Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இனிமையாக பேசும் அபிராமியம்மை!

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

அப்பொழுதும் சினம் குறையாத கங்கை பூவுலகத்தின் வழியாய் சென்றுகொண்டு இருக்கும்போது ஜன்னு முனிவர் ஆசிரமத்துக்குள் நுழைந்தாள். அதை கண்டு கோபித்த ஜன்னு முனிவர் அவளை தன் வாயினால் குடித்து தன் உடலுக்குள் ஒடுக்கினார். சினம் கொண்ட அவரிடத்து கேட்க முடியாமல், அம்முனிவருக்கு விருப்பமான இந்திரனிடத்து வேண்ட, இந்திரன் குறித்து தவம் செய்தான் பகிரதன்.

தவத்தில் மகிழ்ந்த இந்திரன் யாது வரம் வேண்டும் என வினவ, ஜன்னு முனிவர் விழுங்கிய கங்கையை வெளிப்படுத்தி அருளல் வேண்டும் என கூற, அப்படியே ஆகுக என வரம் அளித்து ஜன்னு முனிவரிடத்து இந்திரன் சொல்ல, ஜன்னு முனிவர் விழுங்கிய கங்கையை காதின் வழியாய் வெளிப்படுத்தினார். அதன் பிறகு பாதாள லோகத்திற்கு அழைத்துச் சென்று, தன் முன்னோர்களின் அஸ்தியை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு மோட்சம் அளித்து அவர்களின் அருளால் புத்திரப்பேறு எய்தினான் அவ்வரசனான பகீரதன்.

சிவபெருமான் தலைக்கு கங்கை வந்த கதையை சூட்டவே “தலை வந்த ஆறும்” என்று கூறிப்பிட்டார். மேலும் பகீரதன் என்ற அந்த அரசனின் பெயராலேயே பூவுலகத்தில் வந்த கங்கைக்கு ‘பாகீரதி’ என்ற பெயர் வந்தது. ஜன்னு முனிவர் அடக்கியதால், ‘ஜான்னவி’ என்று பெயர். காதின் வழியாய் வெளிப்பட்டதால் ‘கர்ணிகா’ என்று பெயர்.

சொர்க்க லோகத்தில் இருந்து தலைக்கு வந்ததால் ‘ஸ்வர்கங்கா’ என்று பெயர். பூவுலகத்தில் வழி சென்றதால் ‘பூகங்கா’ என்ற பெயர். பாதாள உலகிற்கு சென்றதால் ‘பாதாள கங்கா’ என்று பெயர். `கம் கச்சதி’ என்பதற்கு செல்லுபவள் என்று பொருள். `காம்’ என்பதற்கு சொர்க்கம் என்பது பொருள். இரண்டையும் இணைத்து சொர்க்கத்தில் செல்லுபவள் என்று பொருள்படும் வகையில் கங்கா என்று பெயர். இதையே பட்டர் “தலை வந்த ஆறும்” என்கிறார்.

``கரந்தது எங்கே’’ “கரந்தது” என்ற சொல்லிற்கு மறைந்தது என்பது பொருள். எங்கே மறைந்தது என்பதையே ‘‘கரந்தது எங்கே” எனக் குறிப்பிடுகிறார். இந்த வினாவிற்கு மூன்று விடைகளை தருமாறு இப்பாடல் அமைந்துள்ளது. அதை ஒவ்வொன்றாய் காண்போம்.ஊடல் என்ற குணத்தால் பாதிக்கப்படுவது சிவகாம சுந்தரியே. பாதிப்புக்கு காரணமாக இருப்பது காளியே. ஊடல் என்கின்ற குணமே மறைந்து போவது என்பதற்கு காரணம் சிவபெருமான் வணங்கியதே. சிவபெருமான் காளியோடு நடத்திய ஒரு சிறு பிழையால் பாதிக்கப்படுவது சிவகாம சுந்தரியே. அதனால் அதற்கு காரணமான காளி, சிவகாமிக்கு அஞ்சி மறைந்து போனால், காளி அஞ்சி மறைந்து போனதையே ``கரந்தது எங்கே’’ என்கிறார்.

சிவபெருமான் காளியிடத்து தவறு செய்வதற்கு உதவியாக இருந்த ஊழித் தீயும், ஆன்ம நலன் செய்யும் கங்கையுமே காரணம். உலகத்தை அழிப்பதற்கு கோபம் வேண்டும். அந்த கோபத்தின் வடிவமே காளி. உலகத்தை அழிப்பவள் உலகம் அழிந்த பிறகு அழியாத ஆன்மாவே எஞ்சி நிற்கும். அந்த ஆன்மாவிற்கே நன்மை செய்பவள்அவள். காளி, கங்கை என்ற இருவருமே அழித்தல் தொழிலை செய்வதற்கு சிவபெருமானுக்கு உடன் இருந்து உதவி செய்பவர்கள். இவர்களுள் சிவபெருமான் உடலுக்கும் உயிருக்கும் நன்மை செய்பவன். காளியும், கங்கையும், ஊழித் தீயும் ஆன்மாவிற்கு மட்டுமே உதவி செய்பவர்கள். சிவகாமியம்மை உடலுக்கு மட்டுமே நன்மை செய்பவள். இக்கருத்து சக்தி கோட்பாட்டில் மட்டுமே உள்ளது. அதைக் கொண்டே இப்பாடலை பார்க்க வேண்டும்.

சிவபெருமான் சிவகாமசுந்தரி ஊடலை தணிப்பதற்காகவே திருவடியை தீண்டினர். திருவடியை தீண்டியதாலேயே சிவகாமசுந்தரியின் ஊடலானது தணிந்தது. சிவகாமியின் காலை நடராஜர் தீண்டும் போது ஊடல் சீற்றத்தின் மிகுதியினால், கையில் உள்ள தீ சூரியனிடத்து நட்சத்திரம் போல் சிறுத்து, தலையில் உள்ள ஆறு கடலில் கலப்பது போல் மறைந்தது. இதை மனதில் கொண்டே கைவந்த தீயும் தலை வந்த ஆறும் “கரந்தது எங்கே” என்கிறார்.

``மெய்வந்த நெஞ்சின் அல்லால்’’“மெய்” என்ற வார்த்தையை அபிராமி பட்டர் பூசனை செய்தல், வாக்கினால் சொல்லப்படும் பொய், அபிராமியம்மையின் உடல், சிவபெருமானின் உடல், தன் உடல் என்ற ஐந்து பொருள்களில் பயன்படுத்துகிறார். அதை அறிவது இச்சொல்லின் பொருளை முழுவதுமாய் உணர உதவிபுரியும். அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.

“மெய்” என்பது சாஸ்திர கலைச்சொல் இதற்கு தேவதையை குறித்து மனிதர்கள் தன் உடலால் செய்கிற செயல் அனைத்துமே “மெய்” என்ற வார்த்தையால் குறிப்பிடலாம். உதாரணமாய் குளித்தல், உணவு அருந்தாது விரதம் இருத்தல், பிரம்மச்சரிய விரதம் இருத்தல், ஆலயங்களுக்குச் சென்று தூய்மைப்படுத்துதல், தெய்வத்திற்கு நமஸ்காரம் செய்தல், பூசனைக்கு தேவையான பொருள்களை தயார் செய்து அர்ச்சனைகளுக்கு உதவுதல் போன்ற உடல் வருத்தி செய்யப்படுகிற வழிபாடு குறித்து செய்யப்படும் அனைத்து செயல் களையுமே “மெய்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். “மெய்” என்பதற்கு உடல் என்று பெயர்.

இதையே ‘மெய்த் தொண்டு செய்தே’ (44) என்பதனால் அறியலாம். “மெய்” என்ற சொல்லுக்கு மனிதர்கள் பேசும் போது பின்பற்றப்படும் பொய்யின் எதிர்மறையை “மெய்” என கூறுவர். அதில் உண்மையை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லை “மெய்” என்பர். இதையே ‘பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய்’ (57) என்பதனால் அறியலாம். “மெய்” என்பதற்கு உடல் என்று ஒரு பொருள், ஆலயத்தை பொறுத்த வரை இது உமையம்மையின் திருமேனியை குறிக்கும். இதை ‘மெய்ப் பீடம்’ (60) என்பதனால் அறியலாம்.

“மெய்” என்ற சொல்லால் அபிராமிபட்டர் சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் என்ற திருவுருவத்தையே குறிப்பிடுகிறார். இதையே ‘மெய் அடைய’ (62) ‘மெய்யில் பறித்தே’ (76) என்பதனாலும் அறியலாம். “மெய்” என்ற சொல்லால் அபிராமிபட்டர் உடலை குறிப்பிடுகிறார். உடலில் ஏற்படும் பக்தி உணர்வு தோன்றும் போது ஏற்படும் மாறுதலை சூட்டவே பயன்படுத்துகிறார். இதை `மெய்ப்புளகம்’ (94) என்பதனால் அறியலாம். இந்தப் பொருள்கள் அனைத்தையுமே ஒருங்கிணைத்து “மெய்வந்த நெஞ்சின் அல்லால்” என்கிறார்.

``ஒரு காலும் விரகர் தங்கள்’’ என்பதனால் எப்பொழுதும் அபிராமியம்மையானவள் தீய பண்புகள், தீய விளைவுகளைத் தோற்றுவிக்கும் எண்ணம் உடையவர்களுக்கு அருள் செய்வது இல்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறார். பொதுவாக குருவினிடத்து மந்திரம் உபதேசமாக பெற்று அதை சாத்திர வழியில் முறையாக ஜபம் செய்பவர்களுக்கு சிறப்பாக சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளை மீறினால், ஜபம் செய்வதன் பலன் கிடைக்காது போய்விடும். மேலும் சில தீய விளைவுகளும் தோன்றும் என்கிறது உபாசனை நெறி. அதில் தேவதைக்கு தக்கவாறு சில ஒழுக்கங்களை குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில்

* மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும்.

* எல்லா இடத்திலும் உணவு அருந்தக்கூடாது.

* காலம் தவறி பூசனை செய்யக் கூடாது.

* தினசரி ஆலயத்திற்கு கட்டாயமாக சென்று வர வேண்டும்.

* மந்திரம் உபதேசித்த குருவை நிந்தனை செய்யக்கூடாது.

* பூசனை விக்கிரகங்களை குருவின் அனுமதி இல்லாமல் தானாக வாங்கியோ பிறர் கொடுத்தாலோ அதை வாங்கி பூசிக்க கூடாது.

* உணவு அருந்துவதற்கு முன்னரே இறைவனை பூசிக்க வேண்டும்.

* உணவு அருந்தியதற்கு பின் பூசிக்கக் கூடாது.

என்பதை போல பெண் ஆசை உடையவராக இருக்கக் கூடாது. இது போன்ற செயல்களை செய்பவர்களை விட்டு தெய்வம் விலகியிருக்கும் என்பதையே தெரிவிக்கவே ``ஒரு காலும் விரகர் தங்கள்’’ என்கிறார்.

``பொய்வந்த நெஞ்சில்’’ அபிராமி பட்டர் “பொய்” என்பதை பற்றி விளக்கமாக கூறாவிட்டாலும், ஆங்காங்கே சில பாடல்களில் பொய்யின் தீமையையும் மறைமுகமாக காட்டுகிறார். அவர் நோக்கில் மனதில் உள்ள வஞ்சனை, ஆசை போன்றவை, மனதின் தூய்மையைக் கெடுத்துவிடும். அவற்றுள் முதன்மையானது “பொய்” இதையே `நெஞ்சத்து அழுக்கை எல்லாம்’ (27) என்கிறார்.

மனிதர்கள் துன்பப்படும் போதும், மனிதர்களுக்கு தேவை ஏற்படும் போதும் “பொய்” தோன்ற வாய்ப்பு உள்ளது என்கிறார் பட்டர். அதையே `உழைக்கும் பொழுது’ (33) (துன்பப்படும்போது) என்பதனால் அறியலாம். மனிதர்கள் சுகத்தை அனுபவிப்பதற்காவும், கள் முதலிய போதை தரும் பொருள்களை உண்பதனால் தோன்றும் புலம்பலும் “பொய்” யை தோற்றுவிக்கும் என்கிறார் அபிராமி பட்டர். இதையே போகம் செய்யும் `மருளே’ (36) (மயக்கமே) என்பதனால் அறியலாம்.

இயல்பாகவே வறுமை, அறியாமை இவற்றால் மனதினுள் தீய குணம் தோன்றும். அந்த வகையில் உடனாக “பொய்”யும் தோன்றும். இதையே ‘தீமை நெஞ்சில்’ (43) என்பதனால் அறியலாம். வறுமையின் காரணமாக வளமையானவர்கள் இடத்து சென்று யாசிக்கும் போது, அவர்கள் தர மறுத்தால் அவர்களுக்கு தக்கவாறு “பொய்” சொல்லி அதை பெற முயல்வர் என்பதையே `பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய்’ (57) என்பதால் அறியலாம். மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டே ``பொய்வந்த நெஞ்சில்’’ என்கிறார்.

``புகல் அறியா’’

``புகல் அறியா’’ என்ற வார்த்தையினால் அபிராமியம்மையானவள் தவறாக உபாசனை செய்பவர்களிடத்து செல்ல மாட்டாள், அவர்களது உள்ளத்தில் நுழைய மாட்டாள் என்பதையே ``புகல் அறியா’’ என்கிறார். எந்த தீய பண்பு இருந்தாலும் அதை தவிர்த்து துன்பத்தைத் துடைக்க முயல்வாள் என்றாலும், பொய் என்ற பண்பை மட்டும் மிகுதியாய் கொண்டவர்களிடத்து அபிராமியானவள் சென்று அருள் செய்ய மாட்டாள் என்பதை ``புகல் அறியா’’ என்கிறார்.

``மடப் பூங்குயிலே’’

அபிராமியம்மை இனிமையாக பேசுவாள். அப்படி பேசுவது குயில் கூவுவது போல் இனிமையாக இருக்கும். “மடப் பூங் குயில்” என்பது மிகவும் சிறிய வயதை உடைய குயில். அது கூவுவது மற்ற எல்லா குயில்கள் கூவுவதைவிட செவிக்கு மிகவும் இனிமை தருவதாக அமையும். இதை `பண்ணளிக்கும் சொல்’ (15) என்பதனால் அறியலாம். அபிராமியம்மையை குயிலோடு ஒப்புமைப்படுத்தி பேசுகிறார். குயில் கூவுவது இனிமையாக இருக்கும். அதை போல அபிராமியம்மை பேசுவது அதை விட இனிமையாக இருக்கும். இதையே `பாலையும் தேனையும் பாகையும் போலும் பனி மொழியே’ (86) என்பதனால் அறியலாம்.

“மட” என்பதற்கு பெண்களின் வளர்ச்சி பருவம் என்பது ஒரு பொருள். அந்த வகையில் 36 வயது முதல் 48 வயது வரை உள்ள பெண்களை “மட”ந்தை என்பர். அபிராமியம்மையோ பரமனை மணந்து, விநாயகர் முதலிய ஐந்து புதல்வர்களை பெற்று, குடும்ப பெண்ணாக தோன்றுகிற நிலையிலும் இனிமையான இசை போன்று பேசும் குயிலை ஒத்தவளாய் பேசுவதையே ``மடப் பூங்குயிலே’’ என்கிறார். மேலும் ஆலவாய் என்னும் மதுரை தலத்தில் எழுந்தருளி இருக்கும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் உமையம்மை குயிலாக இருக்கிறாள் என்கிறது கடம்பவன புராணம். இதையே `குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை’ (99) என்பதனால் அறியலாம். இந்த அனைத்து கருத்துக் களையும் மனதில் கொண்டு ``மடப் பூங்குயிலே’’ என்கிறார்.

“அந்தமாக”

“தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்” என்பதனால் சிவபெருமான் ஊடல் கொண்ட சிவகாமியம்மையை சமாதானம் படுத்த தானாக முன் வந்துஅவளை தீண்டும் போதும் என்பதையும்.“கைவந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே” என்பதனால் அவர் கையில் ஊழி தீயையும் அவர் தலையில் வந்த கங்கை என்ற ஆறானது மறைந்து போனது எங்கே என்று கேட்பதனால் உமையம்மைக்கும் சிவபெருமானுக்கும் இடையில் உள்ள ஊடல் உணர்வு, அதன் மிகுதி, அது தீர்ந்துபோன விதம் போன்றவற்றை ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார்.

“மெய்வந்த நெஞ்சின் அல்லால்” என்பதனால் உண்மையானவர்கள் உமையம்மை இடத்திற் கொண்ட உள்ளன்பின் சிறப்பையும்``ஒரு காலும் விரகர் தங்கள் பொய் வந்த நெஞ்சின் புகல் அறியா” என்பதனால் அபிராமியம்மையின் அருள் பெறுவதற்கு உபாசகருக்கு இருக்கக் கூடாத பண்பாகிய பொய் கூறுதல் கூடாது என்ற பண்பையும்“மடப் பூங்குயிலே” என்பதால் குரல் இனிமை வாய்ந்த உமையம்மையின் குண நலத்தையும் குறிப்பிடுகிறார். அதை அறிந்து அவளது அருளைப் பெற முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்