Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

ஆயில்யம்

கால புருஷனுக்கு ஒன்பதாவது வரக்கூடிய நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரமாகும். ஆயில்யம் என்பது பிணைத்தல் - இணைத்தல் என்று பொருள்படும். இந்த நட்சத்திரம் அமைப்பு வளைந்து நெளிந்து காணப்படுகிறது. ஆதலால், சர்ப்பம் எனச் சொல்லப்படுகிறது. சர்ப்ப ராஜாவான ஆதிசேஷனை இதனோடு ஒப்பிடலாம். மேலும், ஆதிசேஷன் மேல் படுத்துறங்கும் பெருமாளை இணைத்து பொருள் கொள்வதே சிறப்பான அமைப்பாகும். தெய்வீக சக்தி கொண்டநட்சத்திரம்.கடக ராசியில் 16.4 டிகிரி முதல் 30 டிகிரி வரை விரிந்து பரந்துள்ள நட்சத்திரம். காலபுருஷனின் ஒன்பதாவது நட்சத்திரம் என்பதால் தெய்வீக தன்மை இந்த நட்சத்திரத்திற்கு அதிகம் உண்டு. கடவுள் எவ்வளவோ அவதாரங்கள் கொண்டாலும் விஷ்ணுவிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. விஷ்ணு மட்டுமே மானிடனாக அதிக அவதாரங்களை எடுத்தவர். அப்படிப்பட்ட அவதாரம் கொண்டதால்தான். ஆயில்யம் புதனின் அதிபதியான நட்சத்திரமாக உள்ளது.ஆயில்ய நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் அரவினாள், கவ்வை, பாம்பு ஆகியன... ஆயில்யத்தில் தர்மராஜா, லெட்சுமணன், சத்ருக்னன், பலராமர் ஆகியோர் அவதாரம் செய்துள்ளனர்.

ஆயில்ய - விருட்சம் : புன்னை மரம்

ஆயில்ய - யோனி : ஆண் பூனை

ஆயில்ய - பட்சி : சிட்டுக்குருவி

ஆயில்ய - மலர் : வெண் காந்தள்

ஆயில்ய - சின்-னம் : சர்ப்பம், அம்மி

ஆயில்ய - அதிபதி : புதன்

ஆயில்ய - அதி தேவதை : விஷ்ணு

ஆயில்ய - கணம் : ராட்ஷச கணம்

காவலாக வரும் ஆயில்யம்...

விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் ஆதிசேஷனும் அவருடனே அவதாரம் எடுக்கிறது.ஆயில்ய நட்சத்திரம் என்ற உடன் நம் நினைவுக்கு வருபவர் லெட்சுமணன்தான், இவர் ஆதிசேஷனின் அவதாரம் என புராணம் சொல்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். ராமருக்கு விசுவாசமாகவும் அரணாகவும் இருந்தவர் இவரே. ராமர் வனவாசம் என்ற உடன் ராமர் அழைக்காமல் ராமருடன் வனவாசத்திற்கு வந்தவர். அண்ணனுக்கு சேவை செய்து தன் பக்தியை வெளிப்படுத்தியது ஆதிசேஷன். ராமருக்காக அனைத்தையும் துறந்து மரணத்தை தொட்டு திரும்பியது ராமரின் மீது கொண்டது பாசம் அல்ல பக்தி. விஷ்ணுவின் சங்கு, சக்கரங்களாக பரதனும் சத்ருக்னனும் ராம அவதாரத்தில் அவதாரம் எடுத்தனர்.கிருஷ்ண அவதாரத்திலும் அண்ணன் பலராமராக அவதாரம் கொண்டதும் இந்த ஆதிசேஷன்தான். சிசுவாக இருந்த கிருஷ்ணரை வாசுதேவர் தலையில் வைத்து சுமந்து செல்லும் போதுகூட மழையில் கிருஷ்ணர் நனையாமல் இருக்க ஆதிசேஷன் குடை போல் காத்ததாக புராணங்கள் விவரிக்கின்றன. கிருஷ்ணர் யோக சூத்திரத்தை பதஞ்ஜலிக்கு உபதேசம் செய்து அதன் மூலம் இவ்வுலகில் உள்ள யாவரும் அறிவதற்காக விஸ்தரித்தார் என்கிறது புராணம். இந்த புராணத்தின் படியும் பதஞ்ஜலி ஆயில்யத்தில் அவதாரமாகவும் உள்ளார். குண்டலி என்ற பாம்பின் உருவத்தை ஆதிசேஷன் கொண்டுள்ளதால் அந்த குண்டலிக்கே யோகத்தின் சூத்திரம் இதுவென்று கிருஷ்ண உபதேசம் செய்வித்தார் என்கிறது புராணங்கள்.பதஞ்ஜலியின் இந்த யோக சூத்திரம் சித்தர் வழியாகவே குரு பரம்பரையாக உபதேசிக்கப்பட்டு வருகிறது. கோரக்க சித்தரும் இதே ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார் என்பது சிறப்பாகும். சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் சர்ப்பமானது வாசுகியின் அம்சமாகச் சொல்லப்படுகிறது. இந்த வாசுகியின் சகோதரனே ஆதிசேஷன் ஆவார். இந்த வாசுகிதான் பாற்கடலில் உள்ள அமிர்தத்தினை வெளிகொண்டு வர கயிறாக உள்ள அடையாளமாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, சர்ப்ப தேவதைகளின் நட்சத்திரமாக இந்த ஆயில்யம் உள்ளது.

பொதுப்பலன்கள்

விஸ்வாசம் என்பதை இந்த நட்சத்திரக்காரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். தான் நேசிப்பவர்களை உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றும் சிந்தனை கொண்டவர்கள். எதிரிகளை நேரடியாக எதிர்ப்பதற்கு எந்த தயக்கமும் காட்ட மாட்டார்கள். தெய்வப் பக்தி அதீதமாக இருக்கும். அதீதத் திறமையை கொண்டவர்களாக இருப்பர். இந்த திறமையே இவர்களை வாழ்நாள் முழுதும் வெற்றியடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.கோபம் கொண்ட சிறிது நேரத்திலே அதனை மறந்து போகும் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பர்.

தொழில்

ஊர் ஊராக அலைந்து செய்கின்ற தொழிலை விரும்பிச் செய்வார்கள். ஆன்மிகத் தொழில் செய்வதில் நாட்டம் இவர்களுக்கு உண்டு. சுயமாக தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.ஆயில்யத்தின் வேதை நட்சத்திரம்வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். மூலம் வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திரத்தில் எந்த ஒரு புதிய காரியத்தையும் செய்ய வேண்டாம்.

ஆயில்ய நட்சத்திரப் பரிகாரம்

ஆயில்ய நட்சத்திர அன்று விஷ்ணு துர்கையை வழிபடுவது சிறந்த வெற்றியைத் தரும் அமைப்பாகும்.மேலும், எவருகெனும் நாகதோஷம் இருக்குமாயின் அவர்கள் ஆயில்ய நட்சத்திரத்தில் சர்ப்ப சாந்தி பரிகாரம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.ஆயில்ய நட்சத்திரம் உடையவர்களை சிலர் ஒதுக்குகிறார்கள். உண்மையில் அப்படியில்லை, இது ஒரு மூட நம்பிக்கைதான்.

கலாவதி