Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராசிகளின் ராஜ்யங்கள் கடகம்

கர்கடகம் என்ற சொல்லுக்கு நண்டு என்ற பொருளாகும். இது கடகம் என்ற ராசியிலுள்ள நண்டு என்ற சின்னத்தை குறிக்கிறது. இது ஒரு நீர் ராசியாகும். இந்த சந்திரன் இந்த ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது தனது ஆற்றலை நிறைவாக பெறுவதாக உள்ளது.

சந்திரன் என்பது பூமியின் துணைக்கோளாக இருந்தாலும் பூமியில் இருக்கும் உயிர்களுக்கு உயிர்தன்மையை தரும் கோள். இந்த பிரபஞ்சத்தில் இரவில் வரும் மாற்றங்களுக்கு நிகழ்வுகளுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கோள்

சந்திரன் மட்டும்தான். சந்திரன் சூரியனின் உக்கிரக் கதிர்களை தன்னுள் பெற்று பின்பு மென்மையான பால் வண்ணக் கதிராக பூமிக்குள் வந்து நம்மை பரவசம் அடையச் செய்கிறது. அரசர்களின் காலத்தில் பால் நிலவினை பார்ப்பதற்காகவே அரண்மனைகளில் சில இடங்களில் முற்றங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

கடகம் நீர்பெருக்கம் என்பதை குறிக்கிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் சூரியன் கடகத்தில் பிரவேசிக்கிறது.

கடகத்தின் சிறப்பு...

லத்தீன் மொழியில் கடகத்திற்கு கேன்சர் என்று அழைக்கப்படுகிறது. கேன்சர் என்பதற்கு பாலைப்பூச்சி என்ற பொருளும் உண்டு. காலபுருஷனுக்கு நான்காம் (4ம்) பாவகம் என்பதால் இதுவே தாய் ஸ்தானமாகும். கடகம் ராசிக்கு

சூரியன் பெயர்வாகும் சமயத்தில்தான் நீர் நிலைகளுக்கு தண்ணீர் பிரவாகம் ஆகிறது. இந்த ராசியை ‘சக்தி’ அம்சமாக உள்ளது. ஆகவே, சக்தி தரக்கூடிய அன்னைக்கு இந்த மாதத்தில்தான் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

கடகம் என்பது சர ராசியாக உள்ளது. சரம் என்பது நிலையற்றது என்று பொருள் ஆகவேதான் இந்த நீர் நிலையாக உள்ளது. நீர் என்பது நிலையில்லாமல் செல்வதை குறிக்கிறது. இந்த நீரைப் போலவே இந்த ராசியை கொண்ட நபர்களின் மனமும் அலைந்து கொண்டே இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் கட்டுப்படுத்த இயலாது. மனமும் கட்டுப்படாது. நீர்நிலைப் போல இருக்கும். இந்த ராசியின் சிறப்பு என்னவெனில் இங்குதான் வியாழன் உச்ச ஒளி பலத்தை பெறுகிறது. வியாழனுக்கு உரிய காரியங்கள் அதாவது, கோயில்கள் அதிகமாக நீர்நிலையின் அமைப்புகளில் இருப்பதற்கான வாய்ப்பை இயற்கை ஏற்படுத்துகிறது.

சந்திரன் ஆட்சி பெறுவதால், தமிழ் மொழியின் பற்றாளர்கள் பலர் இந்த ராசியில் அல்லது லக்னத்தின் ஜனனனம் எடுத்துள்ளனர். காரணம் தமிழ் சந்திரனோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

கடகத்திற்கான இடங்களும் பெயர்களும்...

மனோரஞ்சிதம் என்ற மலரும் மனதுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. உள்ளத்தின் உள்ளே உள்ள மணத்தை பூவில் வெளிப்படுத்தும் அற்புத ஆற்றலை கொண்ட அதிசய மலராகும். அல்லி என்பது சந்திரனின் காரகத்தோடு உள்ளது.ஆம், அல்லி மலரும் குளங்கள், நீர் பெருக்கேடுத்து ஓடும் ஆறுகள், வற்றாத நீர் வீழ்ச்சிகள், நிலையில்லாத நீர் அதாவது அலை அலைகளாக அலையும் நீரான கடல் பகுதிகள், நெற் கதிர்களை தாங்கும் நீர் நிலங்களை கொண்ட பகுதிகள், கடல், உப்பளங்கள், ஆறு, குளங்களை ஒட்டிய பெரிய கோயில்கள் குறிப்பாக அம்மன் கோயில்கள், அமாவாசை அன்று ஓடும் நீர் நிலைகளுக்கு அருகில் தர்ப்பணம் செய்யப்படும் இடங்கள், கல்வி தொடர்பான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பகுதி நேரமாக கல்வி கற்றுத் தரும் இடங்கள், தமிழ் சங்கங்கள் மற்றும் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள், அதிகமாக மக்கள் கூடும் இடங்கள், மந்திரங்களை பிரயோகப்படுத்தும் இடங்கள், வேத மந்திரங்களை கற்றுக் கொள்ளும் இடங்கள், சமையல் கூடங்கள், உணவு விடுதிகள் ஆகியவை தொடர்புடையனவாக உள்ளன.

சந்திரன், மனோ, சோமா, செளம்யா, இந்து, ரோகிணி, நித்யன், கண்ணன், ராணி, ஸ்வேதா, நாயகி, அமிர்தா, முத்து, உமா, மதி, சிவகாமி, ஆறுகளை கொண்ட பெயர்கள் கங்கா, காவேரி, யமுனா, பவானி, அருவி, நெல், சாகர், சசி, நிலா, அமுதா...

கடகத்தின் புராணம்...

கிரேக்க புராணத்தில் ஹெர்குலிஸ் என்பவர் கடவுளுக்கும் மனிதப் பிறப்பிற்கும் இடைப்பட்ட ஒரு வீரராக நம்பப்படுகிறார். இவருக்கு பல வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றில் முக்கியமான ஒன்று ஹைட்ரா ஏராளமான தலைகள் கொண்ட பாம்பை அழிப்பது. ஆனால், பாம்பின் தலையை வெட்டினால் பாம்பின் தலை இரண்டாக மாறும் வரத்தை ஹைட்ரா பெற்றுள்ளது. ஹேரா என்ற தேவதை கிரேக்க புராணங்களில் சிறப்பை பெற்றுள்ளது. இந்த ஹேரா ஹெர்குலிஸை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல இன்னல்களை செய்தது.

பல தலைகள் கொண்ட பாம்பின் தலையை வெட்ட முற்படும் பொழுது ஹேரா ஒரு நண்டினை அனுப்பி ஹெர்குலிஸை துன்பப்படுத்தியது. ஹெர்குலிஸ அந்த நண்டை நசுக்கினார். இறந்த நண்டின் நினைவாக ஹேரா அதனை வானத்தில் ஒரு நட்சத்திரமாக மாற்றினார் என்கிறது கிரேக்க புராணம்.

இந்து புராணங்களில் காத்தல் என்ற பணியை செய்கின்ற விஷ்ணுவின் பல அவதாரங்கள் அனைத்தும் சந்திரனின் பெயர்களால் உள்ளன. மேலும், சிவ பெருமானுக்கு சோமன் என்ற பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை...

கடகத்தினை அசுப கிரகங்கள் பார்வை செய்யும் பொழுதும் கடகத்திற்கு எட்டாம் வீட்டிற்கு அசுப கிரகத்தொடர்பு ஏற்படும் பொழுதும் விபத்துத்துகள் தொந்தரவுகள் நிகழ்கின்றன என்பது உண்மை. கடகம் என்பது நீர் ராசியாக இருப்பதால் சளி தொடர்பான வியாதிகளும் ஹார்மோன் தொடர்பான வியாதிகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடகத்திற்கான பரிகாரம்...

கடக ராசிக்காரர்கள், கடக லக்ன காரர்கள் ஆகியோர் கடகத்தில் தொடர்புடைய அனைவரும் நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள அம்பாளை பௌர்ணமி அன்று வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். உதாரணத்திற்கு கன்னியாகுமரியில் உள்ள அம்மனை பௌர்ணமி அன்று வழிபடுவது சிறந்த நேர்மறை ஆற்றலை பெற்று அங்குள்ள புனித நதிகளில் நீர் எடுத்து வந்து வீட்டில் அபிஷேகம்செய்தல் சிறப்பான நற்பலன்களைத் தரும்.