Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரச பதவியைத் தரும் அற்புதக் கிரகம்

கால புருஷனுக்கு முதல் ராசி மேஷம். அது நெருப்பு ராசி. உஷ்ணத்தில் இருந்துதான் உலகம், உயிர்கள் எல்லாம் தோன்றின. நட்சத்திரமே உஷ்ணத்தில் இருந்து உமிழப்பட்டது. அண்ட வெடிப்பு (Big Bang theory) என்று சொல்வார்கள். சூரியனை நாம் கிரகமாகக் கொண்டாலும், அது ஒரு நட்சத்திரம். சூரியன் உச்சம் அடையும் மேஷராசி செவ்வாய்க்குரிய ராசி. செவ்வாய், பூமியைக் குறிப்பவர். பூமி காரகன். எனவே பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் கால புருஷனின் முதல் ராசியை நெருப்பு ராசியாக வைத்தார்கள். அதுமட்டுமல்ல திரிகோண ராசிகள் அனைத்துமே (1, 5, 9) ஒருவருக்கு நன்மையைச் செய்கின்ற ராசிகள். கால புருஷனுக்கு திரிகோண ராசிகள் மேஷம், சிம்மம், தனுசு. மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அது செவ்வாயின் ஆட்சி வீடு. இரண்டும் நெருப்புக் கோள்கள். முகம் தலையைக் குறிக்கும் மேஷ ராசி, உற்சாகம், தைரியம், எதையும் எதிர்கொள்ளும் திறன், முதலிய குணங்களைப் பிரதிபலிக்கும் ராசியாகும். எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது போல், பன்னிரண்டு ராசிகளுக்கும் மேஷத்தில் உச்சம் பெறும் சூரியன் பிரதானமாக இருக்கிறது. தலை ராசி என்பதால் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ராசியாகத் திகழ்கிறது.அடுத்த திரிகோணம் கால புருஷனின் ஐந்தாவது ராசியான சிம்மம். பூர்வ புண்ணிய ராசி. முன்னோர்களையும் குலதெய்வத்தையும் குறிக்கும் ராசி. இந்த ராசியில் எந்த கிரகமும் நீசமோ உச்சமோ பெறுவதில்லை. இது சூரியனின் ஆட்சி வீடாகும்.

சிம்ம ராசி என்பதால், இந்த ராசியில் பிறந்தவர்களும், இந்த ராசியை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்களும், சூரியனின் வசீகரத்தையும் தலைமைப் பண்பையும் எல்லோரையும் கட்டுப்படுத்தும் தன்மையையும் மற்றவர்களைக் காப்பாற்றும் திறமையையும் கொண்டிருப்பார்கள். சிம்மம் என்பதால் அரசு என்பதைக் குறிக்கிறது. ஒருவருக்கு அரச பதவி, கௌரவம், புகழ் முதலியவற்றைப் பெற வேண்டும் என்றால், அவர்களுடைய ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் சிம்ம ராசிக்கு சுபத் தொடர்பு இருக்கும்.அடுத்த திரிகோணம் தனுசு. பாக்கியஸ்தானம் என்றும் தந்தையின் ஸ்தானம் என்றும் கூறுவார்கள். நமது மரபில்தந்தையின் பெயரைத்தான் தலைப்பு எழுத்தாகப் போட்டுக் கொள்கிறோம். ஒரு உயிரின் ஆதி அம்சம் தந்தையிடமிருந்து தாய்க்குச் சென்று தாயின் வயிற்றில் 10 மாதம்கருக்கொண்டு குழந்தையாக பிறக்கிறது. சூரியனுக்கு ஆறு வருடங்கள் திசை நடக்கும். தாயின் காரகத்தைக் குறிக்கும் சந்திரனுக்கு, 10 வருடம் திசை நடக்கும். இரண்டும் கூட்டினால் 16 என்று வரும். ஒரு ஜாதகத்தில் சூரியனாகிய தந்தையும் தாயாகிய சந்திரனும் சரியாக அமைந்துவிட்டால் அந்தக் குழந்தைக்கு 16 பேறுகளும் கிடைக்கும்.ஒரு ஜாதகத்தில் 1, 5, 9 என்ற திரிகோணங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைப் போலவே 2, 6, 10 எனும் திரிகோணங்களும் முக்கியம். இதை கர்ம திரிகோணம் என்று சொல்வார்கள். அறத்தொடு பொருளை ஈட்டும் அற்புத வாழ்க்கையைச் சொல்கிறது இந்தத் திரிகோணங்கள்.

2,6,10 மூன்றும் ஒருவருடைய ஜாதகத்தில் வலிமை பெற்றுவிட்டால், அவர் பொருளாதாரச் சிக்கலின்றி வாழும் நிலையைப் பெற முடியும். இரண்டு என்பது வருமானத்தைக் (தனஸ்தானம்) குறிக்கிறது. குடும்பத்தைக் (குடும்பஸ்தானம்) குறிக்கிறது. ஒருவர் பேசும் பேச்சைக் (வாக்குஸ்தானம்) குறிக்கிறது. ஆறாவது வீடு என்பது, ஒருவருடைய உத்தியோகத்தையும், வெற்றியையும் உழைப்பையும் குறிக்கிறது. பத்தாம் வீடு எனப்படும் கேந்திர வீடு ஒருவருடைய தொழிலையும், ஜீவனத்தையும் வாழ்க்கையில் பெரும் உயர்வுகளையும், செயல்பாடுகளையும் (கர்மஸ்தானம்) குறிக்கிறது.கால புருஷனுடைய இரண்டாவது வீடாகிய ரிஷபத்திலும், ஆறாவது வீடாகிய கன்னியிலும், பத்தாம் வீடாகிய மகரத்திலும், சூரியனுடைய நட்சத்திரங்கள் இருக்கும். தர்ம திரிகோணமாகிய முதல் வீட்டில், சூரியனுடைய கிருத்திகை நட்சத்திரத்தின் ஒரு பாதமும், கர்ம திரிகோணமாகிய இரண்டாவது வீட்டில் சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தின் மற்ற மூன்று பாதங்களும் இருக்கும். இதைப் போலவே சிம்மத்திலும் கன்னி ராசியிலும் உத்தர நட்சத்திரத்தின் பாதங்களும், தனுசு, மகர ராசிகளில் உத்திராட நட்சத்திரத்தின் பாதங்களும் இருப்பதால், இந்த ராசிகளையும் சூரியன் கட்டுப்படுத்துகிறார். வாழ்க்கையின் நோக்கத்தையும் அவர் வாழும் முறையையும் சூரியன் ஏதாவது ஒரு வகையில் கட்டுப்படுத்துகிறார் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் சூரியன் என்னும் தலைமைக் கிரகம், ஒருவருடைய ஜாதகத்தில், இந்த திரிகோணங்களில் ஏதாவது ஒன்றில் வலிமையோடு அமைந்துவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுகிறார்கள். சூரியனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அவருடைய காரகங்களைத் தெரிந்து கொள்வது முக்கியம். சூரியனை, ஆண் கிரகமாக ஜோதிட சாஸ்திரம் சொல்லுகின்றது. சிகப்பு நிறம். அரச வகுப்பு. நவரத்தினங்களில் மாணிக்கம் எனும் விலை உயர்ந்த ரத்தினத்தைக் குறிப்பவர். இவருடைய தானியம் கோதுமை. புஷ்பங்களில் செந்தாமரை மிகவும் பிடிக்கும். எருக்கு இலையில் வாசம் செய்வார். மயிலையும் தேரையும் வாகனமாக உடையவர். சுவைகளில் காரம் உலோகங்களில் தாமிரம், வஸ்திரங்களில் சிகப்பு முதலியவற்றைக் குறிப்பவர். ஒரு ஜாதகத்தில் சூரியன் பலமடைந்து விட்டால், அவர்களுக்கு நிச்சயம் காரச்சுவை பிடிக்கும். அவர்கள் சூரியனின் பல்வேறு விதமான குணங்களைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்கள். சூரியன் கால புருஷனின் முதல் ராசி, ஐந்தாம் ராசி, ஒன்பதாம் ராசிகளைக் குறிப்பதால் முன்னோர்களையும் பிதுர்வர்க்கங்களையும் குறிப்பாக, ஒன்பதாம் ராசி என்பதால் தந்தையையும் குறிப்பார்.சூரியன் ஆத்ம பலத்துக்கு உரியவர். உலக உயிர்களைக் காப்பவர்.

சிவனின் பிரதிநிதி. நவகிரகங்களுக்குத் தலைவர். அதிதேவதை அக்னி. பிரத்யதி தேவதை ருத்ரன். ஒருவர் காலையில் எழுந்து முறையாக சூரிய நமஸ்காரம் செய்தால், ஆத்ம பலத்தையும் சரீர பலத்தையும் அடையலாம். சூரியன் தயவு இருந்தால், சுய முயற்சியால் முன்னேறலாம். செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்கிரமம் நல்ல நடத்தை, தெளிவான கண்கள் முதலிய பல விஷயங்கள் இயல்பாக அமைந்திருக்கும். சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு மூவரும் நண்பர்கள். ஜாதகத்தில், தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாவது வீட்டைப் பார்வையிடுவார். பத்தாம் வீட்டில் திக் பலம் பெறுவார். ஒற்றைச் சக்கரத் தேரில் உலகைச் சுற்றி வருபவர், சூரிய பலம் பெற்ற ஜாதகர்களுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கிறது. சூரியன் சுபர் சேர்க்கை பெற்றால் கௌரவம், அரசியல் செல்வாக்கு, பதவி, அரசு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சூரியனால் புகழ்பெற்ற சில ஜாதகங்களையும் பார்த்தால்தான் அவரைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ள முடியும்.

பராசரன்