Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆற்றில் அருளும் அழகர்

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும், கோயில்களும் முக்கியமானவை. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானவை. அவற்றில், மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா”.

ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்” நிகழ்வு பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது. இந்த சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம்.

வைகை நதியின் சிறப்பு

சித்திரை விழாவில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று மதுரை. இரண்டாவது அழகர்மலை. மூன்றாவது வைகை நதி. வைகை நதிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை வேண்டினான். அப்போது சிவபெருமான், `வை...கை’ என்று குண்டோதரனுக்கு உத்தரவிட, வைகை பிறந்ததாகப் புராணங்கள் சொல்லுகின்றன.

அற்புதமான ஆறு வைகை

தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது. சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனிமலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர் முல்லையாறாக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது. பின்னர், வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டுப் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது.

வைகை ஏன் கடலை அடையவில்லை?

பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும். ஆனால், வைகை கடலை அடையாத ஆறு. அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான காரணத்தைப் பாட்டாகக் கூறினார். பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள அப்பாடல், ‘நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி’ என்று வாரி இடம் போகாத வையையே நதி பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது ஆலகால நஞ்சு வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். வைகை நினைத்ததாம். ``ஏ கடலே. எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.” மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை கடலை அடையவில்லை!

வீதிகளில் தமிழ்மணம்

மதுரைக்குத்தான் எத்தனை பெயர்கள்? 1. மல்லிகை மாநகர், 2. கூடல்நகர், 3. மதுரையம்பதி, 4. கிழக்கின் ஏதென்ஸ், 5. நான் மாடக்கூடல், 6. மீனாட்சி பட்டணம், 7. ஆலவாய், 8. கடம்ப வனம், 9. அங்கண் மூதூர், 10. தூங்கா நகரம், 11. கோயில் நகரம் 12. பூலோக கயிலாயம் என பல பெயர்கள் உண்டு. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் சிறப்பு மதுரைக்கே உரியது. மாடக்குளம், ஆத்திகுளம், கரிசல்குளம் என நீர்நிலைகளின் பெயராலேயே கிராமங்களுக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்யும் வழக்கமும் அதிகம்.

ஆற்றைப் பார்த்தாயா? எம் அழகரைப் பார்த்தாயா?

மதுரை என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்துகொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக முக்கியமான விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா மற்றும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா. அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா” என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை எடுத்துரைக்கும்.

பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி, ஆணைப் பார்த்தால் அழகர்

மதுரை என்றாலே மீனாட்சி பெயரும், அழகர் பெயரும் பிரசித்தம். மேலூர் அழகர் கோயில் பக்கம், வீட்டில் ஒரு அழகர் இருப்பார். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் சித்திரைத் திருவிழாவுக்கு புறப்பட்டு வந்து சேருவார்கள். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில், அழகருக்கு ஆயிரம் பாட்டு இருந்தாலும் “வாராரு வாராரு அழகர் வாராரு” பாட்டுதான் ஊரில் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும்.

அழகர்மலை

மதுரையின் சிறப்பையும், வைகையின் சிறப்பையும் பார்த்த நாம், மதுரைக்கு வந்து சித்திரை முழு நிலா நாளில் ஆற்றில் இறங்கும் அழகரின் சிறப்பையும், அவர் நின்று அருள்புரியும் அழகர் மலையின் சிறப்பையும் அறிய வேண்டும். அழகர்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு வைணவத்தில் திருமாலிருஞ்சோலை என்கின்ற திருநாமம் உண்டு. சோலைமலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், சோலைமலை, குலமலை குளிர்மலை, தென்திருப்பதி, உத்யான சைலம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகிரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக, 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலாபக்கமும் பிரிந்து போகின்றன.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற அழகர்மலை

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்புறம் அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்சி தரும் இப்பகுதியில் இயற்கையாகவே சோலைகள் பல அமைந்திருக்கின்றன. சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகி கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டும் இம்மலையைப் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுதியாக உண்டு.

சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு பெயர்

ஸ்வாரஸ்யமாக இன்னொருசெய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் `வை’யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் `கை’யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக `வைகை’ அமைந்திருக்கிறது. வைகுதல் = தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு. சமயம், தமிழ் சேர்ந்ததால் மதுரையில், சமயமும் தமிழும் சேர்ந்து நிலை பெறச் செய்வதால் வைகை என்று பெயர். ``அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்” என்பார்கள் சான்றோர்கள். வைகைக்கு வேகவதி என்று பெயரும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது. ‘‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி”, ‘‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை” என்பன போன்ற தொடர்கள் வைகை நதியின் பெருமையைச் சொல்லும். சிவ பெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறுவர். வடமொழி நூல்கள் வைகையை ‘‘க்ருதமாலா” நதி என்று குறிக்கின்றன.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர்கோயிலின் சிறப்பு

``அவ்வழி படரீர் ஆயின், இடத்து

செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும்

தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு

கடம்பல கிடந்த காடுடன் கழிந்து

திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின்”

- என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோயிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமை

சிலப்பதிகார ஆசிரியர் ‘விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணியோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை

முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு’ என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோயில் அமைக்கப்பட்டது என தெரிய வருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்குப் பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள்

மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ்சோலை அழகர். இன்னொன்று திருமோகூர் அழகர். மூன்றாவது மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர். திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். ஆண்டாள்,

‘‘எழில் உடைய அம்மனைமீர்!

என்அரங்கத்து இன்னமுதர்

குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்

எழு கமலப் பூ அழகர் எம்மானார்

என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே’’

- என்று வர்ணிக்கும் அழகு இவர்க்கு அப்படியே பொருந்தும்.

பாவங்கள் தீர்க்கும் பாவநாசினி

எல்லா நீர்நிலைகளுக்கும் ஒரு உற்பத்தி இடம் உண்டு. ஆனால், சிலம்பாறு எங்கே உற்பத்தி ஆகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. திருமாலிருஞ்சோலையில் ஆயிரக்கணக்கான தீர்த்தங்கள் இருந்தாலும் அழகர் நீராட்டம் காண நூபுரகங்கை தீர்த்தம்தான் வேண்டும். கற்கண்டு போன்ற சுவையுடன் இருக்கக்கூடிய இந்த தீர்த்தம் தவிர வேறு தீர்த்தத்தால் அழகருக்குத் திருமஞ்சனம் செய்தால், அவருடைய மேனி கறுத்து விடுகிறது. சகல நோய்களையும் தீர்க்கக்கூடிய அற்புதமான மூலிகைத் தீர்த்தம் இது. பகவானுடைய திருவடியில் இருந்து தோன்றி நம்முடைய உடல் அழுக்கை மட்டும் அல்லாது மன அழுக்கையும் அகற்றுவதால் “புண்ணிய சுருதி” என்றும் “பாவநாசினி” என்றும் சொல்வார்கள். ஐப்பசி துவாதசியில் இங்கு நீராடி அழகரைத் தரிசிப்பது பெரும் புண்ணியம். பாதகங்கள் தீர்த்து பரமனடி காட்டும்.

எத்தனை மண்டபங்கள்? எத்தனை சிற்பங்கள்?

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், லட்சுமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக்கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் காலச் சிறந்த படைப்புகளாகும். வசந்த மண்டபத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இந்தச் சந்நதியும் இங்கு ஒரு சிறப்புதான். மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு முன் நிற்கிறார்கள். பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. அதில் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியன பூசி மாலையும் மலர்களும் சாத்தி கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள்.

தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை, கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி. சித்திரைத் திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நதிக்குதான் அழகர் வருகிறார். அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பி கோயிலுக்குள் செல்லும் முன்பு, கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்து விட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம் செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

அழகர் என்ன பட்டு உடுத்தப்போகிறார்?

அழகர் ஆற்றில் இறங்கும்போது என்ன வண்ணத்தில் பட்டு உடுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உண்டு. முதல் நாள் அர்ச்சகர் கனவில் இன்ன வண்ணப் பட்டு என்று சொல்லி, அர்ச்சகர் அந்த வண்ணம் சாற்றுவார் என்று சொல்கிறார்கள். இன்னொரு விதமாகவும், அழகரின் பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை வருகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.

அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன நிறத்தில் பட்டுடுத்தி வரப்போறாரோ? எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா காண்பது போலவே, மானா மதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள்.

தொகுப்பு: ஜெயசெல்வி