அம்பிகைக்கு சேவை செய்யும் பல்லாயிரக் கோடி யோகினிகளில் முக்கியமான சுக்ர யோகினியைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்
சுக்கிரனும் சுக்கிர யோகினியும்
இந்திய ஜோதிட சாத்திரத்தின் படி ஒன்பது கோள்களில் ஆறாவதாக வரும் கிரகம் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர கிரகம் ஆகும். ஒரு மனிதனின் இல்லற வாழ்க்கை, அதன் சுகங்கள், பிறரை வசீகரிக்கும் அழகிய வடிவம், தங்கம் வைரம் முதலியன, ஆடம்பர வாழ்க்கை, வண்டி வாகனம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஈடுபாடு, செல்வந்தராகி சுகபோக வாழ்வு அனுபவிப்பது போன்றவற்றிற்கு சுக்ர பகவானே காரணம்.
இந்த வகையில் சுக்ரயோகினியும் தன்னை வழிபடும் பக்தருக்கு, மேலே நாம் கண்ட அனைத்து சுக போகங்களையும் அருள்பவளாக இருக்கிறாள். ஆகவே சுக்ர யோகம் வேண்டுமாயின் சுக்ர யோகினியை வழிபட வேண்டும் என்பதும், சுக்ர தோஷம் நீங்க வேண்டுமாயினும் இந்த தேவியை ழிபட வேண்டும் என்பதும் கண்கூடு.
சுக்ர யோகினியின் கையில் பிச்சை பாத்திரம் ஏன்?
இந்த யோகினி நான்கு கரங்களைக் கொண்டவளாக காட்சி தருகிறாள். இந்த யோகினியின் வலது பக்க கைகளில், ஒன்றில் காலியான கபாலத்தையும், மற்றொரு கரத்தில் ஒரு கண்ணாடியையும் தாங்குகிறாள். பிச்சைப்பாத்திரம் காலியாக இருந்தால்தான் பிச்சை இடுவார்கள். அது நிரம்பி வழியுமானால் யாரும் பிச்சை இட முடியாது. நமது உடல் அசுத்தம் இல்லாமலும், மனம் அகம்பாவம் இல்லாமலும் வெறுமையாக இருந்தால்தான் அம்பிகையின் அருளால் அதை நிரப்ப முடியும். ஆகவே, தனது பக்தர்களின் மனதில், இருக்கும் தீய எண்ணங்களான அசுத்தத்தை நீக்கி அதை, அம்பிகையின் அருள் நிரம்ப ஏற்ற வெற்றிடமாக மாற்றுகிறாள் இந்த யோகினி.
சுக்ர யோகினியின் கையில் கண்ணாடி ஏன்?
இந்த உலக வாழ்க்கையானது கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை போன்றது. கண்ணாடியில் அகல நீள அளவோடு காட்சித்தரும் உலகம் உண்மையில் அதனுள் இருப்பதில்லை. அது வெறும் பிரதிபிம்பம்தான். அது வெறும் மாயைதான். அந்த வகையில் நொடிக்கு நொடி மாறும் மாறும் இந்த உலகமும், பிறப்பு மற்றும் இறப்புக்கு மத்தியில் இருக்கும் இந்த வாழ்க்கையும் நிலைஇல்லாதது என்பதையும் மாயையானது என்பதையும் காட்டவே இந்த யோகினி கையில் கண்ணாடியை தாங்கி இருக்கிறாள். இதையே ஆதி சங்கரர், ``விஷ்வம் தர்ப்பண திருஷ்ய மான நகரீ துல்யம்’’ என்கிறார். அதாவது இந்த உலகாய வாழ்க்கை கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல நிலை இல்லாதது என்கிறார்.
மேலும், இந்த யோகினியின் கையில் இருக்கும் கண்ணாடியானது, ஒரு மனிதனுடைய அழகு அவனுடைய மனதில் இருக்கிறது, அவனது எண்ணங்களில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த யோகினியின் கையில் இருக்கும் கண்ணாடியைக் கொண்டு இந்த யோகினி தனது அழகை காணவில்லை. அதையும் கவனிக்க வேண்டும். மனித வாழ்வில் இளமை என்பது நிலையில்லாததாக இருக்கிறது.
ஆகவே ``இளமையில் கல்’’ என்பதற்கு ஏற்ப, இளவயதிலேயே அனைத்து கல்விகளையும் கற்று அறிந்து, தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று இது காட்டுகிறது.சுக்கிரன் கிரகம் பளபளப்பானது, அதுபோல இந்த யோகினியும் பிரகாசமுடையவள். ஒரு மனிதனின் மனம் ஞான ஒளியோடு இருக்க வேண்டும். உலகாய விஷயங்களில் ஈடு பட்டிருக்கும் மனதை, உள்ளே திருப்பி, யோக மார்க்கத்தில் செலுத்தி, அந்தர்யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு, மனத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் மெய்ஞானத்தை வெளியே கொண்டு வந்தால் மனம் ஞான ஒளியோடு கூடி பிரகாசிக்கும் என்பதை இந்த யோகினியின், கையில் வைத்திருக்கும் கண்ணாடி குறிக்கிறது.
சுக்ர யோகினியை வழிபடுவதால் வரும் நன்மைகள்
இந்த யோகினியை வழிபடுவோர் ஆன்மிக வாழ்வில் அபரிமிதமான முன்னேற்றம் அடைகிறார்கள். இவர்களுக்கு தியானம் எளிதில் கை கூடுகிறது. அவர்கள் உடலில் பிரபஞ்ச சக்தி அலை அலையாகப் பாய்ந்து நிரம்பும். தெய்வீக காட்சிகள் அவர்களது கண்களுக்கு தென்படும். யாராலும் கண்டறிய முடியாத மூலிகைகள், இவர்களுக்கு வசப்படும். அந்த மூலிகைகளைக் கொண்டு உலகில் இருக்கும் நோய்களை நீக்கும் சக்தியோடு விளங்குவார்கள். இவர்களது முகம் தேஜசோடு காணப்படும். இவர்கள் எப்போதும் வசீகரமாகப் பிரகாசிப்பார்கள்.
கையில் இருக்கும் மற்ற ஆயுதங்கள்
இந்த யோகினியை வழிபட்டால் வாக்கு சித்தி ஏற்படும். மற்றவர்கள், இந்த யோகினியின் உபாசகரது மொழியை கேட்டு மயங்குவார்கள். இதை உணர்த்துவது போல சுக்ரயோகினி தனது இடது கரம் ஒன்றில் ரத்தம் நிரம்பிய பாத்திரத்தை தாங்குகிறாள்.குண்டலினி யோகத்தில் ஒரு உபாசகன் உயர உயர அவனது முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் இருக்கும் குண்டலினியானது விழிப்படைந்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உச்சந்தலையில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவில் இருக்கும் சூட்சுமமான ஸஹஸ்ரார சக்கரத்தை அடைகிறது.
அங்கே குண்டலினி சென்றதும், அங்கு அம்பிகையின் அருளால் அமுதம் பெருகி அந்த அமுதம் உடல் எங்கும் பரவுகிறது. இதை லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும், ``ஸஹஸ்ராராம்புஜாரூடா சுதா சாராபி வர்ஷினி’’ என்ற நாமம் நமக்கு காட்டிக் கொடுக்கிறது.
இப்படி யோகத்தில் உயர்ந்த ஒரு நிலையை எளிமையாக அடைய தனது சாதகனுக்கு உதவுபவள் என்பதால் இந்த யோகினியின் கையில் பொங்கி வழியும் பாத்திரம் இருக்கிறது.இந்த யோகினி தனது மற்றொரு கரத்தில், திரிசூலத்தை தாங்குகிறாள். உபாசகனின் உபாசனைக்கு தொல்லை கொடுக்கும் அவனது எதிரிகளை இவள் இந்த சூலத்தை கொண்டு அழிக்கிறாள் என்பதையும், சாதகனின் புறத்தில் இருக்கும் பகைவர்களையும் அகத்தில் இருக்கும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று அகப் பகைவர்களையும், தீய குணங்கள் எண்ணங்கள் என்ற பகைவர்களையும் இவள் அழித்து ஒழிக்கிறாள் என்பதை இது காட்டுகிறது.
சுக்கில தாதுவும் சுக்ர யோகினியும்
அம்பிகை யாகினி என்ற ரூபத்தில், தலையின் உச்சியில் இருக்கும் ஸஹஸ்ரார சக்கரத்தில் இருந்த படி உடலில் இருக்கும் சுக்கிலம் என்ற தாதுவுக்கு அதிதேவதையாக அதை தோற்றுவிப்பவளாக இருக்கிறாள் என்பதை லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது. யாகினி ரூப தாரிணி என்ற நாமமும், சுக்கில ஸம்ஸ்திதா என்ற நாமமும் இதை தெளிவாக சொல்கிறது.
இந்த சுக்கில தாதுவின் வடிவில் இருந்து அடுத்த சந்ததியை உருவாக்கும் சக்தி வாய்ந்த யோகினியாக சுக்ர யோகினி இருக்கிறாள். இந்த சுக்ரயோகினி, இந்த உலகில் உள்ள அனைத்துக்கும், பீஜம் அதாவது விதை போன்றவள். இல்லற சுகத்தினை அளித்து வம்ச விருத்தி ஏற்படுத்துவதை அவள் கையில் உள்ள பாத்திரத்தில் உள்ள ரத்தம் அறிவிக்கிறது. இவளே அனைத்து வகையான சிருஷ்டிக்கும் ஆரம்பமாக இருக்கிறாள்.
ஜி.மகேஷ்

