Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுநந்தாபீடம் - சுநந்தா

தேவியின் மூக்கு விழுந்த இடம். பீட சக்தி ஸுநந்தா என போற்றி வழிபடப்படுகிறாள். பீடமும் ஸுநந்தா பீடம் என்றே அழைக்கப்படுகிறது. திரியம்பகர் எனும் பைரவரின் கட்டுப் பாட்டில் இந்த பீடம் உள்ளது. பங்களாதேஷில் உள்ள குல்நார் பாரிஸால் ரயில் நிலையத்திலிருந்து, ஷிகாபூர் சென்று இந்த பீடத்தை அடையலாம். பீடநாயகி அருளும் தலம் யுக்ரதாரா என அழைக்கப்படுகிறது. இந்த பீடத்தில் செய்யும் யோகப் பயிற்சிகள் சீக்கிரம் சித்தியாகும்.

மந்திரங்களை ஜபிக்க அந்த தேவதையை பிரத்யட்சமாக தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை

திரியம்பகரின் பட்டத்துராணி. நல் ஞானமுத்து மூக்கில் மின்ன அழகோவியமாய் பொலிபவள். பேரானந்தமும், மெய்ஞ்ஞானமுமாகிய இன்பக்கடலில் நம்மை மூழ்கச்செய்பவள் இத்தேவி. ஸுநந்தா நதிக்கரையில் அருளும் அம்பிகையை அனவரதமும் தியானித்து பேறுகள் பெறுவோம்.

கண்டகீ பீடம் - கண்டகீஸ்வரி

தேவியின் வலது கன்னம் விழுந்த இடம். பீட சக்தி கண்டகீஸ்வரி என்று போற்றப்படுகிறாள். சக்ரபாணி எனும் பைரவர் இந்த பீடத்தை ஆள்கிறார். நேபாளத்தில் உள்ள முக்திநாத் கண்டகீ நதியின் ஆரம்ப இடம். நோபாள் தலைநகர் காட்மாண்டு சென்று அங்கிருந்து போக்ரா செல்ல வேண்டும். மச்சே பூச்ரா சிகர தரிசனம் முடிந்து அங்கிருந்து ஜும்சம் பகுதிக்கு விமானத்தில் செல்ல வேண்டும். அங்கிருந்து 5 நிமிடத்தில் கண்டகி நதித்தீரத்தை அடையலாம்.

கண்டகி நதியை வணங்குபவர்களுக்கு தேவியின் ஆசியும், அருளும் நிச்சயம் உண்டு. வண்டுகள் மொய்க்கும் தாமரை போன்ற கருவிழிகள் அழகு செய்யும் அன்னையின் முகம் பக்தர்களின் சோக மேகங்களை ஓடஓட விரட்டும். அழகு மேனியோ தங்கமென ஜொலிக்கும். சாளக்கிராம சிலா மூர்த்தங்கள் உற்பத்தியாகும் கண்டகீ நதி எனும் கண்டகீ பீடம், கங்கையை விடப் புனிதமாகும். வேண்டும் வரங்களை வேண்டிடும் முன் அருளும் அன்னையைப் பணிவோம்.

சர்வாஸா பீடம்

தேவியின் இடது கன்னம் விழுந்த இடம். பீடசக்தி விஸ்வேஸி என போற்றப்படுகிறாள். தண்டபாணர் எனும் பைரவர் இந்த பீடத்தின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். ஆந்திராவில் உள்ள ராஜமஹேந்திரத்தில் உள்ள மேற்கு கோவூர் அருகில் 30 கி.மீ. தொலைவில் கோடி தீர்த்தக்கரையில் இப்பீடம் உள்ளது. இந்த சக்தி பீட நாயகியை ராகினி என்றும் ஈசனை அமாயி என்றும் அழைத்து வழிபடுகின்றனர். வத்ஸநாபர் எனும் திருப்பெயரும் இப்பீட ஈசனுக்கு உண்டு.

குருபகவான் சிம்மராசியில் பிரவேசிக்கும்போது கோதாவரியில் புஷ்கரம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ஸத்சித்ஆனந்தம் எனும் கடலில் நீந்தும் அன்னப்பறவை போன்றவள் இத்தேவி. எங்கும் நீக்கமற நிறைந்தவள். சர்வேஸ்வரனுடன் இணைந்து கோதாவரி தீர்த்தத்தில் அருள் பவள். வணங்கிடும் அன்பர்களுக்கு அஷ்டமா சித்திகளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்து முன்வினைகளைக் களைபவள் இந்த அம்பிகை.

கர்நாடக பீடம் - ஷண்டகாமாட்சி

தேவியின் காது விழுந்த இடம். பீட சக்தி ஜலதுர்க்கா என்றும் தாம்ரபார்வதி என்றும் ஷண்டகாமாட்சி என்றும் இந்த அன்னை பல்வேறு திருநாமங்களால் போற்றி வணங்கப் படுகிறாள். தை அமீரு எனும் பைரவரே இப்பீடத்தை காவல்புரிவதாக ஐதீகம். இப்பீடம் மங்களூர் - கார்வார் வழித்தடத்தில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இப்பீடத்தை கோகர்ணம் என்றும் அழைப்பர். அப்பரும், திருஞானசம்பந்தரும் தரிசித்த தலம் இது. இத்தல சக்தி பீடநாயகி பக்தர்களின் ஆணவம், மாயை, கன்மம் எனும் மும்மலங்களை அகற்றி அவர்களின் துன்பங்களைக் களைபவள். ஏமகூடம் என்னும் பெயரும் இப்பீடத்திற்கு உண்டு. இப்பீடத்தை தரிசிக்க கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்று கூறப்படுகிறது.

வடக்கே காசி போன்று தெற்கே கோகர்ணம் போற்றப்படுகிறது. இத்தல ஈசனை பெயர்த்தெடுக்க ராவணன் முயன்றபோது அவன் ரத்தக் காயம் பட்டு அது இத்தலத் தீர்த்தத்தில் தெளித்ததால் அந்த ராவணனால் நிறுவப்பட்ட ஆத்மலிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. ஈசனும் அம்பிகையும் வேறு வேறல்ல என்பதால் இத்தல ஈசனின் சிறப்புகள் எல்லாம் அம்பிகைக்கும் உரியதானவையே. நம்பினோரைக் காக்கும் கர்நாடக பீடநாயகியின் பதமலர்களை நம்பி சரணடைந்து வளங்கள் பெறுவோம்.

ராதாகிருஷ்ணன்