Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உஜ்ஜீவநாதர் திருக்கோயில்!

ராஜகோபுர தரிசனம்!

உய்யக்கொண்டான் மலை என்பது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயில். இந்த ஆலயம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. பின்னர் சோழ மன்னர்கள், ராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலத்தில் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இத்தலம் ‘நந்திவர்ம மங்கலம்’ என்று அழைக்கப்பட்டது.

மிருகண்ட முனிவர், சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்க சிவபெருமானிடம் தவமிருந்தார். சிவனும் அவரின் தவத்தினை மெய்ச்சி ஒரு மகனை வரமாக அருளினார். அந்த சிறுவன் அறிவில் சிறந்தவனாக திகழ்ந்தான். அவன்தான் மார்க்கண்டேயன். ஆனால் தன்னுடைய 16 வயதில் மார்க்கண்டேயன் இறக்க நேரிடும் போது, மீண்டும் சிவனை வேண்டினார். சிவன், எமதர்மனை தடுத்து மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக வாழ்வதற்கான வரத்தை அளித்தார். இதனால், இத்தல இறைவன் ‘உஜ்ஜீவநாதர்’ என அழைக்கப்படுகிறார்.

கோயில் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மூலவர் உஜ்ஜீவநாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இறைவி அஞ்சனாட்சி மற்றும் பாலாம்பிகை. கோயிலின் அமைப்பு ஓம் வடிவில் கட்டப்பட்டுள்ளதால், மிகவும் அபூர்வமான கோயில். குன்றின் அடிவாரத்தில் முருகப்பெருமானின் சந்நதி உள்ளது. இத்தலம் குன்றின் மீது அமைந்துள்ளதால் அந்த குன்றின் மீதுதான் கோயிலின் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அமைப்பு ‘ஓம்’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால், அந்த அமைப்பு கோபுரத்தின் அமைப்பிலும் பிரதிபலிக்கிறது. கோபுரத்தில் பல்லவ மற்றும் சோழர் கால சிற்பக்கலைகள் இடம் பெற்றுள்ளன. இறைவன் சிவன், அம்பாள், நந்தி, விநாயகர், முருகன் உள்ளிட்ட பல தேவதைகளின் சிற்பங்கள் சிறப்பாகவும் பொலிவுடனும் கோபுரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தலம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது. பல்லவர் கட்டிடக்கலைக்கு ஏற்ப குறைந்த உயரத்தில்தான் கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால் அதிலுள்ள சிற்ப வடிவமைப்புகள் மிகவும் தெளிவாகவும் பார்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.பல்லவ காலத்திற்குப் பிறகு இத்தலத்தின் கோபுரம் ராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலத்தில் விரிவாக்கப்பட்டது. அவர்கள் கால கல்வெட்டுகள் கோபுரத்தின் பகுதியில் காணலாம். அதன் பிறகு நாயக்கர் காலத்தில் கோபுரத்தின் சில பகுதிகள் பழுது பார்க்கப்பட்டன. மராத்தியர் காலத்தில் கோபுர சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தும் வகையில் மேலோட்ட திருப்பணிகள் செய்யப்பட்டது. கோபுரத்தின் மேல் அதிகாலை விழும் சூரிய ஒளி தலத்தில் உள்ள மூலவர் மீது நேராக விழும் படி இக்கோபுரம் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பு.

கோபுரத்தின் வழியாக ேகாயிலின் வாசலை நுழையும் போது சிவனை மனதில் எண்ணி ‘ஓம் நமசிவாய’ என்ற நாமத்தினை சொல்ல வேண்டும் என்பது ஐதீகம். உஜ்ஜீவநாதர் கோயிலின் கோபுரம் அதன் மலையமைப்பும், ஓம் வடிவ கட்டிடக் கலையும், பல்லவ-சோழர் வரலாறும் ஆகியவற்றால் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. இது பாரம்பரியமும் பக்தியும் ஒன்றிணைந்த அதிசய கட்டுமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: திலகவதி