ற சடகோபர் இந்த ஆழ்வாரே. ஆழ்வார் திருநகரியில் ஆதிசேஷன் அம்சமாக இருந்த புளியமரத்தின் (திருப்புளியாழ்வார்) கீழ் பத்மாசனத்தில் அமர்ந்து பெருமாளின் தியானத்திலேயே லயித்து, உலக இயல்புகளிலிருந்து மாறி இருந்ததால் தம் பெற்றோர்களால், “மாறன்” என்று அழைக்கப்பட்ட ஆழ்வார் இவரே. பகவான் கிருஷ்ணரிடம் நாம் எப்படி பக்தி செய்ய வேண்டும் என தானே வாழ்ந்து காட்டி, தம் பிரபந்த பாசுரங்களையே வழிகாட்டியாக்கி நமக்கு அளித்திருக்கும் இந்த ஆழ்வார் தான் உண்ணும் உணவிலும் பருகும் நீரிலும், தின்னும் வெற்றிலையிலும் பார்த்தது அந்த பார்த்தசாரதியான கிருஷ்ண பகவானையேதான்.

ஆதித்யனோடு அதாவது சூரியனோடு நம்மாழ்வாரை ஒப்பிட்டு மகிழ்வர் பெரியோர். ஆயிரம் கிரணங்கள் கொண்டு உலகில் உள்ள இருட்டைச்சூரியன் போக்குவதை போல தம்முடைய ஆயிரம் பாசுரங்களைக் கொண்டு உலகில் உள்ளவர்களின் உள்ளத்து இருட்டைப் போக்கியவர் நம்மாழ்வார். சூரியனுக்கு நடுவில் சங்கையும் சக்கரத்தையும் தன் திருக்கைகளில் ஏந்தியபடி நிற்கும் அதே திருமால்தான் நம்மாழ்வாரின் இருதயத்தின் நடுவிலும் அதே போல எழுந்தருளி இருக்கிறார். வேதம் சொல்லக் கூடிய அந்தணர்கள் தினம் சந்தியாவந்தனம் செய்யும்போது, சூரியன் இருக்கும் திக்கை நோக்கியே இருகரம் குவிப்பார்கள்.

தமிழ் வேதமான, பிரபந்த பாசுரங்களை சொல்பவர்கள் எல்லாம் ஒவ்வொரு பதிகம் நிறைவடையும்போதும், குருகூர் சடகோபன் என்று வரும்போதும், தென் திசை நோக்கி நம்மாழ்வாரை நினைத்தே வணங்குவார்கள். அதனாலேயே நம்மாழ்வாரை வகுள மாலை அணிந்த சூரியன் என்றே இன்றளவும் போற்றுகிறோம். திருமாலை நாம் அடைய, திரும்பத்திரும்ப பல பிறவிகள் எடுத்து நாம் திண்டாடாமல் இருக்க ஒரே வழி, திருமாலின் திருவடியில் சரண் புகுவதே என்று நமக்கெல்லாம் காட்டிக் கொடுத்த நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கொண்டே, இதோ இந்த வைகாசி விசாக நன்னாளில் திருமாலிடமும், திருமாலின் திருவடியைக் காட்டித் தந்தவரிடமும் சரண் புகுவோம்.

நளினி சம்பத்குமார்