Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நன்றி அப்பா!

ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அந்த பிள்ளையும், அந்த தகப்பனிடம் அன்புடன் வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவர் அந்த பிள்ளையை பார்த்து, `நீ இன்று வெளியில் விளையாட போக வேண்டாம்’ என்று கூறினார். அவள் தினமும் தன் தோழிகளோடு விளையாடுவது வழக்கமாக இருந்தது. அவளும் தன் தகப்பனிடம் சரி என்று கூறிவிட்டு, தன் அறையில் வேறு ஏதாவது செய்யலாம் என்று அமர்ந்தாள். அப்படி அவள் அமர்ந்த போது, அவளுடைய தோழிகள் விளையாடும் சத்தம் கேட்டது. அவளால் உட்கார்ந்திருக்க முடியவில்லை.

சற்று நேரம் பார்த்தாள். அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சரி.. தகப்பன் வேலைக்கு போயிருப்பார், நான் விளையாடுவது அவருக்கு எங்கே தெரிய போகிறது என்று நினைத்து, விளையாட சென்று, நன்கு விளையாடிவிட்டு, எல்லாருக்கும் `பை’ சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போதுதான் அவளுடைய மனதில் வேதனை ஆரம்பித்தது, தன் தகப்பனின் சொல்லிற்கு கீழ்ப்படியவில்லை என்று, அதையே நினைத்து சென்று கொண்டிருந்தபோது, முன்னால் மாட்டப்பட்டிருந்த படத்தை பார்க்காமல் போய் இடித்து, அது அந்த படம் கீழே விழுந்து, நொறுங்கி போனது, அவளுக்கும் தலையில் நல்ல அடி!

அவள் இருதயத்தில் தகப்பனுக்கு கீழ்ப்படியவில்லை என்ற துக்கம், தலையின் வேதனை வேறு. வேகமாக தன் அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து, விசும்ப ஆரம்பித்தாள்.

அப்போது அந்த வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண்,

``நீ போய் உன் அப்பாவை பார், நடந்ததை சொல்’’ என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ளையோ...

``நான் எப்படி என் தகப்பனின் முகத்தில் விழிப்பேன்? நான் அவர் சொல்லை கேட்கவில்லையே’’ என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு அந்த பணிப்பெண்,

``உன் தகப்பனின் அன்பு நீ செய்கிற காரியத்தை பொறுத்தா இருக்கிறது? நீ அவருடைய மகள் அல்லவா?’’ என்று கூறினாள். அதனால் தைரியமுற்று, அந்த பிள்ளை தன் தகப்பனிடம் சென்று,

``அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று அவருடைய கரத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அவளுடைய தந்தை,

``மகளே, நீ என் சொல்லை கேளாமல், விளையாட போனதும் தெரியும், விளையாடிவிட்டு, வரும் வழியில் மாட்டப்பட்டிருந்த படத்தில் மோதி, தலைக்கு அடிபட்டதும் தெரியும், நீ வருவாய் என காத்திருந்தேன், அந்த வலிக்கு தடவி கொடுக்கலாம் என்று, ஆனால் நீ என்னிடம் வரவேயில்லை’’ என்று கூறினார்.

``அது எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் வேலைக்கு போகவில்லையா?’’ என்று அந்த பிள்ளை கேட்டாள். அதற்கு தந்தை

``இன்று நான் உன்னுடன் நேரத்தை செலவழிப்பதற்காக விடுமுறை போட்டேன், ஆனால், நீ விளையாட போய் விட்டாயே’’ என்றுகூறி,

``மகளே, நீ என்னுடைய மகள், ஆகையால் நீ தவறு செய்தாலும் நீ என்னிடம் வரும்போது, நான் உன்னை மன்னித்து, உன்னை ஏற்று கொள்வேன். ஆனால், நீதான் நான் ஏற்று கொள்வேனோ மாட்டேனோ என்று தயங்கி என்னிடம் வராமல் போனாய்’’ என கூறினார். அப்போது மகள், அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு,

``நன்றி அப்பா..’’ எனகூறி முத்தமிட்டாள். நம்முடைய தேவனும் அப்படித்தான், அவர் நம்மேல் அன்புகூருவது நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற பாடுகளுக்காகவோ அல்ல. நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் மாத்திரமே அவர் நம்மேல் அன்பு கூறுகிறார்.

`கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்’ - (யோவான் 1:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது.

- அருள்முனைவர். பெவிஸ்டன்