Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காமரசவல்லியின் கவின்மிகு சிற்பங்கள்

ஆலயம்: கார்கோடேஸ்வரர் கோயில், காமரசவல்லி, அரியலூர் மாவட்டம், (தஞ்சாவூர் - பழுவூர் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது)

காலம்: இவ்வாலயம் கட்டப்பட்டது, முதல் பராந்தக சோழன் (907 - 955) காலத்தில் எனவும் இரண்டாம் பராந்தக சோழன் / சுந்தர சோழர் (963-980) காலத்தில் எனவும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

பாம்புகளின் அரசனான கார்க்கோடகன், தனது சாபத்திலிருந்து விடுபட இவ்வாலய சிவ பெருமானை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் ‘கார்கோடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானால் எரிக்கப்பட்ட தன் கணவன் மன்மதனை ரதி தவமிருந்து மீட்டதால் இந்த ஊர் ‘காமன்ரதிவல்லி’ என்ற பெயர் பெற்று, பின்பு மருவி ‘காமரசவல்லி’ என்றழைக்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. சுந்தர சோழர், முதலாம் ராஜராஜன், விக்கிரமச்சோழன், மூன்றாம் ராஜராஜன், திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியத்தேவன், ஹொய்சாலா மன்னர் ஆகியோர் இக்கோயிலுக்கு அளித்த பல்வேறு கொடைகளைப்பற்றிய தகவல்களை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.சோழர் காலத்தில் ‘காமரசவல்லி சதுர்வேதி மங்கலம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூரின் இறைவன் ‘‘திருநல்லூர் பரமேஸ்வரர்’’ என்றும், ‘திரு கர்கோடக ஈஸ்வரத்து மகாதேவர்’ என்றும் அழைக்கப்

பட்டார்.வட்ட வடிவம் கொண்ட செங்கல் கட்டுமானம் உடைய மூன்று தள விமானம் கொண்ட கருவறையினுள் அச்சமூட்டும் தோற்றத்துடன் துவாரபாலகர்கள் அழகுடன் காட்சியளிக்கின்றனர்.

இறைவன்: சௌந்தரேஸ்வரர் / கார்கோடேஸ்வரர்.

இறைவி: பாலாம்பிகை வெளிப்புற சுவரெங்கும் அற்புத சிற்பங்கள் நிறைந்துள்ளன. தாங்கு தளத்தில் புராண காட்சிகள் நிறைந்த கண்டபாத குறுஞ் சிற்பங்கள், சிவனின் ஆடல் காட்சி, கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காளமூர்த்தி, பிட்சாடனர், பிரம்மன், துர்க்கை, கணேசர் சிற்பங்கள் ஆகியவற்றின் பேரெழில் காண்போரைக்கவர்ந்திழுக்கும்.