Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடவுள் தரும் வாய்ப்புகளைபயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

ஒரு கிராமத்தில், கடவுள் பக்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு எப்போதுமே கடவுளின் நினைப்பு மட்டும்தான். எந்நேரமும் கடவுளை மட்டுமே வேண்டிக் கொண்டிருப்பார். ஒருநாள், அவருடைய கிராமத்தில் பயங்கர மழை, புயல், வெள்ளம் வந்துவிட்டது. இதைப் பார்த்து பயந்த கிராம மக்கள், அந்த ஊரையே காலி செய்துவிட்டு செல்கிறார்கள். அப்போது ஒருவர், கடவுள் பக்தரிடம் வந்து,

``ஐயா! இந்த கிராமத்தில் இருப்பது பாதுகாப்பில்லை. நீங்களும் எங்களுடன் வாருங்கள். இங்கிருந்து போய்விடலாம்’’ என்று சொல்கிறார். அதற்கு அந்த பக்தரோ,

``என்னை கடவுள் பார்த்துக் கொள்வார். நீங்கள் செல்லுங்கள்’’ என்று அவரை அனுப்பி வைத்துவிடுகிறார். இப்போது மழைத் தண்ணீர் இடுப்பு வரை வந்துவிட்டது. அப்போது படகில் சென்ற ஒருவர்,

``மழை நிற்பதுபோல தெரியவில்லை. எங்களுடன் படகில் வந்துவிடுங்கள்’’ என்று சொல்ல,

``என்னை இறைவன் பார்த்துக் கொள்வார். நீங்கள் கிளம்புங்கள்’’ என்று சொல்லி அனுப்பி வைத்துவிடுகிறார். இப்போது தண்ணீர் கழுத்துவரை வந்துவிடுகிறது. ஹெலிகாப்டரில் காப்பாற்ற வந்தவர்கள் கயிற்றை கீழே போட்டு

``ஐயா, இதை பிடித்து மேலே வந்துவிடுங்கள்’’ என்று கூப்பிடுகிறார்கள். அதற்கு அந்த பக்தன்,

`‘என்னை இறைவன் காப்பாற்றுவார்’’ என்று சொல்லி, அவர்களையும் அனுப்பி வைத்துவிடுகிறார். சிறிது நேரத்திலேயே அந்த பக்தர் இறந்துவிடுகிறார். இப்போது அந்த பக்தன் கோபமாக கடவுளிடம் சென்று,

``கெட்டவன், திருடன், குடிக்காரன் எல்லோரையும் காப்பாற்றிவிட்டாய். ஆனால், உன்னையே நம்பிக்கொண்டிருந்த என்னை மட்டும் கைவிட்டு விட்டாயே!’’ என்று கேட்கிறான்.

அதற்கு கடவுள் சொல்கிறார், ``முதலில் உன்னை காப்பாற்ற ஒரு மனிதனை அனுப்பினேன். பிறகு ஒரு படகை அனுப்பினேன். கடைசியாக ஹெலிக்காப்டரை அனுப்பினேன். நீ வராததற்கு நான் என்ன செய்ய முடியும்’’ என்று கேட்டார். இறைமக்களே, தேவன் அனுமதிக்கும் சூழமைவை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் போதகர், பெற்றோர், நல்லநண்பர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகளும் சிலசமயங்களில் தேவனிடத்திலிருந்து வரும் ஆலோசனைகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவன் வழங்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டியது நம் கையில்தான் உள்ளது. அப்படி அவர் தரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நம்முடைய சாமர்த்திய

மாகும்.

அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.