Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தஞ்சாவூர் வடபத்ரகாளி

தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன் நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்பசூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் இந்த காளியை வணங்கிச் சென்றனர். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள். இத்தல மண்ணை மிதித்தாலே போதும். தெளிவு பெறுவது நிச்சயம்.

மயிலாப்பூர் ஸ்ரீ கோலவிழியம்மன்

கோலவிழியம்மனின் உற்சவ திருவுருவை வைத்து இந்தக் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது என்று கண்டறிந்திருக்கிறார்கள். சுனாமி தாக்கியபோது கடற்கரையோரம் வசித்த மக்கள் ஓடி வந்து தஞ்சம் புகுந்தது இந்த அன்னையின் ஆலயத்தில்தான். ஒரு சமயம் கயிலையில் பிரணவத்திற்கு பொருள் கேட்டாள், உமையன்னை. ஈசன் அதற்கு பொருளுரைத்தபோது அங்கே தோகை விரித்தாடிய மயிலின் அழகிய கவனம் செலுத்தினாள், உமை. அதனால் கோபம் கொண்ட ஈசன், தேவியை மயிலாய் மாறிட சாபமிட்டான். பூவுலகில் திருமயிலையில் அன்னை மயிலுருவாய் மாறி ஈசனை துதித்து வந்தாள். அப்போது, இப்பகுதியில் தீய சக்திகளால் நல்லோர் பாதிக்கப்பட்டனர். அதனால் ஈசன் மகாகாளியை மயிலைக்கும், மயிலுக்கும் காவலாய் அமர்ந்து காக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணைப்படி மயானத்தை நோக்கி அமர்ந்து அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள், கோலவிழியம்மன். இறைவிக்கு முன் கல்லினாலான சிறிய தேவி சிலை உள்ளது. அபிஷேகங்கள் எல்லாம் இந்த சிலைக்கே. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்

கடன்கள் தீர்ந்து விடுகின்றன. மயிலை, கோபதி நாராயணசாமி சாலையில் இந்த ஆலயம் உள்ளது.

கொல்லங்குடி ஸ்ரீ வெட்டுடைய காளிதன் அரசியான வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்காத உடையாள் என்ற கன்னிப்பெண், ஆங்கிலேய அரசால், அரியாக்குறிச்சி எனும் ஊரில் தலை வெட்டி எறியப்பட்டாள். உடையாள் வெட்டுப்பட்டதால் வெட்டுடையாள் என்றழைக்கப்பட்டாள். அங்கேயே அவளுக்கு சமாதி அமைத்தனர். சமாதியின் மேற்பரப்பில் காணப்பட்ட எழுத்துகள் காளிக்கு உரியனவாக இருந்தன. அதனால் காளிக்கும் அங்கேயே தனிச் சந்நதி நிறுவினர். வேலுநாச்சியார் தன் பொருட்டு உயிரிழந்து காளியின் உருவெடுத்த வெட்டுடையாளுக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்து சுமங்கலியாக்கினார். இன்றும் மிகுந்த உக்கிரத்தோடு அமர்ந்து, மக்கள் குறைகளை தீர்த்து வைக்கிறாள், வெட்டுடையாள். சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி கிராமம் அமைந்துள்ளது.

மத்தூர் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம்தான் மகிஷாசுரமர்த்தினி. பல்வேறு தலங்களில் அருளும் இந்த அன்னை, மத்தூரிலும் விளங்குகிறாள். ரயில் பாதைக்காக தோண்டிய பள்ளத்திலிருந்து வெளிப்பட்ட பெரிய, அழகு சிற்ப வடிவினள். அஷ்டபுஜங்களோடு எந்தச் சிதைவுமின்றி ஏழடி உயர எழிற் கோலம்! எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் திருமுகம் மட்டும் சாந்தமாக ஜொலிக்கிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பௌர்ணமியன்று 108 பால்குட அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் உண்டு. திருத்தணி - திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில், பொன்பாடி ரயில் நிலையத்திற்கு அருகே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.