Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

‘‘காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலைகீழா நடக்குது!’’ எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்! உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை, சிங்கம் மாமிசம்தான் உண்கிறது; காய் கறிகளையோ பழங்களையோ உண்பதில்லை. யானை காய்-கறிகள், பழங்கள் ஆகியவற்றைத்தான் உண்கிறது; மாமிசத்தை உண்பதில்லை. அனைத்துமே இவ்வாறு முறை மீறாமல் ஒழுங்காகவே நடந்து கொண்டிருக்கின்றன.

நாம்தான் ஏழு மணிக்கு இருந்ததைப்போல, ஏழே கால் மணிக்கு இருப்பதில்லை. மாறிப்போனது நாம்தான். இப்படி இயற்கைக்கு மாறாக நடக்காமல் அனைத்துமே இயல்பாக நடக்கும்போது, கருணைபுரிவதையே தன் இயல்பாகக் கொண்ட அம்பிகை, மாறுவாளா? என்றென்றும் அருள்மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறாள். இதிஹாச-புராணங்களில் மட்டுமல்ல; ‘தீமைகள் நிறைந்தது கலியுகம்’ என்று சொல்லப்படும் இப்போதும் நம்மைக்கட்டிக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள் அம்பிகை.

இதோ! இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அதை விளக்குகிறது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ - என்று புகழப்படும் மாயூரம் திருத்தலத்தில், ஓர் ஆண் குழந்தை பிறந்தது.அதற்கு கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார்கள். குழந்தையின் நேரமா? அல்லது அக்குழந்தையைக் கொஞ்சி மகிழப் பெற்றோர்களுக்குக் கொடுப்பினை இல்லையா? - என்பது தெரியவில்லை.கிருஷ்ணசாமி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.உறவினர்களே கிருஷ்ணசாமியை வளர்த்தார்கள். என்ன இருந்தாலும் தாய்க்கு ஈடாகுமா? கிருஷ்ணசாமி அவ்வப்போது, ‘‘அம்மா! அம்மா!’’ என்று கதறினார். அந்தக்குரல், அனைத்து உயிர்களுக்கும் அன்னையான அம்பிகையை ஆட்டிப்படைத்தது. அவள் வந்து விட்டாள்.

ஆம்! மாயூரத்தில் இருக்கும் அன்னை அபயாம்பிகை, திருக்கோவிலில் இருந்து குழந்தை கிருஷ்ணசாமியைத் தேடி வந்து விட்டாள். வந்தவள் குழந்தையை அள்ளி அரவணைத்து அமுதம் அளித்து ஆறுதல் படுத்தினாள். இந்நிகழ்ச்சி தொடர்ந்தது.ஒருநாள்... குழந்தை அழும்போது, அதன் தாயின் வடிவிலேயே வந்தாள் அம்பிகை; வழக்கப்படி உணவு ஊட்டினாள். அதன் கையைப் பிடித்து மெள்ள அழைத்துப்போய், திருக்கோவிலில் தன் சந்நதியில் நிறுத்தி மறைந்தாள். இனிமேல், அந்தக் கிருஷ்ணசாமியை, அம்பிகையின் அருள்பெற்ற அந்த உத்தமரை ‘அபயாம்பிகை பட்டர்’ என்றே பார்க்கலாம்.

அன்று முதல் அபயாம்பிகை பட்டர் நாள்தோறும் மாயூரநாதர் ஆலயத்திற்குச்சென்று, மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்துத் திரும்புவதை வழக்க மாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அபயாம்பிகை பட்டர் தன் வழக்கப்படி அம்பிகையைரிசித்து, அர்த்த ஜாம வழிபாட்டை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது இரவு நேரம்! கோபுர வாசலைத் தாண்டி அபயாம்பிகை பட்டர் வந்தபோது, கால் இடறியது. அவர் அப்படியே கீழே விழுந்தார். வலி தாங்க முடியவில்லை. அபயாம்பிகைபட்டர், ‘‘அம்மா! அம்மா!’’ என்று கதறினார்.

அதே விநாடியில்... அழுகைக்குரல் கேட்ட அன்னை அபயாம்பிகை ஓடி வந்து விட்டாள்; வந்த அவள் கையில் ஒரு விளக்கோடு வந்தாள். அவளைப் பார்த்ததும் அபயாம்பிகை பட்டருக்கு வலி பறந்தது.அம்பிகை அத்துடன் நிறுத்த வில்லை; வலியைப்போக்கி ஆறுதல் சொன்னதோடு, கை விளக்கோடு வந்து வழிகாட்டவும் செய்தாள். வலி போக்கியதோடு வழியும் காட்டிய அம்பிகையின் அருளை எண்ணிக் கண்களில் நீர் மல்க, அபயாம்பிகை பட்டர் வீடு சேர்ந்தார். அன்று முதல் ஓர் அதிசயம் தொடர்ந்தது.

அபயாம்பிகை பட்டர் அர்த்தஜாமப் பூஜை முடித்து, தரிசனம் முடித்துத் திரும்பும்போது, (அம்பிகை கொணர்ந்த) கை விளக்கு ஆளில்லாமலேயே அபயாம்பிகை பட்டருக்கு உறுதுணையாக வழிகாட்டி வந்தது. அந்தரத்தில் மிதந்தபடி அருள்வழி காட்டிவந்த அந்த விளக்கைக் கண்டு, ஊராரெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்; அபயாம்பிகை பட்டரைப் போற்றினார்கள்.அபயாம்பிகை பட்டரோ, அம்பிகையின் கருணையை நினைந்து நினைந்து உள்ளம் உருகினார்.

‘‘தாயே! அடியேன் ஒன்றுக்கும் பற்றாதவன்; ஏழை;எளியவன்; எனக்கு அமுதம் ஊட்டி வளர்த்தவள் நீ ! அது போதாது என்று இருட்டில் எனக்கு வழிகாட்டி, உன் மலர்ப் பாதங்கள் நோக, விளக்கும் ஏந்தி வந்தாயே! வெளிச்சம் காட்டி எனக்கு வழிகாட்டிய தாயே! அளவில்லாத உன் கருணைக்கு, நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?’’ என்று அபயாம்பிகை பட்டர் கண்ணீர் சிந்தினார்.

அப்போது அபயாம்பிகை அசரீரியாக, ‘‘குழந்தாய்! கவலைப் படாதே! அருந்தமிழால் நீ அழகாகப்பாடு! குழந்தை உன் குரல் கேட்டு, நான் உள்ளம் குளிர்வேன்’’ என்றாள். அதைக் கேட்டும் அபயாம்பிகை பட்டரின் அழுகை நிற்கவில்லை. அவர், ‘‘தாயே! அம்பிகே! உன்னைப்பற்றிப் பாட, அடியேனுக்கு ஏதம்மா தகுதி? நான் கல்வி கற்றவனும் அல்ல; கவி பாடத் தெரிந்தவனும் அல்ல. நான் என்னம்மா செய்வேன்?’’ என்று மேலும் அழுதார்.அம்பிகை தொடர்ந்தாள்; ‘‘மகனே! நீ பாடத்தொடங்கு! உனக்குப் பாட வரும்’’ என்று அருள்

செய்தாள்.

அப்புறம் என்ன கவலை? அபயாம்பிகைபட்டர் பாடத் தொடங்கினார். பாடப்பாடப் பாடல்கள் வந்துகொண்டேயிருந்தன. நூறு பாடல்கள் உருவாயின. அன்னை அபயாம்பிகை மீது பாடப்பட்ட அப்பாடல்கள் ‘அபயாம்பிகை சதகம்’ என்று அழைக்கப்படுகின்றன. துன்பங்களை விலக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை மலரச்செய்யும் பாடல்கள் அவை. அப்பாடல்கள், மாயூரத்தில் உள்ள அபயாம்பிகை சந்நதியில் கல் வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பாடல்கள் பாடி முடிக்கப்பட்டதும், ஏற்கனவே பரவசநிலையில் இருந்த அபயாம்பிகை பட்டர் தன்னிலை மறந்தார்.அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அபயாம்பிகை பட்டரின் நிலை மாறிப்போனது.

பக்தியின் உச்சத்தில் அபயாம்பிகை பட்டர் தியானத்தில் ஆழத் தொடங்கினார். அவ்வாறு தியானத்தில் ஆழும்போது, அடிக்கடி சமாதி நிலைக்குப் போய் விடுவார் அபயாம்பிகை பட்டர்.

சமாதிநிலை என்றால், இறந்துபோய் விட்டார் என்பது பொருளல்ல! உலகத்தில் என்னதான் பேரிடர் வந்தாலும் அதனால் துன்பப்படாமலும்; சுகமோ-இன்பமோ வந்தால் அதற்காகத் துள்ளிக் குதிக்காமலும்; எந்த விதமான பாதிப்பிற்கும் ஆளாகாமல், ஆதிக்கு(இறைவனுக்கு)சமமான நிலையில் இருப்பதே-சமாதி நிலை எனப்படும். அப்படிப்பட்ட சமாதிநிலையில் அபயாம்பிகை பட்டர் அடிக்கடி ஆழ்ந்து விடுவார். அவருடைய செய்கைகளையோ நிலையையோ, ஊராரால் புரிந்து கொள்ள முடிய வில்லை. அதற்காக உறவினர்கள் சும்மா இருப்பார்களா?

அவர்கள் எல்லாம் கூடிப்பேசி, ஒரு பெண்ணைப் பார்த்து அபயாம்பிகை பட்டருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.கல்யாணம் ஆனால், அபயாம்பிகை பட்டர் கோவில்-குளம் என்று சுற்ற மாட்டார். குடும்பம், குழந்தை என்று ஆகி விட்டால், அப்புறம் இவரும் சாதாரணமாக உலகியலில் கலந்து விடுவார். ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இனி இவர் ஆளாக மாட்டார் - என்பது உறவினர்கள் எண்ணம்.

ஆனால் உறவினர்களின் அந்த எண்ணம் பலிக்க வில்லை.கண்களில் தெரிவதெல்லாம் அம்பிகையின் வடிவம்; காதுகளில் கேட்கும் ஒலியெல்லாம் அம்பாளின் குரல் என்று, பக்குவ ப்பட்டிருந்த அபயாம்பிகை பட்டரை, கல்யாணமா மாற்றப் போகிறது?கல்யாணம் ஆன பிறகும் அபயாம்பிகை பட்டர் மாறவில்லை. அவர் தன் மனைவியை அம்பிகையாக எண்ணிப் பார்த்து, அவளை அம்பிகையாகவே வழிபாடு செய்தார். சாதாரண மக்களைப்போல, அவர் இல்வாழ்க்கையில் ஈடுபட வில்லை. ஊராரால் அதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அவர்கள் அவதூறு பேசி, வதந்தியைப்பரப்பினார்கள்.

‘‘ஊம்! மனைவியைப்போய்ப் பூஜை செய்கிறாராம்! மந்திர, தந்திர, மாயங்கள் எல்லாம் செய்கிறார். ஒழுக்கமில்லாமல் மது-மாமிசம் உண்கிறார். மொத்தத்தில் ஒழுக்கம் கெட்டவர் இவர்’’ என்று உறவினர்களே போய், அரசாங்க அதிகாரிகளிடம் அபயாம்பிகை பட்டரைப் பற்றிப் புகார்ப்பட்டியல் வாசித்தார்கள்.அந்த அவதூறு அபயாம்பிகை பட்டரின் காதுகளையும் எட்டியது. அவர் மனம் உடைந்தார்; ‘‘தாயே! அபயாம்பிகே! என்னை அவதூறு பேசுவோர்களை, நீ தானம்மா திருத்த வேண்டும்!’’ என முறையிட்டார். அம்பிகையின் அருளால் ஊராரின் அவதூறு ஒரு முடிவிற்கு வந்தது.

ஆனால் அபயாம்பிகை பட்டரோ, ஊராரிடம் இருந்தும் உற்றாரிடம் இருந்தும் ஒதுங்கியே இருந்தார். ஒருநாள்... அர்த்த ஜாம வழிபாட்டை முடித்துக்கொண்ட அபயாம்பிகை பட்டர், அம்பிகைக்கு அர்ச்சனை செய்த குங்கும த்தை நெற்றியில் அணிந்து கொண்டு, அப்படியே ஜோதி வடிவாகிவெட்ட வெளியில் கரைந்தார்; அம்பிகையின் திருவடிகளில் கலந்தார். அவர் அம்பிகையைத் துதித்துப்பாடிய ‘‘அபயாம்பிகை சதகம்’ இன்றும் பலரால் பாராயணம் செய்யப்படுகிறது. நாமும் பாராயணம் செய்வோம்! பலன்பெறுவோம்!

(அபயாம்பிகை சதகப் பாடல்கள் ஒருசில...)

தொகுப்பு: V.R.சுந்தரி