ராமேஸ்வரம்
பகுதி 7
திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய கடற்கரைத் திருத்தலங்களைத் தொடர்ந்து கடல் நடுவே தீவாக அமைந்துள்ள இராமேஸ்வரம் பற்றி இங்கு காண்போம். இங்குள்ள உலகப் பிரசித்தி பெற்ற இராமநாதசுவாமி கோயிலில் இறைவன் பர்வதவர்த்தினி எனப்படும் மலைவளர்காதலியுடன் வீற்றிருக்கிறார். வங்கக் கடலில் சுமார் 13,000 ஏக்கர் நில அளவில் அமைந்துள்ள அழகிய சிறு தீவான இராமேஸ்வரத்தில் 15 ஏக்கர் பரப்பில் காட்சி அளிக்கும் எழில் மிகு கோயில் இது.
இந்தியாவெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து வழிபடும் கோயில். ஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலம்.மூலவர் ராமநாதர் சுயம்பு மூர்த்தியாக இரண்டு அடி உயரமுள்ள பாண லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். திரிகோணமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களால் கருவறை கட்டப்பட்டது என்பர். பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை கூரைக் கொட்டகையாக இருந்த சிவாலயம், பிற்காலத்தில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களாலும் தேவக்கோட்டை ஜமீன்தார்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டது. மூலவர் சந்நதி முன்பு கொடிமரமும், 22 அடி நீளம் 12 அடி அகலம் 17 அடி உயரம் உள்ள சுதையாலான பிரம்மாண்டமான நந்தியும் கண்களைக் கவர்கின்றன.
சிவ பக்தனான ராவணனை அழித்ததால், ஸ்ரீ ராமருக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்க, அவர், அகஸ்திய முணிவரின் ஆலோசனைப் படி, ராமேஸ்வரம் கடற்கரையில் லிங்கம் ஸ்தாபித்து சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக உகந்த நேரம் குறித்து, அதற்குள் சிவலிங்கம் கொண்டுவருமாறு ஆஞ்சநேயரைப் பணித்தார். ஆனால் ஆஞ்சநேயர் வரத் தாமதமானதால், சீதை விளையாட்டாக கடல் மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமர் வழிபட்டார். சிவனார் ராமநாத சுவாமி (ராமலிங்கேஸ்வரர்) என்று பெயர் பெற்றார்; தலம் இராமேச்வரம் என்று அழைக்கப்பட்டது. இதனால் சந்நிதியில் பெருமாள் தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது.
ஆஞ்சநேயர் பூஜைக்கான லிங்கம் எடுத்துக்கொண்டு வருகையில், நாரதர், “நீ பூஜை செய்வதற்கு ஒரு லிங்கம் வேண்டாமா?” என்று கேட்க, அவர் மீண்டும் சென்று ஒரு லிங்கம் கொண்டு வந்தமையால் தான் காலம் தாழ்ந்தது என்று குறிப்பிடுகிறார். உ.வே.சா அவர்கள்.கோயிலில் ஆஞ்சநேயர் திருமேனி முற்றிலும் செந்நிறமாய்க் காணப்படுவது பற்றிக் கூறும் போது, “ஸ்ரீ ராமர், தாம் கொண்டு வந்த லிங்கத்தைப் பூசிக்காதது கண்டு, லிங்கத்தை விசுவரூபம் கொண்டு வாலைச் சுற்றி இழுக்குங்கால், வால் அறுந்துவிட்டது; இழுத்ததன் குறிப்பும், கோபத்தின் குறிப்புமே அவர் மேனி சிவந்ததற்குக் காரணம்” என்கிறார். கோயிலில் சனிக்கிழமை தோறும் ஒரு பங்கு செந்தூரத்துடன் இரு பங்கு வெண்ணெயும் சேர்த்துக் குழைத்து அனுமனுக்குச் சார்த்துகின்றனர்.
ஆஞ்சநேயர் தாமதமாகக் கொண்டு வந்த லிங்கத்திற்கு விசுவநாதர் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. விசாலாட்சிக்குத் தனிச்சந்நதி உள்ளது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டுக் கொண்டு வந்த லிங்கம் என்பதாலும், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், முதலில் விசுவநாதருக்குப் பூஜை செய்ய ஏற்பாடு செய்தார் ராமர். இன்றளவும் விசுவநாதருக்குப் பூஜை செய்த பின்பு, ராமநாதருக்கு வழிபாடுகள் நடக்கின்றன. ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கம், கோயில் நுழைவு வாயிலின் வடப்பக்கம் உள்ளது.
விபீஷணர், ராமருக்கு உதவி செய்ததன் மூலம், ராவணன் அழிவதற்குத் தானும் ஒரு காரணமாக இருந்தார். எனவே, அவரும் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்குக் காட்சி தந்த சிவனார், அவரது பாவத்தைப் போக்கியதோடு ஜோதி சொரூபமாக மாறி, இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இந்த லிங்கம், சுவாமி சந்நிதி பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது. நம் நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் தென்னாட்டிலுள்ள ஒரே தலம் இதுவே.
ராமநாதர் சந்நதியின் தென்புறத்தில் அம்பிகை பர்வதவர்த்தினி வீற்றிருக்கிறாள். அம்பிகையின் பீடத்திற்குக் கீழ் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ரம் உள்ளது. இங்கு அஷ்டலட்சுமிகள், மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. மதுரையில் இருப்பது போல் சுவாமி சந்நதிக்கு வலப்புறம் அம்பிகை சந்நதியிருப்பதால் மிகவும் மகத்துவம் உடையதாகப் பக்தர்கள் கருதுகின்றனர். அம்பாள் சந்நதியின் வடகிழக்கு மூலையில் பள்ளியறை உள்ளது.
ஒவ்வோர் இரவும் ராமநாதரின் தங்க விக்ரஹம் இங்கு எழுந்தருளச் செய்யப்பட்டு பள்ளியறை ஊஞ்சலில் அம்பிகையின் தங்கத் திருவுருவத்தின் பக்கம் வைக்கப்பெற்று, இரவில் சயனபூஜை நடத்தப்படுகிறது. அதிகாலை அதே போன்று பூஜை நிகழ்த்தப்பெற்று ராமநாதரை மூலஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்கிறார்கள்.
அம்பிகை கோயிலின் வடமேற்கு மூலையில் ஆகாயத்தை நோக்கும் திருமுகமண்டலத்துடன் பள்ளிகொண்ட பெருமாளும், தென்மேற்கு மூலையில் சந்தான கணபதியும் தரிசனம் தருகின்றனர். அம்மன் சந்நதிக்கு முன் இருக்கும் விசாலமான மண்டபத்தில் ஆடிமாதம் திருக்கல்யாண விழா கொண்டாடப்படுகிறது.
இன்று நாம் காணும் பிரம்மாண்டமான ராமநாதர் கோயில் பல்வேறு காலகட்டங்களிலும் இத்தலத்தை ஆண்ட மன்னர்களாலும், நகரத்தார்களாலும் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது. கோயிலின் புகழ்பெற்ற மூன்றாம் பிராகாரம், உட்புறம் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடியும் கொண்டு விளங்குகிறது. மொத்தம் 1212 தூண்கள் உள்ளன. உயரம் 23 அடி. அனைத்துப் பிராகாரங்களுமே அவற்றின் சிற்ப வேலைப்பாட்டிற்காக உலகப் பிரசித்தி பெற்று
விளங்குகின்றன.
கருவறைக்கு நேர் பின்னே அமைந்திருக்கும் முருகன் சந்நதியில் நின்று இத்தலத் திருப்புகழை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம். பாடலில் அழகிய ராமாயணக் குறிப்பையும் பொருத்தமாக வைத்துள்ளார் அருணகிரியார்.
வாலவயதாகி, அழகாகி, மதனாகி, பணி
வாணிபமொடாடி, மருளாடி, விளையாடி, விழல்
வாழ்வு சதமாகி, வலுவாகி, மடகூடமொடு, பொருள் தேடி…
[இளங்காளை வயதை அடைந்து, அழகு நிரம்பப் பெற்று, மன்மதன் போல் விளங்கி, அதிக அளவில் ஊதியத்தை தரவல்ல பல தொழில்களை நடத்தி, மயக்க அறிவைப் பெற்று, சிற்றின்பத்தில் காலம் போக்கி, பயனற்ற வாழ்க்கையையே நித்தியம் என எண்ணி, அத்தகைய வாழ்விலே நம்பிக்கை கூடப் பெற்று, மாடகூடங்கள் கொண்ட செல்வனாய்ப் பொருளைத் தேடி…]
வாச புழுகு, ஏடுமலரோடு, மனமாகி, மகிழ்
வாசனைகளாதி இடலாகி, மயலாகி, விலை
மாதர்களை மேவி, அவர் ஆசைதனிலேசுழல சில நாள் போய்
[நறுமணம் உள்ள புனுகு, இதழ்களோடு கூடிய மலர் இவைகளில் மனத்தைச் செலுத்தியவனாகி, மகிழ்ச்சியுடன் வாசனைப் பொருட்கள் முதலானவற்றைப் பூசியவனாகி, காமப் பற்றுடன், பொது மகளிரை விரும்பி, அவர்கள் மீது கொண்ட ஆசையிலே சுழல, அங்ஙனம் சில நாள் போக..]
தோல் திரைகளாகி, நரையாகி, குருடாகி, இரு
கால்கள் தடுமாறி, செவிமாறி, பசு பாச பதி
சூழ்கதிகள் மாறி, சுகமாறி, தடியோடு திரியுறு நாளில்…
[உடலின் தோல் சுருங்கிப் போய், மயிர் வெண்ணிறம் பெற்று, கண்கள் ஒளியிழந்து, இரு கால்களும் தடுமாற்றமுற்று, செவிகள், கேட்கும் திறனை இழந்து, பதி, பசு, பாச ஞானம் முற்றிலும் மறைதலுற்று, சுகமெல்லாம் ஒழிந்து, தடிபிடித்துக் கொண்டு திரியும் முதுமை நாட்களில்…]
சூலை, சொறி, ஈளை, வலி, வாதமொடு, நீரிழிவு
சோகை, களமாலை, சுரமோடு பிணி, தூறிருமல்,
சூழலுற மூல கசுமாலமென நாறி, உடல் அழிவேனோ?
[சூலை, சொறி, கோழை, இழுப்பு வாதம், நீரிழிவு, ரத்த சோகை, கண்டமாலை, சுரம் இவற்றுடன் சேர்ந்து கிளைத்தெழும்இருமல், இவையெல்லாம் சூழ்ந்து பற்ற முக்கிய காரணமான ஆபாசமான இந்த உடல், துர்நாற்றம் அடைந்து அழிதல் உறுவேனோ?]
“நாலு முகன் ‘ஆதி அரி ஓம்’ என அதார முறை
யாத பிரமாவை விழ மோதி, ‘பொருள் ஓது’கென
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளமிடும் இளையோனே...”
[நான்கு முகங்களைக் கொண்டவனும், ஆதி அரி ஓம் என்பதற்கு ஆதாரமான பொருளைச் சொல்லத் தெரியாதவனும் ஆகிய பிரம்மாவை, விழும்படித் தாக்கி, “சரியான பொருளைச் சொல்லுக” என்று அவனது நான்கு தலைகளும் குடுமிகளும் சிதறுண்டு அலைய, தாளமிடுவது போலக் குட்டிய இளையவனே!]
“நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ் மயில்வீரா”
[நறுமணம் வீசும் கொன்றையைச் சூடிய ஜடையை உடைய சிவனாரது இடப்பாகத்தில் அமைந்துள்ள பார்வதி ஈன்ற முதல் குழந்தையாம் ஆனைமுகன் மகிழ்வுடன் சகோதர நட்பு பூண்ட இளையவனே! வள்ளிமலைக் காட்டிலே வாழ்ந்திருந்த ஞான குறமாதாகிய வள்ளியைத் தினைப் புனத்தின் கண் காதல் புரிந்து மணம் பூண்ட பெருமை வாய்ந்த மயில்வீரனே]
இராமேஸ்வரத்தில் பாடியிருக்கும் பாடலாதலால், இறுதியில் அரிய ராமாயணக் குறிப்புகளை வைத்துள்ளார்.
“ஓலமிடு தாடகை, சுவாகு, வளர் ஏழு மரம்
வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன், எழு
மோத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக
ஓகை தழல் வாளி விடு மூரி தநு நேமி வளை
பாணி, திரு மார்பன் அரிகேசன்…”
[கூச்சலிட்டு வந்த தாடகை, சுவாகு, வளர்ந்திருந்த மராமரங்கள் ஏழு, வாலி, நீலி, பகன், ஒப்பற்ற விராதன், எழுந்து அலைகள் வீசும் கடல், வலிமை மிக்க ராவணன், அவனைச் சேர்ந்த அரக்கர் கூட்டங்கள் யாவரும் போரில் பொடிபட்டு அழிய, களிப்புடன் நெருப்பு வீசும் அம்பைச் செலுத்திய கையை உடையவன், வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு இவைகளை ஏந்திய கையை உடையவன், அரி-கேசன் எனப்படும் திருமால்]
“(அரிகேசன்) மருகா எனவே
ஓத மறை ராமெசுர மேவு குமரா, அமரர் பெருமாளே!”
[அரி - கேசன் எனப்படும் திருமால் மருகனே என்று மறைகள் ஓதிப்புகழும் ராமேஸ்வரத்தில் இருக்கும் குமரனே! தேவர் பெருமாளே!]மற்ற அனைத்துக் கோயில்களுக்கும் இல்லாத தனிச் சிறப்பு, ராமநாதர் கோயிலில் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். கோயிலுக்கு யாத்திரை வருபவர்கள் முதலில் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வருகின்றனர். கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் (பெரும்பாலும் கிணறுகள்) உள்ளனஎன்பது உலகமகா அதிசயம் என்றே கூறலாம். தீர்த்தங்களின் பெயர்கள் பின்வருமாறு:
1.மஹாலட்சுமி தீர்த்தம்
2.சாவித்திரி தீர்த்தம்
3.காயத்ரி தீர்த்தம்
4.சரஸ்வதி தீர்த்தம்
5.சேதுமாதவ தீர்த்தம்
6.கந்த மாதன தீர்த்தம்
7.கவாட்ச தீர்த்தம்
8.கவாய தீர்த்தம்
9.நள தீர்த்தம்
10.நீல தீர்த்தம்
11.சங்கு தீர்த்தம்
12.சக்கர தீர்த்தம்
13.பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்
14.சூரிய தீர்த்தம்
15.சந்திர தீர்த்தம்
16.கங்கா தீர்த்தம்
17.யமுனா தீர்த்தம்
18.கயா தீர்த்தம்
19.சிவ தீர்த்தம்
20.சத்யாமிர்த தீர்த்தம்
21.சர்வ தீர்த்தம்
22.கோடி தீர்த்தம்
கோயிலுக்கு வரும் பக்தர்களனைவரும் இவற்றில் நீராடிச் செல்வதால் கோயில் தரைகளில் எப்போதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். இவை தவிர கோயிலுக்கு வெளியிலும் அடுத்த ஊர்களிலுமாக 32 தீர்த்தங்கள் உள்ளன. காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள், முதலில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கையில் மணலைப் போட்டுவிட்டு, காசியில் விச்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும்.
அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு லட்சக் கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்தில் தீர்த்த யாத்திரையை நிறைவு செய்கிறார்கள். மகாளய பட்சத்தில் இங்கு பித்ரு காரியங்கள் செய்வது மிக்க விசேஷமானது.27-01-1897 அன்று சுவாமி விவேகானந்தர் இக்கோயிலில் செய்த சொற்பொழிவின் தமிழாக்கம் அவர் சொற்பொழிவாற்றிய இடத்தில் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
சித்ரா மூர்த்தி