Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 104 (பகவத்கீதை உரை)

பகவானே புலன்களைக் கொடுத்திருக்கிறார், அவரே அதன் இயக்கங்களையும் தீர்மானித்திருக்கிறார். அப்படியிருக்க அவற்றை அடக்க வேண்டும் என்று நமக்கு அர்ஜுனன் மூலமாக அறிவுறுத்துகிறாரே, இது புரியாத புதிராக இருக்கிறதே!அடுத்தடுத்துப் பிறவிகள் அமைவது என்பது அதற்கு முந்தைய நம் வாழ்க்கைக் கணக்கில் பாபச் செலவுகளை மேலும் மேலும் குறைத்து புண்ணிய வருமானங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு கட்டத்தில் அவ்வாறு பாபங்கள் முற்றிலுமாகத் தொலையும்போது, யோகியாக மனிதன் மாறிவிடுகிறான். இப்போது பரமாத்மாவோடு இவனுடைய ஆன்மா ஒன்றிவிட இயலுகிறது. ஆகவே அடுத்துப் பிறவியில்லை, பாபம் - புண்ணியம் என்ற வாழ்க்கைக் கணக்கும் இல்லை.

ஆனால் பாபங்களைப் பெருக்குவதற்காகவே அமைந்தவை போலதானே புலன்கள் இருக்கின்றன? ஆமாம், இருப்பினும் அவற்றைக் கட்டுப்படுத்தி, அதன் மூலம் வேண்டாதவற்றை வடிகட்டி, நல்லதை மட்டுமே மனமும், மூளையும், உடலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

யோகீ யுஞ்சீத ஸததமாத்மானம் ரஹஸி ஸ்தித

ஏகாகீ யதசித்தாத்மா நிராசீரபரிக்ரஹ (6:10)

‘‘யோகி என்பவன் தனித்திருக்க வேண்டியவன். யாருடைய கண்களுக்கும் படாமல் மறைந்திருக்க வேண்டியவன். இந்த மறைவு நிலையில் தன் உள்ளத்தையும், உடலையும் அடக்கி, ஆசைகளை அகற்றி, தனக்கென எந்த உடைமையையும் கொள்ளாதவனாக, முற்றிலும் சஞ்சலம் அற்றவனாக விளங்க வேண்டியவன்.’’தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது என்பது, பிறரிடமிருந்து முற்றிலும் விலகி இருப்பது ஆகும். ஓர் அறையில் யோகி தனித்திருக்கிறான் என்றால் அவன் பிறர் கண்களுக்குத் தெரிய மாட்டான்; கடவுளைத் தவிர தனக்கு யாருடனும் தொடர்பில்லை என்று அவன் உணரும் பயிற்சி அது. இதற்காகத்தான் அவன் தனியனாகவும், ரகசியனாகவும் இருக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

மனித இயல்பு வேடிக்கையானது. ஒருவன் உண்ணாவிரதம் இருக்கிறான், உபவாசம் இருக்கிறான் என்றால், அப்போதுதான் அவனுக்கு அதிகம் பசி எடுக்கும். எங்கோ தொலைதூரத்தில் சமைக்கப்படும் உணவின் மணம் அவனுடைய நாசியை வெகு எளிதாக எட்டிவிடும். தான் கொண்ட நோக்கத்திற்கும், அதற்கு நேர் எதிரான வசீகரித்தலுக்கும் இடையேயான முரண் இது. (இப்போதெல்லாம் அரசியல் நோக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரதம் முடிந்த பிறகு கொடுக்கப்படுவதற்காக பிரியாணி பொட்டலங்கள் முன்கூட்டியே போராட்ட களத்துக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

யாருக்கு உண்ணாவிரத நோக்கம் நினைவுக்கு வரும்?)உண்ணாவிரத சமயத்தில் அப்போது மறுக்கப்பட்ட, அல்லது தானாகவே மறுத்து ஒதுக்கிய வஸ்து மீது ஆர்வமும், நாட்டமும் வரும். ஆனால் நோக்கத்தையே பிரதானமாக வைத்து, ஆசையை அடக்கி ஆள வேண்டியது அவசியம். ஒரு யோகி இவ்வாறு தனித்திருக்கும்போது அவனுக்கு பகவானைத் தவிர வேறு சிந்தனையே இருக்காது.

இது எப்படியென்றால், காரை ஓட்டத் தெரிந்த ஒருவன் அவ்வாறு ஓட்டுவதை மட்டும் தெரிந்து கொள்வதில்லை; அதன் வேகத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், பயணம் முடிந்தபோது நிறுத்தவும் தெரிந்து கொள்கிறான். காரை ஓட்டத் தெரிந்தவன் என்று நம்பி அவனுடன் பயணிப்பவர்கள், அவனுக்கு ஓட்டதான் தெரியும், நிறுத்தத் தெரியாது என்று அறிவார்களானால், அவர்கள் கதிதான் என்ன?

இத்தகைய காரோட்டி போலதான் பலரும் வாழ்க்கையில் எங்கே தம் ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டும், எங்கே குறைக்க வேண்டும், எங்கே நிறுத்த வேண்டும் என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தம் உடம்புக்கும், புலன்களுக்கும் எஜமானர்களாக இருக்க வேண்டியவர்கள், அவற்றுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். பொதுவாக எஜமானனுக்குத் தலைமைப் பண்போடு, தன் தொண்டர்களை அடக்கி வைக்கவும், அவர்களிடமிருந்து தேவையான சேவைகளை கண்டிப்புடன் பெறவும் தெரிந்திருக்க வேண்டும். மாறாக, சும்மாவானும் தலைவனாக இருந்து கொண்டு, தொண்டர்களை அவரவர் விருப்பப்படி செயல்பட விட்டால், அவனுடைய அமைப்பு சீர் குலைந்துதான் போகும்.

இவ்வாறு புலன்களை குறைந்த பட்ச தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, பொதுவில் பற்றற்ற மனப்பாங்கை அடைய ஒருவன் தியானப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு யோகியின் அடிப்படைத் தேவைக்கான உடை, உணவு, இருப்பிடம் ஆகியவையே அவனுடைய உடைமைப் பொருட்களாகும். அவை சற்றே குறைந்தாலும் கவலைப்படாத மனப்பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்வான்.

மாறாக, அத்தகைய உடைமைப் பொருட்களை அதிகப்படுத்திக் கொள்ள அவன் விரும்புவானானால், அவனால் தியானத்தில் ஆழ முடியாது, அவனுக்கு யோக நிலையும் கிட்டாது. ஏனென்றால் அவன் தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது அந்தப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்; அவற்றைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய முனைவான். அதனால் தியான நோக்கம் சீர் கெடும்.

ஆகவே தேவைகளைச் சுருக்கிக் கொள்வதும், அதிலேயே அடங்கிவிடுவதும்தான் ஒரு யோகியின் இலக்கணம். ‘‘இருவித யோகிகள் இருக்கிறார்கள்,’’ ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். ‘‘ஒருவர், எவர் கண்ணுக்கும் தெரியாமல், மறைந்து, தன் யோக சாதனங்களைச் செய்கிறார்; மற்றவர் யோகியின் சின்னங்களாகிய தண்டம், கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கி தங்கள் சமய சம்பந்தமாகப் பலரோடும் பேசுகிறார்.

‘‘மனிதர் பார்க்காமல் போனாலும், ஈஸ்வரன் பார்க்கிறான் என்று நம்பி, தனியாக இருக்கும்போது எவனொருவன் ஒரு பாபத்தையும் செய்வதில்லையோ அவன்தான் வாஸ்தவமான தர்மசீலனாவான். மனிதர் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும், ஈஸ்வர திருஷ்டிக்கு உட்படுவோம் என்ற பயத்தினால் எவனொருவன் காட்டில் தனியாக இருக்கும்போதும், ஒரு கட்டழகியின் வலைக்கு உட்படாமலும், காம எண்ணத்தால் அவளைக் கண்ணெடுத்துப் பாராமலும் இருக்கிறானோ, அவன்தான் வாஸ்தவமான யோகி. ஒருவருமில்லாத, தனித்துள்ள ஒரு வீட்டில் காணப்படும் பொன் முடிப்பை எவன் ஒருவன் எடுத்துக் கொண்டு போக இச்சைப்பட மாட்டனோ அவனே தர்மவான். ஊரார் வசைமொழிக்கு பயந்து வெளி வேஷத்துக்காக எவன் ஒருவன் தர்மத்தை அனுஷ்டிக்கிறானோ, அவனை தர்மவான் என்று சொல்லக் கூடாது. மௌனமாயும், மறைவாயும் அனுஷ்டிக்கும் தர்மமே வாஸ்தவமான தர்மம்.’’

‘ஏகாந்தமாக இரு, தனிமையில் இரு’ என்று கிருஷ்ணன் சொல்வதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. மேலோட்டமாக இதைப் புரிந்து கொண்ட அர்ஜுனன், ‘‘நான் அதைத்தான் சொல்கிறேன். நான் ஏகாந்தமாக இருக்க விரும்புகிறேன். என்னை அனுமதி. தனித்திருந்து இறை ஸ்மரணம் செய்கிறேன். இந்த யுத்தம், கொடூரம் எதுவும் வேண்டாம். என்னை விட்டுவிட,’’ என்று கேட்கிறான்.

ஆனால் கிருஷ்ணன் ஏன் அவனைத் தடுக்கிறார். யுத்தம் செய்யும்படி எதற்காக வலியுறுத்துகிறார்? இவரே யோகியின் தன்மை தனித்திருப்பது என்று சொல்லிவிட்டு, ஒரு யோகியாக நீ விளங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி விட்டு, கூடவே, ‘போர் செய்’ என்று நிர்ப்பந்திப்பதன் உள்ளர்த்தம் என்ன?

ஏகாந்தம், தனித்திருத்தல் என்பது பிறரைச் சாராமல் இருப்பது என்கிறார் கிருஷ்ணன். அதாவது மற்றவர்கள் இல்லாத நிலை அல்ல; அவர்களிடமிருந்து எந்தத் தேவையையும் பெறாமல் இருப்பது. ஏற்கெனவே பரமஹம்சர் சொன்னது போல யாருமற்ற காட்டில் ஒருவன் தியானம் அல்லது தவம் மேற்கொண்டாலும், அவனுடைய மனசுக்குள் எல்லோரும் இருப்பார்கள்! குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர், பகைவர், வீடு, கடை, அலுவலகம், தொழில் எல்லாமும் இருப்பார்கள். அதாவது அவன் தனித்திருக்கிறான் ஆனால் ஏகாந்தமாக இல்லை. ஏகாந்தம் என்பது அவனுடைய ஆன்மாவும், பரமாத்மாவும் மட்டுமே இருக்கும் நிலை. அவனுக்குள் இப்போது வேறு யாருக்கும் இடம் இல்லை. இப்படி பயிற்சி பெற்றவன், கூட்டத்தாரோடு இருந்தாலும் அவனால் ஏகாந்த உணர்வை மேற்கொள்ள முடியும். கூட்டத்தில் இருப்பவரில் ஒருவரால் கூட அவனுடைய மனசுக்குள் நுழைய முடியாது! ஆனால் மனசுக்குள் கூட்டம் சேர்ந்து விட்டால், அத்தனை சுலபமாக அதை விரட்டவும் முடியாது.

சங்ககால இலக்கியங்களில் தலைவனும், தலைவியும் பிரிவதும், கூடுவதும் சுட்டிக் காட்டப்படுகின்றன. அதாவது கூடினாலும், பிரிந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் தம் நினைவிலிருந்து அகற்றாமல் இருக்கிறார்கள் என்று விளக்கப்படுகிறது. அதாவது, ‘நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?’ என்ற நிலை. பிரிவில் உடல்கள்தான் தனித்தனியே விலகி நிற்கிறதே தவிர, மனங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இலக்கியங்களில், பிரிவு காதலை வளர்த்தன என்றால், யோகத்தில், தனித்திருத்தல் பகவானோடு நெருங்கச் செய்கிறது.

‘ஏகாந்தமாய்… பகவானோடு…’ என்று தியானத்தில் அமரும் நிலை அற்புதமானது. இதில் வேடிக்கை என்னவென்றால், பகவானைத் தெரியாமலேயே அவனோடு இருப்பது! தினமும் குறிப்பிட்ட நேரம் பூஜைக்கு என்று ஒதுக்குகிறோம். அதாவது அந்த நேரத்தில் இறைவனோடு ஒன்ற முயற்சிக்கிறோம். ஆனால் அப்போதுதான் தொலைபேசி அழைப்பு வரும், முன்னறிவிப்பில்லாமல் நண்பரோ, உறவினரோ வருவார்கள். உடனே நாம் பகவானை விட்டுவிட்டு, இவர்களை கவனிக்கிறோம்.

அப்படி எந்த இடையூறும் இல்லாவிட்டாலும். ஒவ்வொரு நாளும் பூஜைக்காக ஒதுக்கப்படும் நேரம் குறைகிறது! காரணம், அடுத்த வேலை காத்திருக்கிறது! இன்றில்லாவிட்டால் நாளை பூஜையை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அடுத்த வேலையை இன்று செய்யாமல் விட்டால், அவ்வளவுதான், அந்த வாய்ப்பு மறுபடி கிடைக்காது; அதனால் ஈட்டக்கூடிய வருமானமும் அல்லது பலனும் போயே போய்விடலாம்…!

இப்படி புற விஷயங்களில் பற்று கொண்டு, பரந்தாமனை மறந்தால் தியானம் எங்கே நிறைவுறும்? பரந்தாமனிடம் நெருக்கம் வேண்டுமென்றால், புறப் பற்றுகளிடமிருந்து விலக வேண்டும். நாம ஸ்மரணை, ஸ்லோக ஸ்மரணையில் பயிற்சி பெற்றவர்கள், எப்போதுமே மூச்சிழையாக இறைவன் நாமத்தையோ, ஸ்லோகத்தையோ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்வார்கள். இந்தப் பழக்கம், நம்மைச் சுற்றி யார் இருந்தாலும், அவர்களிடமிருந்து விலகலையும், பகவானிடம் நெருக்கத்தையும் வளர்க்கும் என்பது அவர்களுடைய அனுபவம்.

இறை சிந்தனை என்பதுதான் தியானம்.

அதில் ஆழ இயலாதவர் அந்த நேரத்தில் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும், நண்பருடன் பேசிக் கொண்டிருப்பார், கடைக்குப் போவார், கடைக்காரருடன் சண்டை போடுவார், சாலையில் தன்னை நெருங்கும் நாயை விரட்டுவார், மனைவி தயார் செய்யும் சமையல் மணத்தை நுகர்வார். டிவியில் தொலைக்காட்சியின் அடுத்த கட்டத்தை எப்படிக் கொண்டு போகலாம் என்று அதன் இயக்குநருக்கு யோசனை சொல்வார்….உள்ளிருந்து இவர்களை விரட்டினால்தான், பகவான் மலர்ச் சிரிப்புடன் உள்ளே நுழைவார். ஏகாந்தம் அருளுவார்.

இந்த நிலைக்குப் பிறகு அவர் கடவுளைத் தேடிக் கொண்டு போக வேண்டாம். அவர்தான் உள்ளேயே கிடக்கிறாரே, அப்புறம் என்ன? அதாவது பகவானாகவே தான் ஆகிவிடுவது! அந்த நிராகார கணத்தில் ஈஸ்வரனை தியானிக்க முடிகிறது, புரிந்து கொள்ள முடிகிறது, ஏன், கூடவே வாழவும் முடிகிறது. அப்படியென்றால் இருவருக்குமிடையில் இடைவெளியே இல்லை என்று அர்த்தம். பகவானோடு கலந்து விட்ட பிறகு எந்த மனம்தான் புற ஈர்ப்புகளுக்கு அடிமையாகும்? பிறரோடும், புலன் உணர்வுகளோடும் கூடவே புழங்கினாலும், விலகி நிற்கக் கூடிய தனித்தன்மை பழகிவிடும். அதாவது மனித ஆன்மா, பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிடும்!

(கீதை இசைக்கும்)