Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம்!

ராஜயோகங்கள் பல வகையாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வசதி, வாய்ப்புகளை வழங்கும் அமைப்பாக உள்ளது. சில நேரங்களில் யோகம், அதற்குள் மற்ெறாரு யோகம், அதற்குள் மற்றொரு யோகம் என நீடித் துக் கொண்டே போகும். அதுவே ஆச்சர்யம். ஜோதிட சாஸ்திரத்தில் தர்மகர்மாதிபதி யோகம் என்று ஒன்று உண்டு. அதற்கு இணையான யோகமாக இந்த பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம் உள்ளது. இந்த யோகம் பத்ம ராஜயோகம் என்றும் சொல்லப்படுகிறது. இயற்கையின் விதிகள் மாறுபடாது. நாம் புரிந்துகொள்வதற்கும் அதனை நம்புவதற்கும் அனுபவமும் அறிவும் தேவைப்படுகிறது. ஒருமுறை அந்த இலக்குகளுக்குள் வந்துவிட்டால் எல்லாம் விளங்கும்.

கண்ணதாசனின் பாடலில்...

‘‘மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்’’ என்ற வைர வரிகளைப் போல் வாழ்வில் மாற்றம் ஏற்படு வதை தெரிந்து கொண்டால் நமக்கு எதன் மீதும் பற்று ஏற்படாது. வாழ்வும் சிந்தனையும் தெளிவாக இருக்கும் என்பதுதான். மனம் ஏமாற்றம் அடையாது. எது வழியோ? அதனை நோக்கி மனமும் சிந்தனையும் பயணப்படும் என்பது உண்மையான ஞானம்.

பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம் (பத்ம ராஜயோகம்) என்பது என்ன?

தர்மகர்மாதிபதி யோகம் என்பது லக்னத்திற்கு ஒன்பதாம் (9ம்) பாவகத்தையும், பத்தாம் (10ம்) பாவகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுவது. அதற்கு இணையாக என்பது லக்னத்திற்கு நான்காம் (4ம்) பாவகத்தையும், ஐந்தாம் (5ம்) பாவகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் யோகம் இந்த பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம் என்ற பத்ம ராஜ யோகம்.

லக்னத்திற்கு நான்காம் (4ம்) அதிபதியும், ஐந்தாம் (5ம்) அதிபதியும் இணைந்து ஒரே பாவகத்தில் இருப்பது. நான்காம் அதிபதி (4ம்) ஐந்தாம் பாவகத்திலும்; ஐந்தாம் (5ம்) அதிபதி நான்காம் (4ம்) பாவகத்திலும் பரிவர்த்தனை

பெற்றிருப்பது.

நான்காம் அதிபதி (4ம்) நான்கில் இருந்து ஐந்தாம் (5ம்) அதிபதி பத்தாம் (10ம்) வீட்டில் இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது. அதுபோன்றே, ஐந்தாம் அதிபதி (5ம்) ஐந்தில் அமர்ந்து; பதினோராம் பாவகத்தில் (11ம்) நான்காம் அதிபதி (4ம்) அமர்ந்து ஐந்தாம் வீட்டை பார்வை செய்து, பரஸ்பரம் நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி பார்த்துக்கொள்வது. ஏதேனும் ஒரு கிரகம் நான்கிலும் ஐந்திலும் இருந்து மற்றொரு நான்காம், ஐந்தாம் பாவகத்தை தொடர்பு கொள்வது பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம் என்ற பத்ம ராஜ யோகமாகும். இதில் ராகு - கேது தொடர்பு கொள்ளக்கூடாது. அவ்வாறு இருந்தால் பலன்கள் மாறுபட்டிருக்கும்.

பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகத்தின் பலன்கள்

*எப்ெபாழுதும் வெற்றியை நோக்கியே பயணிப்பார்கள். வெற்றியை எளி தாகப் பெறுவார்கள் என்பது சிறப்பு.

*கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். உயர்நிலைக் கல்வி இவர்களுக்கு கிடைக்கும்.

*போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுவார்கள். அதிக போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.

*பதவி, பெயர், புகழ் ஆகியவைகளின் மூலம் முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பார்கள்.

*பூர்வபுண்ணியம் வலிமை பெறுவதால் எதிரிகளை கணிக்கக்கூடிய வல்லமை பெற்றிருப்பர். ஒருவர் நம்மை ஏன் சந்திக்கிறார் என்ற சூட்சுமம் இவர்களுக்குத் தெரியும்.

*சந்தான யோகம் என்னும் குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. குழந்தைகளும் மேன்மை பெறுவர்.

*நிலம், வீடு, வாகனம் போன்ற பாக்கியங்கள் இவர்களுக்கு ஏற்படும். இதனால், பொருளாதார அமைப்பும் இவர்களுக்கு உண்டு.

*இவர்கள் குலதெய்வம் ஆசீர்வாதத்தை நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.

*எந்தப் பிரச்னையையும் எளிதாக தீர்க்கும் தகுதி இவர்களுக்கு உண்டு. எளிதாக தீர்வினை கண்டறிவார்கள்.

லக்னத்தின் அடிப்படையில் பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகத்தின் பலன்கள்

*மேஷ லக்னத்திற்கு சந்திரனும் சூரியனும் இணைவு பெறுவது சிறப்பான அமைப்பாகும். ஆடி அமாவாசை - பெளர்ணமி அல்லது ஆவணி மாதம் அமாவாசை - பௌர்ணமியில் பிறந்திருந்தால் சிறப்பான அமைப்பாகும்.

*ரிஷப லக்னத்திற்கு சூரியனும் புதனும் இணைவு பெறுவது சிறப்பான அமைப்பாகும். இது புதாத்திய யோகத்தை கொடுத்து கல்வியில் மேன்மை பெறச் செய்யும்.

*மிதுனம் மற்றும் கும்பம் லக்னத்திற்கு புதனும் - சுக்ரனும் இணைவு பெறுவது ஸ்ரீவிஷ்ணுயோகம். இவர்கள் செயல்கள், சிந்தனைகள் ஆச்சர்யம்தான்.

*கடகம் மற்றும் மகரம் மற்றும் லக்னத்திற்கு செவ்வாய் - சுக்ரன் இணைவு காதல் யோகத்தை கொடுக்கிறது. மனைவி வந்தவுடன் மாற்றம், முன்னேற்றம்.

*சிம்மம் மற்றும் தனுசு லக்னத்திற்கு செவ்வாய் - வியாழன் இணைவானது பூமி யோகத்தை வாரி வழங்கும் வல்லமை கொண்டது.

*கன்னி மற்றும் விருச்சிகம் லக்னத்திற்கு சனி - வியாழன் இணைவு சண்டாள யோகத்தை ஏற்படுத்தி பொருள் சேர்க்கையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

*துலாம் லக்னத்திற்கு சனி லக்னத்தில் உச்சம் பெற்றால் சிறப்பு. இவர்கள் தர்மத்தை மீறாமல் வாழ்ந்தால் இவர்களே ராஜயோகத்தின் அமைப்பை உடையவர்கள். எல்லா பாக்கியங்களும் இவர்களை வந்து சேரும். ஆவணி மாதம் பிறந்திருந்தால் இவர்களை வெல்வதற்கு ஆள் இல்லை.

*மீனம் லக்னத்திற்கு புதன் - சந்திரன் இணைவானது சங்கம யோகத்தை ஏற்படுத்தும். பெருங்கூட்டத்தை தினந்தோறும் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.

யோகம், யோகத்திற்குள் யோகம், மேலும் யோகம் என்ற அமைப்பானது ஆச்சர்யத்தின் ஆச்சர்யம்!