Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒற்றுமை வாழ்வளிக்கும் ஒழுகைமங்கலம் மாரியம்மன்

ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி ‘சாக்தம்’ என்பதாகும். சக்தி வழிபாட்டில் உலகின் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக்கடவுளாக போற்றப்படுகிறாள். கிராம தேவதைகள் எனப்படும் காவல் தெய்வங்களை வழிபடுவது என்பது, கிராம மக்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் மரபுகளில் ஒன்று. இத்தகைய கிராம தேவதைகளில் பெரும்பாலான கிராமங்களில், அம்பாள் முதலிடத்தையும், அய்யனார் இரண்டாம் இடத்தையும் பிடித்திருப்பர். அம்பாள் ஆலயங்களைப் பொறுத்தவரை ஒரு சில ஊர்களைத் தவிர, பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் அல்லது காளியம்மன் என்ற பெயர்களைக் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கும். மாரியம்மன் அவதாரம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஒழுகை மங்கலம் கிராமத்தில் மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு ஸ்தலம் அருள்மிகு  சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலாகும். இங்குள்ள மாரியம்மன் சுயம்புவாக வெளிப்பட்டவள்.

சுயம்பு அம்மன்

புராண காலத்தில், இந்த இடம் அடர்ந்தகாடுகளாக இருந்தது. அந்த வனத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஒரு மாடு மேய்ப்பவர் தனது பசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நின்று, தினந்தோறும் தன் மடியில் பால் சுரந்து தானாகவே ஒழுகி பூமியில் விழுவதை கண்டார். அன்னைதான் அந்த இடத்தில் இருப்பதை இதன் மூலம் உணர்த்தினாள். தினந்தோறும் நடந்த இந்த நிகழ்வைக்கண்ட மாடு மேய்ப்பவர் ஆர்வமிகுதியால், அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது மாரியம்மன் சிலை வெளிப்பட்டது. அந்த இடதில் சுயம்புவாக வெளிப்பட்ட அம்மனை வைத்து வழிபட தொடங்கினர். பசுவின் பால் (ஒழுகை) சொரிந்து, சிலை வெளிப்பட்டதால், அந்த இடம் ஒழுகை மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு

இக்கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தலம். துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் சிங்கம் நுழைவாயில் வளைவுக்குப் பிறகு, கருவறையில் சுயம்புவாக அம்மன் காட்சி அளிக்கிறாள். அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளது. கோயில் வளாகத்தில் சீதளா பரமேஸ்வரி, விநாயகர், நாகர்கள் சந்நதிகள் உள்ளன. கோயிலின் எதிரில் கருப்பண்ணசுவாமி, காத்தவராயன், பேச்சி அம்மன் என தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றன. இதன் அருகிலேயே கோயில் தீர்த்தம் உள்ளது. அதன் கரையில் கிழக்கு நோக்கி விநாயகர் கோயில் உள்ளது. தல விருட்சமாக வேப்பமரம், கோயிலின் தென் மேற்கு மூலையில் உள்ளது.

பிரார்த்தனைகள்

பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், தம்பதிகளிடையே நல்லிணக்கம், செழிப்பு மற்றும் எதிர்கால சந்ததியினர் நலனுக்காகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். கோயில் குளத்தில் மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்து கரைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள் போன்றவையும், மனதில் உள்ள கவலைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமண வரம் வேண்டி கோயிலின் வேப்ப மரத்தில் மஞ்சள் நூல் கட்டி வழிப்பட்டால், விரைவில் திருமணம் கைகூடும். இங்கு தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்

களின் நம்பிக்கையாக உள்ளது.அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெருந்திரளாக பக்தர்கள் வருகைதந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தும், சிலர் பொங்கல் வைத்தும் வாழிபாடு செய்கிறார்கள். முடி காணிக்கை செலுத்துதல், மண்ணால் ஆன உடல் உறுப்பு பொம்மைகளை அம்மனுக்கு வேண்டுதலாக நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாக்கள்

சித்திரை தமிழ் புத்தாண்டு தினம், பங்குனி பெருந்திருவிழா, புரட்டாசி நவராத்திரி மற்றும் தைப் பொங்கல் ஆகியவை இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆடிப் பெருக்கு நாளில் தீர்த்தவாரி, மகிமலை ஆற்றின் கரையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுகின்றனர்.

கோயில் திறக்கும் நேரம்

கோயில், காலை 08.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயில் அமைவிடம்

சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில், திருக்கடையூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஒழுகை மங்கலம் கிராமம். ஒழுகை மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கு திசையில் சுமார் 250 மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

சீர்காழி.ஏ.கே.ஷரவணன்