கீதை, பத்தாவது அத்தியாயத்தில் இருபத்தொன்றாம் ஸ்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சூரிய சந்திரர் இருவரும் தன் அம்சமாக இருப்பவர்கள் என்று உபதேசம் செய்துள்ளார். ஆண்டாள் பகவான் நாராயணனை “கதிர்மதியம் போல் முகத்தான்” என்று போற்றுகின்றார். அபிராமிபட்டர் அபிராமியை வர்ணிக்கின்றபோது முதல் பாடலிலேயே, “உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்” என்று சூரியனைப் போற்றுகின்றார். ராமனை ஆதித்ய திவாகரம் என்றும், கண்ணனை அச்சுத திவாகரம் என்றும், நம்மாழ்வாரை வகுள பாஸ்கரன் என்றும், திருமங்கை ஆழ்வாரை லோக திவாகரம் என்றும் போற்றுவார்கள். அறிவில் சிறந்தவர்களை ஞானபாஸ்கரர் என்று அடைமொழி கொடுத்து அழைப்பதுண்டு.பூஜா மந்திரங்களில் எந்த தேவதையை சொல்ல வேண்டும் என்றாலும், கோடி சூரியப் சமப்பிரபு என்று சூரியனைத்தான் ஒப்பிட்டு சொல்வார்கள். நமது இந்துமதத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி, வலப்புறம் உஷா, இடதுபுறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில கம்பீரமாய் வலம் வருபவர் சூரிய பகவான். இந்த உலகத்தை ஆளுகின்ற முப்பது முக்கோடி தேவர்களில் துவாதச ஆதித்தியர்கள் சொல்லப்படுகின்ற 12 சூரியனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சூரியனுக்குப் பகலவன், கதிரவன், பாஸ்கரன், அருணன் என்று பல பெயர்கள் உண்டு. சொல்லின் செல்வனான அனுமன், சூரியஓட்டத்திற்கு ஈடாக ஓடி அவரிடமிருந்து அத்தனை சாஸ்திரங்களையும் கற்றார் என்று புராணம் கூறுகிறது. எனவே, சூரியனின் அருளைப் பெறுவதற்கும் சூரியனுடைய சீடராகிய அனுமனை வணங்குவது சாலச்சிறந்தது.
பொதுவாக அனுமனின் அருளை சனிபகவானுக்கு மட்டும் உரியது என்று நினைப்பார்கள். அப்படிக் கிடையாது. அனுமனை வணங்குவதன் மூலமாக, அனுமன் அருளையும், சனியின் அருளையும், சூரியபகவானின் அருளையும் சூரியவம்சத்தில் உதித்த ராமருடைய அருளையும் பெற முடியும். எனவே, ராமநாம ஜபம் செய்பவர்கள்கூட, ஒருவகையில் சூரியன் அருளுக்கு உரியவர்களே. சுவைகளில் கார்ப்புச்சுவைகளுக்கு உரியவர். சமித்துகளில் எருக்கு சமித்துக்கு உரியவர். அதனால்தான் சூரிய சப்தமி அன்று எருக்கன் இலையை தலையில் வைத்து நீராடுகிறார்கள்.நவகிரகங்களுக்கு தலைவனாக விளங்கக் கூடிய சூரியனுடைய அருள்கிடைத்துவிட்டால் மற்ற கிரகங்களின் உடைய பூரணமான அருளைப் பெற்றுவிடலாம். ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் வந்தால் அன்று சூரிய வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். சூரிய உதயத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆதித்ய ஹிருதயம் போன்ற சூரிய தோத்திரங்களைச் செய்யலாம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய உதயத்தின்போது, பொங்கல் வைத்துப் படைக்கலாம்.சூரியனைத் தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை குறிப்பாகச் சூரியகாயத்ரி போன்ற மந்திரங்களைத் துதித்து வழிபட வேண்டும்.
பின்பு நவகிரக சந்நதிக்கு சென்று சூரியபகவானுக்குரிய செந்தாமரைப் பூவைச் சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய்தீபங்கள் ஏற்றி, தூபதீபங்கள் கொளுத்தி, கோதுமைகொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து, வழிபட வேண்டும். இதன் மூலமாக அளப்பரிய ஆற்றலைப் பெறலாம். உடலாரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். ஆதித்ய ஹிருதயம் ராமபிரானுக்கு அகத்தியர் உபதேசித்தார் என்பார்கள். இது மிகச்சிறந்த தைரியத்தையும் தியாகத்தையும் ஆத்மபலத்தையும் தரக்கூடியது. சோர்வைப் போக்கக்கூடியது. உடலின் சக்தியை அதிகப் படுத்தகூடியது. உடல்சார்ந்த நோய்களைத் தீர்ப்பது. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் சர்வசத்ரு விநாசனம் ஜெயா ஜெயம் நித்தியம் அக்ஷயம் பரமம் சிவம் சர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப பிரானாசனம் சிந்தா சோக பிரசன்னம் ஆயுர் வர்த்தனம் உத்தமம் சூரியனுக்கு உரிய தலங்கள் பல உண்டு. ஒரிசா மாநிலத்தில் கோனார்க் என்னும் இடத்தில் உள்ள சூரியன் கோயில் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டில் சூரியனுக்கான தலம் சூரியனார் கோயில். இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோயிலில் சூரியனுக்கு எதிரில் குருபகவான் நின்று அருள்புரிகிறார். சூரியன் உக்கிரம் தணிந்து நன்மையைச் செய்கிறார் என்கின்ற வகையில் இது சூரியன் கருணையை பெற்றுத்தரும் தலைமைத் தலமாக விளங்குகின்றது. சூரியனுக்கு உரிய தலங்களில் சிறந்த தலம் கும்பகோணம் சார்ங்கபாணி கோயில். இதனை பாஸ்கரத் தலம் என்பார்கள். சூரியன் உத்தராயண காலம் தைமாதம் முதல் ஆனிமாதம் வரை வடக்குவாசல் வழியாகவும் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண காலத்தில் தெற்குவாசல் வழியாகவும் பகவானை சேவிப்பான். சூரியனால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் இத்தலத்தில் உள்ள ஆராவமுதனை வணங்க நீங்கும்.தஞ்சாவூர் திருவையாறு அருகில் திருக்கண்டியூர் என்கின்ற திருத்தலம் சூரியனுக்கு உரிய திருத்தலம். சென்னை கொளப்பாக்கம் (சென்னை போரூர் சந்திப்பிலிருந்து 5 கி.மீ. தூரம்) அகத்தீஸ்வரர் கோயிலும் சூரியனுக்கு உரிய தலமே.