Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9. எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத்துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய் விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர் களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ரய விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறை வனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: புருஷோத்தம யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை

அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: தைவாசுர சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: ஷ்ரத்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சந்நதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

குடந்தை நடேசன்