Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுக்கிர தசை உங்கள் வாழ்வை உயர்த்துமா?

ஓவர் பணம், காசு, பட்டம், பதவி, வீடு, வண்டி, என்று சடசட வென்று முன்னேறிவிட்டார் என்றால்,`அவருக்கு என்ன சார், சுக்கிர தசை அடித்து தூக்கிவிட்டது’’ என்று நாம் சொல்வது வழக்கம். அதேபோல, ஒருவர் மிகுந்த கஷ்டப்படுகின்றார். எடுத்ததெல்லாம் தோல்வி. தொடர் கஷ்டங்களாலே அவர் சங்கடப் படுகின்ற பொழுது, ``சனி தசை வாட்டுகின்றது’’ என்று சொல்வார். பெரும்பாலும் என்ன நினைத்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், சுக்ர தசை என்றால் எல்லாருக்கும் அது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தந்து வாழ்க்கையை உயர்த்திவிடும் தசை என்றும், சுக்கிர தசை வாழ்க்கையில் வராதவர்கள் எல்லாம் கஷ்டப்படுகிறவர்கள் என்றும் நினைத்துக் கொள்கிறோம். இது உண்மையல்ல. சுக்ர தசை நடந்த 20 வருட காலமும் பிச்சை எடுக்காத குறையாக வாழ்வில் நிரந்தர தரித்திரர்களாக இருந்தவர்களும் உண்டு. அதை போலவே, சனி தசையில் பற்பல தொழில்களைச் செய்து மிகச் சிறந்த முதலாளிகளாக மாறி செல்வத்தில் புரண்டவர்களையும் பார்த்திருக்கிறோம்.

ஒரு தசை, நல்லது செய்யுமா, கெட்டது செய்யுமா என்பதை சனி, சுக்கிரனை மட்டும் வைத்துக்கொண்டு தீர்மானம் செய்ய முடியாது. அந்தச் சனி, சுக்கிரன் இருவருமே அந்த குறிப்பிட்ட ஜாதகத்தில் யோகக்காரர்களாக இருக்கிறார்களா, இல்லை அவயோகம் செய்பவர்களாக இருக்கிறார்களா என்பதை வைத்துக் கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும்.இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். ஒரு அற்புதமான ஜாதகம். ஆனால் வாழ்க்கையில் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம். ஜாதகத்தைப் பார்த்தவுடனே இதில் பற்பல யோகங்கள் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், காலணா கையில் இருக்காது.ஜோதிடம் பார்க்கவே அடுத்தவரிடம் கடன் வாங்கிக்கொண்டு வந்திருப்பார். அதே நேரம், ஒருவருடைய ஜாதகம் பெரிய அளவில் சிறப்பில்லாத ஜாதகமாக இருக்கும். ஆனால், அவர் சகல சௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.

என்ன காரணம்?

ஒரு ஜாதகத்தின் அமைப்பு மட்டும் (ஜாதக கட்டம்) ஒருவருடையஉயர்வுக்கோ தாழ்வுக்கோ காரணமாகிவிடுவது கிடையாது. பிறகு எது காரணமாகிறது என்று சொன்னால், உயர்வான ஜாதகம் படைத்தவர்கள், அந்த ஜாதகத்தின் உயர்வினைத் தருகின்ற தசாபுத்திகள் வரும் காலத்தில் வாழ்கிறார்களா, என்பதைப் பார்க்க வேண்டும். அதேபோலவே சாதாரண ஜாதகத்தில் உள்ளவர்கள் அற்புதமான வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு தீங்கு தருகின்ற தசை அவர்கள் வாழ்க்கையில் வரவில்லை என்றுதான் பொருள். ஒன்பது கிரகங்களுக்கும் சேர்த்து விம்சோத்தரி தசை என்று 120 வருடங்களை நம்முடைய ஜோதிட சாத்திரம் நிர்ணயத்திருக்கிறது. இந்த 120 வருடங்கள் முழுமையாக வாழ்ந்தவர்களுக்குக்தான் ஜாதகத்தில் உள்ள யோக தசைகளும் அவயோக தசைகளும் முழுமையாக அனுபவத்தில் வரும். ஆனால், ஆயுள்பாவம் 30 வருடம், 40 வருடம், 50 வருடம் என்று இருப்பவர்களுக்கு, எல்லா தசைகளும் வராது. வாழுகின்ற அந்த வாழ்க்கைக்குள் வருவதெல்லாம் அவயோகத்தசையாக இருந்துவிட்டால், அவர்கள் யோக தசையை அனுபவிக்காமலேயே காலமாகிவிடுவார்கள். அந்த யோக தசையானது அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்குச் செயல்படலாம். அது செயல்படுமா செயல்படாதா என்பது இந்த ஜென்மத்தில் அவர்கள் செய்கின்ற பாவபுண்ணிய செயல்களை ஒட்டி இருக்கிறது. இதுதான் ஜாதகத்தின் கர்மா தியரி.

இதைத்தான் “பதவி பூர்வ புண்ணியனாம்’’ என்று ஜாதகம் எழுதும்போதே குறிப்பிடுகின்றார்கள். இப்பொழுதுசுக்கிரனுக்கு வருவோம். இருக்கின்ற தசைகளிலேயே மிக அதிக ஆண்டுகள் நடக்கக்கூடிய தசை சுக்கிர திசை. சுக்கிரன் பொதுவாகவே இயல்பான சுபர் என்கிற வரிசையிலே வருகின்றார். அதற்கு அடுத்து அதிக காலம் வருகின்ற தசை சனி திசை. 19 ஆண்டுகள். சனி பொதுவாகவே அசுபர் அல்லது பாவகிரகம் என்கிற வரிசையிலே வருகின்றார். ஆனால், சுபராகிய சுக்கிர தசை சிலருடைய ஜாதகத்தில் பாவ தசையாக வந்துவிடுவது உண்டு. அதைப்போலவே பாபர் ஆன சனி தசை சில ஜாதகங்களில் யோக தசையாக அமைந்து விடுவது உண்டு. இந்த இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்துதான் ஒரு தசையானது அவர்களுக்கு எப்படி வேலை செய்யும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதைத் தெரிந்துகொண்ட பிறகு அந்த யோக காலத்திலே வரும் கோள்சாரங்கள் சாதகமாக இருக்கிறதா பாதகமாக இருக்கிறதா என்பதையும் கருத்தில் எடுத்துக் கொண்டு ஜாதக பலனை நிர்ணயிக்கின்ற பொழுது ஓரளவு நாம் துல்லியமாக ஜாதக பலனைச் சொல்ல முடியும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.இப்பொழுது சுக்கிர தசை ஒருவருக்கு எப்படி வேலை செய்யும்? நடைமுறையில் இது எல்லோருக்கும் யோகமாக இருக்கிறதா, வாழ்க்கையைத் தூக்கிவிட்டு கோடீஸ்வரர்களாக ஆக்குகின்ற தசையாக அமைந்திருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதற்கு முன் சுக்கிரன் யார்? அவருக்குரிய காரகங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.நவகிரகங்களில் குருவிற்கு அடுத்தபடியாக வருபவர் சுக்கிரன். உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களுக்கும், குறிப்பாக சிற்றின்பங்களுக்கும் காரண கர்த்தர் இவரே. வேதம் பயின்று அசுரர்களை வழி நடத்தும் அசுர குரு இவர்தான். குரு என்னும் ஸ்தானத்தில் அழைக்கப்படுவதால், குருவிற்கு கொடுக்கப்படும் அனைத்து மரியாதைகளையும் பெறுகிறார்.சுக்கிரன், உலக இன்பங்களில் குறிப்பாக காதல் உறவுக்குரிய தெய்வமாகவே ஜோதிட சாஸ்திரத்தில் வர்ணிக்கப்படுகிறார். இளமையில் சுக்கிரதசை வந்துவிட்டால், அது சிற்றின்ப சுகத்தைத் தேடி அலைய வைத்து, வாழ்க்கையைகெடுத்துவிடும் என்பார்கள். குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும் என்ற சொல்லாடல் ஜோதிடம் படித்தவர்களிடையே உண்டு. காரணம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இளவயதிலேயே சுக்கிர திசை வரும். இளம் பருவத்தில் வரும் சுக்கிரதசைமற்றும் புக்திகள் ஒரு ஜாதகருக்கு காதல் அனுபவங்களை வலுவாகத் தரும்.

பக்குவமில்லாதவர்கள் இதிலேயே ஆழ்ந்து வேலை படிப்பு இவற்றில் கோட்டை விட்டுவிடுவார்கள்.நம் நாட்டில் மட்டுமல்ல, கிரேக்க புராணங்களில் வீனஸ் எனப்படும்சுக்கிரனை காதல் தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குரு எப்படி தனகாரகனாக உள்ளாரோ, அதேபோல் அதற்கு அடுத்த படியாக சுக்ரனும் தனகாரகன் ஆவார். ஒருவரிடம் உள்ள சொந்த பணத்திற்கும், பொன் பொருட்களுக்கும், கறுப்பு பணத்திற்கும் (பொதுப்பணம் என்றில்லாமல்) சுக்ரனே காரகர் ஆகின்றார். தங்கத்திற்கு அடுத்தபடியாக விலை மதிப்புள்ள வெள்ளிக்கு சுக்ரனே காரகர் ஆவார். அறு சுவைகளில் நம்மை மயக்கும் இனிப்பு சுவைக்குக் காரகரும் சுக்கிரனே ஆவார்.அழகு, கவர்ச்சி, இல்லற உறவு (பால் உறவுகள்), கலை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு, கேளிக்கை, ஆடம்பரம், சொகுசு, பகட்டு, உல்லாசம் போன்ற அனைத்திற்கும் சுக்ரனே காரகர் ஆகின்றார். ஆண், பெண் உறவுகளின் போது வெளிப்படும் விந்து, சுரோணிதம் இவற்றுக்கு சுக்ரனே காரகர் ஆவார். ஆண், பெண் பாலின வேறுபாடு காட்டும் முக்கிய ஹார்மோன்களுக்கும், சுக்ரனே காரகர் ஆகின்றார். இனி சுக்கிரன் எப்படி ஜாதகங்களில் விளையாடுவார் என அடுத்த இதழில் பார்ப்போம்.