Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்ன சொல்லுது உங்கள் ராசி: ரிஷப ராசியினரின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை

என்ன சொல்லுது உங்கள் ராசி

முனைவர் செ.ராஜேஸ்வரி

ரிஷப ராசியின் ஆதிபத்திய கிரகமான சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். ஆங்கிலத்தில் வீனஸ் என்று அழைக்கப் படும் இக்கிரகம் மேலைநாட்டில் காதலுக்குரிய கிரகமாகும். நம் இந்திய சோதிடக் கணக்கில் கவர்ச்சி காட்சி, காதல் ஆகியவற்றிற்கு உரியது சுக்கிரன். திருமணம், தாம்பத்தியம், குழந்தைபேறு ஆகியவற்றிற்கு உரியது குரு பகவான்.

ரிஷப ராசிக் காதல்

ரிஷப ராசியின்ரின் காதலும், காமமும் அர்த்தம் நிரம்பியதாக இருக்கும். ரிஷப ராசிக்காரர் காதலிக்க அவசரப்பட மாட்டார். காதலை வெகு நிதானமாகத் தெரிவித்த பிறகு அந்தக் காதல் வாழ்க்கையை அழகாக எவ்வித வசவும் வன்முறையும் இன்றி கல்யாணத்தில் கொண்டு வந்து சேர்ப்பார். பின்பு, ஆயுள் பரியந்தம் இருவரும் முன்னோடி தம்பதி களாக இணைபிரியாமல் வாழ்வார்கள்.

காதலும் கல்யாணமும்

ரிஷப ராசிக்காரர் சொகுசுப் பேர்வழி என்பதால் வெளியே ஊர்சுற்றிக் காதலிப்பதை விரும்பமாட்டார். காதலிக்கும் போது நடந்து கொண்டே ஊர் சுற்றுவதை விரும்பாமல் நூலகம், காபி ஷாப், திரையரங்கம் போன்றவற்றையே விரும்புவர். திருமணம் ஆன பின்பும்கூட இவர்களை வெளியிடங்களில் அதிகமாக காண இயலாது. வயதில் மூத்தவர்களையும் குலதெய்வத்தையும் ஊர்ப் பெரியவர்களையும் அதிகம் மதிக்கக்கூடியவர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். எனவே, அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பி வந்துவிடுவர்.

பொருத்தமற்ற ரிஷப ராசிகள்

ரிஷப ராசிக்காரருக்கு யாரும் யோசனை சொல்வதோ, கட்டளை இடுவதோ பிடிக்காது. அவரே ஒரு விஷயத்தை ஒரு முறைக்கு 100 முறை யோசித்துதான் முடிவெடுப்பார். அதில் மற்றவர்கள் தலையிடுவதை அவர் எப்போதும் விரும்பமாட்டார். எனவே, குரு மற்றும் செவ்வாய் ராசிக்குரிய தனுசு, மேஷ ராசிப் பெண்கள் இவர்களுக்கு பொருந்த மாட்டார்கள்.

பொருத்தமான ஜோடி

ரிஷப ராசியினருக்குப் பொருத்தமான துணை, கன்னி மற்றும் மகரராசியினர் ஆவர். சில வேளைகளில் விருச்சிக ராசியினர் எதிர்த் துருவங்கள் ஈர்க்கும் என்ற முறையில் ஈர்க்கப்படலாம். சுக்கிரனுக்கு புதன் நட்பு கிரகம் என்பதனால் கன்னி ராசியினர் இவர்களை மிகவும் ரசித்து கொண்டாடி மகிழ்வார்கள். மகர ராசியினரின் சஞ்சலத்தை போக்கக் கூடியவர்கள் ரிஷப ராசியினர் மட்டுமே. மீன ராசி ஆண்கள், ரிஷப ராசிப் பெண்களுக்கு பொருத்தமான துணையாக விளங்குவர். காரணம், மீன ராசியினர் முதிர்ச்சி அடைந்த ராசியினர். இவர்கள் ரிஷப ராசிப் பெண்களின் ஆளுமைக்கு மதிப்புக் கொடுப்பார்கள்.

வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்ப்பது என்ன?

திட்டமிடுதலிலும் தற்பெருமையிலும் மற்ற ராசிகளைவிட ஒரு படி கூடுதலாக இருக்கும் ரிஷப ராசியினர், சூழ்ச்சிக்காரர்களோ தந்திரக்காரர்களோ கிடையாது. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத ஒரு காரியம் நடந்தால் கத்தியின்றி ரத்தமின்றி சத்தியாகிரகம் செய்து ‘சைலன்ட் வயலன்ஸ்’ மூலமாக, தான் நினைத்ததை சாதித்து விடுவார்கள். ரிஷப ராசிக்காரர் மனைவியோ கணவனோ வாழ்க்கைக்குத் துணையாக மட்டும் இருந்தால் போதுமே தவிர, மூளையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ரிஷப ராசி மனைவியர்

ரிஷப ராசி பெண்கள் பார்க்க சற்று பூசினாற் போல் இருப்பார்கள். சுக்கிரன் ராசியில் பிறந்த பெண்கள் கவர்ச்சியாக பெண்மையின் நளினத்தோடு அடக்கத்தோடும் இந்த உலகில் ஒரு பெண்ணால் செய்ய முடியாதது, சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது என்ற அழுத்தமான தன்னம்பிக்கையோடும், ஆனால் வெளியில் பார்ப்பதற்கு பவ்வியமாக நடந்து கொள்பவர்களாகவும் இருப்பர். இவர்களை மீறி வீட்டில் ஓர் அணுகூட அசையாது. எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும், வீட்டின் மொத்த பொறுப்பையும் இவர்களே சுமப்பார்கள். சுமப்பது தெரியாமல் அதனை இலகுவாக்கி, வைரக்கிரீடம் போல பிரகாசமாக விளங்க, மகாராணி போல சுமப்பார்கள்.