Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அழகென்ற சொல்லுக்கு முருகா...

முருகப் பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபதுமன் மனம் திருந்தி, மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் காட்சி தந்த போது, ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என சூரபதுமன் வேண்டினான். சூரபதுமனின் விருப்பத்தை முருகனும் ஏற்றார். ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம்புரிந்த இந்த மலைக்கு `மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்நாளும் இங்கே வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டான் சூரபதுமன். ‘‘பாலசித்தர் என்பவர் இங்கு மலையாக இருக்கும் உன் மீது அமர்ந்து தவம்புரிவார். அந்த சமயத்தில் உன் விருப்பம் நிறைவேறும்’’ என்று சொல்லி மறைந்தார் முருகன். சூரபதுமன் அந்த நாளுக்காக மலையாக நிலை கொண்டு காத்திருந்தான். மயூராசலம் என்ற இந்த பெயர்தான் சுருங்கி `மயிலம்’ ஆனது. ஒரு சிறிய மண்குன்றின் மீது நெடிய ராஜ

கோபுரத்துடன் இருக்கிறது கோயில்.

பசுமையான மரங்கள் சூழ்ந்திருப்பதால் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல அழகாக காட்சி தருகிறது அந்த மலை. மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது கோபுரம்.மலை ஏறும் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்களும்கூட சிரமமில்லாமல் ஏறும்விதமாக அமைந்திருப்பது இங்கு விசேஷம். இந்த திருக்கோயில் பதினோரு தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இந்த குளம் மலைக்கு தென்கிழக்காக உள்ளது. இதில் நீராடி அல்லது இந்த புனிதநீரைத் தலையில் தெளித்துக்கொண்டு, குளக்கரையில் இருக்கும் சுந்தர விநாயகரை வழிபட்டு பிறகு மலையேறுவது பக்தர்கள் வழக்கம். தைப்பூசவிழாவின்போது பக்தர்கள் இந்த குளக்கரையிலிருந்துதான் காவடி எடுப்பார்கள். பக்திப் பெருக்கோடு பால் காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி என தோளில் சுமந்தபடி நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பாடி மலையேறுவார்கள். மலைமீது ஒருபுறம் ராஜகோபுரம், இன்னொரு பக்கம் பெரிய மண்டபம் என கோயிலுக்குள் செல்ல இரண்டு வழிகள். முருகனுக்கே திருமணம் நடந்த தலம் மயிலம்.

அதனால் இங்கு திருமணம் செய்துகொள்வது விசேஷம் என கருதப்படுகிறது. பல பக்தர்கள் இதை வேண்டு தலாகவே செய்கிறார்கள். முகூர்த்த நாட்களில் இந்த மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.மண்டபத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் முதலில் விநாயகரைத் தரிசிக்கலாம். அவருக்குப் பக்கத்திலேயே இருக்கிறது பாலசித்தர் ஜீவசமாதி. பொதுவாகச் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில் பக்தர்கள் கோரும் வரங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கும் அந்த நம்பிக்கை பொய்ப்பதில்லை. யாருக்கும் இணங்காத முருகனின் வேலே பாலசித்தரிடம் வசமானது என்பதால் அவரது சக்தி புரிகிறது. இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரத்துக்குக் கிளம்பும் முருகர், பாலசித்தரிடம்தான் வேலினை பெற்றுச் செல்கிறார்.பாலசித்தரை அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி - தெய்வானையுடன் நின்றிருக்கும் கோலம். ஒரு கையில் வேல், இன்னொரு கையில் சேவற்கொடி. பொதுவாக முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். ஆனால், இங்கு மட்டும் வடக்கு நோக்கியபடி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கோயில். காலை 6.00 முதல் பிற்பகல் 1.00; மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை கோயில் திறந்திருக்கும். ஞாயிறு, வெள்ளி, கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கோயில் நாள் முழுவதும் திறந்திருக்கும்.

நாகலட்சுமி