Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுவனின் உயிரை காப்பாற்றாத சாய் பாபா.. ஏன் தெரியுமா?

ஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை செய்யும் ஞானிகள் சில சமயம் ஏதும் செய்யாமல் இருந்து விடுவர். அப்படி “ஷீர்டி சாய் பாபாவின்” வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ஒரு சமயம் சாய் பாபா ஷீர்டியில் உள்ள தனது இருப்பிடமான பாழடைந்த மண்டபத்தில் இருந்த போது, அவரின் பக்தை ஒருவர் பாபாவிடம் வந்து தனது ஒரே மகனை நாகப் பாம்பு தீண்டி உயிருக்கு போராடுவதாகவும், தனது மகனின் உயிரை எப்படியாவது காப்பற்றித் தருமாறு பாபாவிடம் கண்ணீர் விட்டு மன்றாடினார். ஆனால் பாபாவிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. மௌனமாகவே இருந்தார். இதைக் கண்ட மற்ற பக்தர்களும் சற்று கவலையடைந்தனர். அந்த பக்தை பல முறை பாபாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் போதே, பாம்பினால் தீண்டப்பட்ட அவளது மகன் இறந்து விட்ட செய்தி அவளுக்கு வந்ததால் தனது வீட்டை நோக்கி அழுது கொண்டே ஓடினாள்.

இக்காட்சிகளை கண்டு மிகவும் வேதனையடைந்த அவரின் நெருங்கிய பக்தர் ஒருவர், பாபா அந்த சிறுவனது உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என அவரிடமே மன வேதனையுடன் கூறினார். அப்போது பாபா அவரிடம் “உனக்கு உண்மை நிலை தெரியாது. இப்போது பாம்பு தீண்டி இறந்த அந்த சிறுவன் வேறு ஒரு தாயின் கருவிற்குள் ஒரு புதிய உடலை பெற்றுவிட்டான். அந்த உடலில் அவன் மூலம் இந்த நாட்டிற்கு பல நன்மையான காரியங்கள் நடைபெறப்போகிறது. இப்போது இறந்த அவனது உடலிலேயே அவன் உயிருடன் இருந்திருந்தால் யாருக்கும் எந்த ஒரு நன்மையையும் ஏற்பட்டிருக்காது.

மேலும் அவனை இப்போது உயிர்ப்பித்திருந்தால் அவன் செய்யப்போகும் பாவ காரியங்களுக்கான கர்ம வினைப்பயனை அவனை உயிர்ப்பித்த நானும், அவனை உயிர்ப்பிக்க சிபாரிசு செய்த நீயும் சுமந்திருக்க வேண்டியிருக்கும். இதற்கு உனக்கு சம்மதமா?” எனக் கேட்டார். அனைத்தையும் அறிந்த அந்த இறைவனின் அம்சமான பாபாவிடம் தான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் அந்த பக்தர்.